2025 மே 16, வெள்ளிக்கிழமை

பொருளாதார நெருக்கடியினாலும் ஐ.தே.கவே பயன்பெறும்

Thipaan   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம், பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாக, பல ஊடகங்கள் கூறுகின்றன. இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால், தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்கள் இது தொடர்பாக அவ்வளவு அலட்டிக் கொள்ளாமையே.

தாம் பதவிக்கு வந்ததன் பின்னர், நாட்டில் பொருளாதார நிலைமை மிகச் சிறப்பாக இருப்பதாகவே, தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள், கடந்த மாதம் வரை கூறி வந்தனர். அவ்வாறானதொரு தோற்றத்தைக் காண்பித்துக் கொண்டு, அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் மக்களுக்குச் சம்பள உயர்வு போன்ற பல சலுகைகளையும் வழங்கியது.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மனி மற்றும் அவுஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை அடுத்து, அந்நாடுகளிடமிருந்து பெருந்தொகை உதவி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், எனவே நாடு விரைவில் சுபிட்சம் அடையும் என்பதைப் போன்ற கருத்துக்களும் வெளியிடப்பட்டன.

ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திடீரென நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாகவும் இதற்கான பரிகாரம், மக்களுக்குக் கசப்பான மருந்தாகவே அமையும் எனவும் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையொன்றின் போது கூறினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை, திடீரென உருவாகிய ஒன்றல்ல என்றும் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருக்கும் போதும் இந்த நிலை இருந்ததாகவும் அதனாலேயே தமது பதவிக்காலம் நிறைவடைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த மஹிந்த முன்வந்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.

பிரதமரும் அதே கருத்தை மற்றொரு இடத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். அவ்வாறாயின், அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், சம்பள உயர்வு போன்ற பல சலுகைகளை வழங்கியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. பிரதமரின் இந்த அறிவிப்பையடுத்துத்தான், ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள், பொருளாதார நெருக்கடியின் பாரதூரத் தன்மையைப் புள்ளிவிவரங்களோடு வெளியிட ஆரம்பித்தன.

இந்த நிலையில்தான், பிரதமர், சீனாவுக்கு விஜயம் செய்தார். அதன் போது, இலங்கை, சீனாவுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடனுக்குப் பதிலாக, சீனாவினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய பொருளாதாரத் திட்டங்களின் பங்குகளை அந்நாட்டுக்கு வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் போன்ற சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய திட்டங்களை, அதன் மூலம் இலாபமீட்டும் திட்டங்களாக மாற்றுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய துறைமுக நகரத் திட்டத்தை மீண்டும் தொடர்வதெனவும் தீர்மானிக்கபட்டுள்ளன.

அதனையடுத்து, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட ஒரு குழுவினர், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) கலந்துரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வொஷிங்டன் நகருக்கு தற்போது சென்றுள்ளனர். அங்கு, சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அந்நிதியத்திலிருந்து இலங்கைக்கு மூன்று பில்லியன் டொலர் கடன் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூன்று பில்லியன் டொலர் எனும் போது, அது நாட்டில் பலருக்கு பாரியதோர் தொகையாக விளங்குவதில்லை. மூன்று பில்லியன் டாலர் என்றால் சுமார் 43,500 கோடி ரூபாயாகும். இலங்கையின் தேசிய வருமானத்தோடு ஒப்பிடும் போது, இது நாட்டுக்குப் பெரும் சுமையாக அமையும் கடன் தொகையாகும் என்பது புலனாகிறது.

அதில் ஒரு பகுதியை வழங்க விருப்பம் தெரிவித்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், மிகுதித் தொகையை இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவத்தைப் பார்த்துவிட்டு வழங்குவதாக தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது. பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வற் வரியை அதிகரிப்பதும் அந்த முகாமைத்துவ நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

வட் வரி அதிகரிப்பைப் பற்றி ஏற்கெனவே பல செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மே மாதம் 2ஆம் திகதி முதல் மின்சாரம், தண்ணீர், தொலைபேசி மற்றும் பாவனைப் பொருட்கள் அனைத்தின் மீதும் இந்த வரி விதிக்கப்பட்டு அவற்றின் விலை அதிகரிக்கப்படும் என அச்செய்திகள் கூறுகின்றன.

பொருளாதார நெருக்கடி தொடர்பான அரச தலைவர்களின் அறிவிப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மஹிந்த குழுவின் பெரு மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. அதேவேளை, மஹிந்தவின் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டு, தற்போதைய அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டிருந்த, சீன நிதி உதவிகளிலான துறைமுக நகரத் திட்டத்தை மீண்டும் தொடரவும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் போன்றவற்றை இலாபமீட்டும் வகையில் அபிவிருத்தி செய்யவும் பிரதமரின் சீன விஜயத்தை அடுத்து அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தையும் மஹிந்தவின் குழு தமது அரசியலுக்காக பாவிக்கிறது.

தாம் பதவியில் இருக்கும் போது, நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை இருக்கவில்லை என்றும் தாம், சீனாவின் ஆதரவுடன் ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்களை தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் முன்னர் விமர்சித்த போதிலும் அவையே இப்போது இந்த அரசாங்கத்துக்கும் கைகொடுக்கப் போகின்றன என்றும் மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.

நாடு, முன்னர் பெற்ற கடனில் ஒரு பகுதியை அடைக்கவே அரசாங்கம், ஐ.எம்.எப்பிடம் 43,500 கோடி ரூபாய் கடன் பெறப்போவதாக கூறப்படுகிறது. அவ்வாறாயின், இந்தக் கடன் பழுவானது மஹிந்தவின் காலத்திலும் அதற்கு முன்னரும் பெற்ற கடன்களிலானதாகும். எனவே, தாம் பதவியில் இருக்கும் போது நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை இருக்கவில்லை என மஹிந்தவினால் கூற முடியாது. அவர் இப்போது பதவியில் இருந்தாலும் இந்தக் கடனை திருப்பிச் செலுத்தியே ஆக வேண்டும். ஆனால், நாட்டு மக்களுக்கு அது விளங்குவதில்லை.

சீன உதவியில் மஹிந்த ஆரம்பித்த பல திட்டங்களைத் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் விமர்சித்ததில் தவறில்லை. மத்தள விமான நிலையத்தின் 2014ஆம் ஆண்டு மே மாத வருமானம் 16,185 ரூபாய் என மஹிந்தவின் அமைச்சர்களில் ஒருவராக இருந்த பிரியங்கர ஜயரத்ன, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது கூறியிருந்தார். அந்தப் பகுதியில் கூலிக்காரனொருவனும் மாதமொன்றுக்கு அதை விட கூடுதலான வருமானத்தை பெறக் கூடும். தற்போதும், அவ்விமான நிலையத்தில் நாளொன்றுக்கு ஒரு விமானம் மட்டுமே தரையிறக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதேபோல், மஹிந்தவின் காலத்தில் துறைமுக நகரத் திட்டம் உரிய சுற்றாடல் அறிக்கையைப் பெற்று ஆரம்பிக்கப்படவில்லை. அத்திட்டத்துக்காக கடலைக் கரைப்படுத்தி உருவாக்கப்படும் நிலத்தை, சீன நிறுவனமொன்றுக்குச் சொந்தமாகவே வழங்க, மஹிந்தவின் அரசாங்கம் விருப்பம் தெரிவித்து இருந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கும் வெளிநாட்டுக் கப்பல்கள் வருவதில்லை. எனவே, சீன உதவியுடனான அத்திட்டங்கள் தொடர்பான விமர்சனங்கள் பொய்யானவையல்ல.

ஆனால், இவை பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டவையாகும். அவற்றை மூடிவிட முடியாது. அவற்றை இலாபமீட்டும் திட்டங்களாக மாற்ற உத்திகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அதை வைத்து, இத்திட்டங்களை மஹிந்த முறையாக ஆரம்பித்தார் எனக் கூற முடியாது. ஆனால், பொது மக்களுக்கு இது விளங்காது.

எனவே, தமது காலத்தில் பொருளாதார நெருக்கடி நிலை இருக்கவில்லை என்றும் தாம் ஆரம்பித்த திட்டங்களே இந்த அரசாங்கத்துக்குக் கைகொடுக்கிறது என்றும் மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் கூறும் போது, மக்களுக்கு அது நியாயமாகப்படுகிறது.

போதாக்குறைக்கு, அண்மையில் அரசாங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அதிகரிக்க முற்பட்டது. பின்னர் பலர். அதனை எதிர்த்ததன் பயனாக, அது கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்தோடு, அரசாங்கம் இம்மாதம் மேலும் மூன்று அமைச்சர்களை நியமித்தது. 2008ஆம் ஆண்டு மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி, அரசாங்கம், அமைச்சரொருவரைப் பராமரிக்க மாதமொன்றுக்கு 50 லட்சம் ரூபாயை செலவிடுகிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அந்தச் செலவு நிச்சயமாக மேலும் அதிகரித்திருக்கும்.

அந்த நிலையில், அடுத்த மாதம் வட் வரி அதிகரிப்பின் காரணமாக சகல பொருட்களினதும் சேவைகளினதும் விலை அதிகரிக்கும் போது, மஹிந்த அணி அதனால் பெரும் அரசியல் இலாபத்தை அடைய முற்படக் கூடும். ஆனால், அது ஒரு பிரசார இலாபமாகவேயன்றி உண்மையான அரசியல் இலாபமாகுமா என்பது சந்தேகமே. ஏனெனில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபடுவது இப்போது உறுதியாகிவிட்டது.

வற் வரி அதிகரிப்பின் காரணமாக, விலைவாசி அதிகரிப்பு ஏற்படுவதை தாம் இடமளிக்கப்பபோவதில்லை என ஜனாதிபதி, கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தார். ஆனால், நாட்டின் பொருளாதார நிலையின் காரணமாக, அரசாங்கம், மே மாதத்தில் இல்லாவிட்டாலும் பின்னராவது வரிகளை அதிகரித்தே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த ஆரம்ப காலத்தில் மிருதுவாக அரசாங்கத்தை விமர்சித்து வந்த மஹிந்த, இப்போது அரசாங்கம், பொருளாதார நெருக்கடியை ஏற்றுக் கொண்டதை அடுத்து மிகவும் காரசாரமாக அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார். அவரது அணியினர், இம்முறை தமது மேதினக் கூட்டத்தை தனியாக கொழும்பு கிருலப்பனையில் நடத்தப்போகிறார்கள். அது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவு படுவதில் மைல் கல்லாக அமையலாம்.

உண்மையில், மஹிந்த அணியே இப்போது உண்மையான எதிர்க்கட்சியாகச் செற்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அரசாங்கத்தை விமர்சிப்பதாகத் தெரியவில்லை. சில வேளைகளில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கோரிக்கை வடிவிலான கருத்துக்களை அவர் வெளியிட்டாலும் பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற தேசிய அளவிலான பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை.

அண்மையில் மஹிந்த அணியின் முக்கியஸ்தரான மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தனவும் இக் கருத்தை வெளியிட்டு இருந்தார். சம்பந்தன், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார் என அவர் கூறியிருந்தார். அதற்கு சம்பந்தன் சரியான பதிலை வழங்கவில்லை. தம்மை விமர்சிக்கும் தெற்கில் உள்ளவர்களும் தம்மைச் சூழவுள்ள பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார்களையல்லாமல் தமிழ் மக்களைப் பற்றிப் பேசுவதில்லை என்று சம்பந்தன் கூறியிருக்கிறார்.

அது உண்மை தான், ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் பொருளதாரப் பிரச்சினைகளைப் போன்ற தேசிய பிரச்சினைகளைப் பற்றிப் பேசாதிருப்பதை அது நியாயப்படுத்தவில்லை. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை ஏற்கத் தகுதியற்ற கட்சி என்ற கருத்து, நாளடைவில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பரவலாம். ஏற்கெனவே உண்மையான எதிர்க்கட்சியின் கடமைகளைச் செய்ய மஹிந்த அணி முன்வந்துள்ள நிலையில், இந்த நிலை உருவாகலாம்.

பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்ட வாய்ப்புக் கிடைத்துள்ள நிலையில், மஹிந்த இப்போது உற்சாகமாகக் காணப்படுகிறார். எனவே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதியின் தலைமையில் காலியில் மே தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்திருக்கும் நிலையிலேயே மஹிந்த அணியினர், கிருலப்பனையில் மே தினக் கூட்டத்தை நடத்தப் போகிறார்கள்.

இதற்கு முன்னர், கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் அவர்கள் நடத்திய அரச எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சு.கவினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பதாக சு.க செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறிய போதிலும் அவ்வாறு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இம்முறையும் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அவர்கள் நினைப்பது நியாயாமே.

மஹிந்த அணியினரின் மே தினக்கூட்டம், ஸ்ரீல.சு.கவின் பிளவை மேலும் உறுதிப்படுத்தும். அதன் நன்மையை அடையப் போவது ஐக்கிய தேசியக் கட்சியும் மஹிந்த அணியில் உள்ள சிறு கட்சிகளுமே. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, அந்த நிலைமையைக் காண முடியும்.

அதன் பின்னர், ஸ்ரீல.சு.கவின் வேகமான சரிவொன்றைத் தவிர்க்க முடியாது போய்விடும். எனவே, ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான பொருளாதார நெருக்கடியும் அரசியல் ரீதியாக ஐ.தே.கவுக்கே சாதகமான நிலையை உருவாக்குகிறது எனலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .