2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மஹிந்தவின் தடுமாற்றம்

Mayu   / 2023 டிசெம்பர் 12 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய, மஹிந்த பசில் மற்றும் மத்திய வங்கியிலும் திறைசேரியியலும் உயர் அதிகாரிகள் சிலர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கடந்த (நவம்பர்) மாதம் 14ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது. 

ஆரம்பத்தில் தாம் நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகக் கூறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பின்னர் தாம் அத்தீர்ப்பை ஏற்பதில்லை என்றார்.

இதனையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசாங்கங்கள் பொருளாதார விடயங்களைப் பற்றி சகல முடிவுகளையும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுடனேயே எடுத்ததாகவும் எனவே தாம் அல்ல, பாராளுமன்றமே பொருளாதார நெருக்கு பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் கடந்த மாதம் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூறினார். 

பின்னர் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், தாம் அல்ல, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நாட்டை ஆட்சி புரிந்த நல்லாட்சி அரசாங்கமே பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார். 

இது உயர்நீதிமன்ற தீர்ப்பை மறுத்துத் தெரிவித்த கருத்து என்பதால் அது அத்தீர்ப்பைச் சவாலுக்கு உட்படுத்தும் செயலாகவே தெரிகிறது. ஆனால், அது நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையுமா என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு வகையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் தகாத வார்த்தைகளைப் பாவிக்காத நிலையில், நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க முடியும் என்றதோர் கருத்தும் இருக்கிறது. 

ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கம் மேற்கொண்ட பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான சில நடவடிக்கைகளை மேற்படி உயர் நீதிமன்ற வழக்கின் போது மனுதாரர்கள் எடுத்தரைத்தனர்.

கோட்டாபய 2019இல் பதவிக்கு வந்த உடன் பல்வேறு வரிச் சலுகைகளை அறிவித்தார். அதன் மூலம் திறைசேரி வருடத்துக்கு 68,000 கோடி ரூபாவை இழந்தது. இது நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்தது என்பது ஒரு குற்றச்சாட்டாகும்.

அதேவேளை, 2021இல் டொலரின் பெறுமதியை 203 ரூபாவாக செயற்கையாக வைத்துக்கொள்ள மத்திய வங்கி தம்மிடமிருந்த டொலரில் பெரும் பகுதியைச் சந்தையில் அள்ளிக் கொட்டியது. அதன் மூலம் சில மாதங்களில் நாட்டில் பெரும் வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடி ஏற்பட்டு அது சகல துறைகளையும் பாதித்தது என்பது மற்றொரு குற்றச்சாட்டாகும்.  

நாட்டில் வெளிநாட்டு செலாவணி நெருக்கடி ஏற்படும் அபாயம் இருந்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவதே அதனை சமாளிக்க இருக்கும் ஒரு வழியாகும். ஆனால், பல நிபுணர்கள் இதனை சுட்டிக் காட்டியும் கோட்டாவின் அரசாங்கம் உரிய நேரத்தில் நாணய நிதியத்திடம் செல்லவில்லை என்றும் மனுதாரர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். அவற்றை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

பொருளாதார விடயங்கள் தொடர்பான முடிவுகள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுடனேயே மேற்கொள்ளப்பட்டதாக மஹிந்த முன்னர் கூறினார். அவ்வாறாயின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானதாக பொருளியல் நிபுணர்களும் உயர் நீதிமன்றமும் கூறும் மேற்படி முடிவுகளைப் பாராளுமன்றம் அங்கீகரித்ததா? வரி குறைப்பைப் பற்றியோ ரூபாவின் பெறுமதியைச் செயற்கையாக ஒரே அளவில் வைத்துக்கொள்வதைப் பற்றியே அல்லது சர்வதேச நாணய நிதியத்திடம் போகாதிருப்பதைப் பற்றியோ கோட்டாவின் அரசாங்கம் எப்போதாவது பாராளுமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கோரியதா? ஒருபோதும் இல்லை. 

அவ்வாறு அபிப்பிராயம் கோரப்பட்டாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பொருளியல் அறிவை பாவித்து மனசாட்சிக்கு ஏற்ப எப்போதாவது முடிவுகளை எடுக்கிறார்களா? இல்லை. தத்தமது கட்சித் தலைவர்களின் நிலைப்பாட்டின் படியே அவர்கள் வாக்களிக்கிறார்கள்.

2019இல் கோட்டா பாரியளவில் வர்த்தகர்களுக்கு வரிச் சலுகை வழங்கியபோது, அதன் மூலம் நாட்டின் உற்பத்தி பெருகி நாடு அபிவிருத்தியடையும் என்று பொருளியல் நிபுணரெனக் கூறப்படும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார். 

ரூபாவின் பெறுமதியை ஓரிடத்தில் தக்கவைத்துக் கொள்ள மத்திய வங்கியிடம் இருந்த டொலர்களை சந்தைக்கு விட்டதை பற்றி சபையின் கருத்துக் கேட்கப்பட்டு இருந்தாலும் ஆளும் கட்சியினர் அதனையும் நிச்சயமாக அங்கீகரித்தே இருப்பார்கள்.

நாட்டின் விவசாயத்தை ஏறத்தாழ முற்றாக அழித்துவிட்ட கோட்டாவின் இரசாயன உரத் தடையை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கிராமப்புற எம்.பிக்களும் வரவேற்றுத் தான் கருத்து தெரிவித்து வந்தார்கள். எனவே, பொருளாதார நெருக்கடியின் பொறுப்பைப் பாராளுமன்றத்தின் மீது சுமத்த முடியாது.  

இதேபோல் பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால  மற்றம் பிரதமர் ரணில் ஆகியோரின் தலைமையிலான “நல்லாட்சி” அரசாங்கத்தின் மீது சுமத்திவிட்டு தாம் தப்பித்துக் கொள்ள மஹிந்த எடுக்கும் முயற்சியும் அபத்தமானதாகும். 

1950களில் இலங்கை பிரிட்டனுக்கும் கடன் வழங்கிய நாடாகும். ஆனால், அதன் பின்னர் மாறி மாறி பதவிக்கு வந்தவர்கள் அடுத்த தேர்தலைக் கருத்திற் கொண்டேயல்லாது அடுத்த தலைமுறையைக் கருத்திற் கொண்டு முடிவுகளை எடுக்கவில்லை. இப்போதும் நாட்டில் வறுமையை ஒழிக்கும் எவ்விதத் திட்டமுமின்றி வறிய மக்களுக்கு “அஸ்வெசும” திட்டத்தின் கீழ் மாதாந்தம் பணம் வழங்குகிறார்கள். 

ஊழலை ஒழித்து நாட்டை அபிவிருத்தியுடைய செய்வதாக வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த “நல்லாட்சி” அரசாங்கம் நாட்டை பொருளாதார ரீதியாக சீரழித்தது என்ற மஹிந்தவின் வாதம் உண்மையாகும். இன்று நாடு எதிர்நோக்கியிருக்கும் பெரும் பிரச்சினை வெளிநாட்டுக் கடன் சுமையாகும். மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் பெருந்தொகை வெளிநாட்டுக் கடன் பெறப்பட்டது. அதைக் கொண்டு அவர்கள் என்ன செய்தார்கள்? 

ஹம்பாந்தோட்டையில் கப்பல் வராத துறைமுகமொன்றையும் மத்தளையில் விமானம் வராத விமான நிலையம் ஒன்றையும் ஹம்பாந்தோட்டையில் சர்வதேச மாநாடுகளே நடைபெறாத சர்வதேச மாநாட்டு மண்டபம் ஒன்றையும் நிர்மாணித்தார்கள்.

அவற்றால் பொருளாதாரம் அடைந்த நன்மை என்ன என்பது பெரும் கேள்விக்குறியாகும். அக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரில் முதலீடு செய்யுமாறு கோட்டாவின் காலத்திலிருந்தே அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கிறது. ஆனால், முதலீட்டாளர்கள் வருகிறார்களா?

துறைமுகங்கள், விமான நிலையங்கள், முதலீட்டு வலயங்கள் போன்றவை பொருளாதார அபிவிருத்திக்கு அத்தியாவசியமானவை என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், அவை உலக அரசியல் கள நிலைவரங்களை மதிப்பிட்டே திட்டமிட வேண்டும். தமது முன்னைய ஆட்சிக் காலத்தில் நாட்டில் பெரும் அபிவிருத்தி ஏற்பட்டதாகக் கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் கூறும் மஹிந்த அதற்கான புள்ளி விவரங்களையும் முன்வைத்துள்ளார்.

அப்புள்ளி விவரங்களின் படி அக்காலத்தில் நாடு பெருமளவில் முன்னேற்றமடைந்து இருக்க வேண்டும். அவ்வாறாயின் அக்காலத்தில் நாம் எங்கே இருந்தோம் என்ற கேள்வி எம்மனதில் எழுகிறது. புள்ளிவிபர ரீதியிலான பொருளாதார வளர்ச்சி என்பது எப்போதும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தின் முன்னேற்றத்தைக் குறிப்பதில்லை.

ஏனெனில் பொருளாதார வளர்ச்சி என்பதில் மத்தள விமான நிலையம் போன்ற கட்டுமானங்களும் உள்ளடக்கப்படுகின்றன.

அதேவேளை, புள்ளிவிவரங்கள் எப்போதும் நாட்டின் உண்மையான நிலைவரத்தை எடுத்துக் காட்டுவதில்லை என்பதற்கு மற்றொரு உதாரணம் பணவீக்கம் தொடர்பான தகவல்களாகும்.

தற்போது சந்தையில் விலைவாசி உயர்ந்த வண்ணமே இருக்கிறது. ஆயினும் பணவீக்கம் குறைந்துள்ளதாக மத்திய வங்கியினதும் புள்ளிவிவர திணைக்களத்தினதும் அறிக்கைகள் கூறுகின்றன. 

ரணில் பிரதமராக இருந்த நல்லாட்சி அரசாங்கம் பொருளாதாரத்தைச் சீரழித்தது என்று மஹிந்த கூறுவது ஒன்றும் புதிய விடயமல்ல. அவ்வாறு கூறி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாக வாக்குறுதி அளித்தே 2019இல் பொதுஜன முன்னணி பதவிக்கு வந்தது.

அவ்வாறு வாக்குறுதி அளித்தவர்கள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அதற்குப் பதிலாக அதற்கு நேர்மாறான நடவடிக்கைகளை எடுத்ததாகவே உயர் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விந்தை என்னவென்றால் “நல்லாட்சி” அரசாங்கம் பொருளாதாரத்தை அழித்துவிட்டது என்று கூறும் மஹிந்தவின் ஆதரவுடனேயே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காகக் கடந்த வருடம் ரணிலிடமே நாடு ஒப்படைக்கப்பட்டது. அதே ரணிலின் வரவு-செலவுத் திட்டத்தை அதிகரித்துவிட்டு ரணில்  தலைமையிலான கடந்த அரசாங்கமே பொருளாதாரத்தை அழித்தது என்று மஹிந்த கூறுகிறார். 

பொருளாதார நெருக்கடிக்குத் தாமே பொறுப்பு என்பதை ராஜபக்‌ஷக்களே இதற்கு முன்னர் ஏற்றுக் கொண்டுள்ளனர். தாம் உள்ளிட்ட முன்னாள் அரசாங்கங்களும் தலைவர்களும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று மஹிந்த கடந்த வருடம் டெய்லி மிரர் பத்திரிகையுடனான நேர்காணல் ஒன்றின் போது கூறினார்.

இரசாயன உரத்தடையும் உரிய நேரத்தில் நாணய நிதியத்திடம் செல்லமையும் குற்றமாகும் என்று கோட்டாவும் கடந்த வருடம்  ஏப்ரல் 18 ஆம் திகதி கூறினார். 

எம்.எஸ்.எம். ஐயூப் 

06.12.2023

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .