2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரணிலின் பாராளுமன்றப் பிரவேசம்: தோல்வியுற்றவர்கள் தகுதி அற்றவர்களா?

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 24 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

எம்.எஸ்.எம். ஐயூப்

 

 

ஐக்கிய தேசிய கட்சிக்கு, 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது, தேசிய பட்டியல் மூலம் கிடைத்த ஆசனத்துக்கு, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, அக்கட்சி நியமித்துள்ளது. அதன்படி, அவர் இன்றைய பாராளுமன்றக் கூட்டத்துக்கு சமூகமளிப்பார் என்று கூறப்படுகிறது. 

ஒரு கட்சிக்கு, தேசிய பட்டியல் மூலம் கிடைத்த ஆசனத்துக்கு, ஒருவர் நியமிக்கப்படுவது ஒன்றும் புதிய விடயம் அல்ல. ஆனால், சுதந்திரத்துக்கு முன்னர், 1946 ஆம் ஆண்டு முதல், இந்நாட்டு அரசியலில் மிக முக்கிய பங்காற்றி, கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னரும் ஆளும் கட்சியாக இருந்த ஐ.தே.க, அத்தேர்தலில் மாவட்ட ரீதியாக ஓர் ஆசனத்தையேனும் பெற முடியவில்லை. தேசிய பட்டியல் மூலம் மட்டுமே, ஓர் ஆசனத்தை அக்கட்சி பெற்றது. அந்தத் தேசிய பட்டியல் ஆசனத்துக்கு, சுமார் ஒரு வருட காலமாக, எவரையும் நியமிக்க முடியாமல் அக்கட்சி தடுமாறிக்கொண்டு இருந்தது. 

இதன் காரணமாகவே, அந்தத் தேசிய பட்டியல் ஆசனம், இன்று பேசுபொருளாகி உள்ளது. அதேவேளை, தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர்களை, தேசிய பட்டியல் மூலம், பாராளுமன்றத்துக்கு நியமிப்பதில்லை என ஐ.தே.க தேர்தல் காலத்தில் கூறி வந்தது. ஆனால், அக்கட்சி இப்போது, தோல்வியடைந்த தமது தலைவரையே நியமித்துள்ளது. இதுவும், இந்த ஆசனம் பேசுபொருளாவதற்கு மற்றொரு காரணமாகியது.

இதனிடையே, ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு பாராளுமன்றத்துக்கு வந்தால், எதிர்க்கட்சித் தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என, ஆளும் கட்சியினர் ஒரு கதையைக் கட்டிவிட்டனர். அதன் மூலம், ஐ.தே.கவுக்கும் தற்போது பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் (ஐ.ம.ச) இடையே, மேலும் பகையை மூட்டிவிடுவதே ஆளும் கட்சியின் நோக்கமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. 

அதேவேளை, பாராளுமன்றத்துக்கு ரணில் வந்தவுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் சுமார் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள், அவரோடு கைகோர்த்துக் கொள்ளக் காத்திருப்பதாக, ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கூறியிருந்தார். அதனை ஆளும் கட்சியினரும் கூறித் திரிகின்றனர். அதுவும் ரணிலின் பாராளுமன்ற வருகைக்கு மேலும் கவனத்தை ஈர்த்துக் கொடுத்துள்ளது. ஐ.ம.சக்கு 60 ஆசனங்கள் பாராளுமன்றத்தில் இல்லை என்பது வேறு விடயமாகும்.

பாராளுமன்றத்தில் ஒரேயோர் ஆசனத்தை வைத்துக் கொண்டு, ரணில் எதிர்க்கட்சித் தலைவராக முடியுமா? 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலை அடுத்து, 45 ஆசனங்களை வைத்திருந்த ரணில், பிரதமராக முடியுமாக இருந்தால், ஓர் ஆசனத்தை வைத்துக் கொண்டு, ஏன் எதிர்க்கட்சித் தலைவராக முடியாது என, ஐ.தே.க தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

அன்றைய நிலைமையும் இன்றைய நிலைமையும் ஒன்றல்ல என்பதை, ஐ.தே.க தலைவர்கள் மறந்துவிட்டார்கள் என்று கூற முடியாது. அன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, ரணிலைப் பிரதமராக நியமித்தார். அது சட்ட விரோதமானது. பாராளுமன்றத்தில் அதி கூடிய நம்பிக்கையைப் பெற்றவரைத் தான், பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்க முடியும். ஆனால், மைத்திரிபால சிறிசேனா அதைப் புறக்கணித்து, ரணிலைப் பிரதமராக நியமித்தார். அந்தவகையில், ஜனாதிபதியாக வந்து, மைத்திரி செய்த முதல் காரியம் சட்ட விரோதமானதாகும். ரணிலுக்கும் இந்தச் சட்ட முறைமை நன்றாகத் தெரிந்திருந்தும், சட்ட விரோத நியமனத்தை ஏற்றார்.  

அது சட்டவிரோதமான நியமனம் என்பதை அறிந்திருந்தும், அதற்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்து, தமக்குப் பாராளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மை பலத்தைப் பாவித்து, ரணிலைப் பதவியிலிருந்து வெளியேற்ற முடியுமாக இருந்தும், மைத்திரியின் நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்குப் பயந்து, மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் விட்டுக் கொடுத்தது.

இனி, அது போன்றதொரு நிலைமை வரும் என்று கூற முடியாது. அப்படி  வந்தால், ஐ.ம.சயின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர், ரணிலோடு இணைய வேண்டும். அவ்வாறு இணைவார்கள் என்று தான், ரங்கே பண்டார கூறுகிறார். ஆனால், ஐ.ம.சயின் உறுப்பினர்கள், அதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்று கூறுவதற்கான எந்தவோர் அறிகுறியும் இல்லை. 

பாராளுமன்றத்துக்கு ரணில் வந்து, எதையும் பெரிதாகச் செய்யப் போவதில்லை. அதிகாரத்தோடு பாராளுமன்றத்தில் அவர் இருந்த காலத்திலும், பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. அதனாலேயே, 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்து மூன்றாண்டுகளில், தமது வாக்கு வங்கியில் மூன்றில் ஒரு பங்கை இழந்த நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொண்டார். ஐ.தே.கவின் 74 வருட வரலாற்றில், அவரது தலைமையிலேயே, அக் கட்சி மாவட்ட ரீதியாக, முதன் முறையாக ஓர் ஆசனத்தையேனும் பெற முடியாத நிலை ஏற்பட்டது. 

ரணில் விக்கிரமசிங்க, சிறந்த அறிவாளி என்பது உண்மை. தேசிய, சர்வதேச பொருளாதாரம், சர்வதேச அரசியலைப் பற்றி, எப்போதும் படித்துக் கொண்டு இருப்பவர். இந்த விடயங்களில், அவர் மஹிந்த, கோட்டாபய, மைத்திரி, சந்திரிகா, சஜித் போன்றவர்களைவிட ஆழமான அறிவுமிக்கவர்; சர்வதேச ரீதியில் மதிக்கப்படுபவர். ஆங்கிலப் புலமை காரணமாக, சர்வதேசத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகக்கூடியவர்.

எனினும், சாதாரண மக்களினதோ, தமது கட்சியின் கீழ் மட்ட அமைப்பாளர்களினதோ இதயத் துடிப்பை ரணில் அறியாதவர்.  இதன் காரணமாகவே, கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர், ஐ.தே.கவின் பிரதேச அமைப்பாளர்களில் 90 சதவீதமானோரும், அக்கட்சியை ஆதரித்த சிறுபான்மையினக் கட்சியினரும் அவரைக் கைவிட்டு, சஜித்துடன் இணைந்து கொண்டனர். 

தேர்தலில் தோல்வியடைந்தவர், தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்படுவது நாகரிகமானதல்ல என்ற வாதம், சரியானது என்று கூற முடியாது. “மாவட்ட ரீதியில் தோல்வி அடைந்தவர்களை, தேசிய பட்டியல் மூலம் நியமிப்பதில்லை” என்று, கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் ரணிலும் கூறியிருக்கலாம். அந்தவகையில், தமது கூற்றுக்கே முரணாக, அவர் இன்று செயற்பட்டுள்ளார் என்பது உண்மை தான். 

ஆனால், இலங்கையின் தேர்தல் முறையைப் பார்த்தால், மாவட்ட ரீதியில் தோல்வி அடைந்தவர்களில் ஒரு சிலரை, தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு நியமிப்பதில் எவ்வித தவறும் இல்லை. அதற்கு, முதன்மையான காரணம், மிகப் பெரும்பாலான வாக்காளர்கள், அரசியல் அறியாமையின் நிமித்தமே வாக்களிக்கிறார்கள். அவர்கள் பெயர்பெற்ற திருடர்கள், அரசியலே தெரியாத நடிகைகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரையே கூடுதலாக விரும்புகிறார்கள். 

2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, கம்பஹா மாவட்டத்தில் ஐ.தே.க பிரதித் தலைவராக இருந்த கரு ஜயசூரியவைப் பார்க்கிலும் கூடுதலான வாக்குகளை, அதே கட்சியின் கீழ் போட்டியிட்ட ‘பபா’ என்ற உபேக்‌ஷா சுவர்ணமாலி என்ற நடிகை பெற்றுக் கொண்டார். பின்னர், தொலைக் காட்சி உரையாடல் ஒன்றின் போது, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் என்றால் என்ன என்று தெரியாமல், ‘பபா’ திண்டாடினார்.

அந்தத் தேர்தலின் போது, தெரிவானவர்களுக்கும் தெரிவாகாதவர்களுக்கும் இடையிலான தேர்வுக் கோடு, பபாவுக்கும் கருவுக்கும் இடையில் அமைந்திருந்தால், தோல்வி அடைந்தவர்களில் ஒருவராகவே, கரு ஜயசூரியா இருந்திருப்பார். 

தோல்வி அடைந்தவர்கள் தகுதியற்றவர்கள் என்றும், தெரிவானோர் தகுதியானவர்கள் என்றும் வாதிடுவதாக இருந்தால், கரு ஜயசூரியா தகுதியற்றவர்; ‘பபா’ தகுதியானவராகிறார். ‘பபா’ இராஜினாமாச் செய்தால், அவரது இடத்துக்கு, கரு நியமிக்கப்படக் கூடாது; எனென்றால், அவர் தகுதியற்றவர்; இது சரியான வாதமா?

“தேசிய ரீதியில் கொள்கை வகுத்தல், சட்டமியற்றல், பொது நிதித் துறையைக் கண்காணித்தல், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தல் ஆகிவற்றுக்கான திறனே, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான தகைமைகளாகும்” என, பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் (COPE) முன்னாள் தலைவரும் கொம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகரும் மூத்த அரசியல்வாதியுமான டியூ குணசேகர, கடந்த வருடம் கூறியிருந்தார். அவை, ஏற்றுக் கொள்ளக்கூடிய தகைமைகளாகும். அதனை விடுத்து, ஒருவர் தேர்தலில் வெற்றியடைந்தாரா தோல்வியடைந்தாரா என்பதை, எம்.பி பதவிக்கான தகைமைக்கு அடிப்படைகளாகக் கொள்வது கேலிக்கூத்தாகும். 

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த சுனில் ஹந்துன்னெத்தியை, ஜே.வி.பி தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு அனுப்பியது. அவர், ‘கோப்’ குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு, சகல கட்சிகளினதும் பாராட்டைப் பெறும் வகையில் கடமையாற்றினார். 

எனவே, எவரும் தேர்தலில் தோல்வியடைந்தால் தகுதி அற்றவராகி விடுவதில்லை. அந்த அடிப்படையில், பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த ரணிலும், தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வது நாகரிகமற்ற செயலல்ல ஆகும்.      

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .