Thipaan / 2016 நவம்பர் 11 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகள் நாட்டில் சிறியதொரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகைக்காக முஸ்லிம்களின் உரிமை மீது அரசாங்கம் கைவைக்கப் போகின்றதா என்ற முன்னெச்சரிக்கை உணர்வு, முஸ்லிம்களின் மத உணர்வை தூசுதட்டியிருக்கின்றது. ஓர் இனம் சார்பான சட்டத்தைத் திருத்துகின்ற செயன்முறை, இன்று இரண்டு இனங்களுக்கு இடையிலான முரணாக, அரசாங்கத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நம்பிக்கை இழத்தலின் ஆரம்பமாக அமையும் அளவுக்கு சிக்கலான ஒரு கட்டத்துக்கு வந்திருக்கின்றது.
1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் தனியார் சட்டமே இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்றது. எவ்வாறாயினும் கால ஓட்டத்தில் இந்தச் சட்டத்தில் பல மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை முஸ்லிம்களுக்கும் அவர்களது சமய அமைப்புக்களுக்கும் காலம் உணர்த்தியிருந்தாலும் கூட, கடந்த அரை நூற்றாண்டு காலமாக இதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படவில்லை.இச்சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான முஸ்தீபுகள் பல தடவை மேற்கொள்ளப்பட்டாலும், அம்முயற்சிகள் செயலுருப் பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். உண்மையில்,பல்லினச் சமூகங்கள் வாழும் நாட்டில் கால மாற்றத்துக்குப் பொருத்தமாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் எவ்வாறான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை முஸ்லிம்களே தீர்மானித்து, அதை முன்னமே திருத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்தச் செயற்பாட்டுத் தளத்தில் ஏற்பட்ட இழுபறிநிலை, இன்று இத்தனை சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
இலங்கையில் தற்போது அமுலிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டம் சுதந்திரத்துக்குப் பின்னர் இயற்றப்பட்டது என்றாலும், முஸ்லிம்களுக்குப் பிரத்தியேகமான ஒரு சட்ட ஏற்பாடு, பன்னெடுங் காலமாக இருந்து வந்துள்ளதை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இலங்கையைச் சிங்கள மன்னர் ஆண்ட காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், மன்னர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தனர். சவூதி அரேபியாவுக்குத் தமது மதக் கடமைக்காகவும் வியாபார நோக்கங்களுக்காகவும் சென்று வந்த முஸ்லிம்கள், அங்கு கற்றுக் கொண்ட விடயங்களை ஏதோ ஓர் அடிப்படையில் இலங்கையில் அறிமுகம் செய்தனர். சோனகர்களுக்கான பிரத்தியேக ஒழுங்கு விதிகளை உள்ளடக்கிய ஒரு தொகுப்பை அப்துர் ரஹ்மான் அபுஹாசிம் என்பவர் தயாரித்ததாகவும் ஒரு தகவல் கூறுகின்றது.
பின்னர், டச்சு ஆளுநர் வில்லியம் பெலக் என்பவர், முஸ்லிம்களுக்கெனப் பிரத்தியேக சட்டத் தொகுப்பை இந்தோனேசிய மாதிரியைப் பிரதிசெய்து உருவாக்கியதாகவும், இதனையே ஆங்கிலேயரும் நடைமுறைப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது. அதன்பிறகு, முழுமைத்துவமான முஸ்லிம் தனியார் சட்டம் ஒன்றை உருவாக்குவதற்காக 1920 இற்குப் பிறகு, பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுப் பரிந்துரைகள் பெறப்பட்டன. நீண்டகால ஆய்வின் பின்னரே முஸ்லிம் ஆள்சார் - தனியார் சட்டமூலம் 1951 இல் சட்டமாகியது. முஸ்லிம் தனியார் சட்டம் மட்டுமன்றி, அதுபோல வேறு பல தனியார் சட்டங்களும் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
ஏதாவது ஓர் அடிப்படையில், பிரத்தியேக அடையாளத்தைக் கொண்டவர்களாக ஒரு நாட்டில் வாழ்கின்ற நபர்கள், குடும்பங்கள் மற்றும் இன, மதக் குழுமங்களின் தனித்துவத்தைப் பேணும் விதத்தில், விசேடமாக உருவாக்கப்பட்ட சட்ட ஏற்பாடுகளையே ஆள்சார் - தனியார் சட்டம் என்று துறைசார்ந்தவர்கள் வரையறை செய்கின்றனர். இதன்படி, கண்டிப் பகுதியில் வாழும் சிங்களவர்களுக்கான ‘கண்டியச் சட்டம்’,யாழ்ப்பாண தமிழர்களுக்கான ‘தேசவழமைச் சட்டம்’ மற்றும் ‘முஸ்லிம் தனியார் சட்டம்’ என்பன அமுல்படுத்தப்பட்டன. இதில், முதல் இரு சட்டங்களும் இனம் அல்லது பிரதேசம் சார்ந்த தனித்துவத்தைக் கொண்டதாக இருந்தபோதும், மதம் சார்ந்த ஒரேயொரு தனியார் சட்டமாக முஸ்லிம் தனியார் சட்டமே உள்ளது.
கால ஓட்டத்தில் ‘கண்டியச் சட்டம்’ முற்றாக வழக்கிழந்து போய்விட்டது. தேசவழமைச் சட்டமும் பெருமளவுக்கு நடைமுறையில் இல்லை. ஆனால், முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ளது. காதி நீதிபதிகளே இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். முஸ்லிம்கள் தொடர்பான விவகாரங்கள் காதி நீதிமன்றத்துக்கு செல்லுமிடத்து, இந்தச் சட்டத்தின் பிரகாரமே விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றது. இந்தப் பொறிமுறையின் ஊடாக அவ்விவகாரத்தைக் கையாள முடியாவிட்டால், இலங்கையின் பொதுவான சட்டத்தின் நியாயாதிக்கத்துக்கு பாரப்படுத்தும் நடைமுறையும் இதில் உள்ளது.
முஸ்லிம்களின் அன்றாட வாழ்வியல் நியதிகளையும் அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் மேற்படி முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளடக்கி இருக்கின்றதெனலாம். இதில் பிரதான இடம்வகிப்பது விவாகம் மற்றும் விவாகரத்து தொடர்பான விதந்துரைகளாகும். இதற்கு மேலதிகமாக தாபரிப்பு, தத்தெடுத்தல், மகரும் கைக்கூலியும், மத்தஹ், திருமண வயதெல்லை, பலதார மணம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை முஸ்லிம் தனியார் சட்டம் கொண்டிருக்கின்றது.
இந்தத் தனியார் சட்டம் இஸ்லாமிய அடிப்படையிலானது என்றபோதும், காலப்பொருத்தமற்ற உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளமை கடந்த பல வருடங்களாகப் பல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது. இதற்கு மேலதிகமாகச் சில பெண்ணிய அமைப்புக்களும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றன. முஸ்லிம்களும் அவர்கள் சார்ந்த அமைப்புகளும் இதில் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றார்களாயினும் அவற்றைத் திருத்தி, அமுலாக்கம் செய்வதிலேயே வருடக் கணக்காக இழுபறி நிலை காணப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டு நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொறகொட, முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்துவதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவை நியமித்தார். இக்குழு பல தடவைகள் சந்தித்துப் பல விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுத்திருந்த போதிலும், இறுதிப் பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட அமைச்சுக்குச் சமர்ப்பிக்கப்பட்டும் குறித்த சட்டம் திருத்தப்பட்டிருக்கவில்லை. மிலிந்தவுக்குப் பிறகு ரவூப் ஹக்கீம் இதற்குப் பொறுப்பான அமைச்சராகப் பதவி வகித்தார். ஆனால், திருத்தம் கொண்டுவரப்படவில்லை. ஒய்வுபெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் செயற்பாட்டில் நடைமுறைச் சிக்கல்கள், தாமதங்கள் ஏற்பட்டமையும், இக்குழு இம்மாத இறுதியிலேயே இறுதிச் சிபாரிசுகளை சமர்ப்பிக்கவுள்ளமையும் தெளிவான விடயங்களாகும். எவ்வாறிருப்பினும், திருத்த வேண்டுமெனப் பொது இணக்கப்பாடு காணப்பட்ட விடயங்களைத் திருத்துவதில் ஏற்பட்ட காலதாமதங்களே, இன்று சந்தியில் பேசப்படும் விடயமாக முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டு, இடைநிறுத்தப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் கடந்த பல வருடங்களாகப் பகீரத பிரயத்தனங்களை எடுத்து வருகின்றது. இந்நிலையில், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
இதன் பின்னர் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கருத்து வெளியிட்ட சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க,“ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்ளும் நிலைக்கு நாம் வந்திருக்கின்றோம். எனவே சர்வதேச சாசனங்களுக்குப் பொருத்தமான விதத்தில் சட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. சர்வதேச சாசனங்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளமையால், அவற்றுடன் முரண்படும் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று கூறினார். அமைச்சரவை உப குழுவின் நியமனம், அமைச்சர் சாகலவின் அறிவிப்பு ஆகிய இரண்டையும் தொடர்புபடுத்தி நோக்கும்போது, ஐரோப்பிய சலுகையை பெறுவதற்காகவே முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்தும் பணிகளை அரசாங்கம் அவசரப்படுத்தி இருக்கின்றது என்ற முடிவுக்கே முஸ்லிம்கள் வரவேண்டியிருந்தது.
இதனால், முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்துவதை ஆட்சேபித்துப் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன; அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டமொன்றையும் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தனர். இவ் ஆர்ப்பாட்டம் மிக வெற்றிகரமாக இடம்பெற்றாலும் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த கருத்துக்கள் முகம் சுழிக்கும் வண்ணம் அமைந்து விட்டன. இவ்வாறான ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தமைக்கு மேற்படி அமைப்பைப் பாராட்ட வேண்டும். ஆனால், சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில், பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஏற்பாட்டாளர்கள் மறந்து விட்டதாகத் தெரிகின்றது. பொது பலசேனா அமைப்பு, தொடர்ச்சியாக முஸ்லிம்களைக் குறிவைத்து விமர்சித்து வருகின்றது. அதுமட்டுமன்றி இலங்கையில் இனவாதத்துக்கு தூபமிடுவதும் இந்தச் ‘சேனா’க்களே! அந்த வகையில் பொதுபலசேனா விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஓர் அமைப்பல்ல. ஆனால், முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் என்பது இலங்கை சட்டவாக்கத் துறையுடன் சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கின்ற நிலையில், அந்த இடத்தில் பொதுபலசேனாவைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். அது, ‘வீதியால் போகின்ற ஓணானை ஆடைக்குள் பிடித்துவிடுவது’ போன்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நிகழ்ந்து விட்டதால் தேவையற்ற கருத்து மோதல்கள் தலைதூக்குகின்றன.
முஸ்லிம்களுக்காக இதற்கு முன்பிருந்த சட்ட ஏற்பாடுகளும் பல தடவை திருத்தப்பட்டுள்ளன. அதன்படி தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டமும் மறுசீரமைப்பை வேண்டி நிற்கின்றது. குறிப்பாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ள பெண்களின் திருமண வயது, பலதார மணம், விவாகரத்து, மணமகளின் சம்மதம் பெறுதல், காதி நீதிமன்றத்தின் நியாயாதிக்கம், நட்டஈடு, கைக்கூலி, தாபரிப்பு போன்ற பல விடயங்கள் இலங்கைச் சூழலில் மறுசீரமைக்கப்பட வேண்டுமெனச் சொல்லப்படுகின்றது. இவற்றுக்கு காரணங்களும் உள்ளன. உதாரணமாக பெண்களின் ஆகக் குறைந்த திருமண வயதெல்லை 12 ஆக இருக்கும் போது, இலங்கையின் பொதுவான சட்டத்தின்படி அவள் பராயமடையாச் (மைனர்) சிறுமியாவார். எனவே, அவளது விவகாரங்களைக் கையாள்வதில் இரண்டு சட்ட ஏற்பாடுகளும் முரண்படுகின்றன. 12 வயதில் முஸ்லிம் பெண்கள் திருமணம் முடிப்பது அரிதாகவே நடக்கின்றது என்பது ஒருபுறமிருக்க, ஒருவேளை அவ்வாறு திருமணம் முடித்து வைத்தால், அத் திருமணம் ஏனைய சமூகங்களுக்கிடையே விமர்சிக்கப்படுகின்றது. இவ்வாறான பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதுபோலவே, பலதார மணம், விவாகரத்து ஆகிய விடயங்களில் உள்ள சட்ட ஏற்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் இடையில் பல்வேறு நடைமுறைப் பலவீனங்கள் காணப்படுகின்றமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்துவதில் முஸ்லிம்கள் உடன்படுகின்றனர். ஆனால், இங்கிருக்கின்ற பிரச்சினை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேவைக்காக அதைத் திருத்த முடியாது என்பதாகும்.
அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் உலக முஸ்லிம்களை எவ்வாறு கையாள்கின்றன என்பதை விவரிக்க வேண்டியதில்லை. இவ்வாறிருக்க,பைத்துல் முகத்தஸ் தொடர்பான வாக்கெடுப்பில் விலகியிருந்த இலங்கை அரசாங்கமானது, முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை உபகுழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஜீ.எஸ்.பியை மீளப் பெறுவதற்காகச் சட்டங்களைத் திருத்த வேண்டியுள்ளதாகக் கூறுகின்றது. இதனடிப்படையில் நோக்கும்போது, முஸ்லிம்களை இலக்குவைத்தே இலங்கை மீது ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதோ என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவேதான், அவர்கள் இதை எதிர்க்கின்றனர். முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பது உண்மையே! ஆனால், அதை ஜீ.எஸ்.பி சலுகைக்காகச் செய்ய இயலாது என்பதே முஸ்லிம்களின் பொது நிலைப்பாடாக உள்ளது.
இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்நிலைமையால் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், “சர்வதேச சமவாயங்களுக்கு அமைய, பெண்களின் திருமண வயதை 16 ஆக மாற்ற வேண்டும் என்பதே எமது நிபந்தனை. அதைவிடுத்து, முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்துமாறு நாம் கோரவில்லை” எனத் தெரிவித்துள்ளது. இதனை முஸ்லிம்கள் அவதானிக்க வேண்டியுள்ளது.
இலங்கை ஒரு பல்லின சமூகத்தைக் கொண்ட நாடாகும். அண்மைக் காலமாகச் சில சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தாலும் இங்கு முஸ்லிம்களுக்கு மதம்சார் உரிமைகள் சிறப்பான விதத்தில் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும், 100 வீதம் அராபியர்கள் வாழும் தேசத்தைப் போன்று இங்கு வாழ முடியாது என்ற யதார்த்தத்தை முஸ்லிம்கள் நினைவில் கொள்ள வேண்டும். உண்மையில் இஸ்லாமியச் சட்டங்களை அல்லது தனியார் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் குரல்கொடுக்கும் முஸ்லிம்கள், அந்தச் சட்டத்தைச் சரியாகக் கடைப்பிடித்திருந்தால் இந்நேரம் ஏனைய சமூகங்கள் அதன்பால் ஈர்க்கப்பட்டிருக்கும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. ஐரோப்பாவையும் அரசாங்கத்தையும் இனவாதத்தையும் கண்டிப்பதற்கு முன்னால், முஸ்லிம்கள் பக்கத்தில் சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களும் அதற்குத் தீர்வுகாண்பதில் உருவான தாமதமுமே நிலைமைகளை மோசமாக்கியுள்ளது என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.
அத்தோடு,முஸ்லிம்களின் நம்பிக்கையை இழந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகை தேவையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். ஜீ.எஸ்.பி பிளஸைப் பெறுவதற்காக, அவசர அவசரமாக முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்தும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்; ஏற்கெனவே, நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை ஆறஅமர ஆராய்ந்து, அதன்படியே திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும்; ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை விட இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் உரிமை பெறுமதியானதாகும்.
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
2 hours ago