2025 மே 16, வெள்ளிக்கிழமை

மைத்திரியின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியுள்ள மஹிந்த

Thipaan   / 2016 மே 14 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டு எதிரணியினர், கிருலப்பனையில் நடத்திய மே தினப் பேரணியில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்துவதற்கு, தாம் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று கூறி, சுமார் பத்து நாட்களாக நீடித்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அமைச்சர் டிலான் பெரேரா.

மே தினப் பேரணி இடம்பெற்று பத்து நாட்களின் பின்னர் தான், அவர் இதனைக் கூறியிருந்தார். இடைப்பட்ட இந்தப் பத்து நாட்களிலும், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியின் மே தினப் பேரணியில் பங்கேற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா, இல்லையா என்ற தெளிவற்ற நிலை தான் நீடித்து வந்திருந்தது.

கிருலப்பனையில் நடந்த மே தினப் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் சுதந்திரக் கட்சி எடுக்காது என்பது, அவரது அறிவிப்பில் இருந்து உறுதியாகியிருக்கிறது. மே தினப் பேரணிக்கு முன்னதாக, வீராப்பாகப் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்கவோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரவோ, இதுபற்றி வாய் திறக்கவேயில்லை.

இவர்களும், அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவும் தான், கிருலப்பனைக் கூட்டத்துக்குச் செல்பவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகிரங்கமாக எச்சரித்து வந்தனர். இந்த எச்சரிக்கைகளையும் மீறி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, காலியில் நடத்திய மே தினப் பேரணியைப் புறக்கணித்து விட்டு, 40க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெரும்பகுதி மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கிருலப்பனைக் கூட்டத்துக்குச் சென்றிருந்தனர். காலியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கிருலப்பனையில் கூட்டு எதிரணியும் நடத்திய மே தினப் பேரணிகள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் யாருக்குச் செல்வாக்கு அதிகம் என்பதைப் பரீட்சிக்கும் களமாகவே இருந்தது.

எப்படியோ இரண்டு கூட்டங்களிலும் அதிகளவு ஆட்களைக் கொண்டு வந்து, ஒன்றுக்கு மற்றது சளைத்ததல்ல என்று நிரூபித்திருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷவும், கிருலப்பனைக் கூட்டத்தில் பங்கேற்று, தனது பலத்தை வெளிப்படுத்தியது மாத்திரமன்றி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக்கும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறார். கிருலப்பனைக் கூட்டத்தின் மூலம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமை, குறிப்பாக மைத்திரிபால சிறிசேன அணிக்குத் தான் தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது.

ஏனென்றால், ஏற்கெனவே எச்சரித்தது போன்று, மஹிந்த ராஜபக்ஷ மீதோ அல்லது கிருலப்பனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதோ, எந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் எடுக்கப்படவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில், மைத்திரிபால சிறிசேன இருந்தாலும், அவரது கட்டுப்பாட்டில் கட்சியின் மத்திய குழு உள்ளிட்ட நிர்வாக அமைப்புகள் இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷவும் சமாந்தரமான ஓர் அணியை கட்சிக்குள் வழிநடத்திச் செல்கிறார் என்பதே உண்மை.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் ஒரு பகுதியினர், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையைத் தான் எற்றுச் செயற்படுகின்றனர். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாத நிலையில் தான், மைத்திரிபால சிறிசேன இருக்கிறார். ஏற்கெனவே, ஹைட்பார்க்கில் கடந்த மாதம் நடத்திய கூட்டு எதிரணியின் அரச எதிர்ப்புப் பேரணியில், பங்கேற்கக் கூடாது என்றும் அவ்வாறு பங்கேற்றால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமை அறிவித்திருந்தது.

ஆனால் அதையும் மீறி, மஹிந்த ராஜபக்ஷ, அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அவரது தலைமையில் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதில் பங்கேற்றிருந்தனர். அப்போதும் கூட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை, தமது உத்தரவை மீறிய எந்தவொரு உறுப்பினர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு அணியினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு, சுதந்திரக் கட்சியின் தலைமை தயங்குகிறதா அல்லது இந்த விடயத்தில் இராஜதந்திரத்துடன் செயற்பட முனைகிறதா என்ற கேள்வி எழுகிறது.

மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராகும் கனவு நொருங்கிப் போன பின்னரும், புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் தனது ஆதிக்கத்தைச் செலுத்த முடியாத நிலையில், புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பது அவருக்கு அவசியமாக இருந்தாலும், தனதும் தனது குடும்ப அரசியல் வாரிசுகளினதும் எதிர்காலம் கருதி, அவரால் அத்தகைய முயற்சி ஒன்றில் இன்னமும் முழுமையாக இறங்க முடியவில்லை.

அவ்வப்போது புதிய கட்சியை ஆரம்பிக்கப்போவது போன்ற சூழலை உருவாக்கி, சுதந்திரக் கட்சித் தலைமைக்கு நெருக்குவாரம் கொடுப்பதும், பின்னர், விலகிக் கொள்வதுமாகவே அவரது கடந்த ஒன்றரை ஆண்டுகால அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. தனிக்கட்சி ஆரம்பித்து, அது மக்களின் செல்வாக்கைப் பெறமுடியாது போய்விட்டால் என்ன செய்வது என்ற கவலை, இன்னொரு தேர்தலுக்கான சூழல் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு இல்லாதபோது, அத்தகைய விசப்பரீட்சையில் அவசரப்பட்டு இறங்க வேண்டியதில்லை என்ற யதார்த்தம் என்பனவும், அவரை இவ்வாறு செயற்பட வைக்கிறது. பிரதான கட்சி ஒன்றிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சியை ஆரம்பித்த பல பிரபலங்களால் கூட, ஆட்சியைப் பிடிக்க முடியாதுபோன வரலாறும் அவருக்கு பாதகமாகத் தான் தெரிகிறது. இதனால் தான், புதிய கட்சியை ஆரம்பிக்க மஹிந்த தயங்கி வருகிறார்.

ஆனாலும், புதிய கட்சி பற்றிய மஹிந்த ஆதரவாளர்களின் கூச்சல் இன்னமும் அடங்கியதாகத் தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்ஷ புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாக வதந்திகள் உச்சக்கட்டமாக உலாவிக் கொண்டிருந்த ஒரு சூழலில், தாம் ஒருபோதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் செல்லமாட்டேன் என்று கூறியிருந்தார். பகிரங்கமாக அவர் வெளியிட்ட அந்த அறிவிப்பு, தானாகச் செல்லமாட்டேன், வெளியே துரத்தினால், புதிய கட்சியைத் தொடங்குவேன் என்பதைக் குறிப்பதாக இருந்தது. இப்போது, மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக்கு அத்தகையதொரு நிலையை ஏற்படுத்தும் இலக்குடன் தான் செயற்பட்டு வருவதாகத் தோன்றுகிறது.

அதாவது, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டால், அதனைச் சாட்டாக வைத்து, புதிய கட்சியை ஆரம்பித்து விடலாம் என்று அவர் கணக்குப் போடுகிறார். ஹைட்பார்க் பேரணி, கிருலப்பனை மே தினப் பேரணி எல்லாமே அதற்கான அடித்தளம் தான்.  மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களும் வீரவசனங்கள் பேசினார்கள். தடைகளையும் விதித்தார்கள். மஹிந்த ராஜபக்ஷவும், அந்த தடைகளையும் எச்சரிக்கைகளையும் மீறி நடந்து காட்டினார். ஆனாலும், அரசியல் அரங்கில் எதிர்பார்க்கப்பட்டது போன்ற பாரிய மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. மே தினப் பேரணிக்குப் பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக உடைந்து போகும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு எதிர்பார்த்தே காய்களை நகர்த்துவதாகத் தெரிகிறது, ஆனாலும், இந்த விடயத்தில், சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, அவருக்கு வாய்ப்பைக் கொடுக்காமல் நழுவி வருகிறார்.

மைத்திரிபால சிறிசேன நினைத்திருந்தால், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்திருக்கலாம். எனினும், அவர் அத்தகையதொரு முடிவை எடுக்காமல் இழுத்தடித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு போக்குக் காட்டி வருகிறார். மஹிந்த ராஜபக்ஷ விரும்பியோ விரும்பாமலோ, மைத்திரிபால சிறிசேன போடும் வட்டத்துக்குள் நிற்கவேண்டிய நிலையே இன்னமும் நீடிக்கிறது. இந்தநிலையைப் பார்க்கும் போது, சில ஆண்டுகளுக்கு முன்னர், ஐ.தே.கவில் ரணில் விக்கிரமசிங்கவின் காய்நகர்த்தல்கள் தான் நினைவுக்கு வருகின்றன. 2005இல், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது.

அப்போது, ரணிலின் தலைமைத்துவத்துக்கு எதிராகப் பலர் போர்க்கொடி தூக்கினர். இன்னும் பலர் வெளியேறி, மஹிந்தவின் அரசாங்கத்தில் இணைந்தனர். ரணிலின் தலைமை பறிபோகப்போகிறது என்றெல்லாம் பரவலாக பேசப்பட்டது. ஆனாலும், ரணில் அசைந்து கொடுக்காமல் இன்னமும் கட்சித் தலைமைப் பதவியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர். சாதுரியமான நகர்வுகள் தான் அதற்குக் காரணம். சிலவற்றை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவது அதில் ஒன்று. அதனைத் தான், இப்போது மைத்திரிபால சிறிசேனவும் கையாள ஆரம்பித்திருக்கிறார் போலுள்ளது. என்னதான், மஹிந்த ராஜபக்ஷ போர்க்கொடி உயர்த்தி, பேரணிகளை நடத்தினாலும், அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம், கட்சியைப் பிளவுபடாமல் பாதுகாக்க முடியும் என்று மைத்திரிபால சிறிசேன நம்புவதாகத் தெரிகிறது.

அதைவிட, ஒரு கட்டத்துக்கு மேல் இத்தகைய நடவடிக்கைகள் வீண் என்று அவர்களாகவே ஒதுக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடும். அத்தகையதொரு நிலையை நோக்கித் தான், மஹிந்த ராஜபக்ஷ, இப்போது தள்ளிச் செல்லப்படுவதாகத் தெரிகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .