2025 மே 16, வெள்ளிக்கிழமை

பணமா, மக்கள் மனமா?: தமிழகத் தேர்தலின் 'இறுதிச் சுற்று'

Thipaan   / 2016 மே 16 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில், 'மழை பெய்து ஓய்ந்திருக்கிறது'. ஆம், அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம், அக்னி வெயிலையும் மிஞ்சிய ஆவேசப் பேச்சுக்கள் எல்லாம் முடிவுக்கு வந்திருக்கின்றன. தமிழக சட்டமன்றத்துக்கான 234 தொகுதிகளின் தேர்தல் பிரசாரம், 14ஆம் திகதி மாலையுடன் நிறைவு பெற்று விட்டது. 93 வயதான கலைஞர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு  (90 வயது), மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ் கட்சி தலைவர் சங்கரய்யா (91 வயது ), திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி (80 வயது), தி.மு.க பொதுச் செயலாளர் க. அன்பழகன் (92 வயது) என்று, சீனியர்கள் ஒருபுறம் தேர்தல் களப் பிரசாரத்தில் இருந்தமை, தமிழக சட்டமன்றத் தேர்தலை வித்தியாசமான கோணத்தில் காட்டியது.

தமிழக தேர்தலில் இப்படியொரு சீனியர்கள் பட்டாளம், களத்தில் மக்களைச் சந்தித்துத் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறியமை, மக்கள் மனதைக் கவர்ந்தது. இவர்கள் அனைவரும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பொதுக்கூட்டங்களிலும் வேன் பிரசாரங்களிலும் ஈடுபட்டமை வித்தியாசமானது. அனைத்து அரசியல் கட்சிகளும் கச்சை கட்டிக் கொண்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்தாலும், ஒவ்வொரு கட்சியும் வௌ;வேறு யுக்தியைக் கடைப்பிடித்து வாக்காளரைச் சந்தித்தது. அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தொகுதி வாரியாக இந்த முறை பிரசாரத்துக்குச் செல்ல முடியவில்லை.

50 தொகுதிகள், 30 தொகுதிகள், 20 தொகுதிகள் என்று ஓரிடத்தில் 'மண்டல மாநாடு' போல் கூட்டி, அங்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். அப்படி நடத்தப்பட்ட கூட்டங்களில், வெயிலின் கொடுமைக்கு 7 பேர் பலியானமை, எதிர்கட்சிகளின் விமர்சனத்தைப் பெற்றது. தமிழகத்தில் கூட்டம் போட்டு, அண்டை மாநிலத்தில் உள்ள கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கும் ஜெயலலிதா வாக்கு கேட்டமை என்பன புதுமையாக இருந்தது. தொகுதி வாரியாகச் சென்று, அ.தி.மு.கவின் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லவதற்கு அக்கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாதமை, அ.தி.மு.க பிரசாரத்தின் ஒரு பெரிய குறை. அதே போல், பிரசாரத்தைத் தொடங்கி 20 நாட்களுக்குப் பின்னர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டமையானது, அ.தி.மு.க கையாண்ட வித்தியாசமான அணுகுமுறை. 'மண்டல வாரியாக' பிரசாரம் செய்த ஜெயலலிதா, திடீரென்று சென்னையில் வீதி வீதியாகப் பிரசாரத்துக்கு வந்தமை, மக்களை ஆச்சரியப்பட வைத்தது.

அ.தி.மு.க அரசாங்கத்தின் ஐந்தாண்டு காலச் சாதனைகள், தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பற்றிய விமர்சனம், 2-ஜி அலைக்கற்றை ஊழல், இலங்கைத் தமிழர் பிரச்சினை எல்லாவற்றையும் கையில் எடுத்த ஜெயலலிதா எப்படியாவது தி.மு.கவுக்கு தேர்தலில் எந்த வித 'சாதமான அம்சங்களும்' கிடைத்து விடக் கூடாது என்பதில் கவனமாகச் செயற்பட்டார். தனது ஐந்தாண்டு சாதனைகளை பேசுவதை விட, தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி பற்றிய தாக்குதலுக்கு முன்னுரிமை கொடுத்தார். அ.தி.மு.கவை பா.ஜ.க. விமர்சித்தது. பாட்டாளி மக்கள் கட்சி விமர்சித்தது. மக்கள் நலக்கூட்டணி விமர்சித்தது. ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா, 'தி.மு.கவின் விமர்சனத்துக்கு மட்டுமே பதில் சொன்னார்'. பா.ஜ.கவின் குற்றச்சாட்டுக்கு அவர், கடைசி வரை பதில் ஏதும் சொல்லவில்லை. விளக்கம் ஏதும் தரவில்லை. 'தி.மு.க எதிர்ப்பு' என்பதை மட்டும் முன்னெடுத்துச் சென்று 'கருணாநிதி எதிர்ப்பு' என்பதில் ஊறிப் போன, எம்.ஜி.ஆர் தொண்டர்களை, தன் பேச்சின் மூலம் உற்சாகப்படுத்தவே ஜெயலலிதா முயற்சி செய்தார். 'கருணாநிதி' பெயரைச் சொன்னால், அ.தி.மு.கவினர் சிலிர்த்து எழுந்து பணியாற்றுவார்கள் என்பது அவர் கணிப்பு.

தி.மு.க தலைவர் கருணாநிதி, சாலை வழியாகவும் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் பிரசாரம் மேற்கொண்டார். அவர், ஜெயலலிதா விரித்த வலையில் இந்த முறை அவ்வளவாக விழவில்லை. உதாரணமாக, இலங்கைப் பிரச்சினையில் தி.மு.கவும் காங்கிரஸும் துரோகம் செய்தன என்ற குற்றச்சாட்டுக்குக் கூட, அவர் பதில் சொல்லவில்லை. அவரது விமர்சனம் எல்லாமே, அ.தி.மு.க அரசாங்கத்தின் ஐந்தாண்டு நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்தியே இருந்தது. ஒரேயொரு முறை 'திராவிட கட்சிகளால், தமிழ்நாடு குட்டிச்சுவர் ஆகிவிட்டது' என்ற, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு, கருணாநிதி, ஆவேசமாகப் பதில் சொன்னார்.

பா.ஜ.க.வுடன் அவரும் மல்லுக்கு நிற்கவில்லை. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை, தமிழக மீனவர்கள் கைது, காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமை, மருத்துவக் கல்லூரி அனுமதிக்கு அகில இந்தியத் தேர்வு போன்ற விடயங்களில், தி.மு.க நினைத்திருந்தால் பா.ஜ.க.வை விமர்சித்திருக்க முடியும். ஆனால், அதற்குள் போகாமல், இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாமே 'தன் நலனுக்காக, தமிழக நலனை அடகுவைத்தவர் ஜெயலலிதா' என்ற பிரசாரத்தை முன்னெடுத்துச் சென்றார் கருணாநிதி. அதைத்தான் தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலினும் வழி மொழிந்தார். 'அ.தி.மு.கவின் வேதனைகள்' 'அ.தி.மு.கவின் நிர்வாகச் சீர்கேடு' 'ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை' என்ற அ.தி.மு.க ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன் வைத்த முழக்கமாகவே, தி.மு.கவின் தாக்குதல்கள் இருந்தன. 'எளிதில் சந்திக்கக் கூடியவன் நான்' 'யாராலும் சந்திக்கவே முடியாதவர் ஜெயலலிதா' என்ற இரு விடயங்களை வாக்காளரிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மு.க. ஸ்டாலினின் பிரசாரம் அமைந்தது.

தேர்தல் பொதுக்கூட்டங்கள் தவிர்த்த 'நடைப் பிரசாரம்' என்ற புதிய கலாசாரத்தை, இம்முறை தேர்தல் களத்தில் ஸ்டாலின் புகுத்தினார்;. காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் போது, வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டமை அனைவரையும் கவர்ந்தது. ஆக, பிரதான கட்சிகளான தி.மு.கவும் அ.தி.மு.கவும் தங்களுக்குள் போட்டியை வைத்துக் கொண்டன.

தேசியக் கட்சிகளில் 'சோனியாவும் ராகுலும்' பிரசாரம் செய்தனர். அவர்கள் இருவருமே ஜெயலலிதாவின் ஆட்சி மீது கடும் தாக்குதலை தொடுத்தார்கள். பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திரமோடியே வந்து பிரசாரம் செய்தார். அவரோ, '2-ஜி ஊழல்' பற்றி பேசினார். ஆனால், 'சொத்துக் குவிப்பு வழக்கு'ப் பற்றி வாய் திறக்கவில்லை. ஏனைய பா.ஜ.க அமைச்சர்கள், ஜெயலலிதாவை நேரடியாகவே விமர்சித்தனர்.

இந்த ஒட்டுமொத்தத் தேர்தல் களத்தில், மக்கள் நலக்கூட்டணியும் பாட்டாளி மக்கள் கட்சியும்தான் வௌ;வேறு தர்மசங்கடங்களுக்கு உள்ளாகின. இரு கட்சித் தலைவர்களுமே 'தி.மு.க மற்றும் அ.தி.மு.க' தாக்குதலைச் செய்தாலும், மக்கள் நலக்கூட்டணி மூன்றாவது அந்தஸ்தை பெற்று விட்டது. திடீரென்று தேர்தல் போட்டியிலிருந்து வைகோ வாபஸ் ஆனமை, விஜயகாந்தின் 'விவகாரமான' பிரசாரம் எல்லாம் அக்கூட்டணிக்கு ஆரம்பத்தில் கிடைத்த செல்வாக்கை சிதறடித்து விட்டாலும் மூன்றாவது அணியாக மக்கள் நலக்கூட்டணிதான் நிற்கிறது. இந்த இடத்தைப் பிடித்து விட வேண்டும் என்று, தனியாக தேர்தல் களத்துக்கு வந்த பாட்டாளி மக்கள் கட்சி, நான்காவது இடத்திலேயே திருப்தியடைய வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

'நாம் தமிழர்' சீமான் உட்பட, மூன்றாவது அணி ஸ்தானத்துக்கு போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளின் முயற்சியும் முனை மழுங்கி போனமைக்கு முக்கியக் காரணம், அ.தி.மு.கவும் தி.மு.கவும், அவர்களை சட்டை செய்யாததுதான்!.

களை கட்டி முடிந்திருக்கும் தேர்தல் பிரசாரத்தின் முடிவு, வருகின்ற மே 19ஆம் திகதி தெரியவரும். மே 16ஆம் திகதி வாக்குப் பதிவு நடக்கிறது. எந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, தமிழக அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாமல் தேர்தல் ஆணையம் இந்த முறை தவிக்கிறது. அரசியல் சட்டப்படி, அதிகாரம் பெற்ற அமைப்பாக இருந்தாலும், இந்த முறை நடைபெறும் தேர்தலில் ஏற்பட்டது போல் சவால் இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக இருந்த நரேஷ் குப்தா, ப்ரவீன் குமார், தேர்தல் டி.ஜி.பி.யாக இருந்த போலோநாத், இந்திய தலைமை தேர்தல் ஆணையர்களாக இருந்த கோபால்சாமி, குரோசி போன்றோர், தமிழக அரசு அதிகாரிகளை தேர்தல் நேரத்தில் கட்டுப்படுத்தியது போல், இந்த முறை தலைமை தேர்தல் அதிகாரியாக இருக்கும் ராஜேஸ் லக்கானியாலோ, இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் நசீம் சைதியாலோ கட்டுப்படுத்த முடியவில்லை.

வாக்காளர்களுக்கு, பண விநியோகம் தண்ணீராகச் சென்று கொண்டிருப்பது ஒன்றே இதற்குச் சாட்சியம். 234 சட்டமன்ற தொகுதியில் 118 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, மே 19ஆம் திகதிக்குப் பின்னர் ஆட்சியமைக்கும். இப்போதுள்ள சூழ்நிலைப்படி, பொதுவான டிரென்ட் தி.மு.கவுக்குச் சாதகமாக இருந்தாலும் மிகக் கடுமையான நேரடிப் போட்டி அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் நடக்கிறது. இதில் யார் வெற்றி பெற்றாலும் சில நூறுகள், சில ஆயிரங்கள் வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற முடியும். பண விநியோகம் அ.தி.மு.கவுக்குச் சாதகமாக இருக்கிறது. மக்களின் மன நிலை தி.மு.கவுக்குச் சாதகமாக இருக்கிறது. இரண்டில் எது எதை வெற்றி வாகை சூடப்போகிறதென்பது, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 19ஆம் திகதி தெரிந்து விடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .