2025 மே 13, செவ்வாய்க்கிழமை

புலிகளுக்குச் சோதனைமேல் சோதனைதான்

எஸ்.கருணாகரன்   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரைச் சுட்ட குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   

இதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொல்வதற்காக முயன்றவர்கள் என்ற குற்றச்சாட்டில், வேறு சில விடுதலைப்புலி இயக்க  முன்னாள் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதாகிச் சிறையிலிருக்கின்றனர்.   

அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, தனங்கிளப்புப் பகுதியில், வெடிப்பொருட்கள் மற்றும் புலிகளின் சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னணியில் சம்மந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கைதாகினார்.  

அதற்குச் சில மாதங்களுக்கு முன், புலிகளை மீளுருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்ற பேரில் கோபி, தேவிகன், அப்பன் ஆகிய மூன்று முன்னாள் புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  

இப்போது, புலிகள் இயங்கிய காலத்தில், போருக்காக கட்டாய ஆட்சேர்ப்பில் ஆட்களைப் பிடித்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டில், புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான கனகசுந்தரம் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   

கண்ணதாசன், இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் பயின்று, அங்கேயே விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அதற்கு முன்பு, அவருடைய தந்தையார் கனகசுந்தரத்துடன் இணைந்து, பண்ணிசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர்.  

யாழ்ப்பாணத்தில் இசைப்பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன். யாழ்ப்பாணத்திலுள்ள சிறந்த மிருதங்கக் கலைஞர்களில் ஒருவர். 1995 ஒக்டோபரில் யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்தபோது, பெருமளவான பல்கலைக்கழக மாணவர்களும் பிற துறைகளில் இயங்கி வந்த இளைஞர், யுவதிகளும் புலிகள் இயக்கத்தில் இணைந்தனர். அந்தச் சந்தர்ப்பத்திலேயே கண்ணதாசனும் அவ்வியக்கத்தில் இணைந்திருந்தார். அப்பொழுது அவருக்கு வயது 28.  

கண்ணதாசனுடைய இசைத்துறை அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவகையில், அவரைப் புலிகள் இயக்கம் பயன்படுத்தி வந்தது. அந்த அடிப்படையிலேயே அவர் தமிழீழ நுண்கலைக் கல்லூரியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2006 க்குப் பின்னர், போர் ஆரம்பமானபோது, புலிகள் இயக்கத்தில் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டது. இதை ஈடுசெய்வதற்காகப் புலிகள், தீவிர ஆட்சேர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர். அந்த நடவடிக்கையில், அநேகமாக எல்லாப் பிரிவுகளின் பொறுப்பாளர்களும் போராளிகளும் ஈடுபடுத்தப்பட்டனர். அது அவ்வியக்கத்தின் தீர்மானமாக இருந்தது.  

அந்தக் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட குற்றத்துக்காகவே, இப்போது கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கிளிநொச்சியில் வைத்து, இளம் பெண் ஒருவரை, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குப் பிடித்துச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலேயே அவர் ஆயுள் தண்டனைக்குள்ளாகியிருக்கிறார்.  

2014 ஆம் ஆண்டு, மார்ச் மாதம், ஒன்பதாம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், குறித்த இளம் பெண்ணின் தந்தையால் இது தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்டது.   

இதற்கு அமைவாக 2015 ஆம் ஆண்டு, ஏப்ரல், 15 ஆம் திகதி, கொழும்பு பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கண்ணதாசன் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர், 2016 ஆம் ஆண்டு, மே மாதம் 11 ஆம் திகதி, வவுனியா மேல் நீதிமன்றில் குறித்த பெண்ணை, விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டுக்காகக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கண்ணதாசன் மீது குற்றப்பத்திரம், புலனாய்வுப் பிரிவினாரால் தாக்கல் செய்யப்பட்டது.  

2016 மே மாதத்தில் இருந்து, கண்ணதாசனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தன. 2017 ஜூலை 17 ஆம் திகதி, வழக்குத் தீர்ப்புக்காக அழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற விசாரணைகளில், எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டில், எதிரியைக் குற்றவாளி எனக் கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், தீர்ப்பு வழங்கியதோடு, “இந்த எதிரி, ஏற்கெனவே புனர்வாழ்வு பெற்றிருந்தாலும் எதிரிக்கு எதிராகச் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு, சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு, ஆயுட்காலச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.   

இந்த வழக்கு நடைபெற்றபோது, கண்ணதாசன் புனர்வாழ்வு பெற்று வெளியே வந்து, இராமநாதன் நுண்கலைக்கல்லூரியின் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.   

போர் முடிவடைந்த பின்னர், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரையும் புனர்வாழ்வுக்குட்படுத்தி விட்டு, விடுதலைசெய்யும்போது, இந்தத் தடுப்பு நடவடிக்கை மன்னிப்புச் செயன்முறை அல்ல; பொதுவாழ்வில் ஈடுபடுவதற்கான பயிற்சியே. விடுதலையான பின்னர், எவராவது, குறிப்பிட்ட முன்னாள் புலிகள் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால், அந்த வழக்கு உரிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.  

அந்த வகையிலேயே கண்ணதாசனுக்கு எதிரான வழக்கு, 2014 இல் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 

கண்ணதாசனுக்கு எதிராக மாத்திரமல்ல, 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக, யாருக்கு எதிராகவும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அது இன்னமும் நிலுவையில் இருந்தாலோ அல்லது மேன் முறையீடு செய்யப்படக்கூடிய சட்டவலுவுடன் இருந்தாலோ, அவற்றைப் பழைய சட்டத்தின் அடிப்படையில் விசாரித்து இன்னமும் தீர்ப்பு வழங்கலாம்.   
புதிய சட்டத்தின்படி, 2017 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர், கைதானவர்களுக்கு எதிராக, இப்படியான குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யமுடியாது.   
ஒரு காலகட்டத்தில் கண்ணதாசனைப்போல ஏராளமான போராளிகள், கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது அன்றைய சூழலின் விளைவு. ஆனால், அதற்குப் பிறகான நிலைமைகள் முற்றாக மாறி விட்டன. 

இப்போது புலிகள் அமைப்பே இல்லை. அதன் தலைமைப் பொறுப்பிலும் கட்டளைப் பீடத்திலும் இருந்தவர்களும் இல்லை. 

மிஞ்சிய போராளிகள் அரசாங்கத்திடம் சரணடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்டுச் சமூக வாழ்வில் இணைக்கப்பட்டவர்கள். சட்டரீதியாகப் பொதுமன்னிப்பாக வரையறுக்கப்படா விட்டாலும், ஏறக்குறைய இது பொது மன்னிப்புக்கு நிகரானது.  

இதேவேளை, இந்த வழக்கின் மூலமாக, அரசாங்கத்துக்கு ஒரு சாதமான நிலை ஏற்பட்டிருக்கிறது. போர்க்குற்றங்கள் தொடர்பான பிரச்சினைக்கு, சர்வதேச மட்டத்தில் முகம் கொடுக்க வேண்டிய சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு, இந்த வழக்கைத் தனக்கான வாய்ப்பாகப் பயன்படுத்த விளையும்.

 புலிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் மீதான விசாரணைகளையும் செய்ய வேண்டும் என வாதிடுவதற்கும் போர்க்குற்றத்தைக் கோரி வரும் மனித உரிமையாளர்களையும் தமிழ்த்தரப்பையும் நெருக்கடிக்குள்ளாக்கவும் அரசாங்கம் முயலலாம். அதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு.

அரசாங்கம் இதில் அக்கறை காட்டாது விட்டாலும் அரசாங்கத்துக்கு வெளியே இருக்கும் எதிர்த்தரப்புகள் இதைக் கையில் எடுத்து நெருக்கடிக்குள்ளாக்கவே முயற்சிக்கும். இதெல்லாம் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களையே நேரடியாக நெருக்கடிக்கு உள்ளக்கப்போகின்றன. 

இதேவேளை, புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகான நிலைமைகளைக் கையாள்வதில் தொடர்ந்தும் தமிழ்த்தரப்புகள் பலவீனமாகவே உள்ளதன் வெளிப்பாடே இதுவாகும். போருக்குப் பிறகான அரசியல் போக்கை, முன்னுணர்வதிலும் அதைக் கையாள்வதிலும் புலிகளுக்குப் பிறகான அரசியலை முன்னெடுத்து வரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தவறுகளையே இழைத்திருக்கிறது. அவற்றின் விளைவுகளே, இந்த மாதிரியான முன்னாள் புலிகளின் நிலைக்குக் காரணமாகும்.  

உண்மையில் யுத்த முடிவுக்குப்பிறகு, போராளிகளுக்கும் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தை நீக்கியிருக்கவும் வேண்டும். அப்படியொரு தோற்றப்பாடு காட்டப்பட்டதே தவிர, நடைமுறையில் பாதுகாப்பான ஏற்பாடுகள் எதுவும் உருவாக்கப்படவில்லை.   

இதனால்தான், முன்னாள் புலிகள் தொடர்ச்சியாக நேரடி மற்றும் மறைமுக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் காரணம், அரசியல் ரீதியாக முடிவுகள் எடுக்கப்படாமையேயாகும். முக்கியமாகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்காமையேயாகும்.  

இலங்கையில், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது என ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு ஆகியன உத்தியோக பூர்வமாக வெளியிட்ட அறிக்கை, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதை உறுதி செய்திருக்கிறது. அவ்வாறு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பிறகு, எதற்காக அந்தத் தடுப்புச் சட்டம் நீடிக்கப்பட வேண்டும்? இது அடிப்படைக்கு முரணானதே.  

ஆகவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கு த.தே.கூ, முயற்சி எடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இன்று அரசியல் கைதிகள் அத்தனைபேரும் பொது மன்னிப்பில் வெளியே வந்திருப்பார்கள். இந்த மாதிரி, முன்னாள் புலி உறுப்பினர்கள் பதற்றத்தோடும் பாதுகாப்பின்மையோடும் இருக்க வேண்டிய அவசியமும் வந்திருக்காது.   
இதுதொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் இனியாவது பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில், மனித உரிமையாளர்களும் ஜனநாயகச் செயற்பாட்டினரும் சட்ட வல்லுநர்களும் இந்த விடயத்தில், செயற்பட முன்வர வேண்டும்.   

இதில் தனியே தமிழ்த் தரப்புத்தான் ஈடுபட வேண்டும் என்றில்லை. அனைத்துத் தரப்பினருக்கும் இது பொதுவான ஒரு மனிதாபிமானப் பணியாகும். இல்லையென்றால், இதைப்போல எதிர்பாராத விதமாகப் பல பிரச்சினைகள் எதிர்காலத்தில் உருவாகும்.  

போரின் முடிவுக்குப் பிறகு பாதுகாப்பின்மை, பொதுவாழ்வைத் தொடர்வதற்கான தொழில் மற்றும் பொருளாதார வசதியற்ற நிலை, உடல் வலுவற்ற நிலை (போரினால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள்), உறவுகளின் ஆதரவற்ற நிலை எனப் பலவிதமான நெருக்கடிகளால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் முன்னாள் புலிகளுக்கு, தொடர்ந்தும் கலக்கத்தை உண்டாக்கும் நிலைமை நீடிப்பது நல்லதல்ல.   

அது அவர்களைப் பெரும் உளவியல் சிக்கல்களுக்குள் கொண்டுபோய்ச் சேர்க்கும். அவர்களைச் சேர்ந்த குடும்பத்தினருக்கும் கூட நெருக்கடியையே உண்டாக்கும்.   

ஆகவே, இது ஒரு சமூகத்தில் நிகழும் எதிர்மறை விளைவேயாகும். இதற்கு மனிதாபிமான முறையிலும் சட்டரீதியாகவும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் அவசியம். வீழ்ந்தவர்களை ஏறி மதிப்பது அரசியல் நாகரிகமல்ல; அது அநாகரிகமாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X