Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
புலி வருகிறது, புலி வருகிறது' எனும் கூச்சல்களை தென்னிலங்கையில் மீண்டும் கேட்கக்கூடியதாக இருக்கின்றது. சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, தற்கொலை அங்கி உள்ளிட்ட சில வெடிபொருட்கள், கடந்த வாரம் பாதுகாப்புத் தரப்பினரால் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கூச்சல்கள் வீரிட்டு மேலெழுந்திருக்கின்றன.
கடந்த மூன்று தசாப்த கால இலங்கை அரசியல் என்பது, தமிழீழ விடுதலைப் புலிகளினைப் புறந்தள்ளி முன்னெடுக்கப்படவில்லை. ஆதரவு - எதிர்ப்பு என்கிற ஏதோவொரு நிலைப்பாட்டு வடிவத்தின் போக்கில் வடக்கும் தெற்கும், புலிகளைப் பிரதானப்படுத்தி வந்திருக்கின்றன. விடுதலைப் புலிகள், போராட்டக்களத்திலிருந்து அகற்றப்பட்டு ஏழு வருடங்களை அண்மித்துள்ள போதிலும், அந்த நிலைமையில் பெரும் மாற்றங்கள் ஏற்படவில்லை. அப்படிப்பட்ட நிலையில், மறவன்புலவு பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் கவனம் பெறுவதும், கூச்சல்களை தோற்றுவிப்பதும் இயல்பானது.
மூன்று தசாப்தங்களாக ஆயுதப் போராட்டங்கள் நீடித்த பகுதியிலிருந்து ஆயுதங்களும், வெடிபொருட்களும் மீட்கப்படுவது இயல்பானது. ஆயுதப் போராட்டங்களை முன்னெடுக்கும் தரப்புக்கள் பெரும்பாலும் தம்முடைய நடவடிக்கைகள் தொடர்பில் பாரிய இரகசியத்தன்மை கொண்டவையாக இருந்து வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில், போர் நீண்ட பகுதிகளில், ஆயுதங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு.
சர்வதேச ரீதியில் போர் இடம்பெற்ற வலயங்களில் ஐந்து தசாப்தங்கள் கடந்தும் ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்ட வரலாற்றுச் சான்றுகள் உண்டு. அப்படிப்பட்ட நிலையில், பாரிய மோதல்கள் நீண்ட பகுதியிலிருந்து குறுகிய காலத்துக்குள் ஆயுதங்கள் மீட்கப்படுவது இயல்பானது. அதனை, பெரும் அச்சுறுத்தலின் பக்கத்தில் நகர்த்த வேண்டிய தேவையில்லை.
ஆயினும், குறித்த வெடிபொருட்களை வைத்திருந்தார் என்று சந்தேகிக்கப்படும் நபர், பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அவர் மீதான நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டால், சிலவேளை உண்மைகள் வெளிவரலாம்.
இலங்கை மீண்டுமொரு ஆயுத மோதல்களை எதிர்கொள்வதற்கான திராணியோடு இல்லை. அதற்கு வடக்கிலுள்ள மக்களோ, தெற்கிலுள்ள மக்களோ தயாராக இல்லை. குறிப்பாக, ஆயுதப் போராட்டங்களின் பக்கத்தில், தம்மைப் பாரியளவில் அர்ப்பணித்த தமிழ் மக்கள், மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கோ, எதிர்கொள்வதற்கோ தயாராக இல்லை என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது. மீண்டும் ஆயுதப் போராட்டம் சார் முனைப்புக்கள் வைக்கப்பட்டால் அதனைப் புறந்தள்ளவும் தமிழ் மக்கள் தயங்கமாட்டார்கள்.
அப்படிப்பட்ட நிலையில், 'புலிகள் மீளவும் எழுச்சி பெறுகின்றார்கள்' என்கிற வாதத்தை முன்மொழியும் தரப்புக்கள், தங்களது சுய அரசியல் நலனைக் கருத்தில் கொண்டே நடக்கின்றார்கள் என்று கொள்ள முடியும். அதனை, தென்னிலங்கையின் கடும்போக்குத் தரப்புக்கள் முன்மொழிந்தாலும், தமிழ்த் தரப்புக்குள் இருப்பதாக காட்டிக் கொள்ளும் அடிப்படைப் புரிதலின்றிய சிலர் முன்மொழிந்தாலும் அவை சுயநல அரசியலுக்கானவை. அதனை மீறி அங்கு எதும் இல்லை.
ஆயுதப் போராட்டமொன்று, வெற்றி - தோல்விகளின் போக்கில் மாத்திரம் தாக்கம் செலுத்துவதில்லை. மாறாக, ஆயுதப் போராட்டத்தின் நீட்சி, நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தும் விளைவுகள் எவ்வளவு அச்சுறுத்தலானவை. அவற்றை கடந்து வருவதற்கு, ஆயுதப் போராட்டம் நீண்ட காலத்தினையும் தாண்டிய காலம் தேவைப்படும். அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் தங்களை மீட்டெடுப்பது தொடர்பில் இன்று கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
முள்ளிவாய்க்காலோடு தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், அதன் விளைவுகளின் நீட்சி இன்னமும் உண்டு. அவற்றை எதிர்கொண்டு சீரான பாதையில் பயணிக்க வேண்டிய கடப்பாட்டின் பக்கத்தில் தமிழ் மக்கள் இன்று இருக்கின்றார்கள்.
தமிழ் மக்கள், தமது அரசியலுரிமைப் போராட்டங்களை கைவிடவில்லை என்ற உறுதிப்பாட்டில் இந்தப் பத்தியாளர் எவ்வளவு நம்பிக்கை கொண்டிருக்கின்றாரோ, அதேயளவுக்கு மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க மாட்டார்கள் என்பதிலும் நம்பிக்கையோடு இருக்கின்றார்.
ஆக, தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு போராட கிளம்புவார்கள் என்கிற கோசத்தை யார் வைத்தாலும், அதனை தற்போதைக்கு புறந்தள்ள முடியும் என்றும் கருதுகின்றார். அதன்போக்கிலிருந்தே வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் மற்றும் அதனையொற்றி எழுந்துள்ள கூச்சல்களை அணுகுகின்றார்.
வடக்கின் சனத்தொகைக்கும் சமநிலைக்கும் ஒவ்வாத வகையில், அங்கு பெருமளவு இராணுவம் நிலை கொண்டிருப்பதையும் சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் மேற்கொள்ளும் தலையீடுகளையும், தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றனர். அதற்கு, சர்வதேச ரீதியிலும் குறிப்பிட்டளவான ஆதரவு காணப்படுகின்றது. ஆனால், வடக்கில் முக்கிய இராணுவ மையங்களை வைத்துக் கொண்டிருக்கின்ற இலங்கை அரசாங்கம், அதனை மீளப்பெற்றுக் கொள்வது தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை. அதனை, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டின் போக்கிலும் கையாள நினைக்கின்றது.
வடக்கில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பல்லாயிரம் ஏக்கர் காணிகளை இராணுவம் இன்னமும் வைத்துக் கொண்டிருக்கின்றது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களை அண்மித்துள்ள நிலையில், இன்னமும் பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி பொதுமக்களின் காணிகளை வைத்துக் கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அழுத்தங்களை இலங்கை அரசாங்கமும் அதன் பாதுகாப்புத் தரப்பும் கையாள்வது தொடர்பில் பாரிய சாவல்களை எதிர்கொண்டு வருகின்றன.
அதன்போக்கிலும், வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன என்கிற நிலையொன்று உருவாக்கப்படும் சாத்தியங்கள் உண்டு. அதனை மறுப்பதற்கில்லை. வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக காட்டிக் கொண்டு இராணுவ தளங்களை அப்படியே பேணுவதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் அக்கறை கொள்ளும் தரப்புக்கள் இலங்கை அரசாங்கத்துக்குள் இருக்கின்றன. அதனை நாம் தவிர்த்துக் கொண்டும் விடயங்களை அணுக முடியாது.
ஆனால், இன்னொரு பக்கம் வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ளதாக காட்டப்படுவதன் பின்னால் தென்னிலங்கையின் அரசியலை கையாள்வது தொடர்பில் புதிய அரசாங்கம் சிக்கல்களை சந்திக்கும். அப்படியான நிலையில், வெடிபொருட்கள் மீட்கப்பட்ட விடயத்தினை எவ்வாறான திரைக்கதையினூடு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அரசாங்கத்துக்கு சிக்கல் இருக்கின்றது.
ஏனெனில், தோற்கடிக்கப்பட்டாலும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு, தருணங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. எவ்வாறாயினும் அதிகாரங்களின் பக்கத்தில் நகர்ந்து கொண்டுவிட வேண்டும் என்று. வடக்கில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள், படுவேகமாக நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள் சென்றிருப்பதாக கூச்சலிட்டிருக்கின்றார்கள். அது மாத்திரமின்றி புலிகளின் மீள்வருகை பற்றிய அலறல்களையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அப்படிப்பட்ட நிலையில், இலங்கையின் அரச உயர்பீடம் வடக்கில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட விடயத்தினை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, நாடொன்றின் பாதுகாப்பு தரப்பு, குறிப்பாக புலனாய்வுப் பிரிவு தனக்கென்று பாரிய திட்டங்களை எப்போதுமே கொண்டிருக்கும். அதன் திட்டமிடல்கள் பல நேரங்களில் மேலுள்ள அரசியல் அதிகாரங்கள் பற்றி சிந்திப்பதில்லை. மாறாக, நீட்சியான அதிகாரங்கள், கோலொச்சுகைகள் குறித்தே கவனம் செலுத்தி வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில், அவர்களுக்கு அரசாங்கங்கள் தொடர்பில் இருக்கின்ற அக்கறையைத் தாண்டி அரசு மீதான அக்கறையே அதிகம்.
அதனைப் பலப்படுத்திக் கொண்டிருப்பதற்கான நடவடிக்கைகளில் எந்தவித தொய்வுமின்றி நடந்து கொள்ளும். அதன்போக்கிலான நடவடிக்கைகளை இலங்கை கடந்த காலத்தில் கண்டிருக்கின்றது. இலங்கைப் புலனாய்வு பிரிவு தொடர்பிலான குறைந்த கணிப்பீடுகளைத் தாண்டி, அது தன்னை நிரூபித்து வந்திருக்கின்றது. அதன்போக்கிலும் வடக்கில் வெடிபொருட்கள் மீட்பு விடயத்தை எதிர்கொள்ள வேண்டும்.
ஒருவருடைய அல்லது ஒரு தரப்பின் பலம்- பலவீனம் தொடர்பில் உண்மையான நிலைமைப்பாடுகளை அறிந்து கொள்ளாமல் விடயங்களை அணுகி பாரிய இழப்பொன்றை கடந்த காலத்தில் தமிழ்த் தரப்பு சந்தித்திருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில், தென்னிலங்கையின் ஒவ்வொரு விடயத்தினையும், நகர்வினையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையுண்டு. குறிப்பாக, புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பில் நடவடிக்கைகள் தொடர்பில் மிகுந்த அவதானம் வேணடும்.
இவற்றையெல்லாம் மீறி, போர்க்காலங்களில் வடக்கில் கைவிடப்பட்ட ஆயுதங்களை எந்தவிதப் பொறுப்புணர்வுமின்றி தனிப்பட்ட நபர்கள், தங்களது ஆர்வக்கோளாறு மனநிலையினால் கையாண்டு சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. குறிப்பாக, 'மீன் பிடிப்பதற்காக வெடிபொருட்களை வைத்திருந்தேன்', 'பன்றியை வேட்டையாட ஆயுதங்களை வைத்துக் கொண்டிருந்தேன்' என்று விளைவுகளின் வீரியம் புரியாமல் ஆயுதங்களை கையாள நினைக்கும் தனிப்பட்ட நபர்கள், கட்டாயம் திருத்தப்பட வேண்டியவர்கள். ஏனெனில், அடிப்படை அறிவற்ற - பொறுப்புணர்வற்ற அவர்களின் நடவடிக்கை அவர்களுக்கு மாத்திரமின்றி, ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அச்சுறுத்தல்களை வழங்க வல்லது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago