2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

மக்களின் உண்மையான பிரச்சினைகள்

Johnsan Bastiampillai   / 2023 ஜூன் 21 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாகப் பல மாதங்களாக பேசிக் கொண்டிருக்கின்றோம். சர்வதேச நாணய நிதிய உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் பற்றி தினமும் செய்திகள் வெளியாகின்றன. இலங்கை ரூபாயின் ஏற்ற இறக்கங்கள், பொருட்களில் விலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் பற்றியும் பிந்திய தகவல்களைப் பெறுவதில் ஆர்வமாக இருக்கின்றோம். 

இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தல், மாகாண சபை தேர்தல், இனப்பிரச்சினைக்கான தீர்வு, 13ஆவது திருத்தம் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் என்பன அரசியல் களத்தில் நிரம்பி வழிகின்றன. 

காணி ஆக்கிரமிப்பு, தொல்லியல் விவகாரங்களும் பெரும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.  

பல்லின, பல்சமூக மக்களைக் கொண்ட ஒரு நாடு என்ற வகையிலும், காலவோட்டத்தில் இவை எல்லாம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் என்ற அடிப்படையிலும் பொருளாதார, சமூக குறிகாட்டிகள், நடைமுறைப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவது கட்டாயமானதும் தவிர்க்க முடியாததும் ஆகும்.  

ஆனால், நாட்டில் வாழ்கின்ற பெரும்பாலான சாதாரண மக்களின் இன்றைய பிரச்சினையும் கவலையும் இவையல்ல. கணிசமான நடுத்தர, கீழ்-நடுத்தர, வறிய மக்களின் இன்றைய கவலை, அவர்களது வாழ்வாதாரம், வாழ்க்கைச் செலவு, குடும்பக் கஷ்டம் என்பன பற்றியதாகும். 

இன்றைய பொழுதை எவ்வாறு கழிக்கப் போகின்றோம்? என்ன கறி வாங்கி சமைக்கப் போகின்றோம்? பிள்ளைகளின் செலவுகளை எவ்வாறு சமாளிக்கப் போகின்றோம்? கடன்களை எவ்வாறு மீளச் செலுத்துவது? மருத்துவச் செலவுகளை எவ்விதம் ஈடுசெய்வது? இம்மாத செலவுகளுக்கான பணத்தை எவ்வாறு பெற்றுக் கொள்வது போன்ற பல கேள்விகளுடன்தான் அவர்களது பொழுதுகள் விடிகின்றன. 

சிங்களவர்களாயினும் தமிழர்களாயினும் முஸ்லிம்களாயினும் இது எல்லோருக்கும், இன்று பொதுவான தலையிடியாகும். அவர்கள் தங்களது வயிறு நிரம்பிய பிறகுதான், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் கவனம் செலுத்துவார்கள் என்பதே யதார்த்தமாகும். 

இதன் அர்த்தம், அவர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அக்கறை இல்லாமல் இருக்கின்றார்கள் என்பது அல்ல! மாறாக, அவர்களது சொந்தப் பிரச்சினைகள் தலைக்கு மேலால் போய்க் கொண்டிருக்கின்ற ஒரு காலப்பகுதியில், அரசியல் நெருக்கடி, கடன் மறுசீரமைப்பு, தேர்தல், இனப்பிரச்சினை, அரசியல் யாப்பு பற்றியெல்லாம், நாள் முழுக்க மக்கள் யோசித்துக் கொண்டிருக்க முடியாது. 

தேசிய விவகாரங்கள் ஒவ்வோர் இலங்கையருக்கும் அவசியமானவையே. ஆயினும், தமது சொந்தப் பொருளாதரம் பற்றியும், குடும்பத்தின் வயிறு நிரம்புவதற்கு என்ன வழி என்பது பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற மக்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தமக்கு நேரம் கிடைக்கும் போது கவனம் செலுத்துபவர்களாகவே இருப்பர் என்பதே நிதர்சனம் ஆகும். 

கொவிட-19 பெருந்தொற்று பரவலைத் தொடர்ந்து, இலங்கையில் ஏற்பட்ட தேசிய பொருளாதார நெருக்கடியும் வீழ்ச்சியும் இன்னும் சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெறுவதான ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டாலும் கூட, நிஜத்தில் ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. 

மேல்தட்டு மக்கள், பரம்பரை பணக்காரர்கள், பெரிய முதலாளிகள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், அதிக சம்பளம் பெறுவோர் போன்ற தரப்பினர், தமது குடும்பத்தில் வாழ்வாதார சிக்கலை எதிர்கொள்ளாமல் இருக்கலாம். அவர்களது நிதிப் புரள்வு குறைவடைந்து இருந்தாலும் வாழ்தலுக்கான செலவுகள் குறித்த கவலை அவர்களுக்கு இல்லை. ஆனால், இலங்கையின் மொத்த சனத் தொகையில் இந்த வகுதிக்குள் உள்ளடங்குவோரின் தொகை மிகக் குறைவாகும். 

தற்போது, பொருட்களுக்காக வரிசையில் மக்கள் நின்ற யுகம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஓரளவுக்கு பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. பல பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன. இதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராட்டவே வேண்டும். 

இந்த முன்னேற்றங்கள் எல்லாம், சாதாரண மக்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை மறுக்க முடியாது. ஆனால், அது மிகச் சிறியளவானதே. ஏனெனில், ஏற்கெனவே ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்திய தாக்கங்கள், ஒவ்வொரு குடும்பத்திலும் இன்னும் இருக்கின்றன. மக்களின் வாழ்க்கைச் செலவு, இப்போதும் கட்டுப்படியாகாத நிலையிலேயே இருக்கின்றது. 

எரிபொருள், எரிவாயு போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் அவை உயர்ந்த மட்டத்திலேயே உள்ளன. இது தவிர அநேகமான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. 

அத்துடன், விலை அதிகரிக்கப்பட்ட அளவுக்கு விலைக் குறைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை. விலை குறைக்கப்பட்ட பொருட்களைக் கூட, கிராமப்புறங்களில் அதிக விலைக்கே கொள்வனவு செய்ய வேண்டியிருக்கின்றது. 

அத்தியாவசியப் பொருட்கள் என்ற வகைக்குள் உள்ளடங்காத ஆனால், தினமும் பயன்படுத்தப்படுகின்ற பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. சவர்க்காரம், சலவைத் தூள், தேயிலை, பால்மா, பிஸ்கட், நூடில்ஸ், கோதுமை மா என, பல்பொருள் அங்காடி ​ஒன்றில் நாம் வாங்குகின்ற நூறு சதவீதமான பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

இந்த விலை அதிகரிப்புகள் பற்றி யாரும் பேசுவது இல்லை. எந்தவித அடிப்படையும் இன்றி, ஒவ்வொரு மாதமும் இவ்வாறான அன்றாடப் பாவனைப் பொருட்களுக்கு இரகசியமாக விலையை உயர்த்துகின்ற பல்தேசியக் கம்பனிகள், பெரிய புள்ளிகளுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் அரச இயந்திரம் எடுப்பதும் இல்லை. 

இவை மட்டுமன்றி, மரக்கறிகள், பிரதான கறி வகைகள் தொடங்கி உணவுக்குத் தேவையான அனைத்து பலசரக்குப் பொருட்களின் விலைகளும் நியாயமற்ற வகையில் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. ஆடைகள், அணிகலன்கள், அத்தியாவசியமில்லா பொருட்களுக்கு பன்மடங்கு விலை அதிகரிப்புச் செய்யப்பட்டு இருக்கின்றது. 

இதேவேளை, மின்சாரக் கட்டணம், குடிநீர்க்கட்டணம், தொலைபேசிக் கட்டணங்கள், போக்குவரத்து கட்டணங்கள் என சேவைகள் கட்டணங்கள் இரண்டு மடங்கால் உயர்த்தப்பட்டு இருக்கின்றன.

ஓரிரு பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்கள் நியாயமான அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கருதினாலும், மீதமுள்ள 90 சதவீதமான பொருட்கள், சேவைகளின் விலைகள் எந்தவித நியாயமும் இன்றி கண்மூடித்தனமாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. 

பல்தேசிய நிறுவனங்கள் கொள்ளை இலாபம் உழைக்கும் நோக்கில், கண்டமாதிரி விலை அதிகரிப்புகளை மேற்கொள்கின்றன. அவர்கள் அடிக்கின்ற கொள்ளை போதாது என்று, இடைத் தரகர்கள் முதல் உள்ளூரில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் வரை கொள்ளை இலாபம் உழைக்கவே முற்படுவதையும் காண முடிகின்றது.   

சாதாரண மக்களின் மாதாந்த வருமானம் மாறாமல் இருக்கின்ற நாட்டில் இதுவெல்லாம் நடந்திருப்பதால், மக்களின் கொள்வனவு ஆற்றல் வெகுவாக குறைந்திருக்கின்றது. அரசாங்கம் இதனை கவனத்தில் எடுத்து, வெற்றிகரமாக தீர்த்து வைக்கவில்லை. 

நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சிதான் ஒவ்வொரு குடும்ப அலகையும் பாதித்துள்ளது. எனவே, தேசிய பொருளாதார குறிகாட்டிகளில் முன்னேற்றத்தைக் கொண்டுவருவதன் ஊடாக, நாட்டின் பொருளாதாரம் முழுமையாக மீட்சி பெறுகின்றபோது, அதன் விளைபயன்களை ஒவ்வொரு பொதுமகனும் அனுபவிக்கலாம்.  

“ஆகவே, அதற்கான வேலைத் திட்டங்களையே நாம் இப்போது மேற்கொண்டு வருகின்றோம். காலவோட்டத்தில் ஒவ்வொரு குடும்ப அலகிலும் நெருக்கடிகள் குறைந்து விடும்” என்று அரசாங்கம் கூற முற்படலாம். அதுவும் யதார்த்தமானதே! அவ்வாறான நம்பிக்கையிலேயே ஒவ்வொரு பொதுமகனும் காலத்தை கழித்துக் கொண்டிருக்கின்றான். 

ஆனால், அரசாங்கம் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது, இந்தப் பொருளாதார நெருக்கடி என்பது, நடுத்தர வர்க்கத்துக்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் என்றுமில்லாத சிக்கலை தோற்றுவித்துள்ளது. வியாபாரிகள், பணம் படைத்தோர், கொழுத்த சம்பளம் பெறுவோர் மற்றும் வெளிநாடுகளில் உழைப்போரின் குடும்பங்களில் இந்தத் தாக்கம்  சற்று குறைவாக இருக்கலாம். 

ஆனால், ஏனைய 75 சதவீதத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையில் என்றுமில்லாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. 50-60 ஆயிரத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு வருமானத்தில் தங்கியுள்ள குடும்பங்கள், தனியொருவரில் வருமானத்தில் தங்கியுள்ள பெரிய குடும்பங்கள், ஏற்கெனவே வறுமைப்பட்ட குடும்பங்கள் என இப்பட்டியல் நீள்கின்றது. 

இந்தப் பின்னணியில், நாட்டின் கடன் மறுசீரமைப்பு வெற்றிகராமாக நிறைவேற்றப்பட்டு, ரூபாயின் பெறுமதி அதிகரித்து, டொலரின் இருப்பு அதிகரித்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்து, சென்மதி நிலுவை பிரச்சினை தீர்ந்து, தேசத்தின் பொருளாதாரம் மீண்ட பிறகுதான், ஒவ்வொரு குடும்பத்தினதும் தனிப்பட்ட பொருளாதாரக் கஷ்டங்கள் தீரும் என்றால் அதற்கு இன்னும் நீண்டகாலம் எடுக்கும். 

எனவே விரைவில், சாதாரண மக்களின் நெருக்கடிகள், கவலைகளுக்கான பரிகாரங்களை வழங்குவதற்கு அரச இயந்திரம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து, ‘பழம் கனிந்து பாலில் விழும் வரை’அல்லது ‘கடல் வற்றிக் கருவாடு தின்னும் காலம் வரும் வரை’ மக்களைக் காத்திருக்கச் சொல்வதில் எந்த நியாயமும் தர்மமும் இல்லை. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .