Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் புதிதாக முன்வைத்துள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை வரைந்தவர் யார் என்றக் கேள்வியை, எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறப்பினர்கள் உட்பட பலர் எழுப்புகிறார்கள். ஆனால், அரசாங்கத்தில் எவரும் அதற்கு பதிலளிப்பதில்லை. அமைச்சர் விமல் வீரவன்சவிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, “எனக்குத் தெரியாது” என, அவர் பதிலளித்தார். கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் அதே கேள்வி கேட்கப்பட்ட போது, ”அதனைத் தனியே ஒருவர் எழுதவில்லை; அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவே அதன் உள்ளடக்கத்தைத் தீர்மானித்தது” எனக் கூறினார்.
புதிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர், 20ஆவது திருத்தத்தை வரைவதற்காக, ஐந்து அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை அரசாங்கம் நியமித்தது. அதையே அமைச்சர் பீரிஸ் இங்கு குறிப்படுகிறார். அந்த அமைச்சரவைக் குழு, அரசமைப்பின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்தாலும், ஒருவர் அதைச் சட்டமாக எழுத வேண்டும். அல்லது அதன் ஒவ்வொரு பகுதியையும், வெவ்வேறு நபர்கள் எழுத வேண்டும். அதற்கு, சட்ட அறிவுள்ள ஒருவர் அல்லது பலர் இருக்க வேண்டும்.
இதே கேள்வியை, நீதி அமைச்சர் அலி சப்ரியிடமும் ஊடகவியலாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “அதனை எவரும் புதிதாக எழுதவில்லை; அது, 2010ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 18ஆவது அரசமைப்பேதான்” என்றார்.
உண்மைதான், அரசமைப்பின் 20ஆவது திருத்த நகலின் உள்ளடக்கத்தில், 90 அல்லது 95 சதவீதமானவை, 18ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் உள்ளடக்கங்கள்தான். ஆனால், தற்போதைய அரசமைப்பிலிருந்து பின்னோக்கிச் செல்லும் வகையில் ஒருவர் அதனை எழுத வேண்டும். 18ஆவது திருத்தத்தை அப்படியே காப்பியடித்து, அதனை எழுத முடியாது. அத்தோடு, அதில் தகவல் அறியும் உரிமை தொடர்பான பிரமாணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 18ஆவது அரசமைப்பில் குறிப்பிடப்பட்டு இருந்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தின் பதவிக் காலம், 20ஆவது திருத்த நகலில் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் எவ்வாறு இடம்பெற்றன?
ஆங்கிலேயரான சேர் ஐவோர் ஜெனிங்ஸ், 1947ஆம் ஆண்டில், சுதந்திர இலங்கைக்கான முதலாவது அரசமைப்பான சோல்பரி அரசமைப்பை வரைந்தார். 1972ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட முதலாவது குடியரசு அரசமைப்பை, சமசமாஜக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த கலாநிதி கொல்வின் ஆர். டீ சில்வா வரைந்தார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் சகோதரரான எச்.டபிள்யூ. ஜயவர்தனவே, 1978ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 2ஆவது குடியரசு அரசமைப்பை எழுதினார்.
அதேபோல், வழமையாக அரசமைப்புத் திருத்தங்களை எழுதியவர்களையும் ஆராயந்து அறியலாம். ஆனால், 20ஆவது திருத்தத்தை வரைந்தவரைத் தமக்குத் தெரியாது என அமைச்சர்களே கூறுகின்றனர். இதில் ஏதும் இரகசியம் இருக்க முடியாது. ஆனால், ஏதோ இரகசியம் இருப்பதைப் போல் அமைச்சர்கள் நடந்துகொள்கிறார்கள்.
20ஆவது அரசமைப்பு என்று, உண்மையிலேயே அரசாங்கம் சில அரை குறைகளுடன் 18ஆவது அரசமைப்புத் திருத்தத்தையே மீண்டும் கொண்டு வந்துள்ளதென்பது உண்மை. அவ்வாறு 18ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதாக பொதுஜன கெரமுனவின் தலைவர்கள் தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களுக்குக் கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால், சிலவேளை அக்கட்சிக்குள்ளேயே பலர் அதனை விரும்பியிருக்க மாட்டார்கள்.
அரசாங்கம், 20ஆவது அரசமைப்புத் திருத்தத்தோடு அரசமைப்பு மாற்றத்தை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை. அரசமைப்பு மாற்றம், இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் முதலாவது கட்டமாக, 19ஆவது திருத்தத்துக்குப் பதிலாக 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதும் இரண்டாவது கட்டமாக, தற்போதைய அரசமைப்புக்குப் பதிலாக புதியதோர் அரசமைப்புக் கொண்டுவருவதென்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்தப் புதிய அரசமைப்பை வரைவதற்காக, கடந்த செப்டம்பர் 3ஆம் திகதியன்று, அமைச்சரவையில் 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவொன்றையும் நியமித்துள்ளது. தற்போதைய இரண்டாவது குடியரசு அரசமைப்புக்குப் பதிலாகப் புதிய அரசமைப்பொன்று அறிமுகப்படுத்தப்படுமேயானால், குறுகிய காலத்துக்காக 20ஆவது திருத்தம் ஏன் கொண்டுவரப்பட வேண்டும், நேரடியாகவே புதிய அரசமைப்புக்குப் போகலாமே? புதிய அரசமைப்பொன்றைக் கொண்டு வரும்வரை, ஜனாதிபதிக்கு தமது கடமைகளைச் செய்வதற்கான அதிகாரம் வழங்குவதற்காகவே, 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படுகிறது என, அரச தலைவர்கள் கூறலாம்.
ஆனால் இப்போது, ஜனாதிபதிப் பதவியும் நாடாளுமன்றமும் பொதுஜன பெரமுனவின் கையிலேயே இருக்கின்றன. கடந்த அரசாங்கத்தைப் போல், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளோ மோதல்களோ இல்லை. நாடாளுமன்றம் இல்லாமலேயே, அரசாங்கத்தை ஜனாதிபதி செவ்வனே நடத்துகிறார் என, பொதுத் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவினர் கூறினர். இப்போது, ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு அதிகாரம் உள்ள நாடாளுமன்றமொன்றின் ஆதரவும் இருக்கிறது. அவ்வாறாயின், புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் வரை, 20ஆவது திருத்தம் தேவையா?
20ஆவது திருத்தத்துக்கு யார் இறுதியில் எழுத்துருவம் கொடுத்தாலும், அதன் உள்ளடக்கம், அரசியல்வாதிகளைக் கொண்ட குழுவொன்றினாலேயே தயாரிக்கப்பட்டது. அவர்கள், அரசாங்கத்தின் நோக்கம் பிரதிபலிக்கும் வகையில், அதாவது சர்வாதிகார ஜனாதிபதி ஒருவர் உருவாகும் வகையில், அத்திருத்தத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்துள்ளனர். இது, புதிய அரசமைப்பைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு வழங்கிய ஒரு செய்தியாகவும் அமைகிறது என்றுக் கருதலாம்.
இப்போது, அக்குழுவினர் தமது நிபுணத்துவத்தின்படி, நாட்டின் நீண்டகால நலனைக் கருத்திற்கொண்டு, புதிய அரசமைப்பை வரைவார்களா அல்லது 20ஆவது திருதத்தின் மூலம் அரசாங்கம் தமக்குச் சூட்சுமமாக வழங்கிய செய்தியின்படி, எந்தவித சட்டக் கட்டுப்பாட்டுக்கோ அல்லது எந்தவித மேற்பார்வைக்கோ உள்ளாகாத ஒரு சர்வாதிகார ஜனாதிபதியை, தமது புதிய அரசமைப்பு வரைவின் மூலமும் உருவாக்குவார்களா? அவ்வாறு, 20ஆவது திருத்தத்தின் மூலம் நிபுணர்கள் குழுவுக்கு அரசாங்கத்தின் நோக்கத்தைப் பற்றிய ஒரு செய்தி வழங்கப்படாவிட்டாலும், அக்குழு புதிய அரசமைப்பின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்காது என்றும் கூறப்படுகிறது.
தமது குழு, புதிய அரசமைப்பின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கப்போவதில்லை என்றும் அரசியல் கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளுமே அதனைத் தீர்மானிப்பார்கள் என்றும், அவ்வாறு தீர்மானிக்கப்படும் விடயங்களுக்கு சட்ட வடிவம் கொடுப்பதே தமது குழுவின் பொறுப்பாகும் என்றும், நிபுணர்கள் குழுவின் உறுப்பினரான கலாநிதி ஏ. சர்வேஸ்வரன், பத்திரிகையொன்றுக்குக் கூறியிருந்தார்.
அவ்வாறாயின், புதிய அரசமைப்பின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கும் பொறிமுறை என்ன, அந்தப் பொறிமுறையில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இருப்பார்கள் என்றால், அதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் உள்ளடக்கப்படுவார்களா? இதுவரையான புதிய அரசாங்கத்தின் போக்கைக் கவனிக்கும் போது, அந்தப் பொறிமுறையில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட மாட்டார்கள் போலத்தான் தெரிகிறது.இது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல.
அரசமைப்பானது, ஒரு கட்சியின் தலைவிதியை நிர்ணயிக்கும் விடயமல்ல; நாட்டின் சகல கட்சிகளையும் சகல சமூகங்களையும் சேர்ந்த பல தலைமுறைகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் விடயமாகும். ஓர் அரசியல் கட்சி, அந்த உரிமையைத் தமது கையில் எடுத்து, அனைத்து அரசியல் பிரவாகங்களினதும் அனைத்துச் சமூகங்களினதும் தலைவிதியை நிர்ணயிக்க முற்படுவது ஜனநாயக விரோதமாகும். அதேவேளை, எதிர்க்காலத்தில் அது, பல்வேறு அரசியல், சமூக நெருக்கடிகளைத் தோற்றுவிக்கக்கூடும்.
பொதுஜன முன்னணியைச் சேர்ந்த சிலர், 20ஆவது திருத்தத்தின் சில அம்சங்களை எதிர்க்கின்றனர். குறிப்பாக, வரையறையின்றி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதையும் எதிர்க்கிறார்கள். ஆனால், இவர்களும் கொள்கை அடிப்படையில் இவற்றை எதிர்க்கிறார்களா அல்லது தனிப்பட்ட நபர்கள் மீதான விருப்பு வெறுப்புகளை மனதில் வைத்துக்கொண்டு எதிர்க்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது.
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள், தேர்தல்களில் போட்டியிடுவதை இவர்கள் தேசப்பற்றின் அடிப்படையில் எதிர்ப்பதாக இருந்தால். கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்கக் குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டதற்கான எவ்வித உத்தரவாதமும் இன்றியே, இவர்கள் அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை ஆதரித்தார்கள். பிற நாடொன்றின் பிரஜை ஒருவர் எம்.பியாவதை எதிர்க்கும் இவர்கள், கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜையாக இருக்கும்போதே நிறைவேற்று ஜனாதிபதியாவதை எதிர்க்கவில்லை. இலங்கையில் இதுவரை நிறைவேற்றப்பட்ட பல அரசமைப்புகள் மற்றும் அரசமைப்புத் திருத்தங்கள், சில அரசியல்வாதிகளினது அல்லது சில அரசியல் கட்சிகளினது அப்போதைய தேவைக்கேற்பவே நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி, சதாகாலமும் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காகவே, 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசமைப்பில், விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது. ராஜபக்ஷர்கள் சதாகாலத்துக்கும் ஜனாதிபதிப் பதவியை வகிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே, 18ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி எத்தனை முறையும் அப்பதவியை வகிக்கலாம் என்ற வாசகம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதே போக்கு, எதிர்காலத்திலும் தொடரும் போல்தான் தெரிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
01 May 2025