2025 மே 01, வியாழக்கிழமை

பொது உடன்படிக்கை: தப்பித்த கூட்டமைப்பும் பொறியில் சிக்கிய முன்னணியும்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

   
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், பொது இணக்கப்பாட்டின் கீழ், உடன்படிக்கையொன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்த்த தமிழ்த் தேசியக் கட்சிகள், திங்கட்கிழமை (14) கைச்சாத்திட்டிருக்கின்றன. ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளோடு இணைந்து, உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளமை கவனம் பெற்றிருக்கின்றது.  

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளான ஒற்றையாட்சி நிராகரிப்பு, சுயநிர்ணய உரிமை கோரல், சமஷ்டி ஆட்சிமுறை வலியுறுத்தல் உள்ளிட்ட அரசியல் தீர்வு விடயங்கள், போர்க்குற்ற விசாரணை, நிலமீட்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பில், பொது உடன்படிக்கை வலியுறுத்துகின்றது.   

இந்தக் கோரிக்கைகளைப் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களுடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைத்து உரையாடுவதும், அதன் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதுமே உடன்படிக்கையின் நோக்கம். இதற்குத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளோ, சுரேஷ் பிரேமசந்திரனோ, விக்னேஸ்வரனோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.   

முன்னணியால் முன்வைக்கப்பட்ட ‘நல்லாட்சி அரசாங்கத்தின் இடைக்கால வரைபு நிராகரிக்கப்பட வேண்டும்’ என்கிற கோரிக்கை, பொது உடன்படிக்கையில் தேவையில்லாத அம்சம் என்கிற நிலையில், அதனை, ஏனைய கட்சிகள் நிராகரித்திருக்கின்றன. இதை முன்வைத்து, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதிலிருந்து முன்னணி விலகியிருக்கின்றது.  

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ராஜபக்‌ஷக்களுக்கு எதிராகத் தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களித்தார்கள். மைத்திரியையும் நல்லாட்சி அரசாங்கத்தையும் ஆட்சி பீடமேற்றியதில், தமிழ் மக்களின் வாக்குகள் கணிசமான பங்கை வகித்தன. அதுபோலவே, இம்முறையும் ராஜபக்‌ஷக்களுக்கு எதிராகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்பது வெள்ளிடைமலை. ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலோடு ஒப்பிடுகையில், வாக்களிப்பு சதவீதம் சற்றுக் குறையலாம். மற்றப்படி, ஒரு கட்சி சொல்வதைக் கேட்டோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை எடுக்கின்றது என்பதைப் பொறுத்தோ, தமிழ் மக்கள் வாக்களிக்கப்போவதில்லை. 

வழக்கம்போல, இருப்பதில் யார் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவர், ஜனநாயக இடைவெளியைச் சிதைக்காது பேணக்கூடியவர் என்கிற விடயங்களிலேயே, தமிழ் மக்கள் இம்முறையும் கவனம் செலுத்துவார்கள்.   

அப்படியானால், பொது உடன்படிக்கையால் நிகழ்ந்திருப்பதும் நிகழப்போவதும் என்ன?  
கடந்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் காலத்தில், ‘புதிய அரசமைப்பினூடாகத் தீர்வு’ என்ற ஒற்றை விடயத்தை முன்வைத்தே, கூட்டமைப்பு பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதற்கு மக்கள் ஆதரவும் வழங்கியிருந்தனர்.   

ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், நல்லாட்சி அரசாங்கத்தின் குழறுபடிகள், புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பாடாமை உள்ளிட்ட விடயங்களால், மக்களின் பலத்த அதிருப்தியைக் கூட்டமைப்புச் சந்தித்திருந்தது. அதைத் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எதிர்கொள்ள வேண்டியும் வந்தது.  

குறிப்பாக, ‘ஒருமித்த நாடு’ என்கிற வார்த்தை ஜாலத்தைக் காட்டி, ‘ஒற்றையாட்சி’க்குக் கூட்டமைப்பு உடன்பட்டுவிட்டது; தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டது என்று விமர்சனங்கள் எழுந்தன. அரசியல் பிரசாரமாகவும் முன்னெடுக்கப்பட்டன. ஒரு கட்டத்தில், கூட்டமைப்புக்கு அது பெரும் நெருக்கடியாகவும் மாறியது.   

ஒரு பக்கத்தில், ‘அடுத்த தீபாவளிக்குள் தீர்வு’ என்று இரா. சம்பந்தன் கூறிக்கொண்டிருக்க, புதிய அரசமைப்பு வரைவின் ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் சொல்லிக் கூட்டங்களை நடத்த வேண்டிய அழுத்தம் எம்.ஏ. சுமந்திரனுக்கு உருவானது.   

இன்றைக்குப் பொது உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் மூலம், விக்னேஸ்வரன், சுரேஷின் விமர்சனங்களை, எதிர்காலத்தில் சொல்லாக் காசாக்க முடியும் என்கிற கட்டத்தைக் கூட்டமைப்பு எட்டியிருக்கின்றது.  இந்த உடன்படிக்கை, ஜனாதிபதித் தேர்தலுக்கானது என்று கூறப்பட்டாலும், தமிழரசுக் கட்சி அதையடுத்து வரவுள்ள பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டே அணுகியிருக்கின்றது. அதில் வெற்றியும் பெற்றிருப்பதாகச் சொல்ல முடியும்.   

ஏனெனில், கடந்த பொதுத் தேர்தல் போல, அவ்வளவு இலகுவான தேர்தலாகத் தமிழரசுக் கட்சிக்கு வரப்போகிற தேர்தல் இருக்காது. அவ்வாறான நிலையில், எதிர்விமர்சனங்களின் அளவைக் கட்டுப்படுத்துவதும், அந்த விமர்சனங்களுக்குச் சொந்தக்காரர்களை ஏதோவொரு வகையில் தம்மோடு இணைத்துக் கொள்வதும் அல்லது சிக்க வைப்பதுமே அவசியமானது என்கிற நிலையில், இந்த உடன்படிக்கையின் வழி, அதைத் தமிழரசுக் கட்சி வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கின்றது.   

பேரவையோ, விக்னேஸ்வனோ, சுரேஷோ இனி, ஒற்றையாட்சிக்குள் கூட்டமைப்பு இணங்கிவிட்டதாகக் குற்றஞ்சாட்ட முடியாது. அப்படி சாட்டினாலும், பொது உடன்படிக்கையைக் காட்டி, சுமந்திரன் பதில்சொல்ல ஆரம்பிப்பார்.  

இன்னொரு கட்டத்தில், பொது உடன்படிக்கையை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்து, உரையாடுவது என்கிற விடயத்தைத் தாண்டி, அதை அவர்களிடம் எவ்வாறான உறுதிப்பாடாக வலியுறுத்துவது என்பது தொடர்பில், தெளிவான விடயங்களைப் பொது உடன்படிக்கையோ, அதற்காக உழைத்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களோ குறிப்பிடவில்லை.   

பேச்சுவார்த்தை நடத்துவது, அதன் அடிப்படையில் இறுதித் தீர்மானத்தை எடுப்பது என்பது, நழுவல் போக்கைக் கொண்டிருக்கின்றது. இருக்கின்ற சூழ்நிலையில், பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸவோ, கோட்டாபய ராஜபக்‌ஷவோ தமிழ்த் தரப்புகளுடன் எழுத்து வடிவிலான ஒப்பந்தமொன்றுக்கு வரமாட்டார்கள். அதை அவர்கள் ஏற்கெனவே அறிவித்தும் விட்டார்கள். ஏன், அநுர குமார திஸாநாயக்க கூட, எழுத்துமூல ஒப்பந்தத்துக்கு வரமாட்டார்.   

அப்படியான நிலையில், தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைவதற்குச் சில நாள்களுக்கு முன்னர், சஜித்துக்கு ஆதரவளிக்கப்போவதாக சம்பந்தன் அறிவிக்கும் கட்டம் வரையில், ஒரு நழுவல் போக்கைப் பேணுவதற்கான நிலைப்பாடாக, உடன்படிக்கை கையாளப்படலாம்.  

அத்தோடு, சம்பந்தன் தலைமையில், மீண்டும் விக்னேஸ்வரனும் சுரேஷூம் பேச்சுகளில் கலந்துகொண்டு, அமைதியாக இருந்துவிட்டு வரும் சூழ்நிலை, உருவாகியிருக்கின்றது. என்னதான் இன்னொரு கட்சியின் தலைவராக இருந்தாலும், சம்பந்தனை மீறியெல்லாம், விக்னேஸ்வரன் பேச்சுவார்த்தைகளில் பேசுவதில்லை. ஆக, சம்பந்தனின் பேச்சுவார்த்தைக் குழுவில் இரண்டு ஆட்கள் கூடியிருக்கிறார்கள். அவ்வளவுதான்!  

இன்னொரு பக்கத்தில், தேர்தல் புறக்கணிப்புக் கோசத்தின் தற்போதைய வாரிசுகளான முன்னணியினர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேச்சுகளில் கலந்துகொண்டு, ஒரு வகையில் பொறியில் மாட்டியிருப்பதாகக் கொள்ளலாம்.   

ஏனெனில், முன்னணியின் நிலைப்பாடு என்பது தெளிவானது; அதாவது, ஸ்ரீ லங்காவின் ஜனாதிபதியைத் தேர்தெடுக்கும் தேர்தலில், தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியதில்லை என்பதாகும். அப்படியான நிலையில், பொது உடன்படிக்கை என்கிற விடயத்தை நோக்கி, அவர்களால் இறங்கி வர நேர்ந்தால், அவர்களின் அடிப்படை நிலைப்பாடு அடிபடும்.  ஆக, பொது உடன்படிக்கையில் இருந்து, பிரதான காரணமொன்றை முன்வைத்து விலகுவதே சரியானது என்பது, முன்னணியின் நோக்கம். அதனை ஆர்ப்பாட்டமாகச் செய்துவிட வேண்டும் என்று, அவர்கள் கருதினார்கள். பல்கலைக்கழக மாணவர்களை அதன்போக்கில் கையாளலாம் என்றும் நினைத்தார்கள்.  

ஆனால், விக்னேஸ்வரன், சுரேஷ் மாத்திரமல்லாமல், பல்கலைக்கழக மாணவர்களும் தங்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாகத் திரள்வார்கள் என்பதோ, தங்களது குரல் மேலெழாது என்பதோ, முன்னணியினர் எதிர்பார்க்காத ஒன்று. அதுதான், அவர்கள் சறுக்கிய இடம். கூட்டத்திலிருந்து வெளியேறிய போது, முன்னணியின் முக்கியஸ்தர்களின் இறுகிய முகங்கள், அதைத் தெளிவாகப் பதிவு செய்தன.   

முன்னணி, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை முன்வைப்பதோ, அதை நோக்கிச் செயற்படுவதோ தவறில்லை. ஆனால், தங்களது அரசியலே மக்களுக்கானது; அப்பழுக்கற்றது என்று கூறும்போது, அவர்கள் மக்களின் மனங்களின், எதிர்பார்ப்புகளின் பிரதிபலிப்புகளையும் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான், அவர்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும்.   

மக்களின் உணர்வுகளை, விருப்பங்களை, நிலைப்பாடுகளை விலத்திக் கொண்டு செய்யப்படும் அரசியல், உண்மையிலேயே யாருக்கானது என்கிற கேள்வி எழும். அப்படியான சூழலில், பொது உடன்படிக்கையில் இடைக்கால வரைபை முன்வைத்து, முன்னணி வெளியேறியமை யாராலும் இரசிக்கப்படக் கூடியது அல்ல; இது மக்களிடம் எரிச்சலையே உண்டு பண்ணும்.  

பொது உடன்படிக்கை எனும் பொறியின் வழி, தனக்கு எதிரான விமர்சனங்களின் அளவைக் கூட்டமைப்பு குறிப்பிட்டளவு கடந்திருக்கின்றது. ஆனால், முன்னணியோ சிறுபிள்ளைத்தனங்களால் சிக்கியிருக்கின்றது; அவ்வளவுதான்! இவற்றைத் தாண்டிய தாக்கங்களைப் பொது உடன்படிக்கை செய்யவில்லை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .