2025 மே 16, வெள்ளிக்கிழமை

மோடிக்கும் சோனியாவுக்கும் 'டிமிக்கி' கொடுக்கும் தி.மு.க, அ.தி.மு.க

Thipaan   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசியக் கட்சிகளான பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தமிழகத் தேர்தலில் தடுமாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. முக்கிய கட்சிகளான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும், இரண்டு தேசியக் கட்சிகளையும் இந்த தேர்தலில் இளக்காரமாகப் பார்க்கத் தொடங்கி விட்டன என்பதைத்தான், இதுவரை நடைபெறும் காட்சிகள் காட்டுகின்றன. 2014 நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த கூட்டணியை தவற விட்டு விட்டுத் தவிக்கிறது பா.ஜ.க. அக்கட்சியின் புதிய தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழகத்தின் அகில இந்திய தேர்தல் பார்வையாளர்கள் பிரகாஷ் ஜவ்டேகர், பியூஸ் கோயல் ஆகிய அனைவருமே, 'பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும்' என்று வேறு வழியின்று அறிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் பா.ஜ.க வெளியிட்டே விட்டது.

முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையுடன், பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பார்வையாளர்களில் ஒருவரான மத்திய மின் துறை அமைச்சர் பியூஸ் கோயல், 'இந்திய மாநிலங்களில் தமிழக முதல்வரை மட்டும் என்னால் சந்தித்துப் பேச முடியவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் தமிழகத்துக்கு மின் திட்டங்கள் எதையும் செய்ய முடியும்' என்று அறிவித்தார். அதை மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சரும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பிராகஷ் ஜவ்டேகர் ஆமோதித்தார். 'நானும் சந்திக்க முயன்றேன். வாய்ப்பு கிடைக்கவில்லை' என்றார். அக்கட்சியின் இன்னொரு தேசிய செயலாளர் முரளிதரராவ், 'சந்திக்க முடியாத முதலமைச்சர் இருந்தால் மாநிலத்தின் வளர்ச்சி எப்படியிருக்கும்' என்று கேள்வி எழுப்பினார்.

தமிழகத்திலிருந்து தேர்வு பெற்று மத்திய அமைச்சராகியிருக்கும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன். இராதாகிருஷ்ணன், 'நானே திட்டங்கள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சித்தேன். ஆனால் பார்க்க முடியவில்லை' என்று சாடியிருந்தார். இப்படி பா.ஜ.க.வின் சார்பில் அ.தி.மு.க மீது தாக்குதல் என்பதை ஓர் அந்நிய நாட்டுப் படையெடுப்பு போலவே நடத்தி விட்டனர் பா.ஜ.க.வினர். இதற்கு முக்கியக்காரணம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற பா.ஜ.க.வின் விருப்பத்தை அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா நிறைவேற்ற வில்லை என்பதே.

இந்த தாக்குதலில் அ.தி.மு.கவும் அதிர்ச்சியடைந்து விடவில்லை. இது 'நாலாந்தர அரசியல்' 'கூட்டணி ஏற்படாத விரக்தியில் பேசுவது' என்றெல்லாம் மத்திய அமைச்சர்களுக்கு தமிழக நிதி அமைச்சர்

ஓ. பன்னீர்செல்வமும், மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் பதிலடி கொடுத்தார்கள். ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள்தான் பதில் சொன்னார்களே தவிர, முதலமைச்சர் பதில் சொல்லவில்லை என்று தி.மு.க தலைவர் கருணாநிதியே சாடினார். இப்படி பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் இடையில் இருந்த 'அரசு ரீதியிலான உறவு' (மத்திய- மாநில அரசுகளுக்கு இடையில் இருந்த உறவு), 'அரசியல் ரீதியான கூட்டணியாக' மாறவில்லை.

இதனால் பா.ஜ.க. தமிழகத்தில் இப்போது தனித்துப் போட்டியிடும் நிலைக்கு வந்திருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வால் தங்களின் இயற்கை கூட்டாளியான அ.தி.மு.கவுடனும் கூட்டணி அமைக்க முடியவில்லை. 2014 நாடாளுமன்ற தேர்தலில் வைத்த கூட்டணியையும் தாக்குப் பிடித்து நிலைத்து நிற்க வைக்க முடியவில்லை.

இன்னொரு தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியோ, தமிழகத்தில் இரண்டாவது முறையாக சமீப காலத்தில் பிளவை சந்தித்துள்ளது. 1996இல் மறைந்த மூப்பனார் காங்கிரஸை உடைத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடக்கினார். இரண்டாவது முறையாக காங்கிரஸ் கட்சியை உடைத்து புதிதாக தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கியுள்ளார் மறைந்த மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன். காங்கிரஸுக்கு இப்போது ஏற்பட்டுள்ள பிளவு அக்கட்சியால் மூன்றாவது அணிக்கு தலைமை தாங்க முடியாத சூழலை உருவாக்கி விட்டது. தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க உட்பட 8 அரசியல் கட்சிகளுக்கு மேல் காங்கிரஸுடன்

கூட்டணி வைக்கும் மன நிலையில் இல்லை. அதை வெளிப்படையாகவே அறிவித்து தனி அணி கண்டு தமிழக தேர்தல் களத்தை சந்திக்கிறார்கள். ஆனால், தி.மு.க மட்டுமே காங்கிரஸுடன் கூட்டணி வைக்க விருப்பப்பட்டது.

தி.மு.கவின் இந்த விருப்பத்துக்கு காரணம் 'அகில இந்திய அரசியலில் காங்கிரஸ் தங்களுக்கு இயற்கையான கூட்டணி' என்றும், எதிர்காலத்தில் தி.மு.கவுக்கு டெல்லி அரசியலில் காங்கிரஸ் தேவை என்றும் கருதுகிறது. இந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சியுடன் இந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. சென்ற 2011 சட்டமன்ற தேர்தலில் 63 தொகுதிகளை தி.மு.க விடம் பெற்று போட்டியிட்டது.

அப்போது தி.மு.க தலைமைக் கழகமான அண்ணா அறிவாலய மாடியில் 2-ஜி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை. கீழே அக்கட்சி தலைமையுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்று நெருக்கடி கொடுத்து இந்த 63 சட்டமன்ற தொகுதிகளை வாங்கியது. ஆனால், அதில் 5 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இன்றைக்கோ அந்தக் கட்சி பிளவு பட்டு காங்கிரஸ் தன் முழுப்பலத்தை தமிழகத்தில் இழந்து நிற்கிறது.

ஆனாலும் சிறுபான்மையினர் வாக்குகளை ஒன்று திரட்டுவது, டெல்லி அரசியல் போன்றவற்றை மனதில் வைத்து தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், எத்தனை ஆசனங்கள் கொடுப்பது என்பதில் இழுபறி நீடிக்கிறது. சமீபத்தில் பேச்சுவார்த்தைக்கு வந்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் தி.மு.கவிடம் 80 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு கேட்டார்.

ஆனால், தி.மு.கவோ 25 தொகுதிகளை கொடுக்க முன் வந்தது. அதை காங்கிரஸ் மேலிடம் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் தி.மு.க- காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் உள்ள மூத்த தலைவர்களோ, 'தி.மு.க 35 தொகுதி வரை கொடுக்க முன் வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியும் 80 தொகுதியிலிருந்து 45 தொகுதிக்கு இறங்கி வந்து விட்டது. 40 தொகுதியிலோ அல்லது 41 தொகுதியிலோ காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி முடிவாகும்' என்று கிசுகிசுத்தார். ஆனால், காங்கிரஸ் கேட்ட 80 தொகுதியோ அல்லது அக்கட்சி எதிர்பார்க்கும் 63 தொகுதியோ கிடைக்க வாய்ப்பில்லை!

கூட்டணி அமைவது முக்கியமல்ல. தமிழகத்தில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேசிய கட்சிகளுக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள். குறிப்பாக 1989 சட்டமன்ற தேர்தலில் 'அ.தி.மு.க, தி.மு.கவுக்கு மாற்று நாங்கள்' என்று போட்டியிட்ட தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீத வாக்குகளை மக்கள் அளித்தார்கள். பிரதான எதிர்கட்சியாகவும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அந்த தேசிய வாக்காளர்கள் காலப்போக்கில்

காங்கிரஸிடமிருந்து விலகிச் சென்று விட்டார்கள். பா.ஜ.க பக்கமும் முழுமையாகப் போகாமல் இங்கும் அங்குமாக இந்த வாக்காளர்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அடிப்படை வாக்கு வங்கியை தேசிய கட்சிகளான பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் தக்க வைத்துக் கொள்ள முடியாத காரணத்தால், இந்த இரு கட்சிகளையும் தி.மு.கவோ, அ.தி.மு.கவோ பெரும் பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. அதிலும் முக்கியமாக காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கும் மரியாதையைக் கூட பா.ஜ.கவுக்கு, அ.தி.மு.கவும் தி.மு.கவும் கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை விவகாரத்தில் பா.ஜ.கவை அ.தி.மு.க துளி கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை. இதனால் தமிழகத்தில் மாநிலக் கட்சிகளுக்குத்தான் மதிப்பு. தேசிய கட்சிகளுக்கு மதிப்பு இல்லை என்று அர்த்தமில்லை.

தமிழக மக்களின் நாடி நரம்புகளைப் பிடித்துப் பார்த்து அரசியல் செய்ய பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே தவறி விட்டன என்பதுதான் உண்மை. இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை, காவிரி உள்ளிட்ட நதி நீர்ப் பிரச்சினை, தமிழக இளைஞர்களின் உணர்வுடன் ஒன்றிப் போன ஜல்லிக்கட்டு பிரச்சினை- இப்படி எந்த பிரச்சினையிலும் பா.ஜ.கவோh, காங்கிரஸோ பெரிய வித்தியாசமான அணுமுறையை, அதிலும் குறிப்பாக தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை என்பதே இந்த இரு கட்சிகளுக்கும் தமிழகத்தில் செல்வாக்கு இழக்கக் காரணம்.

தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளே தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியமைக்கும் சூழல் கடந்த 1967ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் காங்கிரஸோ, பா.ஜ.கவோ தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று திடமாக நம்புகிறார்கள். ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலத்தில் உள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வெளியுறவு கொள்கையை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்றோ,  கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களுடன் மோதி தமிழகத்தின் உணர்வுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றோ மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசும் கருதவில்லை.

இப்போது இருக்கின்ற பா.ஜ.க அரசும் கருதவில்லை என்பதுதான் தமிழக அரசியல் நிலவரம். ஆகவேதான் பா.ஜ.கவையோ, காங்கிரஸ் கட்சியையோ தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த காலங்களில் போட்டி போட்டது போல் இப்போது தி.மு.கவும் அ.தி.மு.கவும் போட்டி போடவில்லை.

மாறாக இரு கட்சிகளும் சேர்ந்தே பா.ஜ.க.வை வழி நடத்தும் நரேந்திரமோடிக்கும், காங்கிரஸை வழி நடத்தும் சோனியா காந்திக்கும் 'டிமிக்கி' கொடுக்கின்றன. தமிழகத்தில் தேசிய கட்சிகளான பா.ஜ.க.வும், காங்கிரஸும் காலூன்ற வேண்டுமென்றால் முதலில் தமிழகம் சார்ந்த பிரச்சினைகளில் இந்த இரு கட்சிகளும் முழு அக்கறை செலுத்த வேண்டும். அப்போதுதான் தமிழக மக்கள் இந்த இரு கட்சிகளின் பக்கமும் தங்கள் கடைக்கண் பார்வையைத் திருப்புவார்கள் என்பதுதான் இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலை. 2016 சட்டமன்ற தேர்தலில் ஏற்படப் போகும் அனுபவத்தின் அடிப்படையில் காங்கிரஸும்

பா.ஜ.க.வும் தங்களுக்கு தமிழகத்தில் புதிய அரசியல் பாதையை கண்டுபிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .