Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜனவரி 10 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
புத்தாண்டு பிறந்தாலும், அதனை சராசரி இலங்கையர்கள் கொண்டாடும் மனநிலையில் இல்லை. பொருளாதார நெருக்கடி, மக்கள் எழுச்சி, ஏமாற்றம், புதிய ஜனாதிபதி, அதீத பெரும்பான்மையுடனான பாராளுமன்றம் என மூன்று ஆண்டுகளில் ஏராளமானவற்றை இலங்கையர்கள் பார்த்து விட்டார்கள். இன்னமும் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவில்லை. போகிறபோக்கில் இப்போது அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே சொல்லத் தோன்றுகிறது.
இலங்கை ஏன் இவ்வாறான ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது? 17ஆவது முறையும் ஜ.எம்.எவ்விடமிருந்து பெற்ற கடன் இலங்கையை மீட்குமா? இது வெறுமனே ஒரு பொருளாதார நெருக்கடி மட்டும் தானா? அனைத்தையும் மாற்றுவோம் என்று ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியால் எதையும் அசைக்க முடியாமலிருப்பது ஏன்? தற்போதைய சமூக நெருக்கடியின் பலபரிமாணங்கள் எவை அவை குறித்துப் போதிய அக்கறை செலுத்தப்பட்டுள்ளதா? தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இயலாமைக்குரிய காரணங்கள் எவை? இலங்கையின் எதிர்காலம் என்ன? இக் கேள்விகளை விரிவாக இத்தொடர் ஆராய முனைகிறது.
கொவிட்-19 தொற்று நோய் பரவியதிலிருந்து, உலகப் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. விநியோகச் சங்கிலித் தடங்கல்கள், வளர்ச்சி விகிதங்கள் குறைதல், தொற்றுநோயின் புதிய அலைகள் மற்றும் அதிகரித்துவரும் வறுமை மற்றும் சமத்துவமின்மை போன்ற பல சவால்களை உலகின் பலநாடுகள் எதிர்கொண்டுள்ளன. தொற்று நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், பொருளாதாரங்கள் இன்னும் போராடிவருகின்றன. மேலும், நிலையான வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் அனுபவிப்பது கடினமாக உள்ளது. இந்த வரிசையில் துன்புறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் இருக்கிறது.
கடந்த ஐந்து தசாப்தங்களாக வெளிநாட்டு இறையாண்மைக் கடனை உத்தியோகப்பூர்வமாகச் செலுத்தத் தவறிய ஆசியாவின் ஒரே நாடு என்ற களங்கத்துடன் இலங்கை ஏன் இறையாண்மைக் கடன் நெருக்கடிக்கு அடிபணிந்தது? மீட்சிக்கான பாதை ஏன் நீண்டதாகவும் ஆபத்தானதாகவும் மாறிவிட்டது? இவ்விரு கேள்விகளும் சாதாரண இலங்கையர்களின் மனதில் நீங்காமல் தொடர்வன. இதை விளங்கிக் கொள்வதற்கு கொவிட்-19 பெருந்தொற்றோ, ஈஸ்டர் தாக்குதல்களே, மட்டும் போதுமானவையல்ல.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஆழமடைவதற்கும், 2009 மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவடைந்த தசாப்தத்தில் இலங்கைப் பொருளாதாரத்தின் கொள்கை ஆட்சி மாற்றம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கிடையிலான இடைத்தொடர் பற்றிய முறையான பகுப்பாய்வு தேவைப்படுகிறது. பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கும், நாட்டை நிலைநிறுத்துவதற்கும் எந்தவகையான கொள்கைப் பிரதிபலிப்பு அவசியம் என்பதைத் தீர்மானிக்க, காரணங்களை முறையாகக் கண்டறிவது அவசியம்.
அதன் மூலமே நெருக்கடிக்கு
அப்பாற்பட்ட நிலையான வளர்ச்சிப் பாதையை உருவாக்க முடியும்.
துரதிர்ஷ்டவசமாக அவ்வாறானதொரு பாதையைக் கண்டறியும் முயற்சியில் இலங்கையின் அரசாங்கமும் கொள்கை வகுப்பாளர்களும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. எந்தப் பாதையும் கொள்கைகளும் பேரழிவைத் தந்தனவோ அவற்றை வேறுபெயர்களில் தற்போதைய அரசாங்கமும் பின்பற்றுவது துயரம். இதற்கான காரணம் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டமைக்கான அடிப்படைக் காரணிகள் பற்றிய தெளிவான புரிதலின்மையே.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்தகால யுத்தம் மே 2009இல் முடிவுக்கு வந்ததன் பின்னர் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியது. அதைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் அபிவிருத்தி மூலோபாயத்தின் கீழ், பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி முக்கிய முன்னுரிமையாக மாறியது. போரினால் ஏற்பட்ட,கால் நூற்றாண்டு அழிவு, புறக்கணிப்பு மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பின் சிதைவுக்குப் பிறகு கணிசமான பொதுத்துறை ஈடுபாட்டுடன் கூடிய பெரிய அளவிலான புனரமைப்பு முயற்சி தெளிவாகத் தேவைப்பட்டது. எவ்வாறாயினும்,பொது முதலீட்டுத் திட்டம் நாடளாவிய உள்கட்டமைப்பு மறுசீரமைப்புக்கு உதவவில்லை. நவீன துறைமுகம், விமானநிலையம், நவீன கிரிக்கெட் மைதானம் மற்றும் பிறவசதிகள் போன்ற பல அரசாங்க உள்கட்டமைப்பு திட்டங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் ஆதரவு தளத்தின் மையப்பகுதியான, இலங்கையின் தென் பிராந்தியங்களில் நடந்தன.
உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான முக்கியத்துவம், சீனாவின் ‘ஒருவார் ஒரு வழி’ நிகழ்ச்சித் திட்டத்தின் புவிசார் அரசியல் உயர்விலிருந்து கூடுதல் உத்வேகத்தைப் பெற்றது. ஆரம்பத்தில், பெரிய முதலீட்டுத் திட்டங்களுக்கு சீனா ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி மற்றும் சீனா மேம்பாட்டு வங்கியின் கடன்கள் மூலம் நிதியளிக்கப்பட்டன. முதலீட்டுத் திட்டத்தின் அடுத்தடுத்த விரிவாக்கம், பிற சீன மூலங்களிலிருந்து கடன் வாங்குதல் மற்றும் இறையாண்மை யூரோ பத்திரங்கள் மற்றும் டொலர் மதிப்பிலான தேசிய வளர்ச்சிப் பத்திரங்களை வழங்குவதை உள்ளடக்கியது. வெளிநாட்டு நிதியுதவி திட்டங்கள் கணிசமான உள்நாட்டு வளங்களை எதிர் நிதியுதவிக்காக இழுத்து, நிதிப் பற்றாக்குறைக்குப் பங்களித்தன, உள்நாட்டு வங்கிக் கடன் வாங்குதல் மற்றும் பெரும்பாலும் மத்திய வங்கியிலிருந்து கடன் வாங்குதல் அல்லது பணம் அச்சிடுதல் ஆகியவற்றின் வழியாக நிதியளிக்கப்பட்டது.
இவையனைத்தும் இணைந்து இலங்கையைப் பொருளாதார நெருக்கடியில் தள்ளின. இதிலிருந்து தப்பித்தல் என்ற பெயரில் சர்வதேச நாணய நிதியத்தின் (ஜ.எம்.எவ்) காலடிகளில் இலங்கை விழுந்தது. 16 தடவை கடன் வாங்கித் தீர்க்கவியலாத பிரச்சனையை 17ஆவது தடவை கடன் வாங்குவதன் மூலம் தீர்க்கலாம் என்று எமக்கு சொல்லப்பட்டது. அதன்படி, இப்போது நாட்டின் பொருளாதார வழிகாட்டியாக ஜ.எம்.எவ் உள்ளது.
இலங்கையின் நெருக்கடியின் மிகவும் ஏமாற்றமளிக்கும் அம்சங்களில் ஒன்று, ஜ.எம்.எவ் சுமத்தப்பட்ட நிதி அழுத்தத்திற்கு மேலதிகமாக, கொள்கைத் தலையீடுகளை உருவாக்கும் பெரிய பொருளாதாரக் கொள்கை முடிவுகளில் திருத்தம் செய்யப்படவில்லை. அதை செய்யாமல் கண்ணை மூடிக்கொண்டு சுடுகாடு நோக்கி நடக்கும் வேலையையே அரசாங்கமும் கொள்கை வகுப்பாளர்களும் செய்கிறார்கள். இலங்கையின் பொருளாதாரக் கொள்கை சார் திட்டமிடல் என்பது நிவாரணம் மற்றும் மீட்புக்காக மிகவும் வலுவான அர்த்தத்தில் வடிவமைக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், பணவீக்கம் மற்றும் மாற்று விகிதம் போன்ற ஒரு சில மேற்பரப்பு குறி காட்டிகளில் முன்னேற்றத்தைக் காட்டுவதையே அரசாங்கம் உற்சாகப்படுத்துகிறது. இருந்தபோதிலும், இலங்கை தனது பொருளாதார மந்தநிலையைக் கடக்கவில்லை என்பதே யதார்த்தம்.
வாழ்க்கைச் செலவு நெருக்கடி என்பது வளர்ந்த அல்லது வளரும் எல்லா நாடுகளுக்கும் பரவும் ஒருபொருளாதார தொற்று நோயாகும். எனவே, கடந்த சில வாரங்களாகத் தேங்காயின் விலை உயர்வு, அரிசி மற்றும் உப்பு சந்தையில் தட்டுப்பாடு குறித்து அரசாங்கத்தின் மீது தொடர்ந்து சரமாரியாகத் தாக்குதல்கள்
நடத்தப்படுவது இலங்கைக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இலங்கையில் சந்தையை ஒரு சிலர் கட்டுப்படுத்துவதால் இந்தப் பிரச்சனைமிகவும் தீவிரமானது.அரசாங்கம் இதைக் கையாளத் தடுமாறுகிறது. பழையைப் பொருளாதாரக் கட்டமைப்பு சார் கொள்கை முடிவுகளின் படி இந்தப் பிரச்சனையை கையாள இயலாது.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில், உலகளவில் நிச்சயமாக, அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும் விலைவாசி உயர்வைப் பண வீக்கத்தின் அறிகுறியாகக் கருதுகின்றன. வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் இந்த பணவீக்கத்தைத் தடுக்க மத்திய வங்கிகள் போராடும் அதேவேளையில், வாக்காளர்களின் பின்னடைவை எதிர்கொள்ளும் ஜனநாயக அரசாங்கங்கள் நுகர்வோரின் பண வருவாயை அதிகரிக்க வரவு-செலவுத் திட்டத்தின் அடிப்படையிலான தீர்வுகளைப் பார்க்கின்றன. இவை தற்காலிக நோய்த்தடுப்பு மருந்துகள். இவை பொருளாதார நெருக்கடி என்ற இந்த தொற்று நோயை முதலில் கொண்டு
வந்த வைரஸ்களைக் கொல்ல
நிரந்தரமான சிகிச்சை அல்ல.
தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடி இலங்கைக்கு வெளியிலிருந்து தோன்றிய பிரச்சினைகளின் விளைபொருளாக இருந்தாலும், இந்த நெருக்கடியைக் குறைப்பதற்கு முன்னைய அரசாங்கங்களால் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. விவசாயத் துறைக்கு வளங்களை அதிகரிப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்பை வழங்குவதற்கான ஜனாதிபதியின் தீர்மானம் வரவேற்கத்தக்கது. அரிசி, உப்பு மற்றும் தேங்காய் தட்டுப்பாட்டுக்காக அவர் மீதும் அரசாங்கத்தின் மீதும் எதிர்க்கட்சிகள் சரமாரியாகத் தாக்கினாலும், இந்தப் பிரச்சினைகளுக்கு நீண்ட வரலாறு உண்டு என்பதுதான் உண்மை. வாழ்க்கைச் செலவு அதிகரித்திருக்கிறது என்பது மறுக்க முடியாதது, ஆனால், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு பண வருமானத்தை அதிகரிப்பதல்ல. வரவிருக்கும் வரவு- செலவுத் திட்டமும் நீண்டகால நோக்கிலான பொருளாதாரக் கொள்கை வகுப்புகளும், வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிப்பதற்கான செயல்திட்டத்தையும் ஆதாரங்களையும் முறையாகப் பின்பற்றவேண்டும். ஆனால், ஜ.எம்.எவ்வின் வழி காட்டலில் நடைபோடும் ஒரு அரசாங்கத்தால் அதைச் செய்யமுடியாது. இரண்டு எதிரெதிர்த் தோணிகளில் ஜனாதிபதியும் அரசாங்கமும் கால் வைத்துள்ளன.
22 minute ago
32 minute ago
32 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
32 minute ago
35 minute ago