Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர், 'மதுக்கடைகளை' மூடுவது, தமிழகத்தில் தலையாய தேர்தல் பிரசாரமாக மாறியிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் கொண்டு வரப்படும்' 'மது விற்கும் டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்படும்' என்று 501 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் ஜெயலலிதா, 'மதுவிலக்கு பற்றி பேச தி.மு.கவுக்கும் கருணாநிதிக்கும் அருகதை கிடையாது.
ஒரு தலைமுறையைக் குடிக்க வைத்தவர் கருணாநிதி' என்று காரசாரமாக சாடி விட்டு, 'நான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு அடையப்படும்' என்றார். சென்னையில் உள்ள தீவுத்திடலில் ஜெயலலிதாவின் இந்த முழக்கம் தமிழக சட்டமன்ற தேர்தலின் 'பிரசார முழக்கமாக' மாறியது.
மதுவிலக்கு வரலாறு, தமிழகத்துக்கு 1937இல் தொடங்குகிறது. மூத்த அறிஞர் ராஜாஜிதான், முதன் முதலில் மதுவிலக்கை தமிழகத்தில் அமுல்படுத்தத் தொடங்கியவர். ஒரு மாவட்டத்தில் ஆரம்பித்து படிப்படியாக இந்த மதுவிலக்கு மாநிலம் முழுவதும் கொண்டு வரப்பட்டது. 1970களில் ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க. தமிழகத்தில் மதுவிலக்கை தளர்த்தியது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி.
அதனால்தான் 'மதுவிலக்கை தளர்த்திய உங்களுக்கு இனி மதுவிலக்கு பற்றி பேச அருகதை இல்லை' என்று ஆவேசமாகச் சாடியிருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால், 1974ஆம் ஆண்டே தளர்த்தப்பட்ட மதுவிலக்கு மீண்டும் விலக்கிக் கொள்ளப்பட்டு, தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டன என்பதும் உண்மை.
இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவர் எம்.ஜி.ஆர் மீண்டும் மதுவிலக்கை தளர்த்தி, மதுக்கடைகளைக் கொண்டுவந்தார். மதுபான விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனம் 1983ல் தான் தொடங்கப்பட்டது.
இதன் பின்னர், ஒருமுறை முதல் கையெழுத்தாக மதுக்கடைகள் மூடப்பட்டது. அது, 1991இல் இதே முதலமைச்சர் ஜெயலலிதா முதன் முதலாக முதலமைச்சரான போது நடைபெற்றது. ஆனால் அவரது ஆட்சியிலேயே, பின்னர் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. குறிப்பாக 2003ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில்தான், அரசாங்கமே மதுபானக் கடைகளை விற்கும் என்று கூறி, 'டாஸ்மாக் கடைகள்' திறக்கப்பட்டன.
இன்று தமிழகம் எங்கும் காட்சியளிக்கும் டாஸ்மாக் கடைகள், அ.தி.மு.க ஆட்சியில் திறக்கப்பட்டவை. சுமார் 6,800 மதுக்கடைகள், தற்போது தமிழகத்தில் உள்ளன. இவற்றின் மூலம் அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானம், ஏறக்குறைய 30 ஆயிரம் கோடி இந்திய ரூபாய். இன்று மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று கூறும் தி.மு.கவும் இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த நேரத்தில் மதுவிலக்கை கொண்டு வர முயற்சிக்கவில்லை.
'நம் மாநிலத்தில் மட்டும் எப்படி மதுவிலக்கு சாத்தியம்? மாநில அரசுக்கு இதனால் ஏற்படும் இழப்பை மத்திய அரசு தரும் என்றால் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடலாம்' என்று சட்டமன்றத்திலும், வெளியிலும் பல முறை தி.மு.க தலைவர் கருணாநிதி பேசியிருக்கிறார். ஆகவே, மதுக்கடைகளைப் பொறுத்தமட்டில் தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் கொள்கை மாற்றங்கள் ஏதும் கிடையாது. 30 ஆயிரம் கோடியை எப்படி இழப்பது என்ற கவலை இரு கட்சிகளின் ஆட்சி இருந்த போதும் இருந்திருக்கிறது.
ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு மதுவை ஊற்றிக்கொடுப்பது போன்ற 'வாட்ஸ் அப்' வீடியோக்கள் பரவியது, பள்ளி யூனிபார்மில் சில மாணவ, மாணவிகள் குடித்து விட்டு கலாட்டா செய்த காட்சிகள் பரவியது எல்லாம் மதுவிலக்கு வேண்டும் என்ற போராட்டத்துக்கு தமிழகத்தில் உயிர் கொடுத்தது. மதுவிலக்கு வேண்டும் என்று கோரி காந்தியவாதி குமரி அனந்தன் தன் வாழ்நாள் முழுவதும் போராடி வருகிறார்.
சமீபத்தில் கூட பாதயாத்திரை சென்றார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மதுவிலக்கு வேண்டும் என்று கோரி நடைபயணம் சென்றிருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் 'மதுவிலக்கு' வேண்டும் என்று கூறி நீண்ட காலப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்.
மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தையே நடத்தியிருக்கிறார். ஆனால், இந்த போராட்டங்களுக்கு எல்லாம் உயிர் மூச்சு கிடைத்தது 'மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என்று சில மாதங்களுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்த போதுதான் என்பதில் சந்தேகமில்லை.
மதுவிலக்குக்காக பலரும் போராடினாலும், 'ஆட்சிக்கு வரும் பலம் உள்ள கட்சி மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என்று கூறும் போது, அந்த அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைக்கிறது. தி.மு.கவின் அறிவிப்பு தாய்மார்கள் மத்தியில் மதுவிலக்கு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து நீண்ட காலமாக மதுவிலக்கு வேண்டும் என்று போராடிய சசி பெருமாள் மரணம் மதுவிலக்குப் போராட்டத்தில் புதிய மைல்கல் ஆனது. இப்படியொரு பரபரப்பான சூழலில்தான் 'மதுவிலக்கு, 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்' மையப் பிரசாரம் ஆனது.
'உடனே ஒரே கையெழுத்தில் மதுவிலக்கை கொண்டு வந்துவிடுவோம்' என்கிறது தி.மு.க 'அதெல்லாம் முடியாது. அது சாத்தியமில்லை. மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருவோம்' என்கிறது அ.தி.மு.க. இந்த கோரிக்கைக்கு தாய்மார்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு இப்படியொரு 'போர் முழக்கத்துக்கு' வித்திட்டுள்ளது.
இதுவரை, தமிழகத்தில் பல பிரச்சினைகள் தேர்தலை முடிவு செய்திருக்கிறது. 1967இல் காங்கிரஸ் கட்சியின் இந்தி திணிப்பு, தமிழகத் தேர்தல் முடிவை தீர்மானித்தது. 1977இல் தி.மு.க மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தேர்தல் முடிவை தீர்மானித்தன. 1980இல் 'எம்.ஜி.ஆர் ஆட்சி கலைப்பு' தேர்தல் முடிவை நிர்ணயித்தது. 1984இல் எம்.ஜி.ஆர் உடல்நிலையும் இந்திரா காந்தி கொலையும் தமிழக தேர்தல் முடிவுகளை மாற்றியது.
1991 சட்டமன்றத் தேர்தலில் ராஜீவ் கொலை தமிழக தேர்தல் முடிவை மாற்றிக் காட்டியது. 1996இல் அ.தி.மு.க மீதான ஊழல், வளர்ப்பு மகன் திருமணம் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2001இல் 'ஜெயலலிதா கைது' தேர்தல் முடிவை மாற்றியது. 2006இல் சுனாமியும், பொடா கைது, மதமாற்ற தடை சட்டம் போன்றவை தமிழக தேர்தல் களத்தில் முடிவை நிர்ணயித்தது. 2011 சட்டமன்ற தேர்தலில் '2-ஜி அலைக்கற்றை ஊழல்' 'இலங்கை தமிழர் படுகொலை' போன்றவை தமிழக தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றியது.
இப்போது 2016இல் சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது, அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகள் என்று எதிர்கட்சிகள் குரல் கொடுத்தாலும், 'மதுவிலக்கு' முக்கிய பிரசாரமாக இருக்கப் போகிறது. அதே நேரத்தில் 'மதுவிலக்கும்' 'தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவுடன்' கூட்டணி சேராமல் மற்ற கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதும் இந்த முறை தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்திடும் நிலை உருவாகியிருக்கிறது.
இன்றைக்கு களத்தில் நிற்கும் கட்சிகள் அனைத்துமே தங்கள் தேர்தல் அறிக்கையில், அல்லது தேர்தல் முழக்கத்தில் 'மதுவிலக்கு அமல்படுத்துவோம்' என்பதை முதலும் முக்கியமானதுமான கோரிக்கையாக முன் வைத்துள்ளார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி 'எங்கள் கோரிக்கையை தி.மு.கவினர் பிரதியெடுத்து விட்டார்கள்' என்றே குற்றம் சாட்டுகின்றது. குமரி அனந்தன் போன்ற காந்தியவாதிகளோ, 'நாங்கள்தான் இவர்களுக்கு எல்லாம் முன்பிலிருந்து மதுவிலக்கு கேட்டு போராடி வருகிறோம்' என்கிறார்கள். வைகோவோ 'நான், இதற்காகவே தமிழகம் முழுவதும் பாதயாத்திரை சென்றிருக்கிறேன்' என்கிறார். இவ்வளவு பரபரப்பு மிகுந்த கோரிக்கையாக மதுவிலக்கு இந்த தேர்தலில் தமிழகத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா, அ.தி.மு.க சார்பில் ஏற்கெனவே பிரசாரத்தில் குதித்து விட்டார். தி.மு.க சார்பில் மார்ச் 15 அன்று மதுரையில் பிரசாரத்தை தொடக்கி விட்டார் ஸ்டாலின். மார்ச் 23ஆம் திகதியிலிருந்து 93 வயதான தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி, தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
மக்கள் நலக்கூட்டணி, தே.மு.தி.க கட்சிகள் சார்பில், தொகுதிப் பங்கீடுகள் முடிக்கப்பட்டு, விஜயகாந்த் ஏற்கெனவே பிரசாரம் சென்று விட்டார். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், மார்க்ஸிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பிரசாரம் புறப்படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைத்தாற் போல் பா.ஜ.கவின் அகில இந்திய தலைவர் அமித்ஷா திருச்சியில் பிரசாரத்தில் பங்கேற்றார். 'இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு அ.தி.மு.க அரசு' என்று கூறி 'தி.மு.க, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள்' என்று பிரகடனம் செய்துள்ளார்.
அனல் பறக்கும் தமிழக தேர்தல் பிரசாரத்தின் இறுதியில் வெல்லப் போவது எந்த கதாநாயகன் 'மதுவிலக்கா', 'அ.தி.மு.க அரசுக்கு எதிரான அதிருப்தியா' 'கட்சிகள் தனித்துப் போட்டியிடும் ஸ்டைலா' என்பதை மே 19ஆம் திகதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் வெளிச்சததுக்குக் கொண்டு வரும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago