2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மதச் சுதந்திரம் பற்றி கண்விழிக்கும் பெருந்தேசியம்

Johnsan Bastiampillai   / 2023 ஜூன் 07 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

மதச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் விதத்திலான சட்டம் ஒன்றைக் கொண்டு வரவுள்ளதாக அரசாங்கம் கூறி வருகின்றது. இலங்கையில் அவரவர் தமக்குரிய மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், பிற மதங்களை இழிவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. 

குறிப்பாக, சிங்கள அரசியல்வாதிகள் இவ்வாறான கருத்துகளைக் கூறி வருவதை பரவலாக அவதானிக்க முடிகின்றது. 

இது மிகவும் நல்லதொரு நிலைப்பாடாகும். மத ரீதியான வெறுப்புப் பேச்சுகளை கட்டுக்குள் வைத்திருக்க, பெருந்தேசியம் முன்னிற்பது வரவேற்கத் தக்க விடயம் என்பதில், இருவேறு கருத்துகள் யாருக்கும் இருக்க முடியாது. 

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில், பலர் கருத்துகளைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிகின்றது. மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜெரோம் பெர்னாண்டோ என்பவர் தெரிவித்த பௌத்த மத வெறுப்பு கருத்துகள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தன. 

அதன் பிறகு, நாடாஷா என்ற பேச்சாளர் கூறிய பௌத்த மதத்தை கேலி செய்யும் கருத்துகள் தொடர்பாக கண்டனங்களும் விமர்சனங்களும் கடந்த ஒரு வாரமாக, இலங்கையின் சமூக, அரசியல் பரப்புகளில் நிரம்பி வழிகின்றன. 

இந்தப் பின்னணியிலேயே ஆட்சியாளர்களும், பெருந்தேசியமும் மத வெறுப்பு பிரசாரகர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர். அதாவது, பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்ட பிறகுதான், இவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து, மதச் சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது கவனிப்புக்கு உரியது. 

இலங்கையில் இன, மத வெறுப்பு பிரசாரங்கள் இடம்பெறுவது முதன் முறையல்ல; சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே இன, மத வெறுப்பு பிரசாரங்களும் கருத்துமோதல்களும் இருந்து வந்திருக்கின்றன. 

அநகாரிக தர்மபாலவின் காலத்துக்குப் பின்னர் இது கட்டமைக்கப்பட்ட ஒரு விடயமாக மாறியது. அதன் பிறகு தனிச் சிங்கள சட்டம் போன்ற நடுநிலையற்ற சட்ட ஏற்பாடுகள் கொண்டு வரப்பட்டன. 

இலங்கையை பொறுத்தமட்டில், மதச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும், மத வெறுப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவோரை தண்டிப்பதற்கும் புதிதாக ஒரு சட்ட ஏற்பாடு அவசியமில்லை. ஏனெனில், நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பிலேயே மதச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் எனப் பல ஏற்பாடுகள் உள்ளன. 

ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னரும் கூட இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, அரசியல் இலாபத்தை அடைந்து கொள்வதற்கான ஒரு கருவியாக, இனவாதமும் மதப் பாகுபாடும் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அரசியலமைப்பிலும் சட்டத்திலும் உள்ளதன் படி, அவற்றைக் கட்டுப்படுத்த காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 

பல்லின சமூகங்கள் வாழும் நாடென்ற வகையில், இலங்கையில் இன, மத ஒற்றுமை அவசியமாகும். இப்போது நாடு ஓரளவுக்கு ஸ்திர நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதுடன், 2022 ‘அரகலய’வுக்குப் பிறகு, மூவின மக்களிடையேயும் என்றுமில்லாத ஒரு புரிந்துணர்வும் ஒற்றுமையும் இருந்து வருகின்றது. 

ஜெரோம் மற்றும் நடாஷா ஆகியோர் எந்த வகையில், என்ன நோக்கத்துக்காக இவ்வாறான பிரசாரங்களை முன்னெடுக்கின்றார்கள் எனத் தெரியாது. ஆனால், கடந்த காலங்களில் இனவாதமும் மதவெறுப்பும் அரசியல் வெற்றிக்கான உத்தியாக கையாளப்பட்டன என்பதை நாம் மறந்து விடக் கூடாது. 

அத்தகைய திட்டங்களுடன் இவ்வாறானவர்கள் கருத்துகளை வெளியிடலாம்; அல்லது, இந்த நிலைமையை பெருந்தேசியக் கட்சிகளும் வெளிநாட்டுச் சக்திகளும் தம்முடைய இலக்கை அடைந்து கொள்வதற்கு சாதகமான ஒரு களநிலைமையாக பயன்படுத்தக் கூடும். இப்படி பல சம்பவங்கள் முன்னர் நடந்துள்ளன. எனவே, இது ஒரு பாரதூரமான நிலைமையாகும். 

அந்த வகையில், மத சுதந்திரத்தை மட்டுமன்றி ஒவ்வோர் இனக் குழுமத்துக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது, காலத்தின் மிக முக்கியமான தேவை என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. ஆனாலும், இந்த இடத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். 

நமது நாட்டில் மத வெறுப்புக் கருத்துகள் முன்வைக்கப்படுவது இது முதற்றடவையல்ல. தமிழர்களை ஒடுக்கிய பிறகு, இனவாதம் முஸ்லிம்களை நோக்கித் திரும்பியது. யுத்த முடிவுக்குப் பிறகு முஸ்லிம்களை இன ரீதியாகவும் மத ரீதியாகவும் நசுக்குவதற்கான முயற்சிகள் பெருவாரியாக மேற்கொள்ளப்பட்டன.

இஸ்லாம் மதத்துக்கும் இறைதூதருக்கும் எதிரான கருத்துகள் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டன. பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன; புனித குர்ஆன் பிரதிகள் நாசப்படுத்தப்பட்டன. இஸ்லாமும் முஸ்லிம்களும் ஆபத்தானவர்கள் என்ற கருத்தியல் உருவாக்கப்பட்டது. 

பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பௌத்த தேரர்கள், இதற்குத் தலைமை தாங்கினர். முக்கியமான அரசியல்வாதிகள் பலர், இதற்கு ஆசீர்வாதம் வழங்கினர். கடந்த 20 வருட அரசியல் இயங்குநிலைக்கான எரிபொருளாக இனவாதமும் மதவாதமும் இருந்திருக்கின்றது என்பது இரகசியமல்ல. 

ஆனால், அப்படியிருந்தும் அரசியலமைப்பு ஏற்பாடுகளின்படி அல்லது சிவில் சட்டங்களின் படி மேற்குறிப்பிட்ட இன, மத வெறுப்பு செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இஸ்லாமிய மதம் அவமதிக்கப்பட்ட போது, மதச் சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று அரசாங்கமோ முக்கிய அரசியல்வாதிகளோ கருத்துரைக்கவில்லை. 

இப்போது பௌத்த மதம் அவமதிக்கப்படும் போதுதான், அவர்களுக்கு ஞானம் பிறந்திருக்கின்றது. இவ்வளவு காலமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெருந்தேசிய சக்திகள், கண்விழித்து களத்துக்கு வந்து, மதச் சுதந்திரம் பற்றி வகுப்பு எடுக்க முனைகின்றன. 

ஆகவே, இதற்குப் பின்னால் வேறு நோக்கங்கள் உள்ளனவா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகின்றது. அத்துடன், ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் உருவாக்கப்படா விட்டாலும் கூட, நடைமுறையில், அவர்கள் விரும்புகின்ற மதத்துக்கு மட்டும் சட்ட அமலாக்கத்தில் முன்னுரிமை வழங்கப்படுமா என்ற சந்தேகமும் எழுகின்றது. 

ஜேரோமுக்கும் நடாஷாவுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமென்றால், ஏன் இஸ்லாமிய மதத்தை அவமதித்த ஞானசார போன்றோருக்கு எதிராக சட்டம் பாயவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நியாயமான கேள்வி, நாட்டு மக்கள் எல்லோருக்கும் எழும் பொதுவான ஒன்றுதான். 

குறிப்பாக பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாடுகளில் இன, மத தனித்துவங்களும் அவரவர் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனாலேயே, இலங்கையின் அரசியலமைப்பில் அதற்கான ஏற்பாடுகள் உள்ளன; சிவில் சட்டங்களும் அதற்கு துணைநிற்கின்றன. 

ஆனால், உண்மையில் இலங்கையில் இருக்கின்ற பிரச்சினை அரசியலமைப்பு அல்லது சட்டம் பற்றியதல்ல. அதன் முறையான அமலாக்கம் பற்றியதாகும். அதாவது, எழுத்தில் என்ன இருந்தாலும் அதனை அமல்படுத்துவோர் தமக்கு அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றாற்போலவே அதனை நடைமுறைப்படுத்துகின்றனர். 

இப்போது புதிதாக மதச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான சட்டம் கொண்டு வரப்படுமாயின், இந்த நிலைமைகள் மாறும் என்று எந்த அடிப்படையில் நம்புவது என்றுதான் தெரியவில்லை. 

எல்லா மதங்களுக்குமான சுதந்திரம் சரிவர உறுதிப்படுத்தப்படுமா அல்லது அதிலும் பாராபட்சம் காட்டப்படுமா? என சிந்திக்க வேண்டியுள்ளது. 

அதுமட்டுமன்றி, அரசாங்கம் மதச் சுதந்திரத்தை, இனங்களின் தனித்துவத்தை பாதுகாக்க  உண்மையிலேயே விரும்புகின்றது என்றால், தற்போதிருக்கின்ற சட்டங்களின் அடிப்படையில் கடந்த காலங்களில் மத வெறுப்பு பிரசாரங்களை முன்னெடுத்தவர்களை முதலில் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர வேண்டும். 

உண்மையில், கடந்த காலங்களில் இன, மத வெறுப்பு பேச்சுகளை பேசிய, நடவடிக்கைகளை மேற்கொண்ட காவியுடைதாரிகள், மதகுருமார், சிங்கள அமைப்புகளை சட்டங்களின் துணைகொண்டு கடுமையாக தண்டித்திருந்தால், ஜெரோம்களும் நடாஸாக்களும் உருவெடுத்திருக்க மாட்டார்கள். புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டு வர வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X