2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

புதிய அரசாங்கத்துக்கு சவலாகப் போகும் 2025

Editorial   / 2025 ஜனவரி 10 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்

இன்று பிறக்கும்  2025ஆம் ஆண்டு புத்தாண்டு வித்தியாசமான தொரு சூழலில் ஆரம்பமாகிறது. சுதந்திரத்துக்குப் பின்னர் முதன்முறையாக மேற்குடியினரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு சாதாரண குடும்பமொன்றில் பிறந்த ஒருவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கிறார்.

அவரது அரசாங்கத்தில் ஏனைய உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சாதாரண குடும்பங்களில் பிறந்து வளர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இது வரலாற்றில் மிகவும் பலம் வாய்ந்த அரசாங்கமாகும். தனி ஒரு கட்சி விகிதாசார தேர்தல் முறையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருக்கிறது. வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களும் முன்னொரு போதும் இல்லாத அளவில் மத்திய அரசாங்கம் ஒன்றுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

வரலாற்றில் முதன்முறையாக 22 பெண்கள் பாராளுமன்றத்திற்குத்
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.புத்தாண்டில் மேலும் இரண்டு தேர்தல்கள் நடைபெறவிருக்கிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்  மற்றும் மாகாண சபைத் தேர்தல் அவையாகும்.

ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் தோல்வியடைந்த பிரதான அரசியல் கட்சிகள் மென்மேலும் பிரிந்து செல்லும் நிலை காணப்படுவதால் தேசிய மக்கள் சக்தியே எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் போல் தெரிகிறது.

பிறந்த புத்தாண்டில் புதிய அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமா அல்லது அதுவும் இதுவரை பதவியிலிருந்த அரசாங்கங்களைப் போல் நாட்டை சூறையாடும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சாதகமாகச் செயற்படுமா என்பதை இப்போதே எதிர்வு கூற முடியாது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அப்பதவியை ஏற்று சுமார் மூன்றரை மாதங்கள் கழிந்துள்ளன. புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு ஒன்றரை மாதங்களே உருண்டோடி உள்ளன. எனவே, இந்த அரசாங்கத்தை இப்போதே எடைபோட முயல்வது நியாயமானதாக அமையாது. எனினும், பிறந்த புத்தாண்டு அரசாங்கத்தை எடைபோடும் ஆண்டாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தேசிய மக்கள் சக்தி கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றின் போது, மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தல், வரிப்பழுவை குறைத்தல், மின் கட்டணத்தைக் குறைத்தல், ஊழலை ஒழித்தல், போன்ற குறுகிய கால வாக்குறுதிகள் முதல் சகலருக்கும் சமமான சமூக, பொருளாதார சூழலொன்றை உருவாக்குதல் போன்ற நீண்ட கால வாக்குறுதிகளும் அவற்றில் அடங்கும்.

ஆனால், புதிதாக மக்கள் இன்னமும் எந்த ஒரு சலுகையையும் அனுபவிப்பதாகத் தெரியவில்லை. மாறாக, எதிர்பாராத வகையில் அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாடும் விலையேற்றமும் காணப்படுகிறது.

நாட்டில் முன்னர் போலவே கொலைகள் இடம்பெற்று வருகின்றன. போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரமும் தடையின்றி நடைபெறுகிறது. இவற்றைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விமர்சிக்கின்றன.

உண்மையிலேயே நியாயமான முறையில் அரசாங்கத்தை விமர்சிக்க இன்னும் போதிய காரணங்கள் இல்லை என்றே கூற வேண்டும். அரிசி தட்டுப்பாடு சிறு போகத்தின் குறைந்த விளைச்சலின் விளைவு என கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன கூறுகிறார்.

அதற்குப் பரிகாரம் காணத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு கால அவகாசம் போதுமானதாக இருக்கவில்லை. வருட ஆரம்பத்தில் நிலவிய வறட்சியே தேங்காய் தட்டுப்பாட்டுக்கு காரணம்  என கூறப்படுகிறது. அதற்கும் பரிகாரம் காண அரசாங்கத்திற்கு கால அவகாசம் போதுமானதாக இருக்கவில்லை.

அவற்றுக்கு கால அவகாசம் இருந்தாலும், பதுக்கலில் ஈடுபடும் பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட பாரிய அளவிலான வர்த்தகர்களைக் கட்டுப்படுத்தாது அரசாங்கத்தால் பொருட்களின் தட்டுப்பாட்டைத்
தீர்க்க முடியாது. ஆனால், அவ்வாலை உரிமையாளர்களுக்கும் பதுக்கலைத் தடுக்க வேண்டிய அதிகாரிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவர்களிடையே கோடிக் கணக்கில் பணம் பரிமாறப்படுகிறது.

அதேவேளை, அரிசி வியாபாரத்தில் தனியார்த் துறையின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த நெல் சந்தைப்படுத்தும் சபை போன்ற அரசுக்குச் சொந்தமான போட்டி நிறுவனங்களைப் பலப்படுத்துவதாகவே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தார்.

அது சாத்தியமா? அச்சபையிடம் போதியளவில் களஞ்சியசாலைகள் இல்லை என்பது பொதுவாகத் தெரிந்த விடயமாகும். தற்போது மூடப்பட்டுக் கிடக்கும் பல்வேறு பாரிய அளவிலான தொழிற்சாலைகளின் களஞ்சியசாலைகளை இதற்காகப் பயன்படுத்தப் போவதாக அரசாங்கம் கூறியிருக்கிறது. அதற்கு பணம் வேண்டும். எல்லாவற்றையும் பார்க்கிலும் அரசாங்கம் எதிர்நோக்கும் பிரச்சினை அதிகார வர்க்கத்தின் தடைகளாகும்.

ஏற்கனவே இப் பிரச்சினையை அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. பழைய ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஊழல் மலிந்த பழைய முறையைக் கைவிடத் தயாரில்லை என கடந்த வாரம் விவசாய அமைச்சர் லால் காந்த கூறியிருந்தார். அத்துடன், அவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக சுனாமி ஒன்று காத்திருக்கிறது என்று அவர் எச்சரித்தார்.

இதே கருத்தைக் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியும் கடந்த சனிக்கிழமை பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். அரசாங்கத்திற்கு மக்கள் அளித்த ஆணையின் சுபாவத்தையும் அதன் அளவையும் அறியாத அதிகாரிகள் இருப்பதாகவும் அவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல தயாராக இல்லை என்றும் அவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக ஆளும் கட்சி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும்
அவர் கூறியிருந்தார்.

அன்றே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் குடிவரவு மற்றும்
குடியகல்வு திணைக்களம், சுங்கத் திணைக்களம், விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகளை சந்தித்தார்.

போதைப் பொருட்கள் மற்றும் ஏனைய தடை செய்யப்பட்ட பொருட்கள் நாட்டுக்குள் கடத்தப்பட்டு வருவதைத் தடுத்தல் மற்றும் விமான நிலையத்தில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத் தடுத்தல் இந்த கலந்துரையாடலின் நோக்கமாகியது.

இப்பணிகளுக்காக அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற அடிப்படையில் இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதியும் கருத்து தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக நாட்டுக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் நாட்டின் தென் பகுதிகளில் மட்டும் பரவியிருந்த போதைப் பொருட்கள் போர் முடிவடைந்ததன் பின்னர் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் பரவியிருக்கின்றன.

இவ்வளவு காலமாக அவை எவ்வாறு நாட்டுக்குள் வருகின்றன என்று விமான நிலைய மற்றும் சுங்க அதிகாரிகளுக்குத் தெரியாது என்பதை நம்ப முடியாது. பாரியளவிலான இலஞ்சம் வழங்கியே கடத்தல் காரர்கள் அவற்றைக் கொண்டு வருகிறார்கள் என்றே ஊகிக்க முடிகிறது. எனவே, அரசாங்கம் மாறினாலும்
அதிகாரிகள் இதனைத் தடுக்க உணர்வுப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்ப முடியாது.

அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதி அளித்ததை போல, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தையும் எரிபொருள் விலையையும் குறைக்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதேவேளை, அண்மையில் அதிகரிக்கப்பட்ட வருமான வரியைக் குறைக்க வேண்டும் என்று தொழில்சார் துறையினர் கோருகின்றனர். ஆயினும், அவை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பேரிலேயே அதிகரிக்கப்பட்டுள்ளன.

அரசின் மொத்த வருமானம் பாதிக்காத வகையில் அக்கட்டணங்களையும் விலைகளையும் வரிகளையும் குறைக்கலாம் என்று நாணய நிதியம் கூறுகிறது.

அவ்வாறாயின், வேறு வழியில் அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். நாட்டில் வரி செலுத்த வேண்டியவர்களில் மிகச் சிலரே வரி செலுத்துகிறார்கள் என்பது நீண்ட காலமாகவே தெரிந்த விடயமாகும்.

அவர்கள் வரி செலுத்துவதாக இருந்தால் மேற்படி கட்டணங்கள் மற்றும் வரிகளைக் குறைக்க முடியும். எனினும், பாரியளவில் வரி ஏய்ப்பவர்களுக்கும் வரி அறவிடும் அதிகாரிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக நிதி அமைச்சின் அதிகாரிகளே இதற்கு முன்னர் கூறியிருக்கின்றனர்.

வரி அறவிடும் துறையில் இடம்பெறும் இந்த மோசடியைத் தடுப்பதற்காக வென 2014ஆம் ஆண்டு 100 கோடி ரூபாய் செலவில் ‘ரமிஸ்’ என்னும் வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் பொறிமுறை (Revenue Administration Management Information System
(RAMIS computer system) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், பத்தாண்டுகள் கழிந்தும் அது இன்னமும் முறையாக இயங்குவதில்லை
என கூறப்படுகிறது. அந்த பொறிமுறைக்காக பயிற்றப்பட்ட ஊழியர்கள் இல்லாமையே அதற்குக் காரணம் என்று ரணில்  விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கூறப்பட்டது.

நாட்டில் இடம்பெறும் பாரியளவிலான வீண் விரயம், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு அரசியல்வாதிகளே எப்போதும் குற்றஞ்சாட்டப்படுகின்றனர். ஆனால், அதிகாரிகளின் உதவியின்றி அரசியல்வாதிகளால் ஊழல்களில்
ஈடுபட முடியாது.

அமைச்சுகளின் செயலாளர்களினதும் கணக்காளர்களினதும் ஒத்துழைப்பின்றி அமைச்சர்களால் எந்த ஊழலையும் செய்ய முடியாது என்று நீண்ட காலமாக அமைச்சராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற இலங்கை பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் 45ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றும் போது கூறினார்.

எனவே, இன்று பிறந்த புத்தாண்டு அரசாங்கத்திற்கு பெரும் சவாலாகப் போகிறது என்றே தெரிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X