2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பதின்மூன்றில் ஏறும் வேதாளம்

Thipaan   / 2016 ஜனவரி 22 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்புத் திருத்த முயற்சிகள் ஆரம்பித்த பின்னர், 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரப் பகிர்வுக்குச் செல்லக் கூடாது என்ற கருத்துக்களும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான அமைச்சர் டிலான் பெரேரா தான் இதனை முதலில் தெரிவித்திருந்தார்.

வடக்கு, கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்றும், 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரப் பகிர்வைக் கொண்டிருக்கக் கூடாது என்றும் அவரே முதலில் நிபந்தனைகளை விதித்திருந்ததார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அண்மையில் அதே கருத்தை முன்வைத்திருக்கிறார்.

13ஆவது திருத்தச்சட்டத்தை தாண்டக் கூடாது, பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்கக் கூடாது, மாகாணங்களை இணைக்கும் அதிகாரங்களை வழங்கக் கூடாது என்று மஹிந்த ராஜபக்ஷவின் நிபந்தனைகள் உள்ளடங்கியுள்ளன.

அரசியலமைப்பு மாற்றம் ஒன்றின் ஊடாக, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதியையும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தீர்வு ஒன்று எட்டப்படும் என்ற மக்களின் எதிர்பார்ப்புகளையும் இத்தகைய நிபந்தனைகள் கேள்விக்குட்படுத்துவனவாக இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது, கிட்டத்தட்ட ஒரு பதவிக்காலம் முடிவதையும், தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என்று கூறிக் கூறியே காலத்தைக் கடத்தியவர். அவர், தனது ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீவிரப்படுத்தினாரே தவிர, குறைப்பதற்கு ஒருபோதும் முனையவில்லை.

போர் முடிவுக்கு வந்த பின்னர், 2010ஆம் ஆண்டு இந்தியா சென்றிருந்த போது, 13ஆவது திருத்தச்சட்டத்துக்கும் அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியைக் கொடுத்திருந்தார். எனினும் பின்னர், அவர் அல்லது அவரது அரசாங்கத்தில் இருந்தவர்கள், அவ்வாறு 13 பிளஸ் தொடர்பான வாக்குறுதிகளை இந்தியாவுக்குக் கொடுக்கவில்லை என்று குத்துக்கரணங்கள் அடித்ததையும் மறக்க முடியாது.

எவ்வாறாயினும், 13 பிளஸ் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் வாக்குறுதியைக் கொடுத்திருந்தாலும், அதில் பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாத- 13 பிளஸ் பற்றியே அவர் வாக்குறுதி கொடுத்ததாகவும் கெஹலிய ரம்புக்வெல போன்றவர்களால் வியாக்கியானங்கள் கூறப்பட்டன. எவ்வாறாயினும், இந்தியாவுக்கு 13ஆவது திருத்தச் சட்டத்துக்கும் அப்பால் சென்று தமிழர்களுக்குத் தீர்வை வழங்குவதாக உறுதியளித்து விட்டு, கடைசி வரையில் எதையுமே செய்யாத ஒருவராகத் தான் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து வெளியேறியிருந்தார்.

அதே மஹிந்த ராஜபக்ஷ தான் இப்போது, 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிரக் கூடாது என்றும், மாகாணங்களை இணைக்கவோ, பொலிஸ் அதிகாரங்களை வழங்கவோ கூடாது என்றும் நிபந்தனைகளை விதிக்கத் தொடங்கியிருக்கிறார். அரசியலமைப்பை மாற்றம் செய்வதற்கு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு மட்டுமன்றி, சர்வஜன வாக்கெடுப்பிலும் அரசாங்கம் வெற்றி பெற வேண்டியிருக்கும்.

அரசியலமைப்பு மாற்றத்துக்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவது அவ்வளவு கடினமான காரியமாக இல்லாவிடினும், சர்வஜன வாக்கெடுப்பு என்பது முக்கியமான ஒன்று. சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் தான், அரசியலமைப்பை மாற்ற முடியும். அத்தகைய திட்டத்தில் தான் அரசாங்கம் இருக்கிறது. இதற்கு முன்னர் எந்தவொரு அரசியலமைப்பும் சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

அதனால் அவை, ஜே.ஆர். ஜெயவர்த்தவினதோ, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினதோ தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இருந்தது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. அதத்கையதொரு விமர்சனமும் குறைபாடும் எதிர்நோக்கப்படக் கூடாது என்பதற்காகவே, சர்வஜன வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றில், வெற்றி பெறுவது சுலபமான செயல் அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொண்டாலும், சர்வஜன வாக்கெடுப்பில் அது தோற்கடிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. அத்தகைய வாய்ப்பை இல்லாமற் செய்ய வேண்டுமானால், மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு, அரசாங்கத்துக்கு கண்டிப்பாகத் தேவைப்படும். மஹிந்த ராஜபக்ஷவோ அவரது அணியினரோ இனவாதக் கருத்துகளைத் தீவிரமாகப் பரப்ப முனைந்தால், சர்வஜன வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வி காணும் நிலையும் ஏற்படலாம். இந்த வாய்ப்பை வைத்தே, மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியலமைப்பின் அதிகாரப் பகிர்வு எல்லைகளை வரையறை செய்து கொள்ள முனைகிறார்.

தனக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் ஆளணி பலத்தை வைத்துக் கொண்டு அவர் இந்த  பேர அரசியலில் இறங்கவில்லை. அதற்கு வெளியே, சிங்கள மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கையும், எந்தளவு சிங்கள மக்களை தன் இனவாதக் கருத்துக்களால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற பலத்தையும் வைத்துக் கொண்டு தான் அரசாங்கத்துக்கு செக் வைக்க முயன்றிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ.

இதன் மூலம் இப்போதைய அரசாங்கத்தை பலவீனமானதாக காட்டவும், அதேவேளை அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் குறைக்க முனைகிறார் என்பதற்கு அப்பால், தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் பகிரப்படுவதையும் தடுக்கப் பார்க்கிறார்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க முடியாத, 13ஆவது திருத்தச் சட்டத்துக்கும் குறைவானதொரு அதிகாரப் பகிர்வைத் தமிழ் மக்களின் மீது திணிக்கின்ற மஹிந்த ராஜபக்ஷவின் முயற்சி, இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

13ஆவது திருத்தச்சட்டத்தை மீறாத அதிகாரப் பகிர்வு ஒன்று தான் நடைமுறைப்படுத்தப்படும் என்றால், அதனைச் செய்வதற்கு இன்னொரு அரசியலமைப்புக்காக நேரத்தையும், உழைப்பையும் வீணடிக்க வேண்டியதில்லை.

ஏற்கெனவே, காணி, பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், 13ஆவது திருத்தச்சட்டம் சாறு பிழியப்பட்ட ஒன்றாகத் தான் இருந்து கொண்டிருக்கிறது. இந்தப் பழைய கள்ளை, புதிய மொந்தையில் ஊற்றிக் கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை. அதனை நம்பி புதிய தீர்வு என்று ஏற்றுக் கொள்வதற்கு தமிழர்கள் தரப்பு ஒன்றும் முட்டாள்களும் அல்ல. அண்மையில் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ் ஜெய்சங்கர், 13ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்டு, புதிய அரசியலமைப்பு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று இந்திய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக, தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

இப்படியான நிலையில், மஹிந்த ராஜபக்ஷவோ, 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் இருந்த அதிகாரங்களையும் கூடப் பறித்து விட்டு, தமிழர்களுக்கு அரைவேக்காட்டு அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதற்கு சூழ்ச்சி செய்கிறார்.  அதேவேளை, 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரங்களைப் பகிர்வதற்கு தற்போதைய அரசாங்கம் கூடத் தயாராக இருக்கிறதா என்று தெரியவில்லை.

அரசாங்கத்தின் தீர்வு பற்றிய தெளிவான எந்தக் கருத்தும் வெளியாகாத நிலையில் மகிந்தவின் மீது மட்டும் பழியைப் போட்டு விட முடியாது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முன்னொரு போதும் இல்லாத வாய்ப்புக் கிட்டியிருக்கிறது என்பதே. சர்வதேச சமூகத்தின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுகின்ற இந்தச் சூழல் தான், அரசியலமைப்பு மாற்றம் ஒன்றின் ஊடாக, நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்குச் சாதகமானதாக இருக்கும் என்று சர்வதேச சமூகம் கருதுகிறது. ஆனால் அதற்கு மாறாக, அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதற்கு மஹிந்த தரப்போ அல்லது வெறெந்த தரப்போ போடுகின்ற முட்டுக்கட்டைகள் அவர்களின் அரசியல் நலன்களை மையப்படுத்தியதாக இருந்தாலும், அது இலங்கைத் தீவின் நிலையான அமைதிக்கு ஊறுவிளைவிப்பதாகவே அமைந்து விடும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X