2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பராக்கு

Administrator   / 2017 ஜனவரி 25 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முகம்மது தம்பி மரைக்கார்

முஸ்லிம் சமூகம் அறிவுபூர்வமாக இன்னும் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. இந்த உண்மை கசப்பானதுதான். ஆனால், ஏற்றுக் கொண்டேயாக வேண்டியிருக்கிறது. அப்படியெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்தால் கூட, உண்மை பொய்யாகிப் போய்விடாது.  

முஸ்லிம்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தரப்போவதாகச் சொல்லி உருவாக்கப்பட்ட கட்சிகளும், முஸ்லிம் சமூகத்தை அறிவுபூர்வமாக அரசியல் மயப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டவில்லை.

முஸ்லிம் அரசியல் கட்சிகளில் அதிகமானவை, உணர்வுபூர்வமானதோர் அரசியல் போதையில்தான், முஸ்லிம் சமூகத்தை வைத்துக் கொண்டிருக்கின்றன.   

அரசியல்வாதிகளைத் தோளில் சுமக்கும் அவலங்களை முஸ்லிம் சமூகத்துக்குள் இன்னும் காண முடியும். கட்சிப் பாடல்களுக்கு, தம்மை மறந்து உசுப்பேறும் தொண்டர்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் நிறைந்து காணப்படுகின்றனர். 

 மக்கள் இப்படியிருப்பதுதான் அரசியல் தலைவர்களுக்கு நல்லது என்கிற நிலைவரம் உருவாகி விட்டது. அறிவுபூர்மாக அரசியல் மயப்படுத்தப்பட்டதொரு சமூகத்துக்குள், மாமூல் அரசியல் செய்து வெற்றி காண முடியாது.  

சக சமூகமான தமிழர்கள், தமக்கென்று ஓர் அரசியல் கட்சியினை சுதந்திரத்துக்கு முன்னராகவே உருவாக்கிக் கொண்டார்கள். சுதந்திரம் கிடைத்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான், தங்களுக்கான ஒரு செயற்பாட்டு அரசியல் கட்சியினை முஸ்லிம் சமூகம் முதன் முதலாக அடைந்து கொண்டது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் முஸ்லிம்களுக்கென்று உருவாக்கப்பட்ட செயற்பாட்டு ரீதியான முதல் அரசியல் கட்சியாகும்.  

இலங்கையின் வரலாற்றில், தற்போதைய கால கட்டம் மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை என்று, பல விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. ஆனால், இது குறித்த அறிவுபூர்வமான பரந்த அக்கறைகள் முஸ்லிம் சமூகத்துக்குள் உள்ளனவா என்று கேட்டால், அதற்கான பதில், “இல்லை” என்பதாகவே அமையும்.   

ஆகக்குறைந்தது, முஸ்லிம் சமூகத்துக்குள் அரசியலைச் செய்து கொண்டிருப்பவர்களில் கணிசமானோரிடம் கூட, மேற்சொன்ன விடயங்கள் குறித்து, போதுமான அறிவு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.  

புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு முறைமையானது, இலங்கையில் இதுவரை காலமும் இடம்பெற்று வந்த, இனப்பிரச்சினைக்குத் தீர்வினை வழங்கும் வகையில் அமையும் என்கிறதொரு எதிர்பார்ப்பு உள்ளது. 

புதிய அரசியலமைப்பானது, தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில்தான் அமைய வேண்டும் என்கிற பிடிவாதத்தில், தமிழ் அரசியல் தலைமைகள் உள்ளன. இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடு தொடர்பில், பேச வேண்டியவர்கள், இதுவரை எதையும் பேசவில்லை என்பது கவலைக்குரியது.  

புதிய அரசியல் யாப்பு ஒன்றின் உருவாக்கம் குறித்து, முஸ்லிம் சமூக அக்கறையாளர்களிடம், ஓர் அச்சநிலை காணப்படுகிறது. ‘புதிய அரசியல் யாப்பு ஒன்றினூடாக இனப் பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படும் போது, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகள் பலிகொடுக்கப்பட்டு விடுமோ’ என்பதுதான் அந்த அச்சமாகும்.   

குறித்த அச்சத்தில் ஏராளமான நியாயங்கள் உள்ளன. ஆளுந்தரப்புடன் முட்டி மோதிக் கொள்வதை விடவும், சமரச அரசியல் செய்து பழக்கப்பட்டவர்கள்தான், தற்போது முஸ்லிம் அரசியலுக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்றனர். இதுவே, மேற்படி அச்ச நிலைக்குப் பிரதான காரணமாகும்.   

மாகாணசபைகளிடம் இருந்த அதிகாரங்களைப் பறித்தெடுக்கும் வகையிலான திவிநெகும சட்ட மூலம், மஹிந்த ராஜபக்ஷ என்கிற தனி நபர், தனது கடைசி நிமிடம் வரைக்கும், இந்தத் தேசத்தை ஆள வேண்டும் என்கிற விருப்பத்துக்கேற்ப உருவாக்கிய அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் உள்ளிட்ட பலவற்றுக்கு, கைகளை உயர்த்திய முஸ்லிம் அரசியல்வாதிகள் குறித்து, அச்சம் கொள்வதில் தவறேதும் இல்லைத்தான்.  

தங்கள் அரசியல் தலைமைகள், இலகுவாக விலைபோகக் கூடியவர்கள் என்பதை, முஸ்லிம் சமூகத்திலுள்ள அக்கறையாளர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.  

உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் முறைமை குறித்தும் சிறுபான்மைக் கட்சிகளிடம் அதிருப்திகள் உள்ளன. பெருந்தேசியக் கட்சிகளுக்குத்தான் புதிய தேர்தல் முறைமையினால் நன்மைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.  

குறிப்பாக, புதிய தேர்தல் முறைமையினால் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று, பரவலான பேச்சுக்கள் இருக்கின்றன. எனவே, புதிய தேர்தல் முறைமையினை ஒட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பிலும் இப்போது இழுபறிகள் ஏற்படத் தொடங்கியிருக்கின்றன.   

புதிய தேர்தல் முறைமையில் உள்ளடக்கப்பட வேண்டும் என, முஸ்லிம் தரப்பு எதிர்பார்க்கும் விடயங்கள் குறித்து, ஆளுந்தரப்பு கவனத்தில் கொள்ளாது விட்டால், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நிலைப்பாடு எதுவாக இருக்கும் என்பதை அனுமானிப்பது ஒன்றும் சீன வித்தையாகத் தெரியவில்லை.   

இணக்க அரசியல் செய்து பழக்கப்பட்ட முஸ்லிம் தலைமைகள், இப்போதைய காலகட்டத்தில் எதனை முன்னிறுத்தியும் அரசாங்கத்தை விட்டும் வெளியேற மாட்டாது.  

ஆனால், ஏலவே எதிர்க்கட்சி அரசியல் செய்து கொண்டிருக்கும் தமிழர் சமூகத்தின் அரசியல் தலைமைகளுக்கு, இந்த தர்ம சங்கடங்கள் எவையுமில்லை. எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு இணக்க அரசியல் செய்வதற்கும், எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு பிணக்கு அரசியல் செய்வதற்குமான சூழ்நிலையும், ஆளுமையும் தமிழர் அரசியல் தலைவர்களுக்கு உள்ளன.  

 இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அரசியல் அசைவினையும் தமிழர் அரசியல் தலைவர்கள் கவனத்துடன் அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் பணி, அதுவாகவே உள்ளது.  

ஆனால், முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு, தமது கட்சிக்குள் நடந்து கொண்டிருக்கும் வெட்டுக் குத்துகள் பற்றிப் பேசுவதற்கே, கால நேரம் போதாமலுள்ளது.   

அதிலும், முஸ்லிம்களின் முன்னணி அரசியல் கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் நிலைமை, மிகவும் பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது.   

அந்தக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைவரமானது உச்ச நிலையினை அடைந்துள்ளது. கட்சித் தலைவருக்கும் செயலாளர் நாயகத்துக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணம், கை நழுவிப் போயுள்ளது.   

இதுபோக, கட்சித் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் ஆகியோர் தொடர்பில் புத்தகமொன்று வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இவற்றினையெல்லாம் முஸ்லிம் சமூகம் பராக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறது. 

ஆக, முஸ்லிம் அரசியல் தலைவர்களிடத்தில் ஏற்பட்டுள்ள மோதல்களால், தற்போதைய கால கட்டத்தில் அக்கறை செலுத்த வேண்டிய அரசியல் விடயங்களில், கவனம் செலுத்த முடியாத நிலைவரமொன்று முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ளது.   

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்கள் கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நடத்தும் சண்டைகளிடையே அரசியல் சீர்திருத்தம், புதிய தேர்தல் முறைமை போன்றவை நிறைவேற்றப்பட்டு விடுமோ என்கிற அச்சம், முஸ்லிம் சமூக அக்கறையாளர்களிடையே இன்னொரு புறம் உள்ளது.   

எனவே, முஸ்லிம் சமூகத்திலுள்ள சிவில் அமைப்புகள் இவை குறித்து அதிக கவனம் செலுத்துவதோடு, செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகளிலும் இறங்க வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.  

 உத்தேச அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமை குறித்து, முஸ்லிம் மக்களிடையே தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை முஸ்லிம் சமூகத்திலுள்ள சிவில் அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும். இவ் விவகாரங்கள் தொடர்பில், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சொல்வதை மட்டும் நம்பும் நிலையிலிருந்து முஸ்லிம் சமூகத்தினை விடுவிக்க வேண்டிய தேவையுள்ளது.   

உணர்வுபூர்வமாக மட்டுமே அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம், தங்கள் அரசியல் தலைவர்கள் சொல்கின்றவற்றினை மட்டுமே நம்பும் சாபத்திலிருந்து விடுவிக்கப்படுதல் வேண்டும். 

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, உத்தேச அரசியல் சீர்திருத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் கருத்தரங்கொன்று கடந்த வாரம் இடம்பெற்றிருக்கிறது.   

கல்வியமைச்சு மற்றும் அரசியலமைப்பு சபை ஆகியன இணைந்து இந்தக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்ததாக அறிய முடிகிறது. இந்தக் கருத்தரங்கில் ஆசிரியர்களும் உயர் தரம் கற்கும் மாணவர்களுமாக ஏராளமானோர் கலந்து கொண்டனர்.   

இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உத்தேச அரசியல் யாப்பு தொடர்பில் தமது சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் விழிப்புணர்வூட்டுவதில், தமிழர் சமூகம் கரிசனையோடு இருக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். 

ஆனால், முஸ்லிம் சமூகத்துக்குள் இவ்வாறான நடவடிக்கைகள் இதுவரை இடம்பெறவில்லை. உத்தேச அரசியல் சீர்திருத்தம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்துக்குள் இதுவரை இப்படியான கருத்தரங்குகள் நடத்தப்படவில்லை. அதனைச் செய்வதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 

முஸ்லிம் சமூகத்துக்குள் இயங்குகின்ற சிவில் அமைப்புகளும் இது தொடர்பில் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக, தமக்கு எவ்விதத்திலும் தொடர்பற்ற விடயங்களாவே உத்தேச அரசியல் யாப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமை போன்ற விடயங்களை முஸ்லிம் சமூகத்தின் கணிசமான பகுதி பார்க்கத் தொடங்கியுள்ளது.  

இந்த நிலையில், “தமிழர்களும் முஸ்லிம்களும் எதிர்பார்க்கும் அதிகாரப் பகர்வினை வழங்காத அரசியல் சீர்திருத்தத்துக்கு, ஒருபோதும் தாம் ஆதரவளிக்கப் போவதில்லை” என்று முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவரும் பிரதியமைச்சருமான  எச்.எம்.எம். ஹரீஸ், சில நாட்களுக்கு முன்னர் கல்முனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசியபோது கூறியிருக்கின்றார்.   

தமிழர் அரசியல் தரப்பானது, தமக்கான அதிகாரப் பகிர்வு எவ்வாறிருக்க வேண்டும் என்பதை அழுத்தம், திருத்தமாகக் கூறிவிட்டது. இணைந்த வடக்கு, கிழக்கு என்பதற்கு குறைவாக எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் அவர்கள் தெட்டத் தெளிவாகத் தெரிவித்து விட்டனர்.   

ஆனால், அதிகாரப் பகிர்வு தொடர்பில் முஸ்லிம் அரசியல் தரப்புக்கள் இன்னும் முழுமையான பிரேரணையொன்றினையாவது முன்வைக்கவில்லை. குறிப்பாக, பிரதியமைச்சர் ஹரீஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸ், இந்த விடயத்தில் ‘ஒளித்து’ விளையாடுகிறது.  

வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்றி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வாய் திறக்கவே பயப்படுகின்றார். இன்னொருபுறம், முஸ்லிம் காங்கிரஸுக்குள் இருக்கின்ற பிரதியமைச்சர் ஹரீஸ் போன்றவர்கள், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிரான மனநிலையினைக் கொண்டவர்களாக உள்ளனர்.   

இந்த மனநிலையினைப் பல தடவை ஹரீஸ் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக, வடக்கு, கிழக்கு இணைப்பினை எதிர்க்கும் முஸ்லிம் தரப்பினர் எதிர்பார்க்கின்ற அதிகாரப் பகிர்வும் தமிழர்கள் வேண்டி நிற்கும் அதிகாரப் பகிர்வும் ஒன்றாக இருக்க முடியாது.   

எனவே, தாம் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வு எந்த வகையானது என்பதையாவது, ஹரீஸ் போன்றவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு விளக்க வேண்டும்.  

அதையெல்லாம் விடுத்து விட்டு, வெறுமனே தமது சமூகத்தைச் சேர்ந்த மக்களை உசுப்பேற்றுவதற்காக, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வாய்ச் சவடால்களை விட்டுக் கொண்டிருப்பதால், நல்லவை எவையும் நடந்துவிடப் போவதில்லை.   

உற்றுக் கவனிக்க வேண்டிய புள்ளிகளிலிருந்து மக்களைத் திசை திருப்பி, பராக்குக் காட்டும் அரசியலை மிக நீண்ட காலத்துக்கு செய்து கொண்டிருக்க முடியாது என்பதையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.   
தாங்கள் பராக்குப் பார்க்க மாட்டோம் என்பதை மக்கள் உணரத் தொடங்கும் தருணங்கள், அரசியல் தலைவர்களுக்கு ஆபத்தானவையாகும்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .