2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மூடவும் முடியாது; திறக்கவும் இயலாது

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 27 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேக்ராஜா

எப்பொழுதுமே, ஒரு பாதையில் பயணித்துக் கொண்டிருப்போர், தாம் செல்கின்ற வழித்தடம் தவறானது எனத் தெரிய வரும்போது, உடனடியாக அந்த இடத்திலேயே வாகனத்தைத் திருப்பிக் கொண்டு, சரியான பாதையில் பயணிக்க எத்தனிப்பார்கள்;  இதுதான் உலக வழக்கமாகும். 

கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக, ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான தவறான தரவுகளின் அடிப்படையிலேயே கடந்த 14ஆம் திகதிக்குப் பின்னர், பயணத்தடையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதாவது, அந்தப் பாதையில் இன்னும் கொஞ்சத் தூரம் சென்றுவிட்டுத் திரும்பியுள்ளது.  

ஆனால், உடனடியாகப் பயணத்தடையைத் தளர்த்தவில்லை. ஏற்கெனவே திட்டமிட்டதன் பிரகாரம், 21ஆம் திகதியே திறக்கப்பட்டது. அத்துடன், மீண்டும் 23ஆம் திகதி இரவு  முதல் 25 அதிகாலை வரை பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலைமை தொடருமா, இத்துடன் முடிவுக்கு வருமா என்பது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கே தெரியாது. 

உண்மையான நிலைவரம் என்னவென்றால், நாட்டை மூடவும் முடியாத, திறக்கவும் முடியாத பெரும் இக்கட்டான நிலைக்குள் அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது என்பதாகும். மூடிவைத்தால் பொருளாதாரப் பிரச்சினை; திறந்து விட்டால் வைரஸ் பிரச்சினை என்ற சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. 

பயணத்தடை முடிவுக்கு வந்து, திங்கட்கிழமை (21) தற்காலிகமாக நாடு வழமைக்குத் திரும்பிய போது, வீதிகளில் மக்கள் கூட்டம் கிட்டத்தட்ட நிரம்பி வழிந்தது. மதுக்கடைகளின் முன்னாலும் அடகுக் கடைகளுக்கு முன்னாலும் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. 

இவற்றுள் நகை அடகுக் கடைகளின் முன்னால் காணப்பட்ட வரிசைகள், கொரோனாவும் பயணத் தடையும் நாட்டு மக்களின் வாழ்வில் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதையும், அரச நிவாரணங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதற்கும் ஒரு பதச்சோறாக அமைந்தது எனலாம். 

புதுப்புது திரிபுகளுடன் தொடர்ச்சியாகப் பரவிக் கொண்டிருக்கும்  கொரோனா வைரஸ், இன்னும் சில காலத்தில் ஏதாவது அடிப்படையில் கட்டுப்பாட்டுக்குள் வரும் என நம்பலாம்.  ஆனால், அது ஏற்படுத்திய சமூக, பொருளாதார விளைவுகளை, இலங்கை மக்கள் நீண்டகாலத்துக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என்ற அச்சம் தோன்றியுள்ளது. 

உலகின் பல நாடுகள், கொரோனா வைரஸ் காரணமாகத் திண்டாடிய நிலையில், இலங்கை முதலாவது அலையை, வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியது. இரண்டாவது அலையிலும் இந்நிலைமை நீடித்தது. ஆனால், சுகாதார தரப்பினரின் அறிவுரைகளைக் காலம் தாழ்த்தி, கருத்திற் கொள்ளப்பட்டமை, உருமாறிய வைரஸ்களின் தீவிர பரவல் போன்றவற்றின் காரணமாக, மூன்றாவது அலையின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. 

இந்நிலையில், மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்த, அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் வெற்றியளிக்கவில்லை என்று கூறி விட முடியாது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத் தரவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. 

ஏப்ரல் விடுமுறைக்குப் பின்னரே, கட்டுப்பாடுகளை அமல்படுத்தியமை, அரசியல் தீர்மானங்கள் தாமதமடைந்தமை, புதிய ரக வைரஸ்களின் வீரியத்தன்மை, தடுப்பூசிகளைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதங்கள் உள்ளடங்கலாகப் பாதகமான அரசியல் சூழமைவுகளும் இதற்குக் காரணங்கள் ஆகும்.   

நாட்டில் பெரும் குழப்பங்களும் நெருக்கடிகளும் ஒருசேர நிகழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு காலப்பகுதியாக தற்காலத்தைக் குறிப்பிடலாம். கொரோனா நெருக்கடிக்கு புறம்பாக, பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. 

‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் தீப்பிடித்து மூழ்கியதன் விளைவாக சுற்றாடல் பாதிப்பு மட்டுமன்றி, மீன்பிடி, சுற்றுலாத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு பல வருடங்கள் செல்லும் என்று துறைசார்ந்தவர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையிலேயே அரசியல் குழப்பங்களும் தலைதூக்கியுள்ளதைக் காணலாம். 

ஆளும் பொதுஜனப் பெரமுன கட்சிக்குள்ளும், எதிர்க்கட்சிக்குள்ளும் சமகாலத்தில் பாரிய உட்பூசல்கள் வெளிக்கிளம்பி உள்ளன. ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் பலமாக இருக்க வேண்டிய ஓர் இக்கட்டான காலத்தில், இரு தரப்பும் இன்று பலமிழந்து, கட்டுக்கோப்பு இழந்து நிற்கின்றன. 

இந்திய, இலங்கை அதிகாரப் போட்டியின் மையப் புள்ளியாக இலங்கை மாறியுள்ளது. இந்நிலையில், கப்பல் தீப்பிடித்ததும், ஆளும் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையும் மிகப் பாதகமான ஒரு களநிலைமையை தோற்றுவித்திருக்கின்றது.  

முதலாம், இரண்டாம் அலைகள் ஏற்பட்ட காலத்தில், அரசாங்கத்தினதும் ஏனைய தரப்பினரதும் கவனம் முழுமையாக கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதிலேயே குவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள பலவிதமான பொருளாதார, சூழலியல் குழப்பங்கள், கொரோனவின் மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்துவதற்கான வினைதிறனான முன்னெடுப்புகளில் மறைமுகமான நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 

மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் கூட, அவற்றின் காரணமாக வைரஸ் பரவலை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடிந்ததே தவிர, முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. 

நாளாந்தம் வெளியாகின்ற மரணங்களின் எண்ணிக்கை, தவறாக அறிக்கையிடப்படலாம் அல்லது ஒரு நாளில் இடம்பெற்ற மரணம் இன்னுமொரு நாளின் தரவுகளில் உட்சேர்க்கப்படலாம். ஆயினும், மரணங்களின் மொத்த எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டுதான் போகின்றது.  

மரணங்கள் தொடர்பாக உண்மையான தரவுகள் வெளியிடப்படுவதில்லை என்றும், சரியாக அவை பகுப்பாய்வு செய்யப்படுவதில்லை என்றும் மறுபுறத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.  

முழுமையான முடக்கமொன்றை சுகாதார துறையினர் வலியுறுத்தி நின்ற வேளையில், இம்முறை அரசாங்கம் பயணத்தடையை அமல்படுத்தியது. அதற்காகப் பல விதிமுறைகள் அறிவிக்கப்பட்டாலும், பொதுமக்களில் சிலர் அவற்றைப் பெரிதாக அசட்டை செய்யவில்லை. 

பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த நாள்களில் கிராமப் புறங்களின் குறுக்கு வீதிகளில் மட்டுமன்றி, கொழும்பின் முக்கிய வீதிகளிலும் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. கணிசமானோர் நியாயமான காரணங்களுக்காக வெளியில் சென்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், போலி வைத்தியர்கள், போலி அத்தியாவசிய சேவைக்காரர்கள் என ஒரு பிரிவினர் பயணத்தடையை மீறி நடந்தனர். அரசியல்வாதிகள், அதிகாரம் படைத்தோர், பெரும்புள்ளிகள், செல்வாக்குள்ளோரையும் இந்தப் பயணத்தடை கட்டுப்படுத்தவில்லை என்பதே நிதர்சனமாகும். இவ்விடயம் ஜனாதிபதியின் கவனத்தையும் ஈர்த்ததாக செல்லப்படுகின்றது. 

ஆக மொத்தத்தில், நாள்கூலி செய்வோர், ஆட்டோ ஓட்டுநர்கள், அன்றாடம்காய்ச்சிகள், சிறிய கடை வைத்திருப்போர், நடைபாதை வியாபாரிகள், நாட்டாமைகள் எனத் தினசரி உழைப்பில் வாழ்வோர்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால், ஏழைகளின் தொகை சமூகத்தில் இப்போது அதிகரித்துள்ளது. பயணத்தடை நீக்கப்பட்ட தினம், நகை அடகுக் கடைகளில் காத்துநின்ற மக்களின் நீண்ட வரிசையானது, கீழ்நடுத்தர, கீழ்மட்ட மக்கள் படும்பாட்டை குறிப்புணர்த்துவதாக இருந்தது. 

இந்நிலையிலேயே, சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தல்களையும் மீறி, மூன்று தினங்களாகப் பயணத்தடையைத் தளர்த்திய அரசாங்கம், இன்று வியாழக்கிழமை மீண்டும் அதனை அமல்படுத்தியுள்ளது. இந்தத் தடை நீடிக்குமா முடிவுக்கு வருமா என்பது யாருக்கும் கடைசி நிமிடம் வரை தெரியாது. 

நாட்டின் எல்லாத் துறைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. சிலவற்றில் இயல்புநிலையைப் பேணுவதற்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் வெற்றியளிக்கவில்லை. ‘சூம்’ வகுப்புகளை இதற்கு ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். குறிப்பிட்ட சில மாணவர்களே இதனால் சரியான பயனைப் பெற்றுள்ளனர்.  

ஏனையோர் இருக்கின்ற பொருளாதார பிரச்சினை போதாது என்று, இணைய இணைப்புகளுக்காக ரீலோட் செய்ததும், கவரேஜ் தேடி அலைந்ததுமே மீதம் என்றாகியிருக்கின்றது. இதுபோலவே, அரச துறை, தனியார் துறையின் செயற்பாடுகளும் நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தித் திறனைத் தரவில்லை என்பதே நிதர்சனமாகும். 

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்றும் மாறாக மரணங்கள் அதிகரிக்கும் நிலையே காணப்படுகின்றது என்றும் சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றார்கள். இலங்கையில், இந்தியாவின் டெல்டா வைரஸூம் பரவியுள்ள நிலையில், இரண்டும் கெட்டான்நிலையில் நாட்டைத் திறந்து விடுவது, பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறுகின்றது. இதன்மூலம் எதிர்காலத்தில் பொறுப்புக்கூறலை இலகுவாக்குவதற்கான களநிலைமையையும் அவர்கள் கட்டமைக்கின்றார்கள் எனலாம். 

வைரஸ் பரவலின் பாரதூரமான நிலை பற்றி பொதுமக்களை விட, ஆட்சியாளர்கள் நன்றாக அறிவார்கள். மருத்துவ துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நாட்டை மூடிவைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. 

நாட்டை மூடிவைத்தால், எதிர்க்கட்சியோ மக்களோ வீதிக்கு இறங்கிப் போராடுவதையும் தடுக்கக் கூடியதாக இருக்கும். இதனைப் பயன்படுத்தி, அரசியல் குழப்பங்களையும் கட்டுக்குள் வைத்திருக்க சாதகமான நிலை ஏற்படலாம். 

ஆனால், ஏற்கெனவே தேசிய பொருளாதாரமும், ஒவ்வொரு சாதாரண குடும்பங்களின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. நிவாரணத்தை வழங்குவதற்கான நிதியும் கையில் இல்லை. அரசியல் நெருக்கடிகளும் சட்டென்ற களநிலை மாற்றங்களை நோக்கி நகர்கின்றன. 

பல்வேறு காரணங்களால் மக்களின் ஒத்துழைப்பும் குறைந்து போயுள்ளது; அவர்கள் வெறுத்துப் போயுள்ளனர். எனவேதான், நாட்டைத் திறப்பதா, மூடுவதா என்ற முடிவுக்கு அரசாங்கத்தால் வரமுடியவில்லை. அப்படியான தீர்மான முடிவொன்றுக்கு வருவதற்கு இன்னும் பல நாள்கள் எடுக்கலாம். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .