2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

முன்னணிக்கு எதிரான அச்சுறுத்தலும் இன்னும் சிலவும்

Johnsan Bastiampillai   / 2023 ஜூன் 16 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

புருஜோத்தமன் தங்கமயில்

 

 

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழுப்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று புதன்கிழமை காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாராளுமன்றத்தில் சிறப்புரிமை விடயத்தை எழுப்பி உரையாற்ற இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமராட்சி கிழக்கிலுள்ள விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றை கடந்த இரண்டாம் திகதி பிற்பகலில், மருதங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடத்தினார். அப்போது அங்கு வந்த, தங்களை யார் என வெளிப்படுத்தாத நபர்கள் இருவர், சந்திப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நின்றிருக்கிறார்கள். 

அது தொடர்பில், முன்னணியின் தலைவரும் செயற்பாட்டாளர்களும் கேள்வி எழுப்பிய போது, தங்களை புலனாய்வாளர்கள் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதில் ஒருவர், அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றிருக்கிறார். இந்தப் பிணக்கின் போது,  பொலிஸ் அதிகாரி ஒருவர் கஜேந்திரகுமாரை நோக்கி, துப்பாக்கி முனை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு முன்னணியால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. துப்பாக்கி முனை அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் அதிகாரி, தாளையடி றோமன் கத்தோலிக்க பாடசாலை வளாகத்துக்குள் நின்றிருக்கிறார். அவரது படங்களை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

 மருதங்கேணி பொது விளையாட்டு மைதானமும் தாளையடி றோமன் கத்தோலிக்க பாடசாலையும் ஒரு பக்க மதிலை எல்லையாக பகிர்ந்து கொள்கின்றன. முன்னணியின் சந்திப்பில் ஏற்பட்ட குழப்பத்தில், தாளையடி பாடசாலை வளவுக்குள் இருந்து கண்காணித்த பொலிஸ் அதிகாரியே துப்பாக்கி முனை அச்சுறுத்தலை விடுத்தார் என்ற விடயம் முன்வைக்கப்படுகின்றது. 

தாளையடி றோ.க பாடசாலை, க.பொ.த (சா/த) தரப் பரீட்சை நிலையமாகச் செயற்பட்டு வருகின்றது.  இந்த விடயங்களுக்குப் பின்னரான விசாரணைகளை அடுத்து, இதுவரை முன்னணியின் இரண்டு செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு, மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வந்து வாக்குமூலம் அளிக்கும் வரையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான பயணத்தடையை கிளிநொச்சி நீதிமன்றம் விதித்திருக்கின்றது. இந்த நிலையில், அவர் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.

 முன்னணியின் சந்திப்புக்குள் புலனாய்வாளர்கள் நுழைந்த விடயமோ, பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கி முனை அச்சுறுத்தல் விடுத்ததான விடயமோ பொலிஸாரால் கருத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. 

மாறாக, பரீட்சை நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் ஆட்களைத் திரட்டி, சந்திப்பை நடத்திய விடயம்  பொலிஸாரின் நடவடிக்கைகளுக்காக, முன்னணிக்கு எதிராக இப்போது பயன்படுத்தப்படுகின்றது.

 தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர் போராட்டங்களை நடத்துகின்ற ஒரு தரப்பு. தற்போது தையிட்டியில் தனியார் காணிகளில் அமைக்கப்பட்டிருக்கின்ற விகாரைக்கு எதிரான தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. 

இந்தப் போராட்டத்தை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கான வேலைகளில் பொலிஸாரும் படைத்தரப்பும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்தத் தருணத்தில்தான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மருதங்கேணியில் நடத்திய சந்திப்பில் ஏற்பட்ட குழப்பத்தை, பொலிஸார் தங்களுக்கு சார்பாகக் கையாள முயல்கின்றார்கள். 

ஏனெனில், முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கஜேந்திரகுமாருக்கான பயணத்தடையும் விதிக்கப்பட்டிருக்கின்றது. இதனால், முன்னணியின் செயற்பாட்டாளர்களை மனதளவில் உடைத்து வீடுகளில் உட்கார வைக்க முடியும் என்பது எதிர்பார்ப்பு.

 முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னரான காலத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து, கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கஜேந்திரகுமார், கஜேந்திரன் உள்ளிட்டவர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தோற்றுவித்தார்கள். அன்று முதல், மக்கள் போராட்டங்களில் முன்னணி பங்கெடுத்து வருகின்றது. இரண்டு பொதுத் தேர்தல்களில் முன்னணியை தமிழ் மக்கள் மிக மோசமாக தோற்கடித்த போதிலும், முன்னணி மக்கள் போராட்டங்களில் பங்களித்து வந்திருக்கின்றது. 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னணிக்கான அங்கிகாரத்தை யாழ்ப்பாண மக்கள் குறிப்பிட்டளவு வழங்கினார்கள். அதிலிருந்து இன்னும் தெம்போடு இயங்கிய முன்னணி, கடந்த பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஓர் ஆசனத்தையும், தேசிய பட்டியல் ஊடக இன்னோர் ஆசனத்தையும் வென்றது.

 முன்னணி மீது தமிழ் மக்கள் அதிகம் அதிருப்தி வெளியிடும் விடயம், போராட்ட களத்தில் தனியாவர்த்தனம் செய்ய முயல்கின்றமை ஆகும். தமிழ்த் தேசிய பரப்பில் எழும் பிரச்சினைகள் 99 சதவீதமானவை, அனைத்துத் தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றினைந்தே போராட வேண்டிய விடயங்கள் ஆகும். ஆனால், முன்னணி அந்த ஒன்றிணைவு குறித்து ஒருபோதும் தயாராக இருப்பதில்லை. தாங்கள் தனித்துத் தெரியவேண்டும் என்பதற்காகப் பல போராட்டங்களை தனித்து நடத்தியிருக்கிறார்கள். 

இதனால், இவர்கள் என்ன போராட்டத்தை முன்னெடுத்தாலும் அங்கு செல்வதிலோ, ஒத்தாசை வழங்குவதிலோ ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகள் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில், அங்கு சென்றால், முன்னணியின் தலைவர்கள் முகத்தை மற்றப்பக்கம் திருப்பிக் கொள்கிறார்கள். இரண்டாம் மட்டத் தலைவர்களோ, ஏனைய கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்களுக்கு எதிராக கோசங்களை எழுப்புகிறார்கள். 

தையிட்டியில் இடம்பெற்று வரும் போராட்டத்தில் ஆரம்ப நாள்களில் கலந்து கொள்ளச் சென்ற பல தமிழ்த் தலைவர்கள், முக்கியஸ்தர்களும்கூட இவ்வாறான செயற்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது. இதனால், முன்னணி அவர்கள் நினைத்தது மாதிரியே அதிக தருணங்களில் தனியாவர்த்தனமே செய்ய வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. 

தையிட்டி போராட்டத்தில் கட்சிகளையும் மக்களையும் இணைந்து கொள்ளுமாறு ஊடகங்களின் மூலம் அழைப்பு விடுத்துவிட்டு, போராட்டக்களத்துக்கு செல்லும் மாற்று கட்சியினர் மீது அவதூறுகளைச் செய்வது என்பது, அடிப்படை நாகரீகம் அற்றது.

 இன்னொரு தளத்தில் முன்னணியினர், அதீத உணர்ச்சி வசப்படல் மூலம் போராட்டங்களை வெற்றிகரமாக நகர்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். அண்மையில் கூட முன்னணியின் பேச்சாளர் தன்னுடைய சட்டை கொலரைத் தூக்கி, “..நாங்கள் லோயர்ஸ், லோயர்ஸ்..” என்று பொலிஸாரை நோக்கி கூறிய காணொலி வெளியானது. அப்போது, அங்கிருந்த முன்னணியின் இன்னொரு முக்கியஸ்தரான சட்டத்தரணி ஒருவர்,  அவருக்கு வந்த சிரிப்பை அடக்க பலமாக முயன்று கொண்டிருந்தார். அவ்வாறான செயற்பாடுகளைக் காணும் போது, முன்னணியினர் தங்களை மக்களிடம் தனிப்பட்ட ரீதியில் முன்னிறுத்துவதற்கான செயற்பாடுகளின் போக்கில், மக்கள் போராட்டங்களை கையாள முயல்கிறார்கள் என்ற உணர்நிலை உண்டு. அதுபோல, நினைவேந்தல் நிகழ்வுகளிலும் தனியாவர்த்தனம் செய்து முன்னணியினர் குழப்ப நடவடிக்கைகளில் ஈடுபடுவதான தொடர் குற்றச்சாட்டு உண்டு.

 தமிழ்த் தேசிய போராட்டக் களத்தில் செயற்படுகின்ற தரப்புகள், தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டிருப்பது என்பது, வாக்கு அரசியலை முன்னிலைப்படுத்துவதால் தவிர்க்க முடியாததாக மாறியிருக்கின்றது. அதற்கு, முன்னணி என்கிற முகத்தோடு இருக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸும் விதிவிலக்கல்ல. 

ஆனால், பொதுப் பிரச்சினைகளில் தனியாவர்த்தனமும், சுய முன்னிலைப்படுத்தலுக்கான அதீத உணர்ச்சிவசப்படுதலும் மற்றவர்கள் மீதான அவதூறும் முன்னணியை மிக மோசமாக தனிமைப்படுத்தும். மருதங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் எழுந்த சச்சரவுகளின் போது, முன்னணியினருக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பரப்பில் ஒரு சிலரைத் தவிர, ஏனையவர்கள் மௌனமாக இருப்பதற்கும் அதுதான் காரணம்.

 அதுபோல, முன்னணியினர் தங்களின் போராட்டங்களை தேர்ந்தெடுப்பது போலவே, போராட்டத்தை அல்லது சந்திப்புகளை நடத்தும் இடங்கள் குறித்து போதியளவில் ஆய்ந்து அறிந்து கொள்வது அவசியமாகின்றது. முன்னணியின் செயற்பாட்டாளர்கள் கைது; கஜேந்திரகுமாருக்கு எதிரான பயணத்தடை என்பன, அவற்றின் போக்கில் இப்போது நிகழ்ந்திருக்கின்றன. 

சந்திப்புக்குள் புகுந்து அச்சுறுத்தல் விடுத்த புலனாய்வாளர்கள் தப்பித்துக் கொள்ள, சந்திப்பை நடத்தியவர்கள் மீது, பரீட்சை நிலையத்துக்கான அச்சுறுத்தல் என்பது மாதிரி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. தாங்கள் சட்டத்தரணிகள் என்று சட்டை கொலரை தூக்கி விட்டுக்கொள்வதால் பயனில்லை. மாறாக, மக்களை போராட்டக்களத்துக்கு கொண்டுவருதற்கான வேலைகளை கவனமாக முன்னெடுக்க வேண்டும்.

 வடமராட்சிக் கிழக்கில் இப்போது முன்னணியின் இரண்டு செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான கைதுகள், மக்களை பாரியளவில் அச்சுறுத்தும். அதுவும், போரின் வடுக்களை அதிகமாகத் தாங்கி நிற்கும் வடமராட்சி கிழக்கு போன்ற பகுதிகளிலுள்ள மக்களை அதிகமாகப் பாதிக்கும். ஏனெனில், புலனாய்வாளர்களின் தொடர் கண்காணிப்புக்குள் இருக்கும் பகுதி. இது, யாழ். மாவட்டத்துக்குள் இருந்தாலும் வடமராட்சி கிழக்கு, தொலைதூரத்தில் இப்பது மாதிரியான நிலையே இன்றும் இருக்கின்றது. அதற்குள், அசம்பாவிதங்களை ஏற்படுத்த நினைக்கும் தரப்புகள் செய்துவிட்டு சென்றுவிடும். அதனால், ஏற்படும் பயமும் மக்களை போராட்டங்களில் இருந்து ஒதுங்க வைத்துவிடும்.

 முன்னணியினர் தமிழ்த் தேசிய போராட்டக் களத்தில் முக்கிய தரப்பாக எழுந்து வருகிறார்கள். அதேநேரம், அவர்கள் போராட்டத்தில் பங்கெடுக்கும் மக்கள், செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையோடு செயற்பட வேண்டும். வாய் ஜாலங்களால் போராட்டங்கள் நிலை பெறுவதில்லை. மக்களின் அர்ப்பணிப்பால்தான் போராட்டங்கள் எழுச்சி பெற்றிருக்கின்றன. 

இதனை முன்னணி உணர்ந்து, அதற்கான முன்னேற்பாடுகளோடு செயற்பட வேண்டும். அதுதான், முன்னணிக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது. ஏனெனில், அடிப்படைவாத ஆக்கிரப்பு சிந்தனை கொண்ட தென்னிலங்கையின் ஆட்சி ஆதிக்கத் தரப்புகளுக்கு எதிராகவே, தமிழ்த் தேசியம் போராடிக் கொண்டிருக்கின்றது என்ற உணர்நிலை அவசியம் வேண்டும்.  
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X