Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்தவாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாநாடொன்று நடைபெற்று முடிந்தது. யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முதலாக 120க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஆய்வாளர்களையும் 400க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களையும் கொண்ட ஆய்வு மாநாடு ஒன்று நடைபெற்றிருக்கிறது.
இந்த நிகழ்வின் சமூகப் பெறுமானம் பெரிது. அதேவேளை இம்மாநாடு எழுப்பியுள்ள கேள்விகளும் வாய்ப்புக்களும் கவனிக்கத் தக்கவை. இதுவும் இன்னொரு நிகழ்வாக ஊடகங்களினதும் பொதுவெளியினதும் பெருங்கவனத்துக்கு உள்ளாகாமல் கடந்து போயிருக்கின்றது. இந்த நிகழ்வு தமிழ்ச்சமூகம் கவனங்குவிக்க வேண்டிய முக்கிய பேசுபொருளைப் பொதுவெளியில் பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது.
தூயசக்தி, மருத்துவநல பயன்பாட்டுக்கான உயர் மூலப்பொருட்கள் பற்றியதான இம்மாநாட்டை மேற்கு நோர்வே பல்கலைக்கழகத்துடனான யாழ். பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பு சாத்தியமாக்கியுள்ளது.
இந்நிகழ்வு இரண்டு முக்கிய விடயங்களைச் சொல்லிச் செல்கிறது. முதலாவது புலம்பெயர் தமிழர் ஒருவரின் அயராத இடைவிடாத முயற்சியே இருநாட்டுப் பல்கலைக்கழகங்களும் இணைந்து செயலாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அவ்வகையில் அந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் மெச்சப்பட வேண்டும். புலம்பெயர் சமூகம் ஆற்றியுள்ள பயனுள்ள இடையீடாக இதைக் கொள்ளவியலும். இவ்வாறான முயற்சிகள் தரமான பல்கலைக்கழகக் கல்வியும் வளமான அறிவார்ந்த சமூகத்தின் உருவாக்கத்துக்கும் முதன்மையானவை.
இரண்டாவது இவ்வாறான முயற்சிகளுக்கு உயிர்கொடுத்து பணியாற்றக்கூடிய வினைத்திறனுள்ளவர்கள் எம்மத்தியில் உள்ளார்கள் என்ற நம்பிக்கையை, இந்த மாநாடு வழங்கியுள்ளது. இவ்வளவு பெரிய மாநாட்டை ஒழுங்குபடுத்தி திறம்பட நடாத்தி முடித்திருக்கிறார்கள் என்பதை எம்சமூகத்தின் கொள்திறனைக் காட்டி நிற்கின்றது. கல்விப்புல ரீதியான முன்னேறிய சமூகமாக நாம் மாறுவதற்குத் தயாராக உள்ளோமா என்ற பிரதான கேள்வியை இம்மாநாடு விட்டுச் சென்றிருக்கின்றது. மிகவும் மேம்பட்ட ஆய்வுப்பரப்பை உள்ளடக்கமாகக் கொண்ட மாநாடு ஆய்வுத்துறையில் நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதைக் காட்டிய அதேவேளை இரு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கூட்டிணைவானது, புதிய வாய்ப்புக்களை விதைத்துச் சென்றுள்ளதையும் நோக்க வேண்டியுள்ளது.
இலங்கையின் உயர் கல்விக்கான தேவை உயர் பதவிகட்கான தேடலுடன் தொடர்புடைய அளவுக்குத் தொழில் சார்ந்த ஆற்றல்களையோ சமூக அறிவையோ பெறும் விருப்பத்துடன் தொடர்புடையதல்ல. அதேவேளை வேகமாக மாறிவருகின்ற சூழலுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாக எமது பல்கலைக்கழகக் கல்வித்திட்டங்கள் இல்லை. அவை பயனுள்ள ஆய்வை நோக்கி நகர்த்துவனவாக இருப்பதும் குறைவு. பல்கலைக்கழகங்களின் வளப்பற்றாக்குறை இதற்கான முக்கிய காரணம்.
ஒரு புறம் அரசபல்கலைக் கழகங்களுக்கான நிதியையும் வளங்களையும் குறைத்து அவற்றைப் பலவீனப்படுத்திக் கொண்டு மறுபுறம் தனியார் பல்கலைக்கழகங்களைப் புகுத்தும் திட்டம் பல்வேறு வழிகளில் அரங்கேறுகிறது. இது சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றினது வற்புறுத்தலாலும் கல்வி வணிகத்தில் தீவிரமாகியுள்ள நாடுகளது நெருக்குவாரங்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. கல்வி பற்றிய எமது பார்வைகள் கல்வி என்பது தனிமனித மேம்பாட்டுக்கானது என்ற நோக்கிலானானவையே. தன்னைச் சூழவுள்ள சமூகத்தையும் இயற்கையையும் அறியும் தேவையைக் கல்வி நிறைவேற்றுவதோடு, ஒருவர் தான் வாழும் சமூகத்தின் நலன்கட்காகவும் உயர்வுக்காகவும் உச்சமான பங்களிக்கக்கூடிய ஆற்றல்களையும் மன நிலையையும் கல்வி ஒவ்வொருவருக்கும் வழங்குகிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம். கல்வி பற்றிய எதிர்பார்ப்புக்கள் வெறுமனே தனிமனிதத் கண்ணோட்டத்தில் அமையும் போது, தனிப்பட்டவர்களின் உயர்வும் நலனும் மட்டுமே முக்கியமாகின்றன. எனவே, சமூக முன்னேற்ற வாய்ப்புகள் குறைந்த சூழ்நிலைகளில், கல்வி என்பது தனி மனிதர்களிடையான கடும் போட்டிக்கும் உரிய களமாகிறது. இளவயதிலேயே உருவாகும் இவ்வாறான போட்டி, சமூக நோக்கற்ற சுயநலமிகளை உருவாக்குகிறது.
நாம் கல்வியின் பயன்கள் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். குறிப்பாக பல்கலைக்கழகங்களின் பணி என்ன என்பது பிரதான வினாவாகிறது. இன்றைய பல்கலைக்கழக ஆய்வுகள் பெரும்பாலும் பதவி உயர்வுக்காகச் செய்யப்படுவனவாக இருக்கின்றன. ஆராய்ச்சிக் கட்டுரைகள் என வெளிவரும் பல கட்டுரைகளால் துறைசார்ந்த விருத்தியோ சமூகப் பயனோ ஏற்படுவதில்லை. மிகச்சிறிய தொகையானோரோ தரமான ஆய்வுப் பாரம்பரியத்தை நிறுவவும் நிலைபெறச் செய்யவும் போராடுகிறார்கள்.
இந்த ஆய்வு மாநாடு பயனுள்ள ஆய்வுகளின் தேவையையும் வேகமாக மாறும் அறிவியல் மற்றும் தொழிநுட்பச் சூழலுக்கு முகங்கொடுக்கக் கூடிய பாடத்திட்டங்களையும் வசதிகளையும் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை குறிகாட்டி நிற்கின்றது. அர்ப்பணிப்பும் தொலைநோக்கும் உடைய செயற்பாடுகள், பயனுள்ள ஆய்வுகளும் எவ்வாறு வேகமாகவும் பயன்விளைவிக்கத்தக்க முறையிலும் நகரும் என்பதை இந்த மாநாடு காட்டியுள்ளது. இது இப்போது துறைசார்ந்து கற்கும் மாணவர்களுக்கு புதிய அனுபவத்தையும் ஆய்வுகள் உலகளாவிய ரீதியில் எத்தகைய தரமுடையனவாக உள்ளன என்ற சித்திரத்தையும் வழங்கியுள்ளன. இது அவர்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்கியிருக்கும். பயனுள்ள ஆய்வுகளை நோக்கி பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறையினரும் நகர்வது தவிர்க்கவியலாதது.
தமிழ்ச் சமூகம் கல்விப்புலரீதியில் தன்னைத் தகவமைப்பதற்கும் மாறுகின்ற சூழலுக்கு முகங்கொடுக்கவும் தயாராக இருக்கிறதா என்ற கேள்வியே தொக்கி நிற்கிறது. வழமை போல குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டலாம், அல்லது நடந்து முடிந்த மாநாடு காட்டியது போல உலகையே அழைத்து அரவணைத்து துணைகொண்டு ஆய்வுரீதியில் முன்னோக்கிப் பயனுள்ள ஆய்வுகளை நோக்கிப் பயணிக்கலாம். நாம் என்ன செய்யப் போகிறோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
16 minute ago
44 minute ago
1 hours ago