Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஐயூப்
ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையே இவ்வருட சர்வதேச மனித உரிமை தினம் கொண்டாடப்பட்டது.
இவ்வருடம் இந்த நாள் இரண்டு காரணங்களுக்காக மிகவும் முக்கியத்துவம் பெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மனித உரிமை தொடர்பான உலகளாவிய பிரகடனத்துக்கு (Universal Declaration of Human Rights) 75 வருடங்கள் பூர்த்தியாகியது. அத்தோடு பலஸ்தீன் மண்ணில் காசாவில் உலகமே பார்த்திருக்க எவ்வித தடையுமின்றி இஸ்ரேல் வரலாற்றில் மிகக் கொடூரமான போர்க் குற்றங்களைப் புரிந்து வருகிறது. அங்கு மனித உரிமை பட்டப் பகலில் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. உலகம் செய்வதறியாது பார்த்துக்கொண்டு இருக்கிறது.
கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் காசாப் பகுதியில் சுமார் 18,000 சாதாரண மக்கள் இஸ்ரேலின் வான் குண்டுத் தாக்குதல்களாலும் தரைவழித் தாக்குதல்களாலும் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களுள் சுமார் 7000 சிறுவர்களும் அடங்குகிறார்கள். ஆயிரக்கணக்கான பாரிய கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. அந்த இடிபாடுகளுக்குள் மேலும் ஆயிரக்கணக்கானோரின் சடலங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. அகதி முகாம்களாவது விட்டுவைக்கப்படவில்லை. அவற்றிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொடுமை மேலும் தொடர்கிறது.
காசா மக்களுக்கான உணவு, தண்ணீர், மருந்து, எரிபொருள் ஆகிய அனைத்துக்கும் இஸ்ரேல் தடைவிதித்துள்ளது. இத்தனை நடக்கும்போது, மனித உரிமை பிரகடனத்தைக் கையில் வைத்துக்கொண்டு கைக்கட்டிப் பார்த்துக் கொண்டு இருக்க உலகில் சமாதானத்தை நிலைநாட்டவென உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளில் மனித உரிமைகளை வலியுறுத்தும் அமெரிக்காவின் வெளிப்படையான வெட்கமில்லா ஒத்துழைப்பிலேயே உலகின் மிகக் கொடூரமான இந்த மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன.
காசாவில் நடைபெறுவதைச் சிலர் இஸ்ரேல்-ஹமாஸ் போர் என்று அழைக்கின்றனர். காசாவில் நடைபெறுவது யுத்தமல்ல. எப்போதாவது ஒரு சாரார் குண்டொன்றை எரிய, மற்றைய சாரார் இராப்பகலாக வான்வழித் தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான சாதாரண மக்களைக் கொன்று குவிப்பதைப் போர் என்று அழைக்க முடியாது. வல்லரசுகளின் ஒத்துழைப்பில் ஒரு இனத்தை நோக்கிய ஒருதலைபட்ச கண்மூடித்தனமான தாக்குதல் மூலமான இன ஒழிப்பே அங்கு நடைபெறுகிறது.
இது பத்து வீதத்துக்கும் குறைந்த யூத மக்கள் வாழ்ந்த பலஸ்தீனில் அம்மக்களை வெளியேற்றி அங்கு யூதர்களுக்கான நாடொன்றை அமைக்கப் பல மேற்குலக நாடுகளின் உதவியுடன் 1917ஆம் ஆண்டு பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் ஆத்தர் பல்பர் (Arthur Balfour) வரைந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாகும். அதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் அக்காலத்திலிருந்தே யூத மக்களை பலஸ்தீனில் கொண்டு வந்து குடியேற்ற ஆரம்பித்தது.
1940களில் ஐரோப்பாவில் பல நாடுகளில் இன வேற்றுமையின் அடிப்படையில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட யூதர்களும் பலஸ்தீனுக்கு கொண்டு வரப்பட்டார்கள். அவ்வாறு வந்த யூதர்களும் சுதேச மக்களைத் தாக்கி அவர்களது காணிகளைப் பறித்தார்கள். 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரகடனப்படுத்தப்பட்டது. அரபு நாடுகள் அதனை எதிர்த்துப் படையெடுத்தபோது, மேற்குலக நாடுகளின் பாரிய ஒத்துழைப்பில் அது முறியடிக்கப்பட்டது. அதன் மூலமும் மேலும் நிலம் பறிக்கப்பட்டது. 70 இலட்சம் பலஸ்தீன மக்கள் பலஸ்தீனிலிருந்து அகதிகளாக வேறு நாடுகளுக்கு விரட்டப்பட்டார்கள்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் என்ற இரு நாடுகள் அம்மண்ணில் அமைய வேண்டும் என்று ஐ.நா. பிரேரணை நிறைவேற்றியது. ஆனால், பலஸ்தீன் என்ற நாடு ஒருநாளும் உருவாகவில்லை. பலஸ்தீனில் அமைந்த இஸ்ரேல் என்ற நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலுள்ள பகுதிகளையும் இஸ்ரேல் அரசாங்கமே கட்டுப்படுத்தி வந்தது, வருகிறது. அதிலும் ஜோர்தான் நதியின் மேற்குக்கரையில் பலஸ்தீனர்கள் வாழ்ந்த பகுதிக்குள்ளும் நூற்றுக் கணக்கான இஸ்ரேலிய குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.அது இன்றும் தொடர்கிறது.
இனவழிப்பும் காணி பறிப்பும் தொடர்ந்தது. 1967ஆம் ஆண்டு அரபு நாடுகள் இந்தக் கொடுமைகளை எதிர்த்த போது போர் வெடித்தது அமெரிக்கா மற்றும் மேற்குலக உதவியில் இஸ்ரேல் அரபு நாடுகளைத் தோற்கடித்தபோது, அந்நாடுகளின் நிலங்களும் கைப்பற்றப்பட்டன.
அவற்றில் சில பகுதிகள் மீண்டும் அந்நாடுகளிடம் கையளிக்கப்பட்டன. ஆனால், பலஸ்தீன மக்களிடம் பறிக்கப்பட்ட நிலம் இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. 1973ஆம் ஆண்டும் இதே நடந்தது. மேலும் ஒரு
பகுதி நிலம் பறிக்கப்பட்டது.
பலஸ்தீன மக்கள் தொடர்ந்து இம்சிக்கப்பட்டு வந்தார்கள். அதற்கு எதிராக ஒரு காலத்தில் யஸீர் அரபாத்தின் தலைமையில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது. அப்போதும் அந்த எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பாவித்து மென்மேலும் நிலம் பறிக்கப்பட்டு யூத குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.
1994ஆம் ஆண்டு அமெரிக்கத் தலையீட்டில் அரபாத்துக்கும் இஸ்ரேலிய பிரமதர் யிடஷாக் ரபீனுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. ஆயினும் இஸ்ரேல் தமது விஸ்தரிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவில்லை.
எனவே, தான் இவ்வருடம் ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்கள் வெறுமைக்குள் இடம்பெறவில்லை என்று அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்டரேஸ் கூறியிருந்தார். கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸின் தாக்குதலை அடுத்தும் அதனைப் பாவித்து இஸ்ரேலியப் படையினர் மக்களைப் பகிரங்கமாகக் கொன்று குவிக்கிறார்கள். அத்தாக்குதல்களில் பெரிதாக ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலியர்கள் கூறுவதில்லை.
பல்பர் பிரகடனத்தின் படி, பலஸ்தீனை முழுமையாக விழுங்கும் திட்டத்தின் மற்றொரு கட்டமாகும். ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸின் தாக்குதல் இடம்பெறாவிட்டாலும் இதற்காக இஸ்ரேலியர்கள் ஏதாவது காரணத்தைத் தேடிக் கொள்வார்கள். அல்லது நிர்மாணித்துக் கொள்வார்கள்.
அத்தனையும் அமெரிக்காவின் பகிரங்க உத்தியுடனேயே மேற்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இது பல்பர் திட்டத்தின் நீட்சியாகும். இம்முறை இஸ்ரேலிய தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டவுடன் வெளிச்சக்திகள் தலையிடும் என்பதற்காக அமெரிக்க மத்தியதரைக் கடலுக்கு போர்க் கப்பல்களை அனுப்பியது. பாரிய கட்டிடங்களைத் தகர்க்க நாசக்கார ஏவுகணைகளை அமெரிக்காவே வழங்கி வருகிறது.
அமெரிக்கா இஸ்ரேலுக்கு பல பில்லியன் டொலர் நிதி உதவி மற்றும் இராணுவ உதவியும் வழங்கியிருக்கிறது. எனவே, பலஸ்தீனில் கொல்லப்படும் ஒவ்வொரு உயிருக்கும் அமெரிக்கத் தலைவர்களும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
ஒக்டோபர் மாதம் ஹமாஸின் தாக்குதல் வெறுமைக்குள் இடம்பெறவில்லை. நீண்டகால நிலப் பறிப்பு மற்றும் கொடுமைகளின் விளைவே அது என்று ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரேஸ் கூறினார். இஸ்ரேலின் தாக்குதல்களானது சிறுவர்கள் மீதான போர் என்று காசாவுக்கான யுனிசெப் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் கூறினார்.
ஐ.நா. நிறுவனங்கள் அனைத்தும் போர் நிறுத்தத்தைக் கோருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் தொடர்பான பிரேரணையொன்று ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது, அமெரிக்கா அதற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து அது நிறைவேறுவதைத் தடுத்தது. எனவே ஐ.நாவும் அதன் உறுப்பு அமைப்புக்களும் இருந்து என்ன பயன் என்ற கேள்வி எழுகிறது.
தமது நாட்டை பறித்தவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் சிறியதோர் தாக்குதலை நடத்தினாலும் உலகம் அதனைப் பயங்கரவாதம் என்கிறது. ஆனால், நாட்டை பறித்தவர்கள் வல்லரசுகளின் உதவியுடன் அப்பாதிக்கப்ட்ட மக்களில் பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவிக்கும்போது, அதே உலகம் அது பாதுகாப்புக்கான உரிமை என்கிறது.
போரின்போது சாதாரண மக்கள் கூட்டுத் தண்டனைக்கு உள்ளாக்குவது சட்ட விரோதம் என்கிறார்கள்.
ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்திலிருந்து சாதாரண மக்களை வெளியேற்றுவது சட்ட விரோதம் என்கிறார்கள். மருத்துவமனைகள், பாடசாலைகள் போன்றவற்றைத் தாக்குவது சட்டவிரோதம் என்கிறார்கள்.
பொது மக்களுக்கான உணவு, தண்ணீர், மருந்து போன்றவற்றின் விநியோகத்தைத் தடுத்து அவற்றை ஆயுதமாகப் பாவிப்பது சட்ட விரோதம் என்கிறார்கள். ஆனால், அவை அனைத்தும் காசாவில் இடம்பெறுகிறது.
இத்தனைக்கும் உதவி அளிக்கும் அமெரிக்காவுக்கோ மேற்குலகுக்கோ இனிமேலும் உலகில் ஏனைய இடங்களில் மனித உரிமைகளைப் பற்றிப் பேச தார்மிக உரிமை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறு பேசினாலும், அந்நாடுகளின் தலைவர்கள் மேற்குலகின் இரட்டை வேடத்தைச் சுட்டிக்காட்டி தமது கொடுமைகளை நியாயப்படுத்துவர். ஏற்கனவே இலங்கைத் தலைவர்கள் காசாவுக்கும் இலங்கைக்கும் இரண்டு விதிகள் ஏன் என்ற மேற்குலகைப் பார்த்துக் கேட்கிறார்கள்.
செயலாற்றுத் திறன் கொண்ட மனிதர்களும் மனித அமைப்புக்களுமின்றி சமயங்களோ சட்டங்களோ அல்லது பிரகடனங்களோ ஆசாரக்கோவைகளோ உலகில் நீதியை நிலைநாட்டவோ மனிதனின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாமளிக்கவோ போவதில்லை என்பது தற்போது நிரூபனமாகிவிட்டது.
12.13.2023
25 minute ago
1 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
3 hours ago
5 hours ago