2025 மே 16, வெள்ளிக்கிழமை

பால் குடத்தை தூக்கி எறிந்து பூனையை கலைக்கும் 'புத்திசாலிகள்'

Thipaan   / 2016 ஏப்ரல் 17 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப.தெய்வீகன்

உத்தேச அரசமைப்பு மாற்றம் மற்றும் அரசியல் தீர்வு ஆகியவை தொடர்பான கொள்கை வரைவு திட்டத்தின் மீதான வட மாகாண சபையின் ஆலோசனைகளை கடந்த வாரம் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்தார். அந்த ஆலோசனைகள் இன்று செவ்வாய்கிழமை அவையில் தீர்மானமாக நிறைவேற்றப்படக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களின் தாயகமான ஒருமித்த வடக்குக் கிழக்கு ஒரு பிராந்தியமாகவும் அங்கு முஸ்லிம்களுக்குத் தனி அலகு என்றும் தெற்கில் சிங்கள மக்களுக்குத் தனிப் பிராந்தியமும் மலையக மக்களுக்கு தனி அலகும் வழங்கப்படவேண்டும் என்ற யோசனையை முன்வைத்து முதலமைச்சர் தனது ஆலோசனையை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு கோரிக்கையை விடவும் பல படிகள் மேலே சென்று முதலமைச்சர் இப்படியான ஒரு தீர்வு யோசனையை அறிவித்துள்ளமை தமிழர் தரப்பின் வன்போக்கு அரசியல் மீது நாட்டமுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. 

ஆனால், வழமைபோலவே, முதலமைச்சரின் இந்த அறிவிப்பு தென்னிலங்கையில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மஹிந்த கூடாரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் ஏனையோரும்கூட முதலமைச்சரின் இந்தப் பிராந்திய யோசனைகளுக்குப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.

தமிழர் அரசியலை மேலோட்டமாக அறிந்தவர்களுக்கே இந்தப் பரபரப்புக்கள் எதிர்பார்க்கக்கூடியதுதான் என்ற யதார்த்தம் புரிந்திருக்கும். தமிழ் மக்கள் பலமான சக்தியாக இருக்கும்போதும் இல்லாதபோதும்கூட தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு இப்படியான தீர்வு யோசனைகள் எல்லாம் - தொடர்ந்தும் - ஒவ்வாமை அறிகுறிகளையே ஏற்படுத்திவருகின்றன.

இந்த ஆலோசனைகள் ஒரு புறமிருக்க, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பின் ஊடாகவும் ஒரு தீர்வு வரைவு ஒன்றை வரைந்து அதனைப் பலரது ஒத்துழைப்புடன் இறுதிப்படுத்தித் தாயகத்தின் பல இடங்களில் கருத்தும் அறிந்து அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த பேரவையின் இணைத் தலைவராகவும் இதே முதலமைச்சர் இன்னமும் அங்கம் வகிக்கிறார்.

அப்போது அந்தத் தீர்வு வரைவு பற்றிப் பேசியபோதும் தென்னிலங்கையில் இதேபோன்ற ஒரு சலசலப்பு ஏற்பட்டது.

ஆக, இம்மாதிரியான முயற்சிகள் இலங்கையின் தற்போதைய அரசியல் களத்தில் என்னவிதமான தாக்கத்தை உண்டு பண்ணும் என்று தெரிந்தே முதலமைச்சர் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்கிறார் என்ற முடிவுக்கு நாம் வரமுடியும்.

முதலமைச்சர் ஈடுபட்டிருக்கும் இரண்டு தீர்வு வரைவுகளிலும் ஒரே மாதிரியான விடயங்கள்தான் பேசப்பட்டிருக்கின்றனவா? அவ்வாறு பேசப்பட்ட விடயங்கள் தற்போதைய அரசியல் சூழலில் சாத்தியமானவையா என்பதெல்லாம் ஒரு புறமிருக்க, இப்படியான முயற்சிகளால் தமிழ் மக்கள் தற்போது அடையப்போவது என்ன? முதலமைச்சரின் இந்த நடவடிக்கைகளின் பின்னணி என்ன என்பதை ஆராய்வதே இந்த பத்தியின் நோக்கம்.

இலங்கை அரசியலின் நல்லாட்சி அத்தியாயம் என்று கூறப்படும் தற்போதைய காலப்பகுதியும் தமிழர் தரப்பினது அரசியல் பலமும் இப்போது இருப்பதுபோல எப்போது இனி வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. அதாவது, தற்போதைய அரசியல் களம்தான் தமிழர்தரப்பினது தனது உச்சக்கட்ட தந்திரோபாயத்தை சிங்கள தரப்பின்மீது தீர்க்கமுடன் பிரயோகிப்பதற்குக் கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பம். இந்த யதார்த்தத்தினை பலரும் வெளிப்படையாகக் கூறிவிட்டார்கள். ஒருவகையில் பார்க்கப்போனால், சிங்கள வன்போக்கு அரசியல்வட்டாரங்களின் அச்சமும் இதுதான்.

இந்த நல்லாட்சி அரசின் மீது தமிழர் தரப்பு மேற்கொள்ளக்கூடிய எந்த நடவடிக்கையினதும் ஆரோக்கியமான அடி ஆதாராமாக விளங்கக்கூடியது ஒன்று உண்டெனில், அது 'இந்த அரசை எவ்வாறு எமக்கு ஏற்றவாறு பன்படுத்துவது' என்ற ஒற்றைவரியிலிருந்துதான் ஆரம்பிக்க முடியும். அந்த 'பயன்படுத்துதல்' என்ற அரசியல் துணிவுக்கும் சாணக்கியத்துக்கும் இடையில் தமிழர் தரப்பு எவ்வளவு தூரம் காத்திரமாக செயற்படப்போகிறது என்பதில்தான் சகல 'அடைதல்களும்' அடங்கியிருக்கின்றன.

தமிழர் தரப்புக்கு தேவையான இந்த செல்நெறியிலுள்ள - அரசியல் விவகாரத்தை எடுத்து நோக்கினால், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வளவு காலமும் எவ்வளவு 'பலத்துடன்' பயணித்திருக்கிறது என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும். அதனை விரிவாக ஆராய்வது இந்தப் பத்தியின் நோக்கம் அல்ல. அதேவேளை, தமிழர் தாயகத்தின் அபிவிருத்தி விவகாரங்களுக்காக பெற்றுக்கொண்ட வடக்கு - கிழக்கு மாகாணசபைகளை எடுத்து நோக்கினால் இவ்வளவு காலமும் அவை மேற்கொண்ட பணிகள்தான் அவற்றின் செயற்றிறன் குறித்து விரிவாகப் பேசவேண்டும்.

ஆனால், மைத்திரி அரசு அண்மையில் அறிவித்த புதிய அரசியல் தீர்வு முயற்சிகள் குறித்து ஊன்றி கவனித்தால் -

தமிழர் தரப்பில் அதுபற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசுவதைவிட வட மாகாணசபையின் முதலமைச்சர் அவர்களே அதிகம் பேசுகிறார், அதிகம் முரண்படுகிறார், அதிகம் ஆக்ரோஷமாக பயணிக்கிறார் என்ற விமர்சனமும் உள்ளது.

முதலமைச்சரின் இந்தக் கடுமையான அரசியல் பயணத்தின் தொடர்ச்சியாக தற்போது இருவேறு முனைகளில் தமிழர்களின் அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பான தனது கூர்மையான அம்புகளை சிங்கள தேசத்தினை நோக்கி எறிந்திருக்கிறார்.

அவரது இந்தப் போராட்டம், அவர் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்புக்கு வெளியே நின்று ஆடும் முறையற்ற ஆட்டமாகப் பார்க்கப்பட்டு வந்ததற்கு அப்பால் -

சிறுபிள்ளைத்தனமான அவரது தொடர் நடவடிக்கைகள் தமிழர் தரப்பிடம் தற்போதுள்ள அற்ப சொற்ப அதிகாரங்களையும் காற்றிலே பறக்க விட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த அச்சம் நியாயமானதும்கூட.

அதாவது, அரசியல் தீர்வு தொடர்பாக முதலமைச்சர் தற்போது விடுத்துள்ள யோhசனைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டி யோசனைகளை விடவும் அதிகமாகவும் கூர்மையானதாகவும், இலங்கை தேசியத்துக்குப் பயங்கரமாகச் சவால் விடுவதாகவும் உள்ளதாகத் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பகிரங்கமாக விமர்சிக்கப்படுகிறது.

முதலமைச்சரின் கருத்தினை எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே வைத்துப் பார்த்து வரும் ரணிலும் அவர் சார்ந்த ஏனைய தரப்பினரும் இம்முறையும் முதலமைச்சரின் தீர்வு யோசனை குறித்த ஆலோசனையை சிங்கள தேசியத்துக்கு எதிராக விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கிறார்கள்.

இதன் விளைவு எந்நேரத்திலும் வட மாகாண சபையை மத்திய அரசு கலைத்துவிடும் அபாயத்தில் கொண்டு சென்று நிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அதனை முதலமைச்சர் விளங்கியிருக்கிறாரோ இல்லையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் நன்றாகவே அறிவார்.

இருந்தும், சம்பந்தன் இந்த விடயத்தில் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகிறார். அவரது இந்தத் தொடர்ச்சியான மௌத்தை பார்த்தால், சகலதும் நடந்து முடிந்த பின்னர், அதற்கான பொறுப்பை அரசின் மீது குற்றஞ்சாட்டுவதற்குக் காத்திருப்பது போலவே தெரிகிறது. அதன் ஊடாக, தாம் தீர்வினை எட்டுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எல்லாவற்றையும் சிங்கள அரசு முறியடித்துவிட்டது. அல்லது போட்டுடைத்துவிட்டது. அல்லது, அதற்கு அது தயாராகவே இல்லை என்று அறிவிப்பதற்கும் அறிக்கை விடுவதற்கும் கூட்டமைப்பு காத்திருப்பது போலத்தெரிகிறது.

2016இல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடையப்போகும் சாதனை இதுதானென்றால், கூட்டமைப்பும் முதலமைச்சரும் தமிழ் மக்களுக்கும் இழைத்த துரோகம் இதனைவிட வேறொன்றுமாக இராது. அது இன்னொரு முள்ளிவாய்க்காலாகவே இருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சி என்னதான் மக்கள் ஆணையைப் பெற்றிருந்தாலும் அது பயணம் செய்வதற்கென சில இராஜதந்திர கட்டுப்பாடுகள் உள்ளன என்பது உண்மை. ஆனால், அந்த பயணத்துக்கான தயார்நிலைகள் அனைத்துமே தமிழ் மக்கள் தற்போது அடைந்துள்ள நலன்களின் அடிப்படையிலும் இருப்பின் மீதும் அமையவேண்டுமே தவிர தற்போது இருப்பதையும் பறக்கவிட்டுவிட்டு காற்றிலே கம்பு சுற்றுவது போல அமைந்து விடக்கூடாது.

முதலமைச்சரினால் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் வட மாகாண சபையின் வினைத்திறைனை அதிகரிப்பதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் போதிய கால அவகாசங்கள் இருந்தன. இன்னமும் உள்ளன. ஆனால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, பிரச்சினையை கிளறும் முதலமைச்சரை கருவியாக கொண்டே சிங்கள தேசத்துக்குப் பாடம் கற்பிப்பதற்காக, தமிழர் தரப்பின் தற்போதைய ஒரே இருப்பான மாகாணசபையை ஆகுதியாக்குவது வரலாற்றுத் துரோகம். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மகா பலவீனத்தையே வெளிக்காட்டி நிற்கும்.

தமிழ் அரசியல் தலைமைகள் காலகாலமாக ஆடிவந்த புழுத்துப்போன கபட நாடகம்தான் இது. தமிழர் தரப்பு நியாயங்களை சரியானபாதையில் கையாளத்தெரியாத தங்களது பலவீனத்தை மறைப்பதற்கு இப்படியான நாடகங்களை அரங்கேற்றி, சிங்கள பேரினவாதத்தினை விளம்பரப்படுத்தியதுதான் வரலாறு. லட்சக்கணக்காக மக்களை பலிகொடுத்த தமிழினம், சிங்கள பேரினவாதத்தின் கொடூரத்தினை இனிமேல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகுப்பில் சென்றுதான் கற்றுத்தேற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முதலமைச்சரும் புரிந்துகொள்ளவேண்டிய தருணம் இது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .