Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 செப்டெம்பர் 19 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
இலங்கையில் சமாதானத்திற்கான போராட்டத்தில் அரச இயக்கவியலும் அரச உயர்குடியினருக்கும் இடையிலான உறவு முக்கிய பங்கு வகித்தது. தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் ஆளும் உயரடுக்கினரால் எதிர்கொள்ளப்படும் பல போராட்டங்கள் மற்றும் சமூக மற்றும் பொருளாதார நகர்வுகள் சமாதானத்திற்காக அரசியலின் முக்கிய புள்ளிகளாம்.
இதை விளங்கிக்கொள்வதற்கு 1994 முதல் இலங்கையில் சமாதானத்திற்கான முன்னெடுப்புகளின் அரசியலை நாம் நோக்க வேண்டும். 1994 முதல் 1999 வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ஆட்சி 'அமைதியான வழிகளில் சமாதானம்' என்ற தாரதமந்திரத்தின் அடிப்படையில் சமாதான முயற்சிகளை முன்னெடுத்தது. 1999-2002 காலப்பகுதியில் அது அரசியல் சமாதானம் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட யுத்தத்தின் சகவாழ்வு பற்றிய கதையாடலாக இருந்தது. 2002-2004 காலத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் நவதாராளவாத சமாதானத்திற்கான கதையாடலாகவும், கடைசியாக 2006 முதல் 2009 வரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் கீழ் பயங்கரவாதத்திற்கு எதிரான போர், சமாதானத்திற்கான போர், முழு யுத்தம் மற்றும் மனிதாபிமானப் போர் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உரையாடலாக அது விரிந்தது. இலங்கையின் சமாதான முயற்சிகயோடு போரரசியல் இரண்டரக் கலந்துள்ளது.
1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் 1977 க்குப் பிந்தைய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தைக் குறித்தது. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி; பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருட அரசியல் ஆதிக்கத்தை தோற்கடிக்க முடிந்தது.
குமாரதுங்கவின் தேர்தல் விஞ்ஞாபனமும் புலிகளுடனான வடக்கு மற்றும் கிழக்கில் ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்தது. குமாரதுங்கவின் சமாதான நிகழ்ச்சி நிரல் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிக முக்கியமான விடயமாகும். 1994-1999 காலகட்டத்தில், இலங்கையின் அன்றாட சமூக உரையாடல்களில், 'அமைதி' என்பது சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்குப் பல்வேறு அர்த்தங்களைக் கொண்டிருந்தது. எவ்வாறாயினும், குமாரதுங்கவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதல் தொடர்பாக 'சமாதானம்' என்ற சொல் வெளிப்படையாகப் பயன்படுத்தப்பட்டது. மேலும், 'அமைதி' எப்போதும் ஒரு இறுதி நிலை காட்சியாகவும், குறிப்பாக சிக்கலான பொருளாதார வளர்ச்சியின் பார்வையில் பல சமூக-பொருளாதார மற்றும் அரசியல் இலக்குகளை அடைவதற்கான முன்நிபந்தனையாகவும் முன்வைக்கப்பட்டது.
சமாதானத்தின் பல உச்சரிப்புகளைப் பயன்படுத்தி, குமாரதுங்கவால் நாட்டின் வடக்கிலிருந்தும் தென்பகுதி சமூகத்தில் இருந்தும் பல குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் பிரிவுகளின் ஆதரவைப் பெற்று சமாதானத்தை நோக்கி வேகத்தை உருவாக்க முடிந்தது. தேர்தலுக்கு முன்னதாக, 'அமைதி' என்ற சொல்லுக்கு இனங்களுக்கிடையேயான அமைதி, குறிப்பாக சமூக அமைதி தவிர வேறு அர்த்தங்கள் இருந்தன. ஜே.வி.பியின் தலைமையிலான இரண்டாவது அரச எதிர்ப்பு இயக்கத்தை ஆதரித்த நாட்டின் இளைஞர்களுக்கு எதிராக பிரேமதாசா காலத்தில் நடத்தப்பட்ட நேரடி உடல்ரீதியான வன்முறைகளுக்கு வழக்கமான சாட்சிகளாக இருந்த பலருக்கு அமைதி என்பது முக்கியமானதாக இருந்தது. இவ்வாறான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குமாரதுங்க குறிப்பாக நாட்டின் இளைஞர்களுக்கு வழங்கிய மற்றொரு முக்கிய வாக்குறுதியாகும். கடனில் சிக்கிய கிராமப்புற விவசாயிகள் அனுபவிக்கும் கட்டமைப்பு வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் அவரது பொருளாதார நிகழ்ச்சி நிரல் உறுதியளித்தது.
ஆரம்பத்தில், குமாரதுங்க, சோசலிச, தாராளவாத மற்றும் முதலாளித்துவச் சாய்வுகளுடன் பல்வேறு உயரடுக்கு அரசியல் பிரிவுகளை ஒன்றிணைக்க முடிந்ததால், அரசியல் ஐக்கியத்தின் அடையாளமாகவும் கருதப்பட்டார். அவரது தேர்தல் பிரச்சாரம் ஒரு சோசலிச-சார்பு தொனியை கொண்டிருந்தாலும், பதவி ஏற்றதும், உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் யதார்த்தங்கள் காரணமாக, அவர் தனக்கு முந்தைய ஐக்கிய தேசியக் கட்சியின் அதே நவதாராளவாத பொருளாதார நிகழ்ச்சி நிரலைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று, தேசிய சொத்துக்களை தனியார்மயமாக்குவது ஆகும். இது தேர்தல்களின் போது அவர் வாக்குறுதியளித்த சோசலிச பொருளாதார நிகழ்ச்சி நிரலில் இருந்து அவர் முன்கூட்டியே விலகுவதைக் குறிக்கிறது. முந்தைய ஆட்சியில் இருந்து அவர் பெற்ற பொருளாதாரத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு, பெரிய பொருளாதாரப் பிரச்சனைகளைச் சமாளிக்கவும், அரச மூலதனக் குவிப்பு செயல்முறையின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறவும் இந்தப் பாதையைப் பின்பற்றுவது அவசியம் என்று நியாயப்படுத்தப்பட்டது. அரசு சொத்துக்களை தனியார்மயமாக்குவதற்கு எதிரான விமர்சனங்களை திசைதிருப்ப, அவரது அரசாங்கம் இந்த செயல்முறையை 'மனித முகத்துடனான தனியார்மயமாக்கல்' அல்லது 'மக்கள்மயமாக்கல்' என்று மறுபெயரிட்டது.
குமாரதுங்கவின் பொருளாதார நிகழ்ச்சி நிரல் பெரும்பாலும் தாராளவாத எண்ணம் கொண்ட உயரடுக்கு மற்றும் வணிக உயரடுக்கின் குழுவால் வடிவமைக்கப்பட்டது. இது விடுதலைப் புலிகளுடனான அரசியல் பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கிய அவரது அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் உறுதியாக பிணைக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் ஐ.நா பொதுச் செயலாளரான பூட்ரஸ் பூட்ரஸ் காலியின் 'அமைதிக்கான நிகழ்ச்சி நிரல்'க்குப் பின் நிலவும் உலகப் போக்குகளில் இருந்து உத்வேகம் பெற்ற 'அமைதி வழி மூலம் சமாதானம்' என்ற முழக்கத்தை அவரது சமாதான நிகழ்ச்சி நிரல் பின்பற்றியது. அந்தக் காலத்தின் உலகளாவிய சமாதான நிகழ்ச்சி நிரலில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த நேரத்தில் வளரும் நாடுகளில் உள்ள பலதரப்பு நிதி நிறுவனங்கள் மற்றும் மேற்கத்திய நன்கொடையாளர்களால் சந்தைப் பொருளாதாரத்தை ஆக்கிரோஷமாக மேம்படுத்துவதற்கான உலகளாவிய பொருளாதார நிகழ்ச்சி நிரலுடன் அதன் சிக்கலான இணைப்பு உள்ளது. எனவே, குமாரதுங்கவின் சமாதான மூலோபாயம், அமைதியான வழிமுறையின் மூலம் உலக சமாதானத்தை அடிப்படையாகக் கொண்டது.
பல உள்நாட்டு ஆயுத மோதல்கள் மற்றும் உள்நாட்டுப் போர்களைத் தீர்ப்பதற்கான தேவையை ஏற்படுத்திய உலகளாவிய மூலதன வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான சர்வதேச பலதரப்பு நிதி நிறுவனங்களின் முயற்சிகளில் இருந்து வளரும் நாடுகளால் முழுமையாக விடுவித்துக் கொள்ள முடியவில்லை. வளரும் நாடுகளில் உள்ள உள்நாட்டு ஆயுத மோதல்களானவை, உள்ளூர்-உலகளாவிய சந்தைகளின் விரிவாக்கம், சுதந்திரமான மற்றும் ஒழுங்கான வள ஓட்டங்கள் மற்றும் உள்ளூர் மற்றும் உலகளாவிய செல்வ உற்பத்திக்கு சாதகமான சூழலை உருவாக்குவதைத் தடுக்கிறது என்ற அடிப்படைக் கோட்பாடுகள் முன்வைக்கின்றன. சாதகமான உலகளாவிய சூழல் மற்றும் உள்ளூர் வர்த்தக வட்டாரங்களில் இருந்து கிடைத்த ஆதரவு மற்றும் ஒப்புதலின் பின்னணியில் தான் குமாரதுங்க விடுதலைப் புலிகளுடனான அரசியல் பேச்சுவார்த்தைகளில் இறங்குவதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியை நாடினார். இந்த செயல்முறைக்கு நோர்வே அரசாங்கத்தை அனுசரணையாளராக பணியாற்ற அழைப்பு விடுத்தார்.
எவ்வாறாயினும், அவரது முதல் பதவிக்காலத்தில் (1994-199) 'அமைதியான வழிமுறைகள் மூலம் சமாதானம்' நிகழ்ச்சி நிரலை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு, இந்த காலகட்டத்தின் சில தேசிய அளவிலான அரசியல் இயக்கவியலை ஆராய்வது அவசியமானது. பிரேமதாசா காலத்தில் கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்ட தங்களின் தனிப்பட்ட மற்றும் குழு சட்டப்பூர்வத்தன்மையையும் அதிகாரத்தையும் மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒருவரையொருவர் விஞ்சி நிற்பனவாக உயரடுக்குகள் இருந்தன. ஜே.வி.பி.யின் இரண்டாவது அரச எதிர்ப்பு ஆயுதக் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு பிரேமதாசா அரச இந்திரத்தைப் பயன்படுத்திய விதம், உயரடுக்கினரைக் கிலிகொள்ளச் செய்தது. உயரடுக்கினர், தங்கள் அதிகாரத்தை இழந்தபோதும் பிரேமதாசாவைச் சவாலுக்குட்படுத்தும் திராணி அவர்களுக்கு இருக்கவில்லை. எனவே புதிய ஆட்சியில் தங்கள் அதிகாரத்தைப் மீளப்பெற உயரடுக்கினர் முண்டியடித்தனர்.
அதேவேளை அரசியல் உயரடுக்கினர் வன்முறையின் ஏகபோகத்தை பாதாள உலகத்தைச் சேர்ந்த புதிய நடிகர்கள் மற்றும் உள்ளூர் அரசியல் காட்சியில் ஆயுதமேந்திய கும்பல்களிடம் இழந்தமையானது, சட்டப்பூர்வ உரிமைக்கான உயரடுக்கின் போராட்டத்தின் மற்றொரு மூலத்தை விளக்குகிறது. இலங்கை அரசியலில் சட்டப்பூர்வமான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான அதிகாரங்களுக்கு இடையிலான எல்லைகள் மங்கலானது. அரசியலின் நுண்ணிய மற்றும் இடைநிலை மட்டங்களில் அரசியல் உயரடுக்கினரிடையே கடுமையான போட்டியை ஊக்குவித்தது.
இந்த மோதல்கள் இலங்கையில் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்களின் அடிப்படையில், குமாரதுங்கவின் 'அமைதியான வழிகளில் சமாதானம்' என்ற நிகழ்ச்சி நிரல் குறித்து அரசியல் உயரடுக்குகள் உட்பட சமூகத்தில் பல்வேறு பிரிவினர் பலவிதமான விளக்கங்களைக் கொண்டிருந்தர். மிக முக்கியமாக, பொதுஜன முன்னணியின் கூட்டணித் தலைவர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித் தலைவர் என்ற முறையில் தனது சட்டப்பூர்வத்தன்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான மூர்க்கமான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குமாரதுங்கவுக்கு ஷஅமைதியான வழியில் சமாதானம்| பிற தனிப்பட்ட-அரசியல் நலன்களைக் கொண்டு வந்தது. அவரது சொந்தக் கட்சிக்குள் அவரது தலைமையின் மீதான முழுமையான ஆதரவின்மையானது, அமைதியான வழிகளில் சமாதானத்தை கடைப்பிடிப்பது, குமாரதுங்கவின் தலைமை மற்றும் அரசியல் வேலைத்திட்டத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு மேலும் ஒரு கருவியாகவும் ஒருங்கிணைந்ததாகவும் மாறியது. அது மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றி பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுவதில் முக்கியப் பங்காற்றிய சக்திவாய்ந்த உலக சக்திகள், தாராளவாத மேற்கத்திய சர்வதேச பார்வையாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் இந்தக் கதையாடல் உறுதியாக எதிரொலித்ததால், 'அமைதி மூலம் சமாதானம்' என்ற முழக்கத்தைத் தழுவுவதை தனக்குக் கிடைத்த வாய்ப்பை குமாரதுங்க பார்த்திருக்கலாம்.
28 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
2 hours ago