Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2017 ஜனவரி 26 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக மாணவர்கள், ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும், முழு உலகத்தையும் திரும்பிப்பார்க்க வைத்திருந்தன.
ஆனால், திங்கட்கிழமை காலையில் இடம்பெற்ற சம்பவங்கள், அந்தப் போராட்டத்தின் வெற்றியின் பின்புலத்தையே மீளவும் ஆராய வைத்திருக்கின்றன என்பதுதான் கவலைக்குரியது.
அதிகார வர்க்கங்களும் சட்டத்தை அமுல்படுத்தும் பொலிஸாரும் ஏனைய பிரிவினரும், தங்களுடைய நலன்களை முன்வைத்தே, அனைத்து விடயங்களையும் மேற்கொள்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை, அச்சம்பவங்கள் காட்டிச் சென்றிருக்கின்றன.
தமிழ்நாட்டின் மெரினா கடற்கரையிலேயே பிரதான போராட்டம் இடம்பெற்றுவந்தது. சல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டுமெனக் கோரிய அந்தப் போராட்டக்காரர்கள், இரவிரவாக அங்கு தங்கியிருந்தனர்.
அந்தப் போராட்டத்தின் முதல் 7 நாட்களும், மிகவும் அமைதியாகவே கழிந்தன. உண்மையைச் சொன்னப் போனால், அங்கு காணப்பட்ட போராட்டக்காரர்கள், தங்களுடைய நேரத்தையும் தங்களுடைய வழக்கமான பணிகளையும் கைவிட்டுவிட்டு அங்கு நின்றதைத் தவிர, ஏனைய அனைத்து வசதிகளையும் அவர்கள் பெற்றிருந்தார்கள்.
இவ்வாறு சுமுகமான நிலையில் அந்தப் போராட்டம் இடம்பெறுவதற்கு, பொலிஸார் வழங்கிய ஒத்துழைப்பு முக்கியமானது. தமிழ்நாடு மாநிலப் பொலிஸார் என்ற நிலையில், போராட்டக்காரர்களின் உணர்வுகளைப் புரிந்தவர்கள் போல், அவர்களுடன் இணைந்து செயற்பட்டார்கள். இந்தப் போராட்டம், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடக வலையமைப்புகள் மூலமாகவே ஒன்றுசேர்க்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாருக்கு நன்றி தெரிவிக்கும், பொலிஸாரின் ஒத்துழைப்பைப் பாராட்டும் வகையில், பல பகிர்வுகள் பதியப்பட்டன.
ஆனால், கடந்த திங்கட்கிழமையன்று, ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகலுமாறு கோரிய பொலிஸார், அதற்கு மறுப்புத் தெரிவித்தவர்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டார்கள். அதுவரை நேரமும் நண்பர்கள் போல் இருந்தவர்கள், திடீரென ஒடுக்குமுறைக் குணத்தை
இதுபோதாதென்று, பொலிஸ் நிலையமொன்றுக்கு யாரோ தீவைத்துவிட்டார்கள். சில வாகனங்களும் எரிந்துகொண்டிருந்தன.
இவற்றைப் பயன்படுத்திய பொலிஸார், அந்தத் தீயிலிருந்து இன்னும் சில வாகனங்களுக்குத் தீமூட்டும் காட்சிகள் வெளியாகின. குடிசையொன்றுக்குத் தீ வைக்கும் காட்சியும் வெளியானது.
அதேபோல், வீதியில் கிடந்த மோட்டார் சைக்கிளொன்றுக்கு, இரண்டு பொலிஸார் சேர்ந்து, தடியால் அடித்துக் கொண்டிருந்தனர். இந்தக் காட்சிகள் அனைத்தும், திடீரென “எங்களது தோழமைமிக்க பொலிஸார்” என்ற நிலையிலிருந்து “அடக்குமுறைப் பொலிஸார்” என்ற எண்ணத்தை உருவாக்கின. 7 நாட்களாக நட்பாக இருந்தவர்கள், சில மணித்தியாலங்களில் எவ்வாறு கொடூரமானவர்களாக மாறினர்?
இதில், இளைஞர்களின் கோரிக்கைகள் நியாயமானவையா, இல்லையா என்பதிலும் தற்காலிகமான தீர்வு என்று அவர்கள் சொல்கின்ற தீர்வு வழங்கப்பட்டதும் அவர்கள் கலைந்துசென்றிருக்க வேண்டுமா, இல்லையா என்பதிலும் ஒருவரது நிலைப்பாடு எவ்வாறிருந்தாலும், அமைதியான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தவறானது என்ற நிலைப்பாட்டை, அனைவரும் கொண்டிருக்க வேண்டும்.
ஏனென்றால், “நீங்கள் சொல்லும் கருத்தை நான் மறுக்கிறேன். ஆனால் அதைச் சொல்வதற்கான உங்கள் உரிமைக்கு, எனது மரணம் வரை நான் போராடுவேன்” என்பது தானே உண்மையான ஜனநாயகம்?
பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு, “சல்லிக்கட்டு வேண்டும்” என்பதைப் பிரதானமாகக் கொண்டிருந்த அந்தப் போராட்டம், தமிழ்நாடு மாநில அரசாங்கத்துக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் எதிராகத் திரும்பியது தான் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்த இளைஞர்களிலிருந்து, யாராவது தலைவன் உருவாகிவிடக்கூடாது என்பதற்காகவே, அதில் பிளவுகள் ஏற்படுத்தப்பட முயலப்பட்டன. அவற்றையெல்லாம் தாண்டி, ஒற்றுமையுடன் காணப்பட்ட மாணவர்களே, இவ்வாறு தாக்கப்பட்டனர்.
தமிழ்நாடு விவகாரம் இவ்வாறிருக்க, ஐக்கிய அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கின்ற டொனால்ட் ட்ரம்ப்பினதும் அவரது அமைச்சரவையினதும் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது பதவியேற்புக்கு மறுநாளான சனிக்கிழமையன்று, மாபெரும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பெண்கள், சிறுபான்மையினர் மீதான ட்ரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட “பெண்களின் பேரணி” என்றழைக்கப்பட்ட இந்தப் பேரணிகளின் பிரதான பேரணி, வொஷிங்டன் டி.சியில் நடைபெற்றது. ஐ.அமெரிக்கா முழுவதிலும் உலகத்தின் ஏனைய பகுதிகளிலும் என, இதன் சகோதரப் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
ஜனாதிபதி ட்ரம்ப்பின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டவர்களை விட 3 மடங்கு பேர், பிரதான பேரணியில் கலந்துகொண்டனர். ஆனால், மிகவும் அமைதியாக நடைபெற்ற இந்தப் பேரணியில், ஒரு கைது கூட இடம்பெற்றிருக்கவில்லை என்பது, “7 நாட்களாக இடம்பெறும் மெரினா கடற்கரைப் போராட்டத்தில் பொலிஸார் மிகவும் கண்ணியமாக நடக்கின்றனர்” பாணியில், பெருமையாகக் கூறப்பட்டது.
ஆனாலும் கூட, இந்தப் பேரணியை ஏற்பாடு செய்த அமைப்பு, வெள்ளையினப் பெண்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு. இதில் அனைத்து இனப்பெண்களும் பங்குபற்றியிருந்தாலும், அந்தப் பேரணிகளுக்குக் கறுப்பினத்தவர்களின் தனி அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை. பொதுவான முரண்பாடுகள் பற்றிக் குரலெழுப்பப்பட்டாலும், பொலிஸ் அடக்குமுறை என்பது, தனித்த கோசமாகக் காணப்பட்டிருக்கவில்லை.
ஆனால், கறுப்பினத்தவர்கள் மீதான பொலிஸ் அடக்குமுறைகளுக்கு எதிராக “கறுப்பின உயிர்கள் பெறுமதியானவை” என்ற அமைப்பினால் சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்காக, கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
இளைய வயதுடைய பெண்ணொருவரை, கலகமடக்கும் உடை அணிந்த இரண்டு பொலிஸார் சூழ்ந்து நிற்பதையும் இன்னும் பல பொலிஸார் பின்னால் தயாராக இருப்பதையும் காட்டும் புகைப்படம், அதிகளவில் பேசப்பட்டது.
அதேபோல் தமிழ்நாட்டில் களேபரங்களும் வொஷிங்டன் டி.சியில் காட்டப்பட்ட கண்ணியத்துக்கும் கறுப்பின மக்களின் ஆர்ப்பாட்டங்களில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்படுவதும், இன்னொரு விடயத்தைச் சொல்லிச் செல்கின்றன. தாங்கள் வகுக்கும் எல்லைக்குள் நின்று, அதற்குள்ளாகவே குரலெழுப்பும் ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் எதிர்ப்புகளையுமே, அதிகார வர்க்கங்கள் அனுமதிக்கின்றன.
தாங்கள் வகுத்த எல்லை மீறப்படுகிறது என்று எப்போது உணர்கிறார்களோ, அப்போதே ஏதாவது வழியில் அந்த எதிர்ப்புகளை முடிவுக்குக் கொண்டுவருகின்றன.
மாபெரும் சிந்தனையாளரும் நகைச்சுவையாளருமான ஜோர்ஜ் கார்லின், என்னவாறான குடிமக்களை அரசாங்கங்கள் விரும்புகின்றன எனச் சொல்வார். “மிகவும் நன்றாக அறிந்த, சிறப்பாகக் கல்விகற்ற, சிறந்த சிந்தனாசக்தி கொண்ட மக்கள், அரசாங்கங்களுக்குத் தேவையில்லை.
அது, அவர்களின் நலன்களுக்கு எதிரானது. அவர்களுக்குப் பணிவான பணியாளர்கள் தான் வேண்டும்: இயந்திரங்களை இயக்குவதற்கும் காகிதாதி வேலைகளைச் செய்வதற்கும் திறமையுள்ளவர்கள். அத்தோடு அந்தப் பணியை அப்படியே ஏற்குமளவுக்கு முட்டாள்கள் தான் தேவை” என்று அவர் சொல்வார்.
எமக்குள்ள வாய்ப்புகளை, இரண்டாக வகுக்க முடியும். ஒன்று உரிமைகள்; மற்றையவை சலுகைகள். உ ரிமைகள் என்பன, எப்போதும் எமக்குரியவை. அவற்றை எம்மிடமிருந்து பறிக்க முடியாது.
ஆனால் சலுகைகள், எமக்குத் தற்காலிகமாக வழங்கப்படுபவை; எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்பட முடியும். தற்போதுள்ள நிலைமையை வைத்துப் பார்த்தால், “ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம்”, “கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்” போன்றனவெல்லாம், உரிமைகளாகவன்றி, சலுகைகளாகவே அரசாங்கங்களால் கணிக்கப்படுகின்றன என்பது தெளிவாகின்றது. அவர்கள் விரும்பும் போது தருவதாகவும் விரும்பும் போது பறிப்பதாகவும் இருந்தால், அவை சலுகைகளே. இந்த நிலைமையை, காலங்காலமாக ஆண்டுவந்தவர்கள், சாதாரணமானதொன்றாக மாற்றியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நடந்த களேபரம், இன்னொரு விடயத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. தமிழ்நாட்டைத் தனியான ஒரு நாடாக மாற்ற வேண்டுமென்ற போராட்டம், முன்பொருகாலத்தில் இடம்பெற்றது.
இப்போதைக்கு அது, மிக மிகச் சிறுபான்மையினரின் கருத்தாகவே உள்ளது. ஆனால், மெரினா கடற்கரையில் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை, தமிழ்நாட்டைச் சேர்ந்த பொலிஸார் நடத்திய விதம், தனித்தமிழ்நாடு உருவானாலும் கூட, அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்காது என்பதைச் சொல்லிச் சென்றிருக்கிறது.
அதிகார வர்க்கமும் அதனால் ஏவப்படுகின்ற சட்ட அமுலாக்கல் பிரிவினரும், என்ன இனத்தவராகவோ அல்லது மதத்தவராகவோ இருந்தாலும் கூட, மக்கள் என்று வரும் போது, ஒடுக்குவதற்கே முயல்வர் என்பதை மறந்துவிடமுடியாது.
எனவே தான், இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைக்கும் அங்குள்ள பொலிஸாரின் அடாவடித்தனங்களுக்கும் முடிவாக, மாகாணசபைக்குப் பொலிஸ் அதிகாரம் கிடைத்ததும் அனைத்தும் சரியாகிவிடும் என்று எதிர்பார்ப்பதும் தவறானது என்பதை, இவ்விடயங்கள் காட்டிநிற்கின்றன.
உதாரணமாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரைச் சுட்ட பொலிஸாரில் அனேகமானோர், தமிழர்கள் என்று அறிவிக்கப்படுகிறது.
அவ்வாறாயின் ஏன் சுட்டார்கள் என்ற கேள்வி எழுகின்றதல்லவா? பெரும்பான்மையினப் பொலிஸாரும் படையினரும் தான் பிரச்சினை என்றால், எதற்காகத் தனது இனத்தைச் சேர்ந்தவரையே ஒருவர் சுட வேண்டும்? அதற்கான பதில் தான், அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறை.
மக்களை ஒடுக்கி, அவர்களைத் தங்களின் ஏவல்களுக்குப் பணியும் ஒரு பிரிவினராகவே மாற்றுவதே, அதிகாரத்தில் இருப்போரின் எதிர்பார்ப்பு.
எப்போதெல்லாம் மக்கள் சிந்திக்க ஆரம்பிக்கிறார்களோ, அப்போதெல்லாம் அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும், தங்களுடைய பலத்தை இழக்க ஆரம்பிக்கிறார்கள்.
தங்களுடைய பலத்தை இழந்துவிட்டால், பொதுமக்களின் கேள்விகள், தங்களை நோக்கி வருமென்பதை அவர்கள் அறிவார்கள். அதனால் தான், எப்போதெல்லாம் அவர்கள் வழங்கும் எல்லையை விட்டு வெளியேறி, கேள்விகளைக் கேட்க ஆரம்பிக்கிறோமோ, அப்போது அவர்கள் தங்களது சுயரூபத்தை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள்.
இதற்கான ஒரே தீர்வு, பொதுமக்களின் நலன்மீது அக்கறை கொண்ட அனைவரும், ஒன்றாக இணைந்து குரல்கொடுப்பது தான்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
30 minute ago
46 minute ago