2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

யோஷிதவை முதலீடாக்கும் மஹிந்த

Thipaan   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த நேரத்திலும் உடையலாம் என்ற சூழல் நிலவுகின்ற கட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரான யோஷித ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கு அரசாங்கம் எடுத்த முடிவு சரியானதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரவலாக காணப்படுகிறது.

ஏனென்றால், யோஷித ராஜபக்ஷவின் கைது. ராஜபக்ஷக்களை மூர்க்கமடைய வைத்திருப்பதாகவே தெரிகிறது.

ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தி வந்த கருத்துக்களுக்கும் யோஷித ராஜபக்ஷவின் கைதுக்குப் பின்னர் அவர் வெளிப்படுத்தி வரும் கருத்துக்களுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்த ஆதரவு அணி தனியாகப் பிரிந்து செல்வது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது என்றும் கூடச் சொல்லப்படுகிறது.

தனது மகன் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்ட சூழலை தனது அரசியல் மீள் எழுச்சிக்காக பயன்படுத்திக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கிறார் என்பதை அவரது இப்போதைய கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

தனது மகன் சிறையில் அடைபட்டிருந்த போதிலும், மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் ஆதரவுத் தளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

கடந்த திங்கட்கிழமை அவர் கண்டியில் சுதந்திரக் கட்சியின் உள்ளூர் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

அதில் அவர், சுதந்திரக் கட்சியை மைத்திரிபால சிறிசேனவே உடைத்து விட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

தனது பதவிக்காலத்தில், தற்போதைய ஜனாதிபதியின் மகன் மீதும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகள் மீதும் குற்றச்சாட்டுகள் வந்த போது நடவடிக்கை எடுக்காது விட்டது குறித்துப் பேசியிருக்கிறார்.

புலிகளை ஒடுக்குவதற்காக தான் கொண்டு வந்த சட்டத்தைக் கொண்டே தனது மகனைச் சிறையில் அடைத்திருப்பதாக கூறியிருக்கிறார்.

இவையெல்லாம், தனது மகன் கைது செய்யப்பட்டதை முதலீடாக்கி, அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சிக்கிறார் என்பதை தான் வெளிப்படுத்தியிருக்கின்றன.

யோஷித ராஜபக்ஷவின் கைது, மஹிந்தவின் ஆதரவாளர்களை அதிர்ச்சியும் கவலையும் கொள்ள வைத்திருக்கிறது என்பது உண்மை.

அதுபோலவே, பெருமளவிலான மக்களை இந்த நடவடிக்கை மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க வைத்திருக்கிறது என்பதும் உண்மை.

இணைய ஊடகங்களில், மஹிந்த ராஜபக்ஷ கண் கலங்கி நின்ற காட்சி பற்றிய செய்திக்கு மக்களிடையே அதீதமான ஆர்வம், வெளிப்பட்டிருக்கிறது.

இது மஹிந்த ராஜபக்ஷ எந்தளவுக்கு, மக்களின் வெறுப்பைச் சம்பாதித்திருக்கிறார் என்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த போது, கூட வெளிப்படுத்தப்படாத மகிழ்ச்சியை, அவர் தனது மகனுக்காக கண்கலங்கி நின்ற போது பரிமாறியிருக்கின்றனர்.

ஒருவரின் துக்கத்தை இன்னொருவர் மகிழ்ச்சியாக கொண்டாடுவது சரியா என்ற விவாதங்கள் ஒருபுறமிருக்க, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவர் இழைத்த அநீதிகள் தான், அப்படியானதொரு நிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து தனியான கட்சியை உருவாக்க வேண்டும் என்று விரும்பினாலும், இப்போதைய நிலையில் கூட அதனை வெளிப்படுத்த தயாராக இல்லை.

யோஷித ராஜபக்ஷவின் கைதுக்குப் பின்னர், அவர் வெளியிட்டு வரும் கருத்துக்களில் இருந்து, சுதந்திரக் கட்சியை உடைத்து வெளியேறத் தயாராகிறார் என்பதை மட்டும் உணர முடிகிறது.

ஏற்கனவே மஹிந்த ஆதரவு அணியைச் சேர்ந்த விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, உதய கம்மன்பில போன்றவர்கள், தனிக்கட்சி ஒன்றை அமைத்து உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக கூறி வருகின்றனர்.

அந்த அணிக்கு மஹிந்த ராஜபக்ஷவை அல்லது கோட்டாபய ராஜபக்ஷவைத் தலைமை தாங்கச் செய்வதே, அவர்களின் திட்டம்.

ஆனால், ராஜபக்ஷ சகோதரர்களோ, சுதந்திரக் கட்சியை முழுமையாக கைப்பற்றிக் கொள்ளும் கனவில் இருப்பதால், புதிய கட்சிக்குத் தலைமை தாங்குவதற்குத் தயக்கம் காட்டி வந்திருக்கின்றனர்.

என்றாலும், யோஷித ராஜபக்ஷவின் கைதுக்குப் பின்னர், கண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்த ராஜபக்ஷ, உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்தாது போனால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாக எச்சரித்திருந்தார்.

இது, தனது பலத்தை நிரூபிக்க மஹிந்த மீண்டும் அவசரப்படுகிறார் என்பதைத் தான் காட்டி நிற்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறாவிடினும், சுதந்திரக் கட்சிக்கு தனது பலத்தை வெளிப்படுத்த விரும்புகிறார்.

தனது ஆதரவு பெற்ற ஓர் அணியை உருவாக்கித் தேர்தலில் நிற்கவைத்து, அதனை வெற்றிபெற வைக்க முயற்சிக்கிறார்.

அவ்வாறானதொரு வெற்றியின் மூலம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தனது காலடிக்குக் கீழ் கொண்டு வருவதே மஹிந்தவின் திட்டம்.

மைத்திரிபால சிறிசேனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தாலும், மஹிந்தவுக்கு, கட்சிக்குள் அதிக செல்வாக்கு இருப்பதை மறுக்க முடியாது.

அந்த ஆதரவுத் தளத்தை வைத்தே, மைத்திரிபால சிறிசேனவின் இருப்பை அசைக்கப் பார்க்கிறார்.

அதேவேளை, மைத்திரிபால சிறிசேனவையும் மஹிந்த

ராஜபக்ஷவையும் இணக்கப்பாட்டுக்குள் கொண்டு வந்து, உள்ளூராட்சித் தேர்தலைப் பலமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற முயற்சியிலும், சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஆனால், ஐ.தே.கவின் வளர்ச்சியையும் செயற்பாடுகளையும் பொறுத்துக் கொள்ள முடியாத, இந்த சுதந்திரக் கட்சித் தலைவர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவுளித்து வருபவர்களாவர்.

இவர்கள் இரு தரப்பையும் இணக்கப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்று கொண்டிருந்த போது தான், யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதையடுத்து, தனது குடும்பத்தினருக்கு எதிரான விசாரணைகளை நிறுத்தும் வரை, சுதந்திரக் கட்சித் தலைமையுடன் இணக்கப் பேச்சு எதையும் வைத்துக் கொள்வதில்லை என்று கூறியிருக்கிறார் மஹிந்த.

இதன் மூலம், மைத்திரிபால சிறிசேனவுடன், அவர் தனது செல்வாக்கை வைத்து பேரம் பேச முனைகிறார் என்பது தெளிவாகிறது.

உள்ளூராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்குத் தனது ஆதரவு தேவையென்றால், தனது குடும்பத்தினர் மீதான விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்பதே மஹிந்தவின் இப்போதைய பேரம்.

இதற்கு மைத்திரிபால சிறிசேன இணங்கினால், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நிம்மதி கிடைக்கும். சுதந்திரக் கட்சிக்குள்ளே தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

இணங்காது போனால், தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து தான் ஒதுங்கியிருப்பதாக அறிவித்து விட்டு, தனது ஆதரவாளர்களால் நிறுத்தப்படும் கட்சிக்கு மறைமுக ஆதரவைக் கொடுப்பார்.

அதில் அவரது அணி வெற்றி பெற்றால் அதனை வைத்து சுதந்திரக் கட்சிக்கு போட்டியான அணியை உருவாக்கலாம்.

ஒருவேளை, அந்த அணி தோல்வியைத் தழுவினால் அதற்குத் தனக்கும் சம்பந்தமில்லை என்று மீண்டும் சுதந்திரக் கட்சிக்குள் நுழைவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தலாம்.

இப்போதைக்கு, மஹிந்த ராஜபக்ஷ இன்னொரு கட்சியை உருவாக்குவதற்கு மறைமுக ஆதரவை வெளிப்படுத்தி வந்தாலும், அதனை வெளிப்படையாக செய்யமாட்டார் என்றே தெரிகிறது.

எனினும், உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்களை மாவட்ட மட்டத்தில் சந்தித்து அவர்களின் ஆதரவை உறுதிப்படுத்தி வருகிறார்.

அவர்களின் பெரும்பாலானோர், உள்ளூராட்சித் தேர்தலில் புதிய கட்சியில் இணைந்து போட்டியிடவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், இன்னொரு பலமான தளத்தை உறுதி செய்யும் வரை சுதந்திரக் கட்சியை அவர் கைவிடப் போவதில்லை போல் தெரிகிறது.

அதேவேளை, சுதந்திரக் கட்சியை உடைத்தவர் என்ற களங்கம் தனக்கு வருவதையும் அவர் விரும்பவில்லை.

மைத்திரிபால சிறிசேன எதிரணியுடன் சேர்ந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, ஒரு சிலர் தான் போயிருக்கின்றனர் கட்சி இன்னமும் தனது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அது ஒன்றும் பிளவுபடவில்லை என்றெல்லாம் கூறியவர் தான் மஹிந்த ராஜபக்ஷ.

இப்போது, அவர் 2014 நவம்பர் 21ஆம் திகதியே மைத்திரிபால சிறிசேன வெளியேறிய போதே கட்சி உடைந்து விட்டது என்று கூறியிருக்கிறார்.

கட்சியை முதலில் உடைத்தவர் மைத்திரிபால சிறிசேன என்ற பழியை ஏற்படுத்த மட்டும் அவர் இதனைக் கூறவில்லை.

தானும் அதனை உடைக்கத் தயார் என்பதையும் தான் அவர் மறைமுகமாக இவ்வாறு கூறியிருக்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், தனது மகன் கைது செய்யப்பட்டுள்ள சூழலில் ஒரு தேர்தலை நடத்தினால், அதனை வைத்தே, சிங்கள மக்களின் அனுதாபத்தை திரட்டி விடலாம் என்று பார்க்கிறார்.

எவ்வாறாயினும், இன்னும் சில மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், அதில் தனது செல்வாக்கை நிரூபித்துக் கொண்டால் தான், மைத்திரிபால சிறிசேனவை கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற முடியும் என்று நம்புகிறார்.

எனவே, யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ள சூழலை வைத்து தனது அரசியல் செல்வாக்கை எந்தளவுக்குப் பலப்படுத்திக் கொள்ள முடியுமோ, அந்தளவுக்கு உச்சக்கட்ட முயற்சிகளில் அவர் ஈடுபடுவார் என்பதில் சந்தேகமில்லை.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X