2025 மே 16, வெள்ளிக்கிழமை

மடை மாற்றும் தரப்புகளை உணர்ந்து கொள்ளுதல்

Thipaan   / 2016 ஏப்ரல் 17 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசிய அரசியல்களம், வழக்கத்துக்கு மாறாக பரபரப்பும் வேகமும் குறைந்து, ஏனோதானோ என்கிற நிலையை வெளிப்படுத்துகின்றது. எவ்வளவு அழுத்தங்கள், மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தமிழ்த் தேசிய அரசியல்களம்;, தன்னுடைய இயங்குநிலையை ஒரு வகையான கொதிநிலையில் வைத்துக் கொண்டிருப்பது வழக்கம். ஆனால், தற்போதையை களம், அவ்வாறான நிலைகளிலிருந்து விலகியிருக்கும் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளுக்கு எதிரான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புதிதாக கூட்டணி பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கும் ஈ.பி.டி.பி, தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட அணிகளும் கூட, எந்தவிதமான முன்னோக்கிய அரசியல் நிகழ்ச்சி நிரலையும் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கவில்லை. மாறாக, மதிய உணவுக்குப் பின்னரான மந்தமான தூக்க நிலையில் இருக்கின்றன.

அநாவசியமான பரபரப்புகள், தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் எழுவதும் அடங்குவதும் வழக்கம். ஆனால் இப்போது, அவசியமான பல விடயங்கள் நிகழ்கின்ற போதும் கூட, தூக்க நிலையில் தமிழ்த் தேசிய அரசியல்களம் இருப்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது. இது, மக்களுக்கான அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி, வேறு தரப்புகளின் தேவைகளின் போக்கிலான அணுகுமுறையும் இயக்கமும் சார்ந்தவையா என்கிற கேள்விகளை எழ வைத்திருக்கின்றது.

நாட்டில் ஆட்சி மாற்றமேற்பட்டு 15 மாதங்கள் கடந்துவிட்டன. தென்னிலங்கையின் அரசியல்- சமூக சூழலில், குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏன், வடக்கு, கிழக்கிலும் கூட மேல்வாரியாக சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதனை மறுப்பதற்கில்லை.

அவற்றையெல்லாம் தாண்டி, சர்வதேச ரீதியில் வேண்டத்தகாத பிள்ளையாக இருந்த இலங்கை, இன்றைக்கு செல்லக்குழந்தையாக மாறிவிட்டது. அந்தச் செல்லக்குழந்தைக்கு குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, பூச்சூடுவதற்கு அமெரிக்கா, இந்தியா, சீனா என்கிற அனைத்து தரப்புகளும் ஆசையோடு காத்திருக்கின்றன. அதனை, ஐக்கிய நாடுகளினூடும் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களினூடும் செய்தும் விட்டிருக்கின்றன.

அரசியலமைப்புப் பேரவையாக நாடாளுமன்றம் மாற்றப்பட்டுவிட்டது. அரசியலமைப்பு மாற்றம் அல்லது சீர்திருத்தம் பற்றிய உரையாடல்களுக்காக மாத்திரமே, நாடாளுமன்றம், அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டிருக்கின்றது. அங்கு, இன முரண்பாடுகளுக்கான தீர்வு பற்றிய நோக்கமோ- எண்ணப்பாடுகளோ வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

குறிப்பாக, நாடாளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றும் பிரேரணையின் முகவுரையில், இனமுரண்பாடுகளுக்கான தீர்வு பற்றி குறிப்பிடப்பட்டிருந்த பகுதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அழுத்தங்களுக்கு அமைய நீக்கப்பட்டுவிட்டது. அப்படியான நிலையில், தமிழ் மக்கள் கோரும் அரசியல் தீர்வொன்று நாடாளுமன்றத்தினூடு எப்படி வழங்கப்படப் போகின்றது என்கிற கேள்வி எழுகின்றது.

பிரதான எதிர்க்கட்சியாகத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்தவர்கள் என்கிற நிலைகளைத் தாண்டி, தமிழ் மக்களின் ஏக ஆணையைப் பெற்ற தரப்பாக, அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்குள் எவ்வகையான நடவடிக்கைகளினூடு தன்னுடைய பங்கினை, கடமையை நிறைவேற்றப் போகின்றது. முகவுரையிலிருந்து இன முரண்பாடுகளுக்கான தீர்வு பற்றிய விடயம் நீக்கப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைதி பேணியதன் பின்னணி என்ன என்கிற கேள்வி, சாமானிய மக்களிடமும் எழுந்திருக்கும் ஒன்று.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையிலுள்ள அதிகாரங்களின் அளவினை குறைத்து அதிகாரங்களைப் நாடாளுமன்றத்திடம் கையளிப்பதும், தேர்தல் முறை மாற்றமும் தான் புதிய அரசியலமைப்பு மாற்றங்களினூடு செய்யப்படப் போகின்றதா, இதன்மூலம் தமிழ் மக்கள் பெற்றுக் கொள்ளப் போகின்றவை என்ன, குறிப்பாக, வடக்கு- கிழக்கிலுள்ள மக்களின் நீண்ட போராட்டங்களுக்கான தீர்வு என்ன என்றெல்லாம் பேச வேண்டியிருக்கின்றது.

இவை பற்றிய கேள்விகளை அழுத்தமாகவும் தொடர்ச்சியாகவும் எழுப்புவதனால், நல்லாட்சி அரசாங்கத்துக்கான தங்களின் நல்லெண்ண நடவடிக்கைகளை விலத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்கிற கருதுநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கலாம்.

ஆனால், நல்லெண்ண வெளிப்பாடு என்பது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் நீடிப்பதற்கு உதவுகின்றது என்றால், அதிலிருந்து அடுத்த கட்டத்துக்கு நகர்வது தவறில்லை. அதுபோக, நல்லாட்சி அரசாங்கத்துக்கான தன்னுடைய நல்லெண்ண வெளிப்பாடு என்பது அந்த அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என்கிற நிலைப்பாட்டிலானதும் அல்லவே.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் பேச வேண்டியிருக்கின்றது. அதாவது, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான சூழல், வடக்கு- கிழக்கினை நோக்கி பல்வேறு தரப்பட்டவர்களையும் படையெடுக்க வைத்திருக்கின்றது - அதாவது, 2002ஆம் ஆண்டின் சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில், வன்னி நோக்கிப் படையெடுத்த தரப்புகள் போன்று. குறிப்பாக, கொழும்பினை மையமாகக் கொண்ட சமூக, பொருளாதார தரப்புகள், மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளை நோக்கித் தங்களின் கவனத்தைத் திரும்பியுள்ளன.

அந்தத் தரப்புகள், மோதல்களுக்குப் பின்னரான மக்களின் அபிவிருத்திப் பற்றியே கவனஞ்செலுத்தி வருகின்றன. அரசியல் தீர்வு மற்றும் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கான நீதி என்பன பற்றி, அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. கிட்டத்தட்ட அரசியல் தீர்வும் நீதியும் தற்போதைக்கு அவசியமற்ற ஒன்று, அபிவிருத்தி மாத்திரமே முக்கியமானது என்கிற தோரணையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தரப்புகளின் வகிபாகம் என்பது, தமிழ் மக்களின் அடிப்படைகளில் நேரடியான மாற்றங்களையோ அரசியல் ரீதியான சிந்தனைகளையோ ஏற்படுத்த வல்லவை அற்றவைதான். ஆனால், கொழும்பினை மையமாகக் கொண்ட அரசியல் முனைப்புக்கு அவை உந்துசக்தியானவை. குறிப்பாக, ஆங்கில ஊடக வெளியிலும் அதன் சிந்தனையோட்டத்துக்கும் ஒத்திசைந்து கொடுக்கக் கூடியவை. அதாவது, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தமிழ்த் தேசிய அரசியல் போராட்டங்களை எவ்வாறு அணுகினாரோ அதன்பாற்பட்டது. அல்லது அதன் போக்கினைப் பெருமளவு பிரதிபலிப்பது.

ஆயுதப் போராட்டமொன்றை முன்னெடுத்த தரப்பொன்றின் மக்கள், சமூக - பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவோடு இருக்கின்றமையை யாரும் மறுதலிக்க முடியாது. அவர்களின் முன்னேற்றம் தொடர்பில் முறையான திட்டமிடல்களோடும் விடாப்பிடியான ஓர்மத்தோடும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதும் அவசியமானது. அதில், யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், ஒரு சமூகம் எதிர்கொண்டிருக்கின்ற மூன்று முக்கிய விடயங்களில் ஒன்றை மாத்திரம் பிரதானப்படுத்துவதோடு பிரச்சினைகளின் தீவிரம் குறைந்துவிடும் என்று கருதினால், அந்தத் சிந்தனை அபத்தமானது.

அதாவது, தமிழ் மக்கள் தமது அரசியல் அதிகாரங்களைக் கோரும் அதேவேளை, தமக்கு எதிரான நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றம் உள்ளிட்ட அநீதிகளுக்கு எதிராகவும் நீதியைக் கோருகின்றனர். அத்தோடு, தம்முடைய சமூக பொருளாதார அபிவிருத்தியையும் கோரி நிற்கின்றனர். இவை, மூன்றும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை. எழுந்தமானமாகப் பார்க்கும் போது அவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை போலத் தோன்றினாலும், அவை மூன்றுமே ஆழமான உட்பிணைப்புகள் கொண்டவை. ஒன்றை நிராகரித்து இன்னொன்றைப் பிரதானப்படுத்துவதால், பிரச்சினைகளின் தீவிரத்தைக் குறைக்க முடியாது. வேண்டுமென்றால், குறைப்பது மாதிரி காட்டிக் கொள்ள முடியும்.

இப்படியான நிலையில் தான், இவ்வகையான தரப்புகள் தொடர்பிலும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அக்கறையோடு இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்பது அரசியல் அதிகாரங்கள், நீதி சார்ந்து இருந்து வருகின்றது. அதனைத் தவிர்த்து தெற்கிடமும், கொழும்பினை மையப்படுத்திய மேல் தட்டு ஊடகப் பரப்பிலும், தமிழ் மக்கள் அபிவிருத்தியை மாத்திரமே கோருகின்றனர் என்கிற நிலைப்பாட்டினை ஏற்படுத்தும் வல்லமையானவர்களை எதிர்கொள்வதும் அவசியமானது.

ஜனநாயக ரீதியிலான வெற்றி என்பது, பல்வேறு தரப்புகளையும் எதிர்கொண்டு எமக்கான நீதியை அடைவதில் தான் இருக்கின்றது. ஏனெனில், எதிர்த்தரப்புகள் இல்லாமல் ஜனநாயகம் சாத்தியமில்லாத ஒன்று. குறிப்பாக, கொழும்பினை மையப்படுத்திய தமிழ்த் தரப்பொன்று, குறிப்பாக சமூக பொருளாதார ஆய்வுத் தரப்பு, ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோருவதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்கிற தோரணையிலான கருத்தியலை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றது.

அதனை, ஆங்கில ஊடகங்களில் அதிகமாகக் காணக்கூடியதாகவும் இருக்கின்றது.அப்படியான நிலையில், சிறுசிறு விடயங்களை வைத்துக் கொண்டு சண்டைபிடித்து அலைக்கழித்து கொண்டிருப்பதைக் காட்டிலும், முக்கியமான விடயங்களில் அவதானத்துடன் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தரப்புகளும் இருக்க வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .