Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2024 பெப்ரவரி 03 , மு.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
இருபது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு, இப்போது ஐம்பது ரூபாயாக விலை அதிகரிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய பிஸ்கட் பக்கற்றில், 'நுகர்வோர் தொடர்பு கொள்வதற்கான ஒரு தொலைபேசி இலக்கம்' பொறிக்கப்பட்டுள்ளது. வீதியில் செல்லும் கனரக வாகனத்தின் பின்பக்கத்தில் 'எனது வாகனமோட்டுதல் எவ்வாறு?' என்ற வாசகத்துடன் தொடர்பிலக்கம் எழுதப்பட்டிருப்பதை கண்டிருக்கின்றோம்.
இவ்வாறு எல்லா சிறிய பெரிய விடயங்களிலும் வாடிக்கையாளர் அல்லது பொது மக்களின் அபிப்பிராயங்களைச் சேகரிப்பதற்கான ஒரு தொடர்பு வசதி செய்யப்பட்டிருப்பது வழக்கமாகும்.
ஆனால், அரசியல்வாதிகள் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களது பிரச்சினைகளை, கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக என்ன ஏற்பாட்டைச் செய்துள்ளார்கள்? என்ற கேள்விக்கு விடையென்ன?
யாரும் அரசியல்வாதியாக பிறப்பது கிடையாது. ஒரு பிரதேசத்தில் வாழும் மக்கள் குறிப்பிட்ட ஒரு நபரை காலைப் பிடித்து தேர்தல் களத்தில் தள்ளி விடுவதும் இல்லை. பிரதிநிதித்துவ அரசியலுக்குள் வருகின்ற அனைவரும் தாம் விரும்பியே எம்.பி.யாக, மாகாண சபை உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக ஆகின்றனர் என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்த சம்பளம், கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக வேறுபல வெகுமதிகளும் உள்ளன. எம்.பி. என்ற மிகப் பெரிய கௌரவமும் பாராளுமன்ற வரப்பிரசாதங்களும் உள்ளன. இதுவெல்லாம் அவர்களது திறமைக்காக கொடுக்கப்படுபவை என்று கருத முடியாது.
ஏனெனில் இலங்கை பாராளுமன்றத்தில் பல கல்வியியலாளர்கள், துறைசார் வல்லுனர்கள் எம்.பி.க்களாக பதவி வகித்தாலும் கூட, சமகாலத்தில் க.பொ.த. சாதாரண தரம், உயர்தரம் சித்தியடையாதவர்களும் உள்ளனர் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. அதுமட்டுமன்றி, சண்டியர்களும் அரசியல் எடுபிடிகளும் ஒழுக்கமற்றவர்களும் கூட உள்ளனர் என்பதை நேரலையில் நாம் கண்டிருக்கின்றோம்.
ஆகவே, 'பாராளுமன்ற உறுப்பினர்' என்ற பொதுமைப்படுத்தலின் கீழேயே வரப்பிரசாதங்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன. அத்துடன், நாடாளுமன்றத்திற்கு வெளியேயுள்ள அறிவாளிகள், வல்லுனர்களை விட பல வகைகளில் விசேட சலுகைகளையும் கௌரவத்தையும் எம்.பிக்கள் அனுபவிக்கின்றனர்.
அதாவத மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் வந்திருக்கின்றார் என்பதற்காக, இவை வழங்கப்படுகின்றன. மக்களுக்கான சேவையை அவர் சரிவரச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த கொடுப்பனவுகளும் வரப்பிரசாதங்களும் மதிப்பும் வழங்கப்படுகின்றது என்பதை மறந்து விடக் கூடாது.
ஆந்த வகையில் பார்த்தால், இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட 196 எம்.பி.க்கள் மட்டுமன்றி, மிக உன்னத நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட தேசியப் பட்டியல் முறைமை ஊடாக உள்ளே வந்த 29 எம்.பி.க்களும் தமது பதவிக்கு உரித்தான தார்மீகப் பணிகளை எந்தளவுக்கு நிறைவேற்றுகின்றார்கள் என்பதை ஆராய வேண்டியுள்ளது.
ஒருசில சிங்கள அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் முன்மாதிரியாக இருந்தாலும், பெரும்பாலானவர்கள் மிக மோசமான நிலையிலேயே உள்ளனர். மலையக அரசியல்வாதிகள் மக்களது அபிப்பிராயங்களை பெறுவதற்கான எத்தனங்களை செய்ததாக தெரியவில்லை. மக்களது பிரச்சினைகள் தமக்கு முழுமையாக தெரியும் எனறே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சினைகளை பொதுவாக அறிவார்கள் என்றாலும் கூட தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளை தமது எம்.பியிடம் முன்வைப்பதற்கான ஏற்பாடுகள். அவர்களைச் சந்திப்பதற்கான அல்லது தொடர்பு கொள்வதற்கான வசதிகள் அண்மைக்காலத்தில் குறைவடைந்து வருவதாகவே தெரிகின்றது.
தமிழ் மக்களுக்கு இனப் பிரச்சினை தீர்வும், உரிமையும், சுயாட்சியும் மட்டும்தான் பிரச்சினை என்ற நிலைப்பாட்டில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் இருப்பார்களாயின், அதிலிருந்து அவர்கள் வெளியில் வர வேண்டும். அவை நீண்டகால அபிலாசைகளாகும். அதற்கு மேலதிகமாக குறுங்கால நடைமுறைப் பிரச்சினைகளும் தமது மக்களுக்கு உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
இதேவேளை, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மக்களின் பிரச்சினைகள் பற்றி அறவே தெரியாது என்று கூறிவிட முடியாது. ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அதனை விளங்கி வைத்துள்ளனர். முஸ்லிம் எம்.பி.க்கள், தலைவர்கள் மக்களைச் சந்திப்பதற்கான அல்லது மக்கள் அவர்களைத் தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் பூச்சியமாகும்.
மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்வது என்றால் மக்களுடனான தொடர்பு அவசியமாகின்றது. தங்களது அரசியல் போக்கு பற்றிய மக்கள் அபிப்பிராயங்களைச் சேகரிப்பதற்கும், புதிய பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதற்கும் மக்கள் சந்திப்புக்கள் அவசியப்படுகின்றது. குறிப்பாக, எந்த இன மக்களாக இருந்தாலும் அவர்கள் தமது எம்.பி.யை தொடர்பு கொள்வதற்கான வழியொன்று இருக்க வேண்டும்.
இந்த விடயத்தில் எல்லாச் சமூகங்களைச் சேர்ந்த எம்.பி.க்களும் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். சிங்கள அரசியல்வாதிகள் ஒரு சிலரும் தமிழ் அரசியல்வாதிகள் ஒரு சிலரும் ஒருகாலத்தில் இதற்கு விதிவிலக்காக இருந்ததாக கூறலாம். ஆனால், இப்போது எல்லோரும் மக்கள் தொடர்பு இல்லாமலேயே உள்ளனர்.
முஸ்லிம் எம்;பி.க்கள் இதில் முதலிடம் வகிப்பதாகக் கூறலாம். முஸ்லிம் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சமூகத்தின் பிரச்சினைகள் பற்றிய அறிவு கொஞ்சம் இருக்கின்றது தான். ஆனால் அதுபற்றிய பிந்திய தகவல்கள் (அப்டேட்) கிடைப்பது குறைவு.
மக்களைச் சந்திப்பதற்கான பகிரங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு தலைவரை, எம்.பி.யை தொடர்பு கொள்வதற்காக ஒரு தொலைபேசி இலக்கத்தை எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் அறிவிக்கவில்லை. ஒருவேளை அவர்களை மக்கள் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொள்ள முயன்றாலும் அந்த முயற்சி பதிலளிப்பதில்லை.
கணிசமான முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் தம்மைச் சுற்றி ஒரு ஜால்ராக் கூட்டத்தை வைத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் பெரிய அறிவாளிகள் என்றும், அவர்கள்தான் 'மக்கள்' என்றும் அந்த எம்.பி.க்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள்தான் வெளியில் நடக்கின்ற விவகாரங்களை தமது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் எம்.பியின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றார்கள்.
சாதாரண வாக்காளன் ஒருவன், பொது மகன் ஒருவர் ஒரு எம்.பியிடம் தமது பிரச்சினையைக் கூற விரும்புவான். ஆனால், அவருடன் இருக்கின்ற கூட்டத்தினருக்கு எல்லாம் அதனைக் கூற விரும்பமாட்டான்.. ஆயினும், நேரடியாக எம்.பியை தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் உத்தியோகபூர்மாக அறிவிக்கப்படவில்லை என்பது கவலைக்குரியது.
மக்கள் தொடர்பு என்பது பரஸ்பரம் இருபக்க அனுகூலங்கனைக் கொண்டது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டு:ம்.
மக்களை தொடர்பு கொள்வதால் மக்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ள முடிகின்றது. தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்தால் அல்லது ஆறுதல் வழங்கினாலேயே அந்த பொதுமகன் குறிப்பிட்ட அரசியல்வாதிக்கு ஒரு புள்ளியை போட்டுவிடுகின்றான். மறுபுறத்தில், தேர்தல் காலத்தில் இந்த தொடர்பு அந்த எம்.பி.க்கு வாக்காக மாறி உதவும்.
இதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் கட்சிகளும் அதன் எம்.பி.க்களும் வெகுசனத் தொடர்பு அதிகாரி, பிரதேச இணைப்பாளர், கட்சி அமைப்பாளர் என்று பல பதவிகளுக்கு ஆட்களை நியமித்துள்ளன. பல பதவிகளுக்கு குறிப்பிட்ட எம்.பியின் சொந்தக்காரர், நண்பர் நியமிக்கப்பட்டிருப்பார். ஆயினும் மக்கள் தொடர்பு கேள்விக்குறியாகவே இருக்கும்.
அநேக எம்.பிக்கள் சந்தர்ப்பங்களில் தொலைபேசிக்கு பதிலளிப்பதில்லை. அத்துடன் பிரச்சினைகளை உள்வாங்கிக் கொள்வதில்லை என்பதே சமூக மட்டத்தில் குறிப்பாக முஸ்லிம் மக்கள் தங்கள் அரசியல் பிரதிநிதிகள் மீது முன்வைக்கின்ற குற்றச்சாட்டாகும். பிரச்சினையை தீர்ப்பது இரண்டாவது விடயமே.
நேரடியாக மக்கள் தொடர்பு இல்லாமல், தம்மைச் சுற்றியுள்ள கூட்டத்தில் தங்கியிருந்து, அவர்களை மட்டுமே நம்பி அரசியல் செய்த ஆட்சியாளர்களும் அசசியல்வாதிகளுக்கும் என்ன நடந்தது என்பதை வரலாறு அறியும். ஆகவே இந்தப் போக்கை நமது எம்.பி.கக்ள் மாற்றிக் கொள்ளவில்லையாயின், அதுவே இவர்களுக்கும் நடக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
30 Apr 2025
30 Apr 2025