2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிடிக்க பிடிக்க தப்பி ஓடும் தேர்தல்

Johnsan Bastiampillai   / 2023 மார்ச் 13 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எம்.எஸ்.எம் ஐயூப்

 

 

 

 

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு, இதற்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு வழங்காத பெரும் முக்கியத்துவத்தை, அரசியல் கட்சிகளும் பொது மக்களும் வழங்கியுள்ளனர். எனவே, நாட்டில் பெரிதாக ஏதோ நடைபெறப் போவதாகவே பலரும் கருதுகின்றனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களோ மாகாண சபைத் தேர்தல்களோ நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வல்லவை அல்ல! எனவே இதற்கு முன்னர், அரசாங்கம் எந்தக் கட்சியிடம் இருக்கிறதோ அந்தக் கட்சிக்கே நாட்டில் தென்பகுதியில் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்து வந்தனர். எனவே, சாதாரண நிலைமைகளில் மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அவ்வளவு பொருட்படுத்துவதில்லை. மிகக்குறைவாகவே இந்த விடயத்தில் விதிவிலக்குகளைக் காண முடியும்.

தேர்தல் நடைபெற்றால், தாம் படுதோல்வி அடைவோம் என்று பயப்படும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசிய கட்சியும், இந்தத் தேர்தலை பின்போடுவதற்காக, இந்தத் தேர்தலால் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை என்ற வாதத்தை முன்வைக்கின்றன. உடனடியாக இத்தேர்தல் முடிவால் ஆட்சி மாற்றம் ஏற்படாவிட்டாலும், அது நிச்சயமாக ஆட்சி மாற்றத்துக்கு இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. 

தற்போதைய அரசாங்கம் நீடித்தால், ராஜபக்‌ஷர்களின் கை மீண்டும் ஓங்கும்; அது அவர்களது ஆட்சி தொடர்வதற்கு உதவும்; அது, பொருளாதார ரீதியாக நாட்டைப் பாதிப்பது மட்டுமன்றி, சிறுபான்மை மக்களின் எதிர்காலத்தையும் வெகுவாகப் பாதிக்கலாம். அந்தவகையில், ஆட்சி மாற்றத்துக்கு இட்டுச் செல்லக்கூடிய இந்தத் தேர்தல் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இரட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு, எதிர்க்கட்சிகளால் பொதுத் தேர்தல் போல் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக, கடந்த வருடம் கொதித்தெழுந்து, ஜனாதிபதியை நாட்டை விட்டே விரட்டியடித்த மக்களுக்கு, தமது உணர்வுகளை சட்டபூர்வமாக வெளிக்கொணரக் கிடைத்த முதலாவது சந்தர்ப்பமாகவே இத்தேர்தலைக் கருதமுடியும்.  

அதேவேளை, கடந்த வருட மக்கள் எழுச்சியின் போது, பெரும்பாலான மக்கள் ஒருபோதும் இல்லாதவாறு வித்தியாசமாக சிந்திக்க முற்பட்டனர். எனவே, நாட்டில் வித்தியாசமான அரசியல் அலைகளையும் காணக்கூடியதாக இருக்கிறது. அதன் காரணமாகவும் எதிர்க்கட்சிகள் இடையேயும் பொதுமக்கள் இடையேயும் தேர்தலைப் பற்றிய உற்சாகம் மேலெழுந்துள்ளது. 

இதுவரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் தேர்தலை பின்போடுவதற்காக எடுத்த சகல முயற்சிகளும், வெள்ளிக்கிழமை (03) உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பொன்றால் முறியடிக்கப்பட்டுவிட்டன. 

கடந்த டிசெம்பர் மாதம், பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தால், தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை திறைசேரியின் செயலாளர் தடுத்து வைத்துக் கொண்டு இருக்க முடியாது என்று, அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் சட்டபூர்வமாக அறிவிக்கப்படவில்லை; எனவே, அதற்காக நிதி வழங்க முடியாது என்ற ஜனாதிபதியின் வாதமும் அந்தத் தீர்ப்பால் முறியடிக்கப்பட்டுவிட்டது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவால் தேர்தலுக்கு நிதி வழங்கப்பட வேண்டும் என்று சமர்ப்பிக்கப்பட்டு இருந்த மனுவை விசாரித்தே, உயர்நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. இதற்கு முன்னர் மத்துமபண்டார, தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவை பணிக்குமாறு கோரி மனுவொன்றை தாக்கல் செய்தார். 

அ​தை விசாரித்த போதும், உயர்நீதிமன்றம் தேர்தல் பணிகளை தொடருமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்தது. அதன் மூலமும் தேர்தல் சட்டபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற ஜனாதிபதியின் வாதம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கூறியதைப் போல் நகைப்புக்கு உரியதாகிவிட்டது. 

ஆனால், தேர்தல் ஓரிரு வாரங்களில் நடைபெறுமா என்பது இன்னமும் உறுதியாகக் கூற முடியாது. தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பாக கலந்துரையாட, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா நேற்று (07) கூட்டியிருந்த கூட்டத்தில், திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்கிரமரத்ன ஆகியோரும் அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள், இந்தக் கட்டுரை எழுதப்படும் நேரத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கவில்லை.

இங்கு எழும் கேள்வி என்னவென்றால், உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பை வழங்கினாலும் தேர்தலுக்காக வழங்குவதற்கு உண்மையிலேயே திறைசேரியில் போதுமான அளவு நிதி இல்லை என்று திறைசேரி செயலாளர் கூறினால் என்ன செய்வது என்பதாகும்.

ஏனெனில், வரவு - செலவு திட்டத்தால் பல்வேறு காரியங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்தாலும், வருட ஆரம்பத்தில் அவ்வனைத்துக்கும் திறைசேரி கையிருப்பில் பணத்தை வைத்திருப்பதில்லை. வரவு - செலவு திட்டத்தில் வரவு என்ற தலைப்பின் கீழ் வரும் வருமானங்கள், வருடம் முழுவதிலும் படிப்படியாக திறைசேரிக்கு வந்து சேர வேண்டியவையாகும். 

எனினும், திறைசேரி செயலாளரால் இந்தத் தேர்தல் தொடர்பில், அவ்வாறு கூற முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. சட்டப்படி இத்தேர்தல் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். அது நிதி அமைச்சருக்கு வரவு- செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் போதும் தெரியும். எனவே, அதற்கு அமையத்தான் அவர் ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும். பிரச்சினை என்னவென்றால், நாட்டில் பொருளாதார ரீதியில் ஓர் அசாதாரண நிலைமை உருவாகி உள்ளமையாகும். அதன்படி திறைசேரி செயலாளர், பணம் இல்லை என்றால் நிலைமை என்னவாகும்? 

நேற்றைய கூட்டத்தில், நிதி வழங்க இணக்கம் தெரிவித்துவிட்டு, புதிய நிலைமைகளை உருவாக்கியும், அரசாங்கம் தேர்தலுக்கு நிதி வழங்காதிருக்க முயலலாம். ஏனெனில், அரசாங்கத்தின் அடிப்படை பிரச்சினை, தாம் தேர்தலில் படுதோல்வி அடையலாம் என்ற அச்சமாகும். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், அது நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்கொன்றை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பாகிவிடும். 

தேர்தலுக்கான நிதியைத் தடுத்து வைத்திருக்க முடியாது என்ற கடந்த வார உயர்நீதிமன்ற தீர்ப்பு, இரண்டு அதிகாரிகளுக்கு எதிராகவே வழங்கப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளர், சட்ட மாஅதிபர் ஆகியோரே அந்த இருவராவர். 

வழமையாக அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் போது, சட்ட மாஅதிபரையும் ஒரு பிரதிவாதியாக குறிப்பிடுவது வழமையாகும். ஆனால், இந்த வழக்கில் சட்ட மாஅதிபர் அந்த அடிப்படையில் அல்லாது, ஜனாதிபதிக்குப் பதிலாகவே பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளார். 

ஏனெனில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ், ஜனாதிபதி செய்த அல்லது செய்யாதிருந்த எந்தவோர் உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட நடவடிக்கைக்காகவும் அவருக்கு எதிராக அவர் பதவியில் இருக்கும் காலத்தில், வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. இந்தநிலையில், அவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதிக்கு பதிலாக சட்ட மாஅதிபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்று அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் சட்டப் பிரமாணங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த அடிப்படையிலேயே, இந்த வழக்கில் சட்ட மாஅதிபர் சேர்க்கப்பட்டுள்ளார். அதாவது, இந்தத் தீர்ப்பு ஜனாதிபதியையும் கட்டுப்படுத்துகிறது. 

அவ்வாறு இருந்தாலும், ஜனாதிபதியே நிதிஅமைச்சர் என்ற முறையில், அந்த உத்தரவை மீறினால் என்ன செய்வது? கடந்த காலங்களில் ஜனாதிபதிகள், உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மீறியிருக்கிறார்கள். 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் எண்ணெய் விலையை குறைக்குமாறு உயர்நீதிமன்றம், தீர்ப்பொன்றை வழங்கியது. ஆனால், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அதைப் புறக்கணித்தார். 

இவ்வாறு சட்டத்தை மீறாமல், நீதிமன்ற உத்தரவை மீறாமல் அரசாங்கம், தேர்தலை பிற்போடும் அபாயம் இன்னமும் இருக்கிறது. நேற்றைய கூட்டத்தின் போது, திறைசேரி செயலாளர் நிதி வழங்க இணக்கம் தெரிவித்தாலும் ஒத்திவைக்கப்பட்ட தபால் மூல வாக்கெடுப்பை நடத்திவிட்டே தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்த வேண்டும். தபால் மூல வாக்கெடுப்புக்காக வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி நேற்று வரை இடைநிறுத்தப்பட்டு இருந்தால், அப்பணி முடியும் வரை அவ்வாக்கெடுப்பை நடத்த முடியாது. 

உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அம்மன்றங்களின் தேர்தல் தொகுதிகளை புதிதாக நிர்ணயம் செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் பிரதமர் தினேஷ் குணவர்தன ஒரு குழுவை நியமித்தார். அதன் அறிக்கையை இம்மாதம் முடிவடைவதற்குள் சமர்ப்பிக்க முடியும் என்று அக்குழுவின் தவிசாளரும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.  

தேர்தலுக்கு முன்னர் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அது பாராளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டு, அத்தோடு அந்த அறிக்கையின் படியே தேர்தல் நடைபெற வேண்டும் என்று அரசாங்கம் தமது பெரும்பான்மை பலத்தை பாவித்து, பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை நிறைவேற்றினால், ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டு இருக்கும் வேட்பு மனுக்கள் செல்லுபடியற்றதாகிவிடும். அப்போது புதிதாக வேட்புமனு கோரப்பட்டுத்தான் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும். 

ஒரு சில வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்திடம் எதிர்ப்பார்க்கப்படும் கடன் கிடைக்கும் என்றும் அதன் மூலம் உடனடியாக மக்களுக்கு சில சலுகைகளை வழங்கி, அவர்களைத் தம் பக்கம் வென்றெடுக்கலாம் என்றும் அரசாங்கம் கருதுவதாக இருந்தால் அவ்வாறும் நடக்கலாம். எனவே, தேர்தல் உடனடியாக நடைபெறும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X