2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

போரில் இறந்தவர்களை நினைவுகூரல் பற்றிய சர்ச்சை

Editorial   / 2023 ஒக்டோபர் 02 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

 

யாழ்ப்பாணத்தில் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை தலைவராக இருந்து பின்னர் 12 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி, திலீபன் என்று தமிழர்களால் மிகவும் உயர்வாக மதித்து அழைக்கப்படும் இராசையா பார்திபனை நினைவு கூரும் நிகழ்வொன்றில் மூன்று வருடங்களுக்கு முன்னர் கலந்து கொண்டதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வாரம் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு குற்றப்பத்திரம் வழங்கி இருக்கிறது.

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு நாளில் நடைபெற்ற திலீபன் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டதாகவே சட்ட மா அதிபர் இவ்வழக்கில் சிவாஜிலிங்கத்தை குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

இவ்வருடம் திலீபன் ஞாபகார்த்த நிகழ்வுகளும் அவற்றுக்கு எதிரான நிகழ்வுகளும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கும் நிலையிலேயே மூன்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற திலீபன் நினைவு நிகழ்வொன்றில் கலந்து கொண்டதாக சிவாஜிலிங்கத்திடம் குற்றப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கொழும்பிலும் வட மாகாணத்திலும் திட்டமிடப்பட்டு இருந்த சில திலீபன் ஞாபகார்த்த நிகழ்வுகள் தொடர்பாக பொலிஸார் சமர்ப்பித்த மனுக்கள் விடயத்தில் வடக்கிலும் கொழும்பிலும் நீதிமன்றங்கள் வேறுபட்ட தீர்ப்புக்களை வழங்கி இருக்கின்றன. அந்நிகழ்வுகளை தடைசெய்யுமாறு பொலிஸார் கொழும்பு கோட்டை, மாளிகாகந்த, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் மனுக்களை சமர்ப்பித்திருந்தனர். வடக்கில் நீதிமன்றங்கள் அவ்வாறான தடை உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என்று தீர்ப்ளித்துள்ள போதிலும் கொழும்பில் இருக்கும் இரு நீதிமன்றங்களும் பொலிஸாரின் அக்கோரிக்கைகளை ஏற்று அந்நிகழ்வுகளுக்கு எதிராக தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

யாழ்ப்பாண நீதிமன்றம் கடந்த 19 ஆம் திகதி தமது தீர்ப்பை வழங்கி இருந்த நிலையில் கொழும்பிலிருந்து பொலிஸ் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களங்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் ஹெலிகொப்டர் மூலம் யாழ்ப்பாணத்துக்குச் சென்று மீண்டும் புதிதாக மனுக்கள் சமர்ப்பித்து திலீபன் நினைவு நிகழ்வுகளை தடைசெய்யுமாறு கோரிய போதிலும் நீதிமன்றம் தமது முன்னைய தீர்ப்பபை மாற்றிக் கொள்ளவில்லை. தாம் உயர்வாக மதிக்கும் ஒருவரை நினைவு கூர மக்களுக்கு உரிமை இருக்கிறது என்றும் அதனை சாத்வீகமான முறையில் செய்ய அவர்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் நீதவான் கூறியிருக்கிறார்.

வவுனியா நீதிமன்றத்திடமும் பொலிஸாருக்கு இதே தீர்ப்பு தான் வழங்கப்பட்டது. யாழ்ப்பாண நீதிமன்றம் கூறியது போலவே ஞாபகார்த்த நிகழ்வுகளின் போது எவரேனும் சட்டத்தை மீறினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அந்நீதிமன்றம் கூறி இருக்கிறது.

ஆனால் கொழும்பு மற்றும் மாளிகாகந்தை நீதிமன்றங்கள் பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று கட்டளை பிறப்பித்து இருந்தன. அதன் படி கொழும்பில், சில பெரும்பான்மை இனத்தவர்கள் உள்ளிட்ட சிலரால் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபன் நினைவு நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டன. நீதிமன்றங்கள் இனவாத கண்ணோட்டத்தில் தீர்ப்புக்கள் வழங்கியதாக நாம் இங்கே கூற வரவில்லை. இந்நிகழ்வுகளால் உரிய பிரதேசத்தில் சமாதானம் பாதிக்கப்படலாம் என்ற அடிப்படையிலேயே பொலிஸார் தமது கோரிக்கையை முன்வைத்து இருந்தனர். இந்த நிலையில் நாட்டில் வெவ்வேறு பிரதேசங்களில் இருக்கும் வெவ்வேறான நிலைமைகளை கருத்திற் கொண்டே நீதிமன்றங்கள் வெவ்வேறு தீர்ப்புக்களை வழங்கியிருக்கலாம். தமிழ் பிரதேசங்களில் திலீபன் ஞாபகாரத்த நிகழ்ச்சிகள் காரணமாக குழப்ப நிலை ஏற்படும் சாத்திக்கூறுகள் இல்லை.

இந்த நீதிமன்ற தீர்ப்புக்கள், ஆயுதப் போராட்டங்களில் உயிரிழப்போரை நினைவு கூரல் தொடர்பாக மீண்டும் ஒரு விவாதத்தை ஆரம்பித்துள்ளது. இது வருடத்துக்கு ஓரிரு முறை தலைதூக்கும் விவாதமாகும். நாட்டில் தமிழீழ விடுதலை புலிகளும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆயுதப் படைகளின் சார்பாக அரசாங்கமுமே மோதல்களில் இறந்தோரை நினைவுகூருகின்றன. சில சமயங்களில் தமிழீழ விடுதலை இயக்கமும் (டெலோ) புளோட் அமைப்பும் போரில் இறந்த தமது சகாக்களை நினைவுகூருகின்றன. இவற்றில் புலிகள் அமைப்பினர் அல்லது மற்றவர்கள் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூருவதே சர்ச்சைக்குரிதாகியுள்ளது.

அரசாங்கம் மே மாதம் 19 ஆம் திகதி போர் வீரர்களின் நாளாக பிரகடனப்படுத்தி நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்துகிறது. மக்கள் விடுதலை முன்னணி ஏப்ரல் மாதமும் நவம்பர் மாதமும் அவ்வாறான நிகழ்ச்சிகளை நடத்துகிறது. புளோட்டும் டெலோவும் அவற்றின் தலைவர்களான உமா மகேஸ்வரனினதும் ஸ்ரீ சபாரத்தினத்தினதும் ஞாபகார்த்தமாக நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. புலிகளும் முள்ளிவாய்க்கால் நாள், கரும்புலிகள் நாள், திலீபன் நினைவு நாள் மற்றும் மாவீரர் நாள் ஆகியவற்றை நடத்துகின்றன.

தாம் நடத்தும் நினைவு நாட்களைத் தவிர ஏனையவற்றை கொலைகாரர்களை நினைவு கூருவதாகவே சகலரும் கருதுகின்றனர். அதனாலேயே நினைவாஞ்சலி நிகழ்வுகள் சர்ச்சைக்குரியதாகி விடுகின்றன. சிலர் திலீபன் தொடர்பாகவும் அவ்வாறே கூறுகின்றனர். ஆனால் ஆயுதப் போரில் ஈடுபடும் எவரும் கொலைகளை செய்தவர்கள் தான். ஆயுதப் போர் என்பதே படுகொலை போட்டியொன்றேயொழிய விளையாட்டுப் போட்டியொன்றல்ல. அக்கொலைகள் சிலவேளை மிகக் குரூரமானவையாகும்.

திலீபனும் கூட, 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை தமது உயிரை தியாகம் செய்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடு முன், இராணுவத்தினர் ஒபரேஷன் லிபரேஷன் என்ற பெயரில் 1987 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் வடமராட்சியில் நடத்திய இராணுவ நடவடிக்கைக்கு எதிராக போராடியவராவார். அப்போரின் போதே அவர் தமது வயிற்றில் மிக மோசமான முறையில் காயமடைந்தார்.

அதற்கு முந்திய வருடத்தில் அதாவது 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புலிகளுக்கும் டெலோ அமைப்பினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் மோதல் இடம்பெற்றது. அம் மோதலின் போது திலீபனினதும் கிட்டு என்று அழைக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமாரினதும் தலைமையில் புலிகள் டெலொவின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் உள்ளிட்ட சுமார் 400 டெலோ உறுப்பினர்களை கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

போரின் போது மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பது உண்மை தான். ஆனால் நடைமுறையில் நடைபெறுவது அதுவல்ல. இது எங்கும் காணப்படும் நிலைமையாகும். அரசியலுக்கு வருமுன் உலகில் மிகச் சிறந்த இராணுவத் தளபதியாக வர்ணிக்கப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராகவும் மிக மோசமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இராணுவ முகாம்களில் சித்திரவதைகளைப் பற்றி ரோஹித்த முணசிங்ஹ என்பவர் ஒரு புத்தகத்தையே எழுதியிருக்கிறார்.

இன்று ஏனைய நாடுகளுக்கு மனித உரிமைகளைப் பற்றி வகுப்பு எடுக்கும் அமெரிக்காவின் படைகள் ஏனைய நாடுகளில் நடந்து கொள்ளும் முறை இதற்கு சிறந்த உதாரணமாகும். அந்நாட்டில் Waterboarding எனப்படும் மூச்சுத்திணறச் செய்யும் சித்திரவதை முறை நடைமுறையில் இருப்பது பொதுவாக அறியப்பட்ட விடயமாகும். 1993 ஆம் ஆண்டு கல்ப் போரின் போது அமெரிக்கப் படைகள் 9000 ஈராக்கிய படை வீரர்களை அவர்களது யுத்த அகழிகளிலேயே விசேடமாக தயாரிக்கப்பட்ட புல்டோஸர்கள் மூலம் மண்ணைப் போட்டு உயிரோடு புதைத்தனர்.

போர்கள் உள்ளிட்ட ஆயுத மோதல்களில் ஈடுபடுவோர் எவ்வளவு தான் குரூரமாக நடந்து கொண்டாலும் அவர்களுக்கு எதிரானவர்கள் இருப்பது போலவே ஆதரவானவர்களும் இருக்கவே தான் செய்கிறார்கள். அதேவேளை அவ்வாறு போரில் ஈடுபடுவோர் தமது நாட்டுக்காக அல்லது தாம் நேசிக்கும் ஒரு இனத்துக்காக பெரும் தியாகங்களையும் செய்கிறார்கள். எனவே அவர்கள் பிரதிநித்துவப்படுத்தும் மக்கள் அவர்களை நினைவு கூருவதை நியாயமற்றதாகவோ பிழையானதாகவோ கூற முடியாது. எனினும் எல்லோரும் மற்றவர்களால் நினைவுகூரப்படுவோர் கொடூரமானவர்கள் என்றும் அவர்களை நினைவுகூரக் கூடாது என்றும் நினைக்கின்றனர்.

ஒரே நோக்கத்துக்காக போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தாலும் மற்றொரு அமைப்பில் இருந்தால் அவரது தியாகத்தை மதிக்கவோ அவரை நினைவு கூரவோ பலர் முன்வருவதில்லை. இது வடக்கிலும் தெற்கிலும் காணப்படும் நிலைமையாகும். அதேபோல் அரசியல் குறிக்கோள்கள் வேறுபட்டாலும் ஆயுத மோதலில் ஈடுபட்ட பலர் மக்களுக்கு விடிவு வேண்டும் என்ற உன்னதமானதோர் நோக்கத்துக்காகவே உயிர் நீத்தார்கள் என்று சிந்திக்கவும் எவரும் தயாராக இல்லை.

மக்களை மனதில் வைத்து ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்வோரை நினைவுகூரும் விடயத்தில் எழும் மற்றொரு பிரச்சினை என்னவென்றால் அதன் மூலம் தற்போதைய இளந்தலைமுறையினர் வன்முறை அரசியலுக்கு தள்ளப்படுகிறார்களா என்பதேயாகும். ஏனைனில் இவ்வாறான ஞாபகார்த்த நகழ்ச்சிகளின் போது உயிர் நீத்தவர்களின் தியாகங்கள் மட்டுமன்றி அவர்களது சகல செயற்பாடுகளும் நியாயப்படுத்தப்படுகின்றன. போற்றப்படுகின்றன, அவ்வாறான தியாகங்களின் பால் தற்போதைய இளைஞர்கள் யுவதிகள் ஈர்க்கப்படுகின்றனர்.

இவ்வனைத்தையும் கருத்திற் கொண்டு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) தமது அறிக்கையின் இறுதி பந்தியில், நாட்டில் சகலரும் ஆயுதப் போராட்டங்களில் உயிர் நீத்த சகலரையும் அவர்களது இனத்தையோ போராட்ட குறிக்கோள்களையோ கருத்திற் கொள்ளாது பொதுவாக நினைவுகூரும் நிகழ்வொன்றை தேசிய ரீதியில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால் அவ்வாறு சிந்திக்க இன்னும் இரண்டு மூன்று நூற்றாண்டுகளிலாவது இலங்கை மக்களிடையே மனப்பக்குவம் ஏற்படுமா என்பது சந்தேகமே.

2023.09.27


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X