Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 டிசெம்பர் 15 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
சீரழிந்திருந்திருந்த நாட்டை அனுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்குமாறும், பாராளுமன்றத்தைச் சுத்தப்படுத்துமாறும் தேசிய மக்கள் சக்தி கட்சி வேண்டி நின்றது. மக்களும் இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு இவ்விரண்டு வரப்பிரசாதங்களையும்
மக்கள் வழங்கியுள்ளனர்.
இப்போது கைமாறாக அரசாங்கம் எவ்வளவு விரைவாக நாட்டை தூக்கி நிறுத்தப் போகின்றது? மக்களுக்கு என்ன பிரதிபலனைச் செய்யப் போகின்றது? புதிய எம்.பிக்கள் பழையவர்களை விட, எவ்வாறு செயற்றிறனாகச் செயற்படப் போகின்றனர்? என்பதையே மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக, சிறுபான்மை தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களது பாரம்பரிய அரசியல் வழித்தடத்திலிருந்து விலகி, தமது தனித்துவக் கட்சிகளுக்கு அளிக்கின்ற வாக்குகளில் ஒரு பகுதியை இந்த தேர்தலில் என்.பி.பிக்கு வழங்கியிருக்கின்றார்கள்.
எனவே, தம்முடைய அபிலாஷைகளை இப் புதிய அரசாங்கம் எவ்வாறு தீர்க்கப் போகின்றது என்று ஆவலோடு காத்திருக்கின்றனர்.
நாட்டில் 75 வருடங்களாக ஏற்பட்ட பின்னடைவுகளையும் சீர்குலைவுகளையும் இரண்டே மாதத்தில் சரிப்படுத்துவதற்கு அனுரகுமார அரசிடம் ‘அலாவுதீனின் அற்புத விளக்குகள்’ இல்லை. நடைமுறையில் அது சாத்திமும் இல்லை.
ஏனென்றால், இந்த ‘முறைமை’ (சிஸ்டம்) என்பது நாட்டின் முதற் பிரஜையில் இருந்து கடைநிலை பொது மகன் வரை எல்லா மட்டங்களிலும் நாசமாக்கப்பட்டு இருக்கி;ன்றது. அதனை மாற்றியமைக்க காலமெடுக்கும்.
எவ்வாறிருப்பினும். சாதாரண மக்கள் இதுபற்றியெல்லாம் பெரிதாக ஆராய மாட்டார்கள். அனுரகுமார திசாநாயக்கவும் அக்கட்சியின் வேட்பாளர்களும் பிரசார மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றுதான் நினைக்கின்றார்கள் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
அந்த வகையிலேயே, நல்ல பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ள பின்னணியில் கூட, நாட்டில் எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை என்பது குறித்தும், தேங்காய், அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் மற்றும் விலை அதிகரிப்புகள் குறித்தும் மக்கள் அங்கலாய்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.
உண்மையிலேயே மேடைகளில் எதை வேண்டுமென்றாலும் பேசலாம், ஆனால், அதிகாரக் கதிரையில் அமர்ந்த பிறகுதான் அதிலுள்ள வளைவு சுழிவுகள், நடைமுறை யதார்த்தங்கள் என்னவென்பதை அனுபவத்தில் காணமுடியும். சரியாகச் சொன்னால் இப்போது என்.பி.பி. அரசும் அந்த நிலையிலேயே இப்போது உள்ளது.
காலப் போக்கில் இது சரியாகிவிடும். அல்லது மக்கள் இதற்கும் பழக்கப்பட்டுப் போவார்கள். ஆனால், வேறு ஒரு கட்சி ஆட்சியமைத்து இப்படியான நிலைமைகள் ஏற்பட்டால் அதனை முதலில் விமர்சிக்கின்ற தலைவராக அனுரகுமார திசாநாயக்க இருந்திருப்பார்.
எனவே, இந்த அடிப்படையில், மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்தை வினைத்திறனாக இயங்கச் செய்வதற்கும் பகிரதப் பிரயத்தனங்களை ஜனாதிபதி எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.
ஆனால், இதனை இன்னும் விரைவுபடுத்தவும் விரிவுபடுத்தவும் வேண்டியுள்ளது. அதற்கு எம்.பிக்களின் வகிபாகமும் முக்கியமானது.
புதிதாக நிறுவப்பட்ட ஒரு அரச இயந்திரம் உடனேயே முழுவீச்சில் இயங்க வேண்டுமாக இருந்தால், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், எம்.பிக்களின் விடய அறிவு மிக முக்கியமானது. 159 ஆசனங்களை வைத்திருந்தால் மட்டும் போதாது, அத்துடன் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்களும் தம்மை தகவைமைத்துக் கொள்ள வேண்டும்.
புதுமுகங்கள் என்றும், அதிக விருப்பு வாக்கு பெற்றவர்கள் என்றும் சொல்வதால் பயனில்லை மாறாக உடனடியாக அரச இயந்திரத்தில் ஒரு அங்கமாக இயங்குவதற்கு ஆளும் தரப்பு எம்..பிக்களும், பலமான பாராளுமன்றம் ஒன்றை முன்கொண்டு செல்வதற்கு எதிரணியினரும் தகுதி வாய்ந்தவர்களாக இருக்க வேண்டிய தேவையுள்ளது.
அதற்காகத் தேவையான முன்-தயார்ப்படுத்தல்களோடு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வர வேண்டும்.
நேரலையாக பாராளுமன்ற அமர்வுகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்ற ஒரு காலத்தில், மக்கள் பெரும் எதிர்பார்ப்புளோடு இருக்கின்ற வேளையில், அவர்கள் அங்கு வந்து ‘பழகிக் கொண்டிருக்க’ முடியாது.
இந்த முறை என்.பி.பி. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் ஊடாகவும் கிட்டத்தட்ட 150 புதியவர்கள் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளனர்.
மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே பழைய முகங்கள் எனலாம். ஆகவே, பெருமளவுக்கு பாராளுமன்றம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இது நல்லதொரு மாற்றமும் சாதனையுமே.
ஆனால், இப்போது வந்திருக்கின்ற புதுமுகங்கள் எல்லோரும் வினைத்திறனான, களவு, பொய்யற்ற, ஊழலற்ற, மக்களுக்காகத் தியாகம் செய்யக் கூடியவர்களாகக் கடைசி வரையும் இருப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால், கடந்தகாலத்தில் ஆரம்பத்தில் நல்லவர்களாகத் தெரிந்த எம்.பிக்கள் பிறகு தலைகீழாக மாறியதும் உண்டு.
அதேபோல். முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவில்லையே என்று கோரப்பட்ட போது, ‘அவர்கள் புதியவர்கள், இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற தோரணையில் அரச தரப்பில் பதில் கூறப்பட்டது. இருப்பினும், அரைவாசிக்கும் அதிகமான அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் அப்பதவியில் அனுபவமற்றவர்கள் என்பது கண்கூடு.
எனவே, புதியவர்கள் நியமிக்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது என்றாலும், ஒரு உயர் பதவியில் இருக்கின்றவர்களுக்கு அனுபவம் மிகப் பெரிய பலமாகும்.
அப்பதவியில் எவ்வாறு இயங்குவது, ஒரு சட்ட மூலத்தை, பிரேரணையை எவ்வாறு நகர்த்துவது என்பது தொடக்கம் பிரச்சினைகளைக் கையாள்வது வரை பல விடயங்கள் தொடர்பான அறிவு முன்கூட்டியே இருப்பது சிறப்பு. இல்லாவிட்டால் விரைவாக கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த பாராளுமன்றம் பல வழிகளில் விசேடமானது. என்.பி.பிக்கு அதிகப்படியான ஆசனங்கள், அதிக பெண் எம்.பிக்கள், மாற்றுத் திறனாளி ஒருவர் எம்.பியாக அங்கம் வகிக்கின்றமை, பெண் பிரதமர் என பல விடயங்களைச் சொல்லலாம்.
அத்துடன், படித்தவர்கள், துறைசார்ந்தவர்கள் அதிகமுள்ள நாடாளுமன்றமாகவும் கருதப்படுகின்றது. ஆனால், இவையெல்லாம் மக்களுக்குப் பிரதிபலனைக் கொடுக்கும்
வரை இந்தப் பெருமைகளால் எந்த இலாபமும் இல்லை என்றே கூறலாம்.
பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பாக ஒருமுகப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றதற்கு மேலதிகமாக சில முக்கிய பதவிகளில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது.
இதற்கிடையில், சபாநாயகரின் கல்வித் தகைமை பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. இப் பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் ‘எல்போட்’ என வர்ணிக்கின்றன.
இது இவ்வாறிருக்க, வேறுபல சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
பாராளுமன்றத்தின் கன்னி அமர்வுக்கு வந்த ஒரு எம்.பி. எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்திலிருந்து கொண்டு நேரலையாக முகநூலில் அதனை ஒளிபரப்புச் செய்தார். பாராளுமன்ற அதிகாரி வந்து சொன்னதை கூட ஆரம்பத்தில் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் ஓரிருவர் குறிப்பெடுத்துப் பேசுவதற்கே தடுமாறுவதைக் காண முடிகின்றது. அதுமட்டுமன்றி, அனுபவமுள்ள
எம்.பி. ஒருவரே ஒரு பிரதேச சபையில் பேச வேண்டிய விடயத்தைச் சபையில் பேசுகின்றார். இன்னுமொரு சிங்கள எம்.பி. எழுந்து முஸ்லிம் தனியாள் சட்டம் பற்றி எல்லாம் தெரிந்தவர் போல, பேசுகின்றார். இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.
பாராளுமன்றத்தில் பேசுவதும், பேசும் பாங்கும் எம்.பிக்களின் சிறப்புரிமையுடன் சம்பந்தப்பட்ட விடயம் ஆகும்.ஆயினும், சமூகம் சார்ந்த எத்தனையோ விடயங்கள் இருக்கத்தக்கதாக அவற்றைப் பேசுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அத்துடன் சபையில் பேசும் பக்குவம், நடந்து கொள்ளும் ஒழுங்குமுறை குறித்தும் உடன் கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்னுமொரு முக்கிய விடயத்தையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, என்.பி.பி. கட்சியே ஆளும் கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் அந்தக் கட்சியின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம், தமிழ் எம்.பிக்கள் எவ்வாறு நடந்து கொள்வார்களோ என்ற கேள்வி மக்கள் மனதில் உள்ளது.
தமது சமூகத்தின் அபிலாஷைகளுக்காக பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் குரல் கொடுப்பார்களா? அல்லது தமக்கு எம்.பி.பதவியைப் பெற்றுத்தந்த கட்சியின் கட்டுக்கோப்பு, கொள்கைக்குக் கட்டுப்பட்டு அடக்கி வாசிப்பார்களா என்ற சந்தேகங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் கூட முன்வைக்கப்படுகின்றன.
இதற்கு அவர்கள் தமது செயலின் மூலமாகவே பதிலளிக்க வேண்டும். யாராவது ஒரு பதவிக்கு வந்தால், ஆரம்பத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவது இயல்பானதே. மறு புறத்தில், எத்தனையோ நல்ல மாற்றங்கள் நமது ஆளுகைக் கட்டமைப்பில் ஏற்பட்டிருக்கின்றன. செலவுக் குறைப்பு, பகட்டற்ற அரச தலைவர், வீண் விரயமற்ற அமைச்சர்கள், இனவாதத்திற்கு எதிரான கருத்துக்கள் என பல நல்ல விடயங்கள் நடந்திருப்பதை மறுதலிக்க முடியாது.
ஆயினும், அதனையும் மக்கள் அரசின் மீதும், எம்.பிக்களின் ஆளுமை மீதும் வைத்துள்ள எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வளவு காலமும் விமர்சனங்களை முன்வைத்த கட்சி என்ற வகையில், நிலைமைகளைச் சுதாகரித்துக் கொண்டு அரசு மீதான விமர்சனங்களை மக்களின் அபிலாஷையாகக் கருதிச் செயற்பட வேண்டும்.
இரவு பகலாக ஜனாதிபதியும் அரசாங்கமும் பணியாற்றுகின்றார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். ஆனால், மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல அமைச்சர்களையும் எம்.பிக்களையும் ஏனைய அதிகாரிகளையும் தயார்ப்படுத்திக் கொண்டு தீயாய் வேலை செய்ய வேண்டும். அதற்காகவே மக்கள் காத்திருக்கின்றனர்.
12.10.2024
22 minute ago
32 minute ago
32 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
32 minute ago
35 minute ago