Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜனவரி 14 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ்
முன்னாள் ராஜதந்திரி
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து அதற்கான வாழ்த்துகளை நாம் பரிமாறிக் கொண்டதனைத் தொடர்ந்து வருகின்றது தைத்திங்கள் முதல் நாளாகிய பொங்கல் திருநாள்.
பொங்கல் தினம்
"தை பிறந்தால் வழி பிறக்கும் ' என்பது ஆன்றோர் வாக்கு. தை மாதம் என்றாலே இராமப் பஜனை ஊர்வலங்களையும், கீர்த்தனைகளையும், எங்கும் கேட்கலாம்.
எனது பால்யப் பருவத்தில், ஒவ்வொரு வருடமும் வரும் தை மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து, கடுங் குளிரிலும் கூட, கிணற்று நீரில் குளித்து விட்டு பஜனையுடன் வரும் அடியார்களுடன் சேர்ந்து கீர்த்தனைகள், தேவாரங்கள் பாடிக் கொண்டு ஊரில் செல்வதுவும், பின்னர் ஆலயப் பூஜை முடிந்த பின்னர், பாடசாலைக்கு சென்ற அனுபவங்கள் நெஞ்சை விட்டு அகலாதவை.
அந்த அதிகாலையிலும் எமது ஊரிலுள்ள மக்கள் பஜனையில் வரும் அடியார்களுக்கு சூடான தேனீருடன் , சிற்றுண்டிகளும் வழங்கியதனை எண்ணிப் பார்க்கும் பொழுது அக்காலம் மீளவும் வராதா என்ற ஏக்கம்.
அக்காலங்களில் எங்களது ஊரில் இளம் பெண்கள் அதிகாலையில் எழுந்து கோலமிடுவதும், பஜனையில் வரும் கம்பத்தினை வழிபடுவதுவும் சிறப்பம்சம்.
பொங்கல் விழாவின் போது கோலப் போட்டிகள் விமரிசையாக நடாத்தப்படும். வித விதமான கோலங்கள் கண் கொள்ளாக் காட்சியாக, மனதில் ஒரு குதூகலத்தை ஏற்படுத்தும்.
வெற்றியாளர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுவர். அரிசி மாவினாலான கோலமிடுவதன் மூலமாக, அனைத்து உயிரினங்களுக்கும் உணவளித்தவர்கள் எம் வழிகாட்டிகள்!
மாவினால் கோலமிடும் போது எறும்பு முதலான ஊர்வனவைகளும், குருவிகளும், தமக்கான உணவாக அதனை சாப்பிடும்."ஓரறிவுள்ள உயிர்கள் தொடக்கம் ஆறறிவுள்ள உயிர்கள் வரை வயிராற உண்ண வேண்டுமென்பதே" அதன் தத்துவமாகும்.
பொங்கல் தினத்தன்று ஸ்ரீ இராமபிரானுக்கு திருவிழா நடைபெறுவதுடன் , எமது ஊரிலுள்ள வீதிகள் முழுக்க வாழை மரங்களாலும், கரும்பு மற்றும் மாவிலைத் தோரணங்களாலும் , அலங்கரிக்கப்பட்டிருந்த காட்சிகள் அந்த நாட்களில் கண்கொள்ளாக் காட்சியாக காணப்பட்டது. எங்கும் பக்தி பரவசமூட்டும் தெய்வீகப் பாடல்களும், ஊர் தோறும் ஒலி பரப்பப்பட்டது.
இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் முன்னின்றவர்கள் எமது மூதாதையர்கள். நிலம் , நீர் , வானம் ஆகியன இயற்கை சக்திகளின் துணை. இவைகள் இல்லாவிட்டால் உழவனால் உழவுத் தொழில் செய்ய முடியாது. மனிதனுக்கு தேவையான உணவை தருவது என்பது இயலாத காரியம் . எனவே இயற்கை சக்திகளுக்கு தலை வணங்கி நன்றி செலுத்தும் ஒரு நல்ல நாளாக பொங்கல் திருநாள் அமைகின்றது.
சூரியனே இந்த உலகின் ஒளிப்பிரவாகத்தை ஏற்படுத்துபவன். உலகின் அடிப்படை இயக்கத்துக்கு சக்தியாக இருப்பது சூரியன் என்பதனை தெளிவாக உணர்ந்திருந்தவன் தமிழன். எனவே சூரியனை வணங்குதல் மிகவும் பொருத்தப்பாடு உடையதெனக் கைகூப்பி வணங்கி கொண்டாடும் இயற்கை திருநாள் இந்த பொங்கல் திருநாள்.
அந்த சக்தியின் பெருமையை பறைசாற்றும் அதேவேளை உழவர்களை முன்னிலைப்படுத்துவது பொங்கல் தினம்.
பழைய பகைமையை, குரோதங்களை தம் மனதில் இருந்து களைந்து விட வேண்டும் என்று போதிக்கும் போகிப் பண்டிகை. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் வாழப் பிறந்தவை . அவைகளை மனிதன் நேசிக்க பழகிக் கொள்ள வேண்டுமென எடுத்தியம்புகின்ற மாட்டுப் பொங்கல் .
ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையிலும் உறவுகள் முக்கியமானவை.அந்த உறவுகளின் பெருமையை வலியுறுத்துவதற்காக கொண்டாடப்படும் காணும் பொங்கல்.
திருமணமான முதல் வருடம் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு சீர்வரிசை கொண்டு செல்வது அன்று தொட்டு இன்று வரை தொடர்ச்சியாக தொய்வின்றி நடந்து வரும் ஒரு நிகழ்வு. இவ்வாறான நிகழ்வின் மூலமாக பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் இடையிலான பிணைப்பினை வலுப்படுத்தினர் எம் முன்னோர்கள்.
வாழைப்பழம், வாழை இலைகள் ஆகியவற்றுக்குக் கூட முக்கியத்துவம் இத்தினத்தன்று வழங்கப்படுகின்றது. " வாழையடி வாழையாக வாழ வேண்டும் " என வாழ்த்தும் மரபு எமது உணர்வோடு கலந்து காணப்படுவதே இதனது தாற்பரியம்.
பொங்கல் தினத்தன்று பொங்கல் பானையினை மஞ்சள் தண்டுகளாலும், இஞ்சிக் கொத்துக்களாலும் அலங்கரித்து, அப்பானையின் கழுத்தில் அவற்றைக் கட்டி, பானையைச் சுற்றி திருநீறு, சந்தனம் , குங்குமம் வைத்து அலங்கரித்து, பானையில் பொங்கலுக்கான பச்சரிசியினை எனது தாத்தா சேர்ப்பதுவும், தொடர்ந்து எமது குடும்ப மூத்த உறுப்பினர்கள் பொங்கலுக்குத் தேவையான ஏனைய பொருட்களையும் சேர்த்த காட்சி இன்றும் என் மனக்கண் முன் அசை போடுகின்றது.
கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அந்த காலகட்டங்களில் குடும்ப உறவுகள் சேர்ந்து மகிழ்வாகக் கொண்டாடிய தருணம் இன்றும் பசு மரத்தாணிப் போல என் மனதில்.
இவ்வாறு ஒரு அர்த்த புஷ்டி நிறைந்த பண்டிகையாக திகழ்கின்றது இந்த பொங்கல் பண்டிகை.
தென்னாசிய மக்களின் ஜீவனோபாய தொழில் விவசாயம், உழவர்களினால் காலாகாலமாக கொண்டாடப்படும் உன்னதமான விழா பொங்கல் விழா. இவ்வுலகமே நம்பியிருக்கும் ஒரே ஜீவன் விவசாயி, அதனால் தான்
" உழவன் இன்றேல் இவ்வுலகம் இல்லை" என முன்னோர்கள் கூறி வைத்தனர்.
உழவுத் தொழில் மனிதனின் உயிரோடு கலந்த ஒன்று . மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத உணவைத் தருகின்ற உயர்ந்த தொழிலான உழவுத் தொழில் இல்லாவிட்டால் இந்த உலகமே செயலற்று போய்விடும். அதனால் தான் உழவின் பெருமையை கூற வந்த திருவள்ளுவரும்,
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல் பவர்." என்றும்,
" சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை"
என்று கூறி உழவுத் தொழிலே உலகில் சிறந்த தொழில். மற்ற தொழில்கள் எல்லாம் அதற்குப் பின்னர் வைத்து எண்ணத்தக்க தொழிலாகும் என்று உயர்வாகக் கூறுவதோடு, தனது குறளில் உழவுத் தொழிலுக்கும், நன்றி உணர்விற்கும், முக்கியத்துவம் கொடுத்து அவர் இயற்றிய குறட்பாக்கள் பத்து.
உலகிலேயே உழவர்களுக்காக கொண்டாடப்படும் ஒரு தினம் இத்தினம்.உழவனின் உழைப்பினால் உருவாகும் கழனி விளைச்சலை நினைவு கூர்ந்து, நாம் வாழும் பூமியை பொன் விளையும் பூமியாக மாற்றுகின்ற உழவர்களுக்காக கொண்டாடப்படுகின்ற இன்பத் திருநாள் இந்த தைத் திருநாள்.
உலகில் இருக்கும் அனைத்து மக்களும் கொண்டாட வேண்டிய இந்த திருநாளை தமிழர் மாத்திரம் தொன்று தொட்டு கொண்டாடி வருவது சிறப்பான அம்சமாகும். ஆரம்பகால மனிதர்கள் இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்து வந்துள்ளனர் .
சிந்துவெளி நாகரிகம், மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரிகக் காலகட்டங்களில் இவற்றை சிறப்பாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இந்த நாகரிகங்கள் தமிழர் பண்பாட்டுடன் மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டவையாக இருப்பதனை நோக்கலாம்.
ஒரு சமூகத்தின் பண்பாடு, கலை, கலாசாரம், மொழி என்பன பாதுகாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது. அவைகளே, ஓர் இனத்தின் அசைக்க முடியாத சொத்துக்களும், அடையாளங்களும் , நமது பண்பாட்டில், மரபில், வாழ்க்கை முறையில் ஆழ வேரூன்றிய ஒரு விழா பொங்கல் விழா. அந்த வகையில், நாம் எமது பண்பாட்டு அம்சங்களை தொடர்ச்சியாகப் பராமரித்து வருவது போற்றப்படக் கூடிய விடயம். பொங்கல் பண்டிகை மனிதனுக்கும், இயற்கைக்கும், அவனோடு சார்ந்து வாழும் உயிரினங்களுக்கும் இடையிலான தொடர்பினை உணர்த்துமோர் தினம்.
சங்ககால நூல்கள் பலவும் தைத்திருநாளை சிறப்பாக எடுத்தியம்பியிருக்கின்றன
‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ , என்கின்றது நற்றிணை.
‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ , என்கின்றது குறுந்தொகை.
‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ , என்கின்றது புறநானூறு .
‘தைஇத் திங்கள் தண்கயம் போது’ , என்கின்றது ஐங்குறுநூறு.
‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ என்கின்றது கலித்தொகை.
எனப் பலவாறாக தைத்திருநாளின் சிறப்பியல்புகளை பழந்தமிழர் இலக்கியங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. எமது மூதாதையர்கள் எவ்வளவு சிறப்பாக இவ்விழாவை கொண்டாடியிருந்தனர் என்பதற்கு சங்க கால இலக்கியங்களே சான்றுகள்.
புறநானூற்றுப் பதிகத்தில் ' சாத்தனார்' என்னும் புலவர் பொங்கலானது எவ்வாறு சமைக்கப்படுகின்றது என்பதனை தெளிவாகக் கூறியுள்ளார் . இப்பண்டிகையின் பொழுது அரிசியும், பாலும் சேர்க்கப்பட்டு பொங்கப்படும் ஒரு விழாவென அழகாகக் குறிப்பிடுகின்றார்.
என்ன ஆச்சரியம் ?
இரண்டாயிரம் வருடங்களாக இந்த உணவு செய்முறையில் இன்று வரை எத்தகைய மாற்றமுமில்லாமல் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றது. எமது அடிப்படை உணவான அரிசியினை எமக்கு உருவாக்கி தருபவர்கள் உழவர்கள் .
"உழவர், சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்’, என்பதனை அனைவரும் அறிவர். இதுபோல , உழவுத் தொழிலில் பயன்படுத்தப்படுகின்ற மாடுகள் போன்ற விலங்குகளுக்கும் நன்றி செலுத்துவது தவிர்க்க முடியாதது. அது நமது நன்றிக் கடன். அதுவும் செய்நன்றிக் கடன். மனித பிறப்போடு சேர்ந்து வருவது தான் நன்றியுணர்வு.
நன்றி கூறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட தினம் தான் தை மாதத்தில் வரும் முதலாம் நாள். இந்த நன்றி உணர்வானது இற்றை வரை மனித குலத்தில் வேரூன்றி நிற்பதனை நாம் அவதானிக்க முடியும்.
மனிதனுக்குத் தேவையான உணவினை உற்பத்தி செய்வதற்காக , எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் , வெயில் மழையென பாராது, அல்லும் பகலும் உழைக்கும் கால்நடை இனங்களும், பிற உயிரினங்களும் போற்றப்படத் தக்கவை.
வயலில் உழும் உழவன் நெல்லை எடுத்துக் கொள்கின்றான். அவனுக்கு தேவைப்படாத வைக்கோலை மாடு எடுத்துக் கொள்கின்றது. நெல்லில் இருந்து உழவன் அரிசியை எடுத்துக் கொள்கின்றான். அவனுக்கு தேவையில்லாத தவிட்டை மாடு எடுத்துக் கொள்கின்றது. நீரில் அரிசியை கழுவி எடுத்துக் கொள்கின்றான் உழவன் . அந்த கழுவிய நீரை குடிக்கின்றது மாடு. வாழை இலையில் உணவு அருந்துவது உழவனின் பழக்கம் . அந்த இலையை உண்டு மகிழ்வது மாட்டின் பழக்கம். இவ்வாறு மனிதனும் , விலங்கும் ஒன்றிலொன்று தங்கி இருப்பது மாத்திரமல்லாது அவன் சாப்பிட்டது போக மீதம் உள்ளதை மாடுகள் உண்டு மகிழ்கின்றன என்பது தான் உண்மை.
பொங்கல் தினத்தன்று, விருந்தோம்புவதிலும் கூட எம்மவர்கள் சளைத்தவர்கள் அல்லர். பொங்கல் பொங்காதவர்களுக்கும் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தினையும் அவர்கள் கொண்டிருந்தனர். பொங்கல் விழா நான்கு தினங்கள் கொண்டாட்டப்படுகிறது.
போகிப் பண்டிகை
"பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகப் பொங்கலின் முதலாவது நாள் கருதப்படுகிறது. அதாவது வீட்டில் இருக்கின்ற பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை நீக்கி விட்டு , புதியவைகளைக் கொண்டு வர வேண்டுமென்ற நோக்கமே இதனது அடிப்படையாகும். 'இந்திர விழா' என்ற பெயரில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் இந்திரனை ஆயர்கள் போகிப் பண்டிகை தினத்தன்று வழிபட்டு வந்தனர்.
சூரியப் பொங்கல்:
" அவன் இன்றி அணுவும் அசையாது", என்பது போல , சூரிய வெளிச்சமின்றி இந்த உலகம் இயங்காது . உலக மக்களுக்கு, அவர்களது வாழ்வாதாரத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும், இலவசமாக அளிக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இந்த நாள் காணப்படுகின்றது.
உழவன் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த புதுப் பானை வைத்து , புத்தரிசி உலையில் இட்டுப் பாலோடு பொங்கி வரும் வேளையில் "பொங்கலோ பொங்கல் ", எனக் கூவி உலகுக்கு தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துகின்றான் . புது அரிசியைப் பொங்கலாக்கி அதனை ஆதவனுக்கு படைத்து மகிழ்ச்சி அடையும் உன்னத திருநாள் இதுவாகும்.
மாட்டுப் பொங்கல்:
இதற்கு அடுத்த தினம் மாட்டுப் பொங்கல் தினமாகும். மனிதனது வாழ்க்கையில் ஆடு , மாடுகள் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்களின் பங்களிப்பு முதன்மையானது .மனிதனுக்கு தேவையான பாலை கொடுப்பது மாத்திரம் அல்லாது, வயல் உழுவதற்கும், போக்குவரத்திற்கும், உரப்பாவனைக்கும், இவைகள் பெரிதும் உதவுகின்றன.இவைகளின் சேவைகளுக்கு நன்றி கூறும் முகமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது .அத்துடன் பசுக்களை தெய்வமாக வழிபட்டவர்கள் நம் முன்னோர்கள் .
பசுக்களில் அனைத்து தேவர்களும் இருப்பதாக கருதப்படுவதனால் அவைகளுக்கான தினமாக இது உள்ளது. மாட்டுப் பொங்கல் அன்று அதனை குளிப்பாட்டி பொட்டிட்டு, மாலையிட்டு, அதனை அலங்கரித்து அதற்கென பொங்கல் வைத்து வணங்கி படைத்துக் கொண்டாடும் திருநாள் மாட்டுப் பொங்கல்.
காணும் பொங்கல்:
இறுதி நாள் கொண்டாட்டமாக "காணும் பொங்கல் " காணப்படுகின்றது. அன்றைய தினம் உற்றார், உறவினர், நண்பர்களை சந்தித்தல், பெரியோர்களது ஆசி பெறுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறும்.இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு ' மகர சங்கராந்தி ' என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நேபாளம், மியான்மார் போன்ற ஆசிய நாடுகளிலும் மகர சங்கராந்தி விழா வெவ்வேறு பெயர்களால் கொண்டாடப்படுகிறது.
பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா , ஜம்மு ஆகிய மாநிலங்களில் சூரிய வழிபாடு ' லோரி ' என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது.அசாம் மாநிலத்தில் ' மாக் பிகு' என்ற பெயரிலும், குஜராத்தில் ' உத்தராயன் ' என்ற பெயரிலும் கொண்டாடப்படுகின்றது.
உலகில் பரவலாக வாழும் தமிழர்கள் இந்த பண்டிகையினைக்கொண்டாடுவதன் மூலம், அவர்கள் இத்தினத்தின் பாரம்பரியப் பெருமையினை உலக மக்களும் அறிந்து கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் எனலாம். இதன் மார்க்கமாக எமது கலை, கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களை தாங்கள் குடிபெயர்ந்த நாடுகளுக்குப் பரப்பும் இணைப்புப் பாலமாகவும் எம்மவர்கள் திகழ்கின்றனர் என்பது பெருமைக்குரிய விடயம் .
தமிழர்கள் பிறக்கும் தை மாதத்தில் நல்ல பலன் தரக்கூடிய நற்காரியங்களைத் தொடங்குவர். இயற்கையோடு இணைந்து வாழுகின்ற பொழுது எமது உடல் நலம் மேம்படும். எமது இதயங்களில் நல்ல பண்புகளும், கருணையும் பெருக்கெடுத்து ஓடும்.
இந்த இனிய திருநாளில் தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும், சுற்றத்தார்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்வில் சகல செளபாக்கியங்களும் கிடைக்க வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
3 hours ago
9 hours ago
9 hours ago
27 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
9 hours ago
27 Aug 2025