2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

முஸ்லிம் எம்.பிக்கள் என்ன செய்கின்றார்கள்?

R.Tharaniya   / 2025 ஜூலை 30 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

பதவி என்பது சம்பந்தப்பட்ட நபர் வெறுமனே அதிகாரங்களைச் சுகிப்பதற்கான ஒரு ஏற்பாடல்ல, அது பல பொறுப்புக்களையும் பொறுப்புக்கூறலையும் கொண்டதாகும்.

தான் சார்ந்த மக்களுக்கு அப்பதவியின் ஊடாக சேவையாற்றாமல் வருடக் கணக்காக சும்மாவே குந்தியிருந்து, கதிரையைச் சூடாக்கி விட்டு செல்வதற்காக இது வழங்கப்படுவதில்லை.

ஒரு அரசியல்வாதிக்குப் பிரதிநிதித்துவ அரசியலில் வழங்கப்படுகின்ற பதவிகள் இவற்றுள் முக்கியமானவை. அந்த வகையில், தற்போதைய பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் எம்.பிக்களாக அங்கம் வகிப்போர் இந்தப் பொறுப்பை உணர்ந்துள்ளார்களா? அதனை எவ்விதம் நிறைவேற்றப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

முன்னைய காலங்களில் சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற பெருந்தேசியக் கட்சிகளின் ஊடாக முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவிகளைப் பெற்றுக் கொண்டனர். எம்.பிக்களாக அமைச்சர்களாக இருந்தனர். 
அவர்கள் தனியே முஸ்லிம் சமூகம் என்ற அடிப்படையில் பிரத்தியேகமாகப் பேசவில்லை.

ஆயினும், கூட, தாங்கள் அரசாங்கத்துடன் இருந்தாலும் எதிர்த்தரப்பில் இருந்தாலும் சமூகத்திற்கான விடயங்கள் பலவற்றைத் திட்டமிட்டுச் செய்திருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகம் தொடர்பான விவகாரம் ஒன்று வருகின்றபோது, அதற்காக ஜனநாயக வழியில் குரல்கொடுத்த பலரையும் கண்டிருக்கின்றோம்.  

இந்த அடிப்படையில்தான், துருக்கித் தொப்பி போராட்டம் போன்ற முன்னெடுப்புக்களை நாம் இன்று வரை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம்.
1980களில் நிலைமைகள் மாறின. அதன் பிறகு வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் வேறு வடிவம் எடுத்தது. தமிழ் ஆயுதக் குழுக்களும் இதற்கிணையாக ‘தமது பாணியில்’ செயற்படத் தொடங்கின. ஒரு குறிப்பிட்ட காலப் புள்ளியில் இருந்து இரண்டும் திரைமறைவில் சேர்ந்தியங்கின எனலாம்.

இந்தக் கட்டத்தில்தான் கிழக்கிலிருந்து முஸ்லிம்களுக்கான தனித்துவ அடையாள அரசியல் உருப்பெற்றது. இதனைப் பொறுக்கமாட்டாத பெருந்தேசியமும் தமிழ்த் தேசியமும் குறிப்பாக விடுதலைப் புலிகள் போன்ற ஆயுத இயக்கங்களும் முஸ்லிம் காங்கிரஸின் பேரெழுச்சியை நசுக் முற்பட்டன.

ஆனால், மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் என்ற மக்கள் தலைவன் மற்றும் அவரோடு அன்றிருந்த அரசியல்வாதிகளின் ஆளுமையும், நெஞ்சுரமும் பலமான அடித்தளமொன்றை இட்டது என்பதை மறுக்க முடியாது.

அதற்கு முந்திய காலத்தில் எந்தவொரு அரசியல் தலைவரும் செய்திராத தூர நோக்கான திட்டங்களை அஷ்ரப் குறுகிய காலத்திற்குள் முன்னெடுத்தார். பல இளம் அரசியல்வாதிகளை உருவாக்கினார்.

பெருந்தேசியத்துடன் மிகப் பலமான உறவை வைத்துக் கொண்டு சமூகத்திற்காக அதே பெருந்தேசியத்தையும், விடுதலைப் புலிகளையும் எதிர்ப்பதற்கான தைரியம் அவருக்கு இருந்தது.

நோர்வேயின் உள் வருகையை அவர் நேரிடையாகவே சந்திரிகா அம்மையாரிடம் எதிர்த்தார். அவரது மரணம், இப்படியான காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சதித்திட்ட படுகொலையாகவும் இருக்கலாம் என்பது வேறு விடயம்.
2000ஆம் ஆண்டிற்குப் பிறகு முஸ்லிம் அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் உருவாகின.

றவூப் ஹக்கீம் தலைவரானமை, அக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சிகளைத் தொடங்கியமை என்று பல சம்பவங்கள் நடந்தேறி விட்டன.
அதன் பிறகு, ஹக்கீம், றிசாட், அதாவுல்லா உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பல பிராந்திய அரசியல் தலைவர்களும் எம்.பிக்களும் பதவிக்கு, அதிகாரத்திற்கு வந்தார்கள்.

இன்னும் சிலர் இப்போதும் இருக்கின்றார்கள்.இவர்கள் யாருமே முஸ்லிம் 
சமூகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறி விட முடியாது. இவர்களுள் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டு 
மூன்று அரசியல்வாதிகள் அபிவிருத்தி அரசியலில் குறிப்பிடத்தக்க பணிகளை ஆற்றியுள்ளனர்.

ஆனால், மறைந்த தலைவரின் அளவுக்கு இவர்கள் மக்களுக்கு சேவையாற்றவில்லை. தூர நோக்கான திட்டங்களை முன்னெடுக்கவில்லை. மக்கள் மனங்களை வெல்லவில்லை என்ற மனக்குறை இன்றும் இருக்கின்றது.  மு.கா. தலைவர் ஹக்கீம் உட்பட பலர் மீது இவ்வாறான விமர்சனங்கள் உள்ளன.

2000ஆம் ஆண்டு தொடக்கம் இப்போதைய நாடாளுமன்றம் வரையான காலப் பகுதியில் எம்.பி.யாக இருந்தவர்கள், இருப்பவர்கள் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காக, அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக பலமாக குரல் எழுப்பவில்லை என்பதுதான் மக்களின் குற்றச்சாட்டாகும்.

பெரும்பான்மையின அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த காலத்திலும், கையில் அதிகாரமும் பதவியும் இருந்த வேளையிலும் கூட முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களுக்குச் செய்ய வேண்டிய முக்கிய பணிகளை செய்யவில்லை என்பது மிகப் பெரிய கைசேதமாகும்.

இதே வழியில், 2024 பாராளுமன்றத் தேர்தலின் பின்னரான தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் எம்.பிக்களும் கதிரைச் சூடாக்கி விட்டு, காலத்தை கடத்தப் போகின்றார்களா என்ற சந்தேகம் இப்போது நியாயமாக எழுந்துள்ளது,  

முஸ்லிம் கட்சிகளின் ஊடாகவும் எஸ்.ஜே.பி. போன்ற பெரும்பான்மைக் கட்சிகளின் ஊடாகவும் இந்த முறை தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் எம்.பிக்கள் தங்களது பொறுப்பை எவ்விதம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதேபோல், மிக முக்கியமாக ஆளும் தேசிய மக்கள் சக்தியூடாக பாராளுமன்றத்திற்கு வந்துள்ள புதுமுக முஸ்லிம் எம்.பிக்கள் தாம் சார்ந்த சமூகத்திற்காக என்ன செய்யப் போகின்றார்கள்? அதற்கான திட்டத்தையும் தைரியத்தையும் அவர்கள் கொண்டுள்ளார்களா?  பாராளுமன்றத்தில் மொத்தம் 
22 முஸ்லிம் எம்.பிக்கள் உள்ளனர். 

ஆளும் கட்சி சார்பான 8 முஸ்லிம் எம்.பிக்களில் ஒருவர் பிரதியமைச்சர், இன்னுமொருவர் பிரதி சபாநாயகர். ஏனைய கட்சிகளிலிருந்து 14 பேர் 
எம்.பிக்களாக உள்ளனர்.

இவர்களுள் முஜிபுர் ரஹ்மான், மரிக்கார், றவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், உதுமாலெப்பை, நிசாம் காரியப்பர், போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டுமே நாடாளுமன்றத்தில் இடைக்கிடையாவது நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதைக் காண முடிகின்றது.

இவர்களில் சிலரும் முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புபட்ட பிரத்தியேக விவகாரங்கள் தொடர்பில் உரையாற்றுவதை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளனர். பாராளுமன்றத்திற்கு வெளியிலான செயற்பாட்டு அரசியலிலும் நிலைமை இவ்வாறுதான் உள்ளது.  

இதேவேளை, ஆளும் கட்சி ஊடாக எம்.பியாக பதவி வகிக்கும் முஸ்லிம் எம்.பிக்களின் நிலைமை இதைவிட மோசமாகும். அவர்கள் அரசியலுக்குப் புதியவர்கள். அதிர்ஷ்டவசமாக எம்.பியான பலருள் இவர்களும் உள்ளடங்குவர்.

என்.பி.பி. என்பது என்னதான் சமூக நல்லிணக்கம், இன மத பேதங்களைக் கடந்த அரசியல் என்று பிரசாரம் செய்து தேர்தலில் வெற்றி பெற்றாலும், முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமிக்காதது முதற் கோணலாகும். அத்துடன், என்.பி.பியை கட்டுப்படுத்த முனையும் ஜே.வி.பி.க்கும் என்.பி.பி. அணிக்கும் இடையில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

பொதுவாக ஜே.வி.பியில் ஒருவித கட்டுக்கோப்பு உள்ளது. எந்த விடயத்தைச் செய்வது என்றாலும், தனது விருப்பப்படி ஒரு எம்.பி. செய்து விட முடியாது. அது பற்றிய மேலிடத்து ஒப்புதல் வேண்டும் என்று விடயமறிந்தவர்கள் கூறுவதுண்டு.
அத்துடன் என்.பி.பியின் முஸ்லிம் எம்.பிக்களும் அரசியலுக்கு புதியவர்கள்.

இலங்கையர் என்ற பொதுமைப்படுத்தலுக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ள இவர்கள் தனியே முஸ்லிம் சமூகத்திற்காகக் குரல் கொடுப்பதாகவோ, காணிப் பிரச்சினைகள், பதவிகளிலான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை மற்றும் உரிமை மீறல்கள் பற்றி நாடாளுமன்றத்திலோ அதற்கு வெளியிலேர் பேசுவதையோ  செயற்படுவதையோ காணக் கிடைக்கவில்லை.

ஆளும் தரப்பின் முஸ்லிம் செயற்பாட்டாளர்கள் பலர் அதிருப்தியடைந்துள்ளதாகக் 
கூறப்படுவது ஒரு புறமிருக்க, ‘ஆளும் கட்சி எம்.பிக்கள் ஓரிருவர் எதிரணி முஸ்லிம் எம்.பிக்களிடம் சில விடயங்களைப் பேசுமாறு வலியுறுத்துவதாக’ ஒரு முஸ்லிம் 
எம்.பி. தனக்கு நெருக்கமான ஒருவரிடம் கூறியுள்ளார்.

ஒரு வரப்பிரசாதமாக எம்.பி. பதவியை தந்த என்.பி.பி.-ஜே.வி.பி. அரங்கத்தின் ஆட்சியில், வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட என்.பி.பி. முஸ்லிம் எம்.பிக்களோ அல்லது தேசியப்பட்டியல் எம்.பியான ஆதம்பாவாவோ மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

ஆனால் அது நடைமுறைச் சாத்தியமானதாகத் தெரியவில்லை.ஆளும் தரப்பில் இருந்தாலும், எதிரணியில் இருந்தாலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது 
சமூகத்தின் பிரச்சினைகள், அபிலாஷைகளுக்காகக் குரல் கொடுக்காமல், வெறுமனே தன்னுடைய பெயர் ‘முஸ்லிமாக’ இருப்பதால் மட்டும் அவர் ‘முஸ்லிம்களின் எம்.பியாக’ ஆகிவிடுவதில்லை என்பதை மட்டும் புரிந்து கொண்டால் சரி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .