2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பொலிஸ் மா அதிபருக்கு ஏன் இத்தனை சேவை நீடிப்புக்கள்?

Mayu   / 2023 டிசெம்பர் 06 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்  

நாட்டின் ஜனாதிபதி எதேச்சதிகாரமாக நடந்து கொள்வதை ஓரளவுக்காவது கட்டுப்படுத்துவ தற்காகவே அரசியலமைப்புச் சபை நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அச்சபை முழுமையாக இயங்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளது.

காரணம் சிறிய கட்சிகளின் சார்பில் அதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினருக்கு சபையின் உறுப்பினர் நியமனம் வழங்கப்படாமையே.

அண்மையில் இந்த விடயம் பாராளுமன்றத்தில் எழுந்த போது கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, சிறு கட்சிகளின் சார்பில் தமிழரசுக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புளோட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசியலமைப்புச் சபைக்கு நியமிப்பதென சம்பந்தப்பட்ட கட்சிகள் சபாநாயகருக்கு தெரிவித்துள்ள போதிலும் சபாநாயகர் அந்த நியமனத்தை வழங்காமல் இருப்பதே பிரச்சினையாக இருப்பதாக தெரிவித்தார். 

சிறு கட்சிகள் தமது பிரதிநிதியின் பெயரை அரசியலமைப்புச் சபைக்கு பரிந்துரைக்காமல் இருப்பதால் அரசியலமைப்புச் சபை முறையாக இயங்க முடியாமல் இருப்பதாகவும் அதனால் புதிய பொலிஸ் மா அதிபரையோ உயர் மட்ட நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளையோ நியமிக்க முடியாமல் இருப்பதாக ஜனாதிபதி கூறியதை அடுத்தே ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் எதிர்க் கட்சித் தலைவரின் கட்சியினதும் ஏனைய சிறு கட்சிகளினதும் பிரதிநிதிகளான நான்கு எம்.பிக்கள் மற்றும் பாராளுமன்றத்துக்கு வெளியில் இருந்து நியமிக்கப்படும் மூவர் ஆகிய பத்துப் பேர் உள்ளடக்கப்பட்டே அரசியலமைப்புச் சபை அமைகிறது. சிறு கட்சிகளுள் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள், மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் அடங்குகின்றன.

அவற்றின் சார்பிலேயே சித்தார்த்தன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்றே ஹர்ஷ டி சில்வா கூறினார்.

அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவரை அரசியலமைப்புச் சபைக்கு  சபாநாயகர் நியமிக்கவில்லை என்றும் அதுவே அரசியலமைப்புச் சபையில் உள்ள பிரச்சினை என்றும் அவர் மேலும் கூறினார்.

ஆனால் அரசியலமைப்புச் சபை முறையாக இயங்க முடியவில்லை என்று கூறி ஜனாதிபதி அதற்கு சிறு கட்சிகளை குறைகூறுகிறார். அவ்வாறாயின் உண்மையைக் கூறுவது யார்? 

ஹர்ஷ டி சில்வா, சித்தார்த்தனைப் பற்றி பாராளுமன்றத்தில் கூறியதை சபையில் இருந்த சிறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களும் கேட்டுக் கொண்டு தான் இருந்தார்கள்.

அவர்கள் அதனை இதுவரை பாராளுமன்றத்துக்கு உள்ளேயோ, வெளியிலோ மறுக்கவில்லை. சிறு கட்சிகளிடையே அவ்விடயத்தில் கருத்து முரண்பாடு இல்லை என்பது அதன் மூலம் தெரிய வருகிறது.

அதேவேளை, பரிந்தரைக்கப்பட்டவரை சபாநாயகர் அரசியலமைப்புக்கு நியமிக்கவில்லை என்று ஹர்ஷ டி சில்வா கூறியதை சபாநாயகரும் மறுக்கவில்லை என்பதும் முக்கியமான விடயமாகும். 

அரசியலமைப்புச் சபையின் பணிகளை முடக்க அல்லது அந்நடவடிக்கைகள் முடங்கிக் கிடப்பதாகக் நாட்டு மக்களை நம்பவைக்க ஜனாதிபதிக்குத் தேவை இருப்பதாக தெரிகிறது.

எனவே, அவர் அச்சபைக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயல்கிறார் போலும். சிலவேளை அதன் மூலம் பொலிஸ் மா அதிபர் நியமனம் விடயத்தில் தற்போது அவருக்கு எதிராக எழும் குற்றச்சாட்டுகளை அரசியலமைப்புச் சபையின் பக்கம் திருப்புவதே அவரது நோக்கமாக இருக்கலாம். 

பொலிஸ் மா அதிபராக இருந்த சந்தன தீபால் விக்ரமரத்ன கடந்த சனிக்கிழமை ஓய்வு பெற்றார். ஆனால் அவர் கடந்த மார்ச் மாதமே ஓய்வு பெற வேண்டியதாக இருந்தது. ஏதோ ஒரு காரணத்துக்காக அவரை ஓய்வு பெற விடாமல் ஜனாதிபதி அவருக்கு மூன்று மாத கால சேவை நீடிப்பை வழங்கினார்.

அதனை அரசியலமைப்புச் சபையும் அங்கீகரித்தது. அந்நீடிப்பு ஜூன் மாதம் 26 ஆம் திகதி முடிவடைந்தது. அதனை அடுத்து சுமார் இரண்டு வார காலமாக பொலிஸ் மா அதிபர் ஒருவர் இல்லாமலேயே பொலிஸ் திணைக்களம் இயங்கியது. 

பின்னர் ஜூலை மாதம் 9 ஆம் திகதி விக்ரமரத்னவுக்கு ஜனாதிபதி இரண்டாவது முறையாகவும் மூன்று மாத கால சேவை நீடிப்பை பரிந்துரை செய்து அரசியலமைப்புச் சபைக்கு அறிவித்தார்.

அதற்கு அரசியலமைப்புச் சபை ஒப்புதல் வழங்கினாலும் தொடர்ந்தும் விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு வழங்க முடியாது என்பதையும் ஜனாதிபதிக்கு அறிவித்தது. 

அவ்வாறு இருந்தும் அச்சேவை நீடிப்பும் ஒக்டோபர் 9 ஆம் திகதி முடிவடையவே ஜனாதிபதி ஒக்டோபர் 13 ஆம் திகதி விக்ரமைரத்னவுக்கு மூன்று வார கால சேவை நீடிப்பை சிபார்சு செய்து அதனை அரசியலமைப்புச் சபைக்கு அனுப்பினார்.

அச்சபை அதனை நிராகரித்தது. அந்நிரகரிப்பை புறக்கணித்து ஜனாதிபதி அவருக்கு சேவை நீடிப்பை வழங்கினார்.

அந்நீடிப்பு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முடிவடையவே ஜனாதிபதி அன்றே மீண்டும் அதாவது நான்காவது முறையாகவும் அவருக்கு மூன்று வார கால சேவை நீடிப்பை பரிந்துரைத்தார். அதனையும் அரசியலமைப்புச் சபை நிராகரித்தது.

ஜனாதிபதி அந் நிராகரிப்பையும் புறக்கணித்து மீண்டும் சந்தன விக்ரமரதனவுக்கு சேவை நீடிப்பை வழங்கினார். அச் சேவை நீடிப்பு கடந்த சனிக்கிழமை முடிவடையவே விக்ரமரத்ன தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

இச்சம்பவ  தொடரை அடுத்து அரசியலமைப்புச் சபையின் ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதிக்கு இது போன்றதோர் நியமனத்தையோ அல்லது சேவை நீடிப்பையோ வழங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில நியமனங்களுக்காகவே ஜனாதிபதி அரசியலமைப்புச் சபையின் ஒப்புதலை நாட வேண்டும் என்றும் சேவை நீடிப்புக்களுக்கு அவருக்கு அவ்வாறான ஒப்புதல் அவசியமில்லை என்றும ஜனாதிபதியின் சில ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். 

அரசியலமைப்புச் சபையின் நிராகரிப்பை புறக்கணித்து ஜனாதிபதி நியமனங்களையோ, சேவை நீடிப்புக்களையோ வழங்க முடியும் என்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

தாம் தலைமை தாங்கும் அரசியலமைப்புச் சபையின் நிராகரிப்பை புறக்கணித்து ஜனாதிபதி செயற்பட்டதில் எவ்வித தவறும் இல்லை என்று இது தொடர்பாக எதிர்க் கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் கூறினார். 

சேவை நீடிப்புக்களுக்கு அரசியலமைப்புச் சபையின் ஒப்புதல் அவசியமில்லை என்றால் அதேபோல் அரசியலமைப்புச் சபையின் முடிவை புறக்கணிக்க ஜனாதிபதியால் முடியுமாக இருந்தால் தமது பரிந்துரைகளை அரசியலமைப்புச் சபைக்கு அனுப்பாமலே ஜனாதிபதி நியமனங்களையும் சேவை நீடிப்புக்களையும் வழங்கலாமே. 

இந்த நிலையிலேயே ஜனாதிபதி கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அரசியலமைப்புச் சபையை விமர்சித்தார்.

அரசியலமைப்புச் சபையின் நடவடிக்கைகளைப் பற்றி விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அவ்வாறு தெரிவுக்குழு நியமிக்கப்பட்டால் விசித்திரமானதோர் நிலைமை உருவாகும்.

தெரிவுக்குழுவை நியமிப்பதும் சபாநாயகரே. அரசியலமைப்புச் சபையின் தவிசாளரும் அவரேயாவார். அதாவது தமது தலைமையிலான சபையின் நடவடிக்கைகளைப் பற்றி விசாரணை நடத்த சபாநாயகரே தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கிறார். 

அரசியலமைப்புச் சபைக்கு சிறு கட்சிகளால் இன்னமும் பெயரொன்று பரிந்துரைக்கப்படவில்லை என்று ஜனாதிபதி கூறுகிறார். இது இந்த விடயத்தில் தமது செயற்பாடுகளை நியாயப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.

அரசியலமைப்புச் சபை முறையாக நிறுவப்படவில்லை என்றும் எனவே நான் அதன் நிராகரிப்பை புறக்கணித்து பொலிஸ் மா அதிபருக்கு சேவை நீடிப்பை வழங்கினேன் என்றும் அவர் கூறப் போகிறார் போலும். 

உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை ஒத்திப் டும் பல முயற்சிகளில் ஈடுபட்ட நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவைப் பற்றியும் இவ்வாறே கருத்துத் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு முறையாக அமையவில்லை என்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை நடத்துவதைப் பற்றி ஒருமித்த கருத்து இல்லை என்றும் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறினார்.

ஆயினும் அவரது கட்சியும் அப்போது வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தது. அவரது கருத்தை அப்போதைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவாவும் நிராகரித்தார். இப்போது அவர் அரசியலமைப்புச் சபையின் சிறு கட்சிகளிடையே தமது உறுப்பினரைப் பற்றி ஒருமித்த கருத்து இல்லை என்கிறார். 

அரசியலமைப்புச் சபையானது ஜனாதிபதிகளின் எதேச்சதிகாரத்தை கட்டுப்படுத்தவே நியமிக்கப்படுகிறது. எனவே, ஜனாதிபதிகள் அதனை விரும்புவதில்லை.

சிலவேளைகளில் அவர்கள் அதன் செயற்பாடுகள் முடங்கும் வகையில் நடவடிக்கை எடுத்துவிட்டு தமக்கு வேண்டியவாறு செயற்படுகின்றனர்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் முதலாவது ஜனாதிபதி பதவிக் காலத்தில் ஒரு கட்டத்தில் அவர் அரசியலமைப்புச் சபையின் ஜனாதிபதியின் பிரதிநிதியை பரிந்துரைக்கவில்லை.

பின்னர் அச்சபை முறையாக அமையவில்லை என்று அச்சபையின் அங்கீரமின்றி தமக்கு வேண்டிய நீதிபதிகளை உயர் நீதிமன்றத்துக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கும் நியமித்தார்.

இப்போது அரசியலமைப்புச் சபையின் சிறுகட்சிகளின் பிரதிநிதி நியமிக்கப்படாத போதிலும் அச்சபை இயங்குகிறது என்பது அச்சபை பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்புக்களுக்கு ஒப்புதல் வழங்காமையால் தெரிகிறது. ஆனால் அதனை பாவித்து தமது செயற்பாடுகளை நியாயப்படுத்த ஜனாதிபதி முயல்கிறார்.      

2023.11.29

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .