Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 நவம்பர் 02 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தெற்கு தேய்கிறது. வடக்கு வாழ்கிறது' என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பழைய கால முழக்கம். அதே முழக்கம் இன்றைக்கு வேறுவிதமாக தமிழகத்தில் பேசப்படுகிறது. 'வடக்கின் முடிவுக்கு தெற்கு காத்திருக்கிறது' என்பதுதான் அரசியல் கட்சிகள் மத்தியில் உள்ள பரபரப்பான எதிர்பார்ப்பு.
இதன் பின்னணி இதுதான். பீஹார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நவம்பர் 5ஆம் திகதியுடன் பீஹார் தேர்தலில் அனைத்துக் கட்ட வாக்குப் பதிவுகளும் அரங்கேறி முடிந்து விடும்.
அதற்கு பின்னர், தேர்தல் முடிவுகள் வெளிவரும். நிதிஷ் மற்றும் லாலு பிரசாத் அமைத்த 'மெகா கூட்டணி' வெற்றி பெறப் போகிறதா, அல்லது 'பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி' வெற்றி பெறப் போகிறதா என்பது தெரிந்து விடும்.
வெற்றி தோல்வி யாருக்கு என்றாலும் பீஹார் பிரசாரம் மற்ற மாநிலங்களில் நடக்கப் போகும் பிரசாரங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. 'இடஒதுக்கீடு' என்றும், 'இந்துத்துவா' என்றும் பீஹார் பிரசாரம் திக்குமுக்காடியிருக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை குறைக்கப் போகிறார்கள் என்ற ரீதியில், ஒரு நாட்டின் பிரதமரே சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக பிரசாரம் செய்யும் நிலை உருவாகியிருக்கிறது. இது தவிர 'பா.ஜ.க தோற்றால் பாகிஸ்தான் பட்டாசு வெடிக்கும்' என்று பா.ஜ.க வின் மூத்த தலைவரான அமித்ஷா பேசும் அளவுக்கு பீஹார் தேர்தல் க்ளைமேட் சூடுபிடித்துக் கிடக்கிறது.
இந்த பிரசாரமும் வரப் போகின்ற தமிழக தேர்தலுக்கு முன்னோடியாக இருக்கப் போகிறது. அங்கு கிடைக்கும் வெற்றி தோல்வியும் இருக்கப் போகிறது. ஏனென்றால், இதுவரை இல்லாத அளவுக்கு முழு வீச்சில் பா.ஜ.க தமிழக தேர்தல் களத்துக்கு வரப் போகிறது. முன்பு 1989இல் இப்படியொரு முயற்சியை, அன்று தமிழகத்தில் அதிக வாக்குகள் பெறும் தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது. அப்போது எம்.ஜி.ஆர் மறைந்த நேரம்.
அ.தி.மு.க இரு கூறாக பிளவு பட்டு தற்போதைய முதல்வர் ஜெயலலிதா மற்றும் மறைந்த ஜானகி அம்மாள் ஆகியோர் தலைமையில் இயங்கிய நேரம். 13 வருடங்களாக ஆட்சியில் இல்லாமல் தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்த கட்சியாக தி.மு.க இருந்த நேரம். ஆனால் அந்த காங்கிரஸின் பிரவேசம் வெற்றி பெறவில்லை. 19 சதவீத வாக்குகளை மட்டும் பெற்று தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வர இயலாமல் போனது. அப்போது தி.மு.க 13 வருடங்களுக்குப் பின்னர் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதலமைச்சரானார் மு.கருணாநிதி.
இன்றைக்கு 1989இல் காங்கிரஸ் செய்ததை 'ரிபீட்' செய்யப் பார்க்கிறது பாரதிய ஜனதா கட்சி. 2-ஜி அலைக்கற்றை ஊழல் முறைகேட்டு வழக்கில் தி.மு.கவின் முக்கியப் பிரமுகர்கள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு செய்த மேல்முறையீட்டின் தீர்ப்புக்காக முதலமைச்சர் ஜெயலலிதா காத்து இருக்கிறார்.
அது மட்டுமின்றி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 2 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்படியொரு நெருக்கடியான தமிழக அரசியல் சூழ்நிலையை பா.ஜ.க பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது.
இதுதான் தமிழகத்தில் திராவிட கட்சிகளை வீட்டுக்கு அனுப்ப உகந்த நேரம் என்று எண்ணுகிறது. இதற்கு தகுந்தாற்போல் சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பா.ஜ.கவின் அகில இந்திய தேசிய செயலாளர் முரளிதரராவ், 'அ.தி.மு.கவுடன் கூட்டணி இல்லை' என்று அறிவித்துள்ளார். தற்போது ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், 'மோசமான நிர்வாகத்தை நடத்தும் அ.தி.மு.கவுடன் கூட்டணி இல்லை' என்றதோடு மட்டுமின்றி, 'தென்துருவமும், வட துருவமும் எப்படி சேர முடியும்' என்று முதலமைச்சர் ஜெயலலிதாவும், பிரதமர் நரேந்திரமோடியும் எப்படி அரசியல் கூட்டணி அமைக்க முடியும் என்பது போல் பேட்டி கொடுத்திருக்கிறார்.
பேட்டிகள் கொடுப்பதோ நிறுத்திக் கொள்ளவில்லை. பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா ஆகியோர் தமிழகத்துக்கு வரவிருக்கிறார்கள் என்றும் அவர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் இறங்குவார்கள் என்றும் கூறியிருக்கிறார். இந்த தீவிர பிரசாரத்துக்குத்தான் பீஹார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முக்கிய அங்கம் வகிக்கிறது. அங்கு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால், அந்தப் பலம் தமிழகத்தில் யானை பலமாக மாறும். 'பா.ஜ.க வெற்றி பெறும் கட்சி. நிதிஷ், லாலு தலைமையிலான கூட்டணியையே தோற்கடித்து விட்டது.
அதனால் தமிழகத்திலும் திராவிட கட்சிகளை வீழ்த்தும் பலம் பா.ஜ.கவுக்கு உண்டு' என்று மக்கள் கருதுவார்கள். அதே நேரத்தில் பா.ஜ.க, பீஹாரில் தோற்றுவிட்டால் அதன் தாக்கத்துக்கு தமிழகத்தில் சுருதி பேதம் ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஏற்கெனவே தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கெஜ்ரிவாலிடம் பா.ஜ.க தோற்றுப் போய் விட்டது. அதுவும் படு தோல்வி அடைந்தது. அதற்கு முக்கியக் காரணம் பிரதமர் மற்றும் பா.ஜ.கவினரின் 'காட்டமான பிரசாரம்'. அதே அடிப்படையில்தான் இப்போதும் பீஹாரில் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்கிறது பா.ஜ.க ஒரு தேசிய கட்சி, நாட்டில் ஆட்சி செலுத்தும் கட்சி என்ற நிலையை எல்லாம் கடந்து 'தேர்தல் வெற்றி' என்பதற்காக மட்டுமே எப்படியும் பேசும் கட்சிகளின் வரிசையில் பா.ஜ.க அங்கே சேர்ந்து விட்டது.
அதிலும் குறிப்பாக பிரதமர் நரேந்திரமோடி அந்த வரிசையில் சேர்ந்தது, அவர் மீது மதிப்பு வைத்திருந்த பல கோடி வாக்காளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இப்படியொரு சூழலில் பீஹாரில் ஒரு வேளை பா.ஜ.க தோற்றால் அது தமிழகத்தில் அக்கட்சி செய்ய விரும்பும் அக்னிபிரவேசத்துக்கு சிக்கலாக முடியும் என்பதுதான் இன்றைக்குள்ள சூழ்நிலை. ஆகவே, பீஹார் சட்டமன்றத் தேர்தலின் முடிவை தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக தி.மு.க,வும், அ.தி.மு.கவும் உன்னிப்பாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. தி.மு.கவைப் பொறுத்தமட்டில் விஜயகாந்தின் தே.மு.தி.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்ற சிந்தனை இருக்கிறது. ஆனால், இந்த இரு கட்சிகளுமே அதற்குரிய கேள்வியை அதிகரித்து வருகின்றன.
'கூட்டணி ஆட்சி' என்ற கோட்பாட்டை காங்கிரஸ் 'இந்த முறை கைவிட முடியாது' என்கிறது. அதே போல் 'திருவாரூர் கலைஞரும், ஸ்ரீரங்கம் ஜெயலலிதாவும் நாட்டைக் கெடுத்து விட்டார்கள்' என்று கருணாநிதி பிறந்த திருவாரூரிலேயே நின்று முழங்குகிறார் விஜயகாந்த். 'என்னை கூட்டணியில் சேர்க்க வேண்டுமென்றால் நான் போடும் நிபந்தனைக்கு கட்டுப்பட வேண்டும்' என்று தி.மு.கவுக்கு விடும் அறைகூவல் போல் இருக்கிறது விஜயகாந்த் பேச்சு.
முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பொறுத்தமட்டில் 44ஆவது வருடத்தில் அ.தி.மு.க அடியெடுத்து வைக்கிறது. அமைச்சர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரக் களத்தில் குதித்து விட்டாலும், மத்திய அரசின் உதவியின்றி சட்டமன்றத் தேர்தலை சுமூகமாக சந்திக்க முடியுமா என்ற சிந்தனை இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் அவர் பா.ஜ.கவுடன் முறைத்துக் கொள்ளவில்லை. ஆனால், அதே நேரத்தில் பா.ஜ.க கூட்டணிக்காக இன்னும் முந்திக் கொள்ளவில்லை.
அதே நேரம் தி.மு.கவுடன் பா.ஜ.க கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துகிறது என்று வரும் செய்திகள் அ.தி.மு.கவை சற்று திணற வைத்துள்ளது. அதனால் பீஹாரில் பா.ஜ.கவின் வெற்றி 'அந்தக் கட்சியுடன் கூட்டணி போகலாமா' என்று இதுவரை பிடிகொடுக்காமல் இருக்கும் அ.தி.மு.க சீரியஸாகவே சிந்திக்க வைக்கும் என்று கருத இடமிருக்கிறது.
ஆனால், முதல் முறையாக உள்ளூர் பிரச்சினைகள், மாநில பிரச்சினைகள் போன்றவற்றை முன் வைத்து தேர்தல் களத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த தி.மு.கவும், அ.தி.மு.கவும் இப்போது 'பீஹார் தேர்தல் களத்தில்' என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து நம் வியூகத்தை வகுப்போம் என்று காத்திருக்கின்றன.
இதை மனதில் வைத்துத்தான் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் 'நமக்கு நாமே' பயணம் போகிறார். அப்பயணத்தில் '90 சதவீத தி.மு.கவினர் இந்துக்களே' என்று பேசுகிறார். முதலமைச்சர் ஜெயலலிதாவும் இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் பிரச்சினை ஆகிய எல்லாவற்றிலுமே பிரதமர் மோடியுடன் காரசாரமான கடிதப் போக்குவரத்துக்குத் தயங்குகிறார். ஆக 'பீஹாரை' எதிர்பார்த்து 'தமிழகம்' காத்திருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
2 hours ago