Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 மே 17 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
முகம்மது தம்பி மரைக்கார்
அரசியல் அரங்கில், காலத்துக்குக் காலம் ஏதாவதொரு பேசுபொருள் உருவாகிக் கொண்டேயிருக்கும். அது குறித்துப் பேசாமலிருக்க முடியாது. பேசுபொருளின் பெறுமானத்துக்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் இருப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அல்லது காட்டிக் கொள்வதற்காக, தமது பங்குக்கு எதையாவது பேசியே ஆகவேண்டி இருக்கிறது. பேசாமலிருப்பதை விடவும், பேசுவதில்தான் அரசியலில் இலாபம் அதிகம். ஆனாலும், பேசக் கூடாதவற்றைப் பேசக் கூடாத நேரங்களில் பேசி, அரசியலில் நஷ்டமடைந்தவர்களும் உள்ளனர். அது வேறு கதையாகும்.
அரசியலில் இப்போதைய பேசுபொருள் 'புதிய அரசியல் யாப்பு'ப் பற்றியதாகும். தற்போது நடைமுறையிலிருக்கும் அரசியல் யாப்பினைத் திருத்தி, புதிய அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்குவதற்கு ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது.
நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பில் காணப்படும் குறைபாடுகள்தான், நாட்டில் நிலவும் இன ரீதியான பிரச்சினைகளுக்கு மூல காரணம் என்பதை, கிட்டத்தட்ட எல்லாத் தரப்புக்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. எனவே, இப்போதுள்ள அரசியல் யாப்பில் காணப்படும் குறைகளைத் திருத்தி, புதிய அரசியல் யாப்பு ஒன்றினை ஏற்படுத்துவதன் மூலமாக, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை உருவாக்க முடியும் என்று ஆட்சியாளர்கள் உட்பட பலரும் எதிர்பார்க்கின்றனர்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை உருவாக்குதல் என்பது கடினமானதொரு பணியாகும். இலங்கையைப் பொறுத்தவரை, இனங்களுக்கிடையில் அரசியல் அதிகாரங்களை நியாயமாகப் பங்கிடுவதன் ஊடாகவே, இனப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காண முடியும் என்று பெரும்பான்மையானோர் நம்புகின்றனர். இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் இல்லாமல் போகும் போது, நல்லிணக்கம் என்பது தானாக உருவாகி விடும்.
ஆயினும், இதைச் செய்வதென்பது லேசுப்பட்ட காரியமல்ல. கல்லில் நாருரிப்பதை விடவும், இது, கடினமான காரியமாகும். விட்டுக் கொடுப்புகளும், அர்ப்பணிப்புகளுமின்றி புதிய அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்குகின்ற காரியத்தினை வெற்றிகரமாகச் சாதிக்க முடியாது.
புதிய அரசியல் யாப்பொன்றினை உருவாக்குவதற்கு முன்பாக, அதில் உள்ளடக்கப்பட வேண்டிய அம்சங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளும் சமூகப் பிரதிநிதிகளும் அரசியல் சபைகளும், பொதுமக்களும் தமது யோசனைகளை முன்வைத்து வருகின்றமையினைக் காணக்கூடியதாக உள்ளது.
இதில் கவலையான பகிடி என்னவென்றால், இனப் பிரச்சினைக்குத் தீர்வாக - புதிய அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்குதல் பற்றிய ஆரம்ப கட்ட முயற்சிகளின் போதே, இனங்களுக்கிடையில் பாரிய கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் தோன்றத் தொடங்கியிருக்கின்றன.
இனப் பிரச்சினைக்கான தீர்வு எனும் போது, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கான அரசியல் தீர்வுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில், புதிய அரசியல் யாப்பின் மூலம், வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதில், தமிழர் தரப்பு விடாப்பிடியாக உள்ளது. இணைந்த வடக்கு - கிழக்கில்தான் தமிழர்களுக்கான தீர்வு குறித்துப் பேச முடியும் என்பதில் தமிழ் கட்சிகள் உறுதியாக உள்ளன.
புதிய அரசியல் யாப்பு தொடர்;பாக, அண்மையில் வட மாகாணசபை முன்வைத்த யோசனையிலும் இவ்விடயத்தினை வலியுறுத்தியுள்ளது. இலங்கை, இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் வாழும் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும், சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஏனைய மாகாணங்கள் இணைக்கப்பட்டு இன்னொரு மாநிலமாகவும் உருவாக்கப்பட வேண்டும் என்று, வட மாகாணசபையின் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழர்களின் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான ஒரு தன்னாட்சிப் பிராந்திய அலகும், சிங்களவர்களின் மாநிலத்தில் மலையகத் தமிழர்களுக்கான தன்னாட்சிப் பிராந்திய அலகும் உருவாக்கப்படுதல் வேண்டுமென்றும் வடக்கு மாகாணசபை முன்மொழிந்துள்ளது.
வடக்கு மாகாணசபையின் இந்த முன்மொழிவானது, முஸ்லிம் சமூகத்துக்குள் பாரிய எதிர்க் கருத்துக்களை உருவாக்கியுள்ளது. 'கிழக்கை வடக்குடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுவதற்கோ, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்று பிரகடனம் செய்வதற்கோ வடபுலத் தமிழர்களுக்கும் வட மாகாணசபைக்கும் எந்தவிதமான தார்மிக உரிமையும் கிடையாது' என்று, கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது என்கிற தீர்மானமொன்றினை நிறைவேற்றியுள்ளது. அந்தக் கட்சியின் பேராளர் மாநாடு அண்மையில் நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. சரியாகச் சொன்னால், வடக்கு - கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்பது, அமைச்சர் அதாவுல்லாவின் மிக நீண்டகாலக் கோசமாகும். அதை தனது கட்சி மாநாட்டில், அவர் மீளவும் வலியுறுத்தியிருக்கின்றார்.
இலங்கை புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் 2012 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகையில் சிங்களவர்கள் 74.9 வீதமாக உள்ளனர். தமிழர்கள் 11.14 வீதமாகவும், முஸ்லிம்கள் 9.29 வீதமாகவும் உள்ளனர். மலையகத் தமிழர்கள் 4.12 வீதமாகக் காணப்படுகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில், வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். வடக்கு மாகாணமானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா என 05 மாவட்டங்களைக் கொண்டது. இந்த ஐந்து மாவட்டங்களிலும் கூட தமிழர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
ஆனால், கிழக்கு மாகாணத்தில் நிலைமை வித்தியாசமானது. கிழக்கு மாகாணமானது அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய 03 மாவட்டங்களை உள்ளடக்கியது. இவற்றில் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 43 எனும் வீதத்திலும், திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 42 எனும் வீதத்திலும் முஸ்லிம்கள் பெரும்பான்னையாக வாழ்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம்தான் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில், கிழக்கு மாகாணத்தினை வடக்குடன் இணைக்க வேண்டும் என்கிற தமிழர் தரப்பின் கோரிக்கைக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களும், சிங்களவர்களும் நிச்சயமாக ஆதரவளிக்கப் போவதில்லை. கிழக்கில் 60 வீதத்துக்கும் அதிகமாக வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், அந்த மாகாணத்தினை வடக்குடன் இணைப்பதென்பது சரியான செயற்பாடாகவும் மாட்டாது.
ஒரு பிராந்தியத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் சம்மதம் பெறப்படாமல், அந்த மக்கள் வாழும் பகுதியை, வேறொரு பிராந்தியத்துடன் இணைப்பதென்பது நியாயமாகவும் இருக்க முடியாது.
அப்படியாயின், வடக்குடன் கிழக்கு மாகாணத்தை இணைக்க வேண்டுமாயின்,
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டது போல், கிழக்கு மாகாண மக்களிடையே பொது அபிப்பிராய வாக்கெடுப்பொன்று நடத்தும் நிலையொன்றுக்குச் செல்ல முடியும். அவ்வாறானதொரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராக முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாக்களிக்கும் நிலை ஏற்படும்.
தமிழர்களுடைய அரசியல் ஆதிக்கத்தின் கீழ் தாம் கொண்டு வரப்படுவதை, முஸ்லிம்கள், அச்சத்துடன் பார்க்கின்றனர். கடந்த மற்றும் நிகழ்காலங்களின் கசப்புணர்வு தரும் சம்பவங்கள் இதற்குக் காரணமாக அமைகின்றன. குறிப்பாக, வடக்கு - கிழக்கு மாகாணம் இணைந்திருந்த காலப்பகுதியில், மிக மோசமான அரசியல் மற்றும் நிருவாக நெருக்கடிகளை தமிழர் தரப்பிடமிருந்து, கிழக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மட்டுமன்றி, புலிகளின் ஆதிக்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய காலப்பகுதியிலும் அப்பகுதி முஸ்லிம்கள் மிக மோசமான கஷ்டங்களை அனுபவித்திருந்தனர். இதனால், தமிழர் தரப்பின் அரசியல் மற்றும் நிருவாகத்தின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கலாயினர்.
இவ்வாறு ஏற்பட்ட கசப்புணர்வுகளையும், அவநம்பிக்கைகளையும் இல்லாமல் செய்வதற்குரிய காத்திரமான நடவடிக்கைகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பது இன்னுமொரு கசப்பான உண்மையாகும். வெறுமனே, தமிழ் - முஸ்லிம் உறவினை பலப்படுத்துவதற்கான முயற்சிகள் என்று, சில அரசியல் நடவடிக்கைகள் அவ்வப்போது முன்;னெடுக்கப்பட்ட போதும், அவற்றினால் உருப்படியாய் எதுவும் ஆகிவிடவில்லை.
தமிழ் - முஸ்லிம் தரப்புகளிடையே ஏற்பட்டுள்ள கசப்புணர்வுகள் அப்படியே இருக்கத்தக்கதாக, வடக்கு மாகாணசபையின் முன்மொழிவில் கூறப்பட்டுள்ளதுபோல், தமிழ் மாநிலமொன்றுக்குள் முஸ்லிம் பிராந்தியம் ஒன்று அமைவதற்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் சம்மதிக்கப் போவதில்லை.
இதற்கான எதிர்ப்பு இப்போதே தோன்றி விட்டது. 'முஸ்லிம் தன்னாட்சிப் பிராந்திய அலகு என்பது நடைமுறைச் சாத்தியமற்றதும், இன முரண்பாட்டைக் கூர்மையடையச் செய்வதற்குமான ஒரு யோசனையாகும்' என்று கூறி, முஸ்லிம்களுக்கான வட மாகாணசபையின் முன்மொழிவினை, கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் தட்டிக்கழித்துள்ளது.
இதேபோன்று, வடக்கும் கிழக்கும் இணைக்கப்படும் சூழ்நிலைகள் ஏற்படுமாயின், அங்கு முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் அமையும் வகையில் எல்லைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று, அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் பேராளர் மாநாட்டுத் தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது, தமிழர்களுடன் தொடர்புபடாத ஓர் ஆட்சியலகுதான் முஸ்லிம்களுக்கு வேண்டும் என்று, மேற்படி தீர்மானம் கோரி நிற்கிறது.
எவ்வாறாயினும், தமிழர் தரப்பின் யோசனைகளுக்கு தமது விமர்சனைகளையும் எதிர்ப்பினையும் முன்வைக்கும் முஸ்லிம் தரப்பினர், புதிய அரசியல் யாப்புத் தொடர்பில் தமது முழுமையான முன்மொழிவுகளை ஓர் உத்தியோகபூர்வ ஆவணமாக இதுவரை வெளியிடவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
குறிப்பாக, முஸ்லிம்களின் மிக முக்கிய அரசியல் கட்சியாக விளங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், இதுவரை புதிய அரசியல் யாப்புக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கவில்லை. அரசியல் தீர்வு ஒன்றுக்கான யோசனைகள் கோரப்படும் போது, முன்வைப்பதற்கான திட்டங்கள் தம்மிடம் உள்ளதாக, அந்தக் கட்சி நீண்ட காலமாகக் கூறி வந்தது. ஆயினும், அவ்வாறான எதுவித முன்மொழிவுகளும் அந்தக் கட்சியிடம் இல்லை என்பதே உண்மை நிலைவரமாகும்.
இவ்வாறானதொரு நிலையில், புதிய அரசியல் யாப்பு தொடர்பான கருத்தரங்குகளை முஸ்லிம் காங்கிரஸ் மிக அண்மைக் காலமாக நடத்தி வருகின்றமையைக் காண முடிகிறது. இதில், அந்தக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்குபற்றி வருகின்றனர்.
ஆனால், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது, புதிய அரசியல் யாப்புத் தொடர்பில் இதைக் கூடச் செய்யவில்லை. புதிய அரசியல் யாப்புத் தொடர்பில், ரிஷாட் தரப்பு அலட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை.
தேவையற்ற அல்லது பெறுமானம் இல்லாத விடயங்கள் தொடர்பில் முட்டி மோதி, போட்டி போட்டுக் கொள்ளும் முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைமைகளும், நாட்டு மக்களின் அரசியல் விதியைத் தீர்மானிக்கப் போகும், புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் மிகவும் மந்தமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், தமிழர் தரப்புக்கள் இந்த விவகாரத்தில் மிகவும் கூர்மைத் தன்மையுடன் இயங்குகின்றன. இனப் பிரச்சினைக்குரிய தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கான களமாக, புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் இருக்கப் போவதை மிகக் கவனமாகப் புரிந்து கொண்டு, அதற்கேற்றால் போல் தமது காய்களை தமிழர் தரப்புக்கள் நகர்த்தி வருகின்றன.
இவை ஒருபுறமிருக்க, புதிய அரசியல் யாப்பினூடாக தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்புக்கள் கோரும் அல்லது முன்மொழியும் தீர்வுகளை, சிங்களத் தலைமைகள் ஒரேயடியாக தங்கத் தட்டில் வைத்துத் தந்து விடப் போவதில்லை என்கின்ற உதைக்கும் உண்மையும் ஒருபுறமுள்ளது.
புதிய அரசியல் யாப்புக்கான யோசனைகளை, தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்புக்கள் முன்வைக்கும் போது, இரண்டு சமூகங்களுக்குமிடையில் கருத்து வேறுபாடுகளும், முரண்பாடுகளும் சூடு பிடிக்கும் நிலை உருவாகலாம். தமிழர் தரப்பு யோசனைகளுக்கு எதிரான கருத்துக்களை, முஸ்லிம்கள் முன்வைக்கும் போது, தமிழர்கள் - முஸ்லிம்களை துரோகிகளாகச் சித்தரிக்கத் தொடங்குவர். அதேபோன்று, முஸ்லிம்களின் முன்மொழிவுகளைத் தட்டிக்கழிக்கும் வகையிலான எதிர்யோசனைகளை தமிழர் தரப்பு முன்வைப்பார்களாயின், முஸ்லிம்களிடத்தில் தமிழர்களுக்கு எதிரான பகைமை மேலும் வலுவடையத் தொடங்கும். இந்த நிலையானது, சிங்களத் தரப்புக்கு இனிப்பானதாகும்.
இனப்;பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்குடன் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் என்கின்றனர். ஆனால். அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளின் போதே, இனங்களுக்கிடையில் பாரிய முரண்பாடுகள் ஏற்படும் என்பது எவ்வளவு பெரிய முரண்நகை.
'விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதில்லை' என்கிற வாக்கியத்தினால், இந்தக் கட்டுரை, தன்னை நிறைவு செய்து கொள்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago