2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாகாண சபைத் தேர்தல் நடக்குமா?

Johnsan Bastiampillai   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு, தொடர்ச்சியாகக் கோரப்பட்டு வந்ததுடன், அரசாங்கமும் அதை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதுபோன்ற ஒரு தோற்றப்பாட்டைக் காண்பித்து வந்தது. இந்நிலையில், இப்போது மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிய பேச்சுகள் குறைந்து, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது பற்றிய கருத்துகள் மேலெழுந்திருக்கின்றன. 

பல வருடங்களாக இழுபறியாக இருக்கின்ற மாகாண சபைத் தேர்தல்களை, அப்படியே காலாகாலத்துக்கும் முழுமையாகக் கிடப்பில் போட்டுவிட்டு, உள்ளூராட்சித் தேர்தலுக்குச் செல்வதற்கு, ஆட்சியாளர்கள் பெரிதும் விரும்புகின்றார்கள் என்பதையே இது உணர்த்தி நிற்கின்றது. 

அதன்மூலம், மாகாண சபை முறைமை, 13ஆவது திருத்தம், மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் போன்ற நெடுங்காலத் தலையிடிகளில் இருந்து விடுபட்டு ஓடுவதற்கு, அவர்கள் பிரயாசைப்படுகின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமன்று!

மாகாண சபைத் தேர்தலை, காலக்கெதியில் நடத்துவோம் என்றும் அதற்கு முன்னர் எல்லை மீள்நிர்ணய பணிகளை நிறைவு செய்வதுடன், தேர்தல் முறைமையை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் கூறப்பட்டு வந்தது. அதாவது, தேர்தல் தாமதத்துக்கு இவையே காரணம் என்ற தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டது. 

இந்நிலையில், உள்ளூராட்சி சபைகளின் காலம் முடிவடைகின்றது. எனவே, 2022 பெப்ரவரியில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதா அல்லது, ஒரு வருடத்துக்குப் பிற்போடுவதா என்பது குறித்து, அரசாங்கம் ஆராய்வதாக இராஜாங்க அமைச்சர் செஹான் ரணசிங்க கடந்த வாரம் தெரிவித்திருந்தார். 

பல வருடங்களாகக் காலாவதியான மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்தும் தேவைப்பாடு இருக்கின்ற ஒரு சூழலில், இன்னும் பதவிக்காலம் முடிவடையாத உள்ளூராட்சி சபை தேர்தல் பற்றிப் பேசப்படுகின்றமை கவனிப்புக்குரியது.  எவ்வாறிருப்பினும், இலங்கை அரசியல் சூழலில், இதுவெல்லாம் ஆச்சரியமூட்டுவதும் இல்லை; அபூர்வமானதும் இல்லை. 

நாட்டில் எந்தவொரு மாகாண சபையும் தற்போது செயற்பாட்டில் இல்லை. ஆளுநர்களின் கட்டுப்பாட்டிலேயே மாகாணங்களின் நிர்வாகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. மாகாண சபை முறைமை ஊடாக, கொஞ்சமேனும் மாகாணங்களுக்குப் பகிரப்பட்ட அதிகாரங்கள் இப்போது முழுவதுமாக கொழும்பின் கட்டுப்பாட்டில் உள்ளன. ‘மூக்கணாங்கயிற்றை’ மத்திய அரசே வைத்திருக்கின்றது. 

கிழக்கு, வட மத்தி, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் ஆட்சிக்காலம், 2017ஆம் ஆண்டே நிறைவடைந்து விட்டது. வடக்கு, வடமேற்கு, மத்தி ஆகிய மாகாணங்களின் பதவிக்காலம், 2018 இல் காலாவதியானது. மேல், ஊவா, தென் ஆகிய மாகாண சபைகளின் ஆட்சிக்காலம், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே காலாவதியாகிவிட்டது. 

இருப்பினும், ஒரே நாளில் நடத்த வேண்டும் என்ற கோதாவில், பல காரணங்களைக் கூறிய நல்லாட்சி அரசாங்கம், கடைசி மட்டும் தேர்தலொன்றுக்குச் செல்லவில்லை. 

தேர்தலை நடத்துவதற்கு அஞ்சாதவர்களாகத் தம்மை முன்னிறுத்தும் ராஜபக்‌ஷ அரசாங்கமும் இதுவரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல், இழுத்தடித்துக் கொண்டே செல்கின்றது. ஆயினும், அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதில், அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது. அல்லது, அதுபோன்றதொரு பிரக்ஞையை, மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்தது எனலாம். 

ஆனால், தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் பற்றிய கருத்துகளை, ஆளும் தரப்பினர் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு பேசுபொருளாக உள்ள ஒரு விடயதானத்தை மாற்றிக் கொள்ளும் பாங்கிலான நகர்வுகள், மாகாண சபைத் தேர்தல் விடயத்தில், மேலும் தாமதத்தை ஏற்படுத்துவதற்கான சூட்சுமங்களாக அமையலாம். 

அந்தவகையில், மாகாண சபைத் தேர்தல் மிகக் கிட்டிய காலத்தில் நடைபெறுவதற்கான நிகழ்தகவுகள் குறைவடைந்து செல்வதையே இது காட்டுகின்றது. 

இந்த அரசாங்கம் மட்டுமல்ல, நாட்டை இதற்கு முன்னர் ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும் பொதுவாக, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரிலேயே தேர்தல்களை நடத்தி வந்தன. இதற்கான காரணங்களும் வெளிப்படையானவை. 

1988ஆம் ஆண்டு அமலுக்கு வந்த மாகாண சபை முறைமையின் பின்னணியில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இருக்கின்றது. இது இந்திய தலையீட்டுடன் கொண்டு வரப்பட்ட ஒரு திருத்தம் என்பதை நாமறிவோம். 

ஆரம்பத்திலிருந்தே தென்னிலங்கை அரசியல்வாதிகளில் அநேகர், இந்த மாகாண சபை முறைமையை ‘வெள்ளை யானை’க்கு ஒப்பிட்டுப் பேசிவந்தனர். சமகாலத்தில், 13ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் இந்தியாவும் வலியுறுத்தி வந்தன. 

இப்போது, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியம் என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டாலும், அவர்களது பார்வைக் கோணத்தில் பல தடங்கல்கள், சிக்கல்கள் தெரிகின்றன. 

ஆளும் தரப்புக்குள் முரண்பாடுகள் வலுவடைந்துள்ளன. மாகாண சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கப் போவதாக சுதந்திரக் கட்சி கூறியது. நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதுடன், சில விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. 

அத்துடன், எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் வாக்கெடுப்பை நடத்துவது என்பதைத் தீர்மானித்து, சட்டத்தை மறுசீரமைக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. இப்படியான ஓர் இக்கட்டான காலகட்டத்தில், மாகாண சபைத் தேர்தலொன்றுக்குப் போவது, அரசியல் ரீதியாகச் சாதகமான நிலையொன்றாக அரசாங்கம் கருதாது. 

சரி, இதையெல்லாம் தாண்டி, தேர்தலொன்றை நடத்துவது என்ற முடிவுக்கு அரசாங்கம் வந்தாலும், இறுதித் தீர்மானத்தை எடுப்பதில் இன்னுமொரு காரணி, கணிசமான செல்வாக்கைச் செலுத்துகின்றது எனலாம். 

அது, 13ஆவது திருத்தமும் அதன் மீதான இந்திய அழுத்தங்களும் ஆகும். 
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, குறிப்பிட்ட அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குமாறு, இந்தியா தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றது. 

அரசாங்கத்தின் போக்கை அவதானிக்கும் இந்தியா, இலங்கையில் 13ஆவது திருத்தமே இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டு விடுமோ என்று சந்தேகிப்பதாகத் தெரிகின்றது. 

அப்படியான ஓர் ஐயப்பாடு ஏற்பட்ட மறுகணமே, இந்தியா - இலங்கை மீது அழுத்தம் பிரயோகிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் இந்தியா தனது வெளியுறவுச் செயலாளரை கொழும்புக்கு அனுப்பியதும் நினைவு கொள்ளத்தக்கது. 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பலப் பரீட்சைக்களமாக இலங்கை மாறி வருகின்றது. சீனாவோடு அதீத உறவையும் இந்தியாவுடன் மனங் கோணாத நட்பையும் பேண அரசாங்கம் முயற்சிக்கின்றது எனலாம். 

இந்தச் சூழலில், மாகாண சபைத் தேர்தல்களை எப்பாடுபட்டாவது நடத்தினால் கூட, இரண்டு மாகாணங்களின் அதிகாரம் சிறுபான்மை தமிழர்கள், முஸ்லிகளின் வசமாகும். அதன்பிற்கு 13ஆவது திருத்தத்தை முறையாக, முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று இந்தியா ஒற்றைக்காலில் நிற்கலாம். தமிழர்கள் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை மேலும் வலியுறுத்தலாம். 

ஒற்றையாட்சி சிந்தனையிலுள்ள அரசாங்கம், இதனை ஒரு பாதகமான களநிலைமையாகவே கருத வாய்ப்புள்ளது. இனியும், ‘வெள்ளை யானை’களைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்க வேண்டிய நிலைமைகளை, அவர்களாகவே உருவாக்க மாட்டார்கள். 

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளுக்கும் இத்தேர்தல் நடைபெற வேண்டும் என்பதில் எவ்வித அக்கறையும் இல்லை. ஒரு சில தமிழ் எம்.பிக்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. ஏனெனில், அதன்பலத்தை அவர்கள் அறிவர். முஸ்லிம் எம்.பிக்கள் வழக்கம் போல இவ்விடயத்தில் நழுவுகின்ற மீன்களாகவே உள்ளனர். 

இந்தப் பின்னணியிலேலேயே, மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் விட்டுவிட்டு, அதன்மூலம் மாகாண சபை முறைமையை மேலும் தூர்ந்து போகச் செய்து விட்டு, உள்ளூராட்சி தேர்தலுக்கு தாவுவதற்கு ஆட்சியாளர்கள் நினைக்கின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. 

எனவே, மாகாண சபைத் தேர்தலொன்றை நடத்துவது எவ்வகையிலேனும் தமக்கு அனுகூலமானது என்று அரசாங்கம் கருதினால் மட்டுமே, மிகக் கிட்டிய காலத்தில் மாகாண சபைத் தேர்தலொன்றுக்குச் செல்லும் சாத்தியமுள்ளது.

அவ்வாறு கருதும் சூழல் ஏற்படுவதற்கு நீண்டநாள் எடுக்கலாம். அல்லது, அந்தச் சூழல் ஏற்படாமல் போனாலும் கூட, ஆச்சரியப்படுவதற்கில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .