Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
பாலஸ்தீனத்தில் பரவும் ‘நமது காலத்தில் அமைதி’ என்ற வாசகம் இலங்கையிலும் எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால், சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு அரசு யுத்தத்தை நடத்தி முள்ளிவாய்க்காலில் அமைதியைப் புதைத்தது. ஆனால், இலங்கையின் அமைதி பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமானது என்றளவிலேயே இருந்து வருகிறது.
வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தங்களுடைய கோரிக்கையாக சுயநிர்ணய உரிமையை முன்வைத்திருந்தனர். இப்போதும் அதனுடனேயே இருக்கின்றனர்.
ஆனால், இப்போது யுத்தத்தில் தோற்ற சமூகம் தங்கள் கோரிக்கையையும் கைவிட்டாக வேண்டும் என்ற நிலைமையே நீடித்துவருகிறது.
இது கவலையானதாகும். இந்த வரிசையில் தான் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவின் அணுகலோடு முன் வைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை குறிப்பிடப்பட வேண்டும்.
ஆனால், பல ஆண்டுகளாகத் தாமதமாகி வந்த மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது என்ற தகவல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருக்கிறது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் அக்கறையிருந்தாலும் நாட்டின் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் ஆணைக்குழுவுக்கே இருக்கிறது.
இருந்தாலும், அது நடத்தப்படுமா அல்லது இது ஒரு பொய்யான கால தாமதிப்புக்கான மற்றொரு கருத்தா என்ற சந்தேகங்களும் வெளிவருகின்றன. இதற்கு பல்வேறு கரணங்கள் சொல்லப்பட்டாலும், முக்கியமாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் இருப்பதாகத் தெரிகிறது.
நாணய நிதியத்தின் அடுத்த கட்ட ஏற்பாடுகளுக்கு மாகாணசபைத் தேர்தல்கள் பின்னணியில், இருக்கிறது என்றால், இந்தத் தேர்தல்களை விரைவாக நடத்தி முடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன், அரசாங்கத்துக்கு இருக்கின்ற நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் அரசாங்கத்தின் எண்ணப்பாடுகள் இந்தத் தேர்தலில் தாக்கம் செலுத்தும். அதனால் தான் பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தலை மிக வேகமாக நடத்தியது போன்று நடத்துவதற்கு முடியாமலிருக்கிறது.
அவசர அவசரமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் போன்று மாகாண சபைக்கு முதன்நிலை கொடுக்க முடியாமலிருக்கிறது என்பதும் இந்த இடத்தில் நினைவில் கொள்ளப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் போரவையினால் கொண்டுவரப்பட்டுள்ள
தீர்மானமானது தமிழர்களுக்கு முழுமையான மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லையானாலும், இலங்கை அரசாங்கத்திற்கு சற்று நெருக்கடியானதே.
அந்தவகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் அமர்வுகளுக்கு முன்பு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவது, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளால் அகற்றும்படி கேட்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வது போன்றவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த நிறைவேற்றல் வரிசையில் உள்ள மாகாண சபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற அதேவேளையில், எதிர்க்கட்சியினரும் அரசாங்கத்தைத் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றனர். இந்த நேரத்தில்தான், அரசாங்கம் எதிர்வரும் வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்று உறுதியான அறிவிப்பையல்ல சாதாரணமான அறிவிப்பொன்றை விடுத்திருக்கிறது.
ஆனால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாகாண சபைத் தேர்தலையும்ந டத்துவதாக அறிவித்திருந்தாலும், பாராளுமன்றத் தேர்தலைப் போல் இல்லாமல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்ட ஆதரவு வீழ்ச்சியானது மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்கும் நிலையை உருவாக்கியிருந்தமை இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டும்.
நாட்டிற்கு சர்வதேச அளவில் ஏற்பட்டு வருகின்ற நற்பெயரைத் தொடர்வதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் எண்ணங்கொண்டாலும், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில் இருக்கின்ற சிக்கல்கள் நடவடிக்கைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.
தேசிய மக்கள் சக்தியானது எதிர்க்கட்சியாக இருக்கும்வேளையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் கைவிடப்படும் என்று தெரிவித்திருந்தாலும் இப்போது அதன் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கவேண்டும் என்கிற செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி, பல நெருக்கடியான முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டியிருக்கிறது.
சர்வதேச பொருளாதார அழுத்தங்கள், மக்களுக்கான ஜனநாயகக் கடமைகள் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டிய காரணியாக இருக்கிறது. 2012ஆம் ஆண்டில் கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 2013ஆம் ஆண்டில் மத்திய, வடமேல், வட மாகாணங்களில் தேர்தல்கள் நடந்தன.
2014ஆம் ஆண்டில் ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு இதுவரையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவில்லை. தற்போது ஆளுநர்களின் ஆளுகைக்குள் இச் சபைகள் இயங்குகின்றன.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றவுடன் அனைத்து மாகாண சபைகளுக்குமான ஆளுநர்களை நியமித்தார்.
அதற்கு எடுத்துக் கொண்ட அவசரம் அத்தேர்தல்களில் காணப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய சட்டம் இலவ்லாமையாகும்.
தேர்தல் முறைமையைக் காரணம் காட்டி மாகாண சபை தேர்தல்கள் கடந்த பல வருடங்களாக நடத்தப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது.
இப்போது எல்லை நிர்ணயம் நிறைவடைந்தபின்னரே தேர்தலை நடத்த முடியும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
இலங்கையில் நீடித்து வந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும்
பொருட்டு 1987இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதுடன், மாகாணசபைத் தேர்தல் சட்டமும் உருவாக்கப்பட்டது. இம்மாகாண சபைகள் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் உருவாக்கப்பட்டது.
வடக்கும் கிழக்கும் தற்காலிக இணைப்பினடிப்படையில் ஒரே மாகாணமாக்கப்பட்டு 1988இல் முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது.
1990இல் இந்தியப் படையின் வெளியேற்றத்துடன் வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
2006இல் ஜே.வி.பி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கினால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. நல்லாட்சி அரசாங்கம் நடைமுறையிலிருந்த மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதைத் தொடர்ந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலைமை உருவாக்கப்பட்டது.
பழைய முறையிலா, புதிய கலப்புத் தேர்தல் முறையிலா தேர்தல் நடைபெறும் என்பது தெரியாமலேயே மக்கள் தேர்தலை எதிர்பார்க்கின்றனர். புதிய கலப்பு
முறையானது விகிதாசார முறையையும் வட்டார முறைமைமையையும் சேர்த்தாக எல்லைகளை மறுசீரமைப்பதாக எல்லை நிர்யணம் அமையவிருக்கிறது.
இதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஓய்வுபெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரான மஹிந்த தேசப்பிரிய தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு 2017இல் உருவாக்கப்பட்டிருந்தது. இவர்கள் 2018 மார்சில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. ஆனால் நாடாளுமன்றத்தால் இந்த அறிக்கை சட்டமூலமானபோது, அது நிராகரிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னரான திருத்தங்கள் மேற்கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால் அது இழுபறியாகிப்போனது. இன்றுவரை ஸ்தம்பித்துள்ள மாகாண சபைத் தேர்தலைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழைய முறைமையா? புதிய முறைமையா? என்ற முடிவுக்கு வராமல் தேர்தலை நடத்த முடியாது என்று தெரிந்திருந்தாலும் அறிவிப்புகள் மாத்திரம் வந்த வண்ணமிருக்கின்றன.
இந்த இடத்தில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம் ஒன்று இன்றி ஆணைக்குழுவால் செயல்பட இயலாது என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறிரத்நாயக்க தெரிவித்திருக்கிறார்.
இதற்கு பாராளுமன்றம் தீர்வைச் சொல்லாத வரையில் தேர்தலை நடத்தமுடியாது என்பது பொருளாகின்றது. மாகாண சபை தேர்தலைத் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டுமாக இருந்தால் பாராளுமன்றம் முடிவுக்கு வந்தாக வேண்டும்.
இந்த முடிவுக்கு வருதலில் முழுமனதான முடிவு எட்டுதலே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஒரே வழியாகும். புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். நாட்டுக்கு. அதுவே தேவை என்று கூறும் அரசாங்கம் அந்த வழியைக் கைக்கொள்ளுமா என்பதற்காகக் காத்திருப்போம்.
57 minute ago
14 Oct 2025
14 Oct 2025
14 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
14 Oct 2025
14 Oct 2025
14 Oct 2025