2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

மலை சரிந்தது.…

Editorial   / 2025 ஜனவரி 30 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சோமசுந்தரம் சேனாதிராஜா என்றழைக்கப்படும் மாவை சேனாதிராசா இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்.  இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.
அவரின் சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராஜா எனஅழைக்கப்பட்டார்.

அவர், யாழ்ப்பாணம் மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்தார்.

வீமன்காமம் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், நடேஸ்வராக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் அவர் கற்ற பின்னர், இலங்கைப் பல்க லைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயற்பட்டு 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்குபற்றினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார்.

1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.
1969 முதல் 1983 வரையான காலப் பகுதியில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மகசீன் சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.

1977 இல் மாவை சேனாதிராசா தமது உறவு முறை பவானி என்பவரைத் திருமணம் முடித்தார்.

1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

1989 பாராளுமன்றத் தேர்தலில் ஈ.என்.டி.எல்.எவ்., ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத் தில் போட்டியிட்டபோதும் அதில் தெரிவாகவில்லை.

அதன் பின்னர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13இல் கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டமையை அடுத்து அவரின் இடத்துக்கு மாவை சேனாதிராஜா தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.


அந்தத் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூடுதலாக அம்பாறைக்கே அவர் பயன்படுத்தினார்.

பலருக்கு அம்பாறை மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகள், துறைமுக அதிகாரசபை நியமனங்களை பெற்றுக்கொடுத்தமையுடன் பன்முகப்படுத்தப்பட் நிதியை அம்பாறை மாவட்டத் தமிழ் கிராமங்களுக்கே அவர் ஒதுக்கியும் இருந்தார். பெரியநீலாவணை வைத்தியசாலை இவருடைய பன்முகப் படுத்தப்பட்ட நிதி மூலம் கட்டடம் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

1994 தேர்தலில் அம்பாறை மாவட் டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி மூல மாகத் தேர்தலில் போட்டியிட்டபோதும் அவர் தெரிவாகவில்லை.
1999 ஜூலை 29 இல் நீலன் திருச் செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார்.
2000ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.

2001 ஒக்டோபர் 20 இல் தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நிறுவிய பின்னர் 2001 தேர்தலில் யாழ். மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.

அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர் விடுதலை கூட்டணி 15 பாராளுமன்ற உறுப்பினர்களில் 14 பேர் விடுதலைப்புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதியாக ஏற்க வேண்டும் என்ற தீர்மானத்தை பாராளுமன்றக் குழு கூட்ட எடுத்தபோது – ஆனந்தசங்கரி அதை ஏற்கமுடியாது என முட்டுக்கட்டை போட்டார். அப்போது விடுதலைப்புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்க வேண்டும் என்பதில் மாவை உறுதியாக இருந்தார்.
அதன்பின்னர் 2004, 2010, 2015, தேர்தல்களில் மீண்டும் தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

2020 தேர்தலில் போட்டியிட்டும் 29 ஆயிரத்து 358 வாக்குகளைப் பெற்றும் அவர் தெரிவாகவில்லை.


தமிழரசுக்கட்சி பொதுச்செயலாளராக 2004 தொடக்கம் 2014 வரையும் பதவி வகித்தார். பின்னர் வவுனியாவில் 2014 யில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் 15 ஆவது தேசிய மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

2024 பொதுத்தேர்தலின் போது கட் சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுகின்றார் என அறிவித்தார்.

கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் 2024 டிசம்பர் 28 இல் வவுனியாவில் இடம்பெற்றபோது அந்தக் கூட்டத்தில் கட்சியின் பதில் தலைவர் பதவி சி.வி.கே. சிவஞானத்துக்கு வழங்கப்பட்டது. மாவைக்கு அரசியல் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் கடந்த 2014 செப்டம்பர்07 தொடக்கம் 2024, டிசம்பர் 28 வரையும் ஏறக்குறைய 10 வருடங்கள் தலைவராகவும், அதற்கு முன்னர் 2004 தொடக்கம் 2014 வரை 10 வருடங்கள் பொதுச்செயலாளராகவும் அவர் பதவியில் இருந்துள்ளார்.

மாவை சேனாதிராசா வீட்டில் தவறி விழுந்து தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டதால் யாழ்ப்பாண மருத்துவமனையில் 2025 ஜனவரி 28 அன்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 2025 ஜனவரி 29 அன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 82 ஆகும்.

மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல், தெல்லிப்பழை மாவிட்டபுரம், அரசடி வீதியிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 2025.02.02, ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.00 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .