Thipaan / 2016 ஜனவரி 27 , பி.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
மேற்கத்தேய சினிமாவின் அதியுயர் விருதாகக் கருதப்படும் ஒஸ்கார் விருதுகள், சர்ச்சையைச் சந்தித்திருப்பது, ஊடகங்களில் ஓரளவு பரிச்சயமுள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தச் சர்ச்சைகளும், இந்தியாவில் தலித் மாணவனென்று கருதப்பட்ட ஒருவரின் தற்கொலையும், இட ஒதுக்கீடுகள் பற்றிய கலந்துரையாடல்களையும் ஒதுக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட இனங்கள்ஃகுழுமங்கள் பற்றிய கலந்துரையாடல்களையும் மீள ஆரம்பித்துள்ளன என்றால் மிகையாகாது.
2016ஆண்டு ஒஸ்கார் விருதுக்கான தெரிவுப்பட்டியலில், வெள்ளையர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும், வெள்ளையர்கள் அல்லாதோர், குறிப்பாக கறுப்பினத்தவர்கள், ஒதுக்கப்படுவதாகவும் சர்ச்சை எழுந்திருந்தது. இவ்வாண்டுக்கான சிறந்த நடிக, நடிகையருக்கான தெரிவுகளில்,
20 பேருமே வெள்ளையர்களாக அமைந்ததோடு, தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இது இடம்பெற்றதைத் தொடர்ந்தே, அதிக எதிர்ப்பு எழுந்திருந்தது. குறிப்பாக, இவ்விருதுக்கான தெரிவுப்பட்டியலில் தெரிவுசெய்யப்படக்கூடிய திறமைகளை வில் ஸ்மித் உட்படப் பலர் வெளிக்காட்டியிருந்ததாகவும், விமர்சகர்கள் தெரிவித்தனர்.
மறுபுறத்தில், தலித் எனக் கருதப்பட்ட கலாநிதிப் பட்டத்துக்கான மாணவனொருவன், இந்தியாவின் ஹைதரபாத்தில் பல்கலைக்கழமொன்றில் தற்கொலை செய்தமை, அடுத்த விடயமாகும். மாணவர் குழுக்கள் இரண்டுக்கிடையில் இடம்பெற்ற கருத்து வேறுபாடுகள் காரணமாக, மாணவர் குழுவொன்றின் தலைவர், றோஹித் வேமுலா என்பவர் அங்கம் வகித்த குழுவால் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்து, விசாரணைகள் இடம்பெற்று, றோஹித் உட்பட தலித்களெனத் தெரிவிக்கப்பட்ட ஐவர், அப்பல்கலைக்கழத்தால் இடைநிறுத்தப்பட்டனர். அது இடம்பெற்ற சில மாதங்களின் பின்னர், றோஹித் தற்கொலை செய்துகொண்டார். அதனால், கடுமையான எதிர்ப்புகளும் போராட்டங்களும் வெடித்திருந்தன. புதிதாக வெளிவந்த தகவலின்படி, குறித்த மாணவன் தலித் அல்ல எனவும், பொய்யான சான்றிதழ்களைச் சமர்ப்பித்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆனால், தலித்கள் என்றவுடன் கல்வியியல் துறையில் எழும், இட ஒதுக்கீடு சம்பந்தமான வாதப் பிரதிவாதங்களை, இந்த மரணம் ஏற்படுத்தாமல் விட்டிருக்கவில்லை.
மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்களுமே, கிட்டத்தப்பட்ட ஒரே மாதிரியானவை என்ற போதிலும், வௌ;வேறான இரண்டு நோக்கங்களைக் கொண்டன. முதலாவதில், ஒடுக்கட்டஃஒடுக்கப்பட்டுவரும் இனப்பிரிவொன்று, தொடர்ந்தும் ஒடுக்கப்படுவதை எதிர்க்கிறது. இரண்டாவது, ஒடுக்கப்பட்டஃஒடுக்கப்பட்டுவரும் சாதிக் குழுமமொன்று, அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் பற்றிச் சிந்திக்கிறது. ஆனால், இரண்டுமே, ஒடுக்கப்படுதலுக்கு எதிரானது, அது தான் இங்குள்ள ஒற்றுமை.
ஒஸ்கார் விடயத்தைப் பார்த்தால், வெள்ளையினத்தவர்கள் அல்லாதோருக்கெதிராக, குறிப்பாக கறுப்பினத்தவர்களுக்கெதிராக, நிறவெறியும் ஒடுக்கப்படும் செயற்பாடுகளும், தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன. அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா என்கிற கறுப்பினத்தவர் வந்தாலும் கூட, அவரால் மாத்திரம் தனித்து நின்று, அமெரிக்காவில் காணப்படும் கட்டமைப்புரீதியான நிறவெறியை நிறுத்த முடியவில்லை. அவ்வாறான கட்டமைப்புரீதியான நிறவெறியின் குணங்குறியே, இந்த ஒஸ்கார் விவகாரமாகும்.
ஏறத்தாழ 62 சதவீதமாகக் காணப்படும் வெள்ளையர்கள், ஒஸ்கார் வாக்களிக்கும் களத்தில், 93 சதவீதமாகக் காணப்படுகின்றனர். அதில் முக்கியமான இன்னொன்றாக, ஒரு பெண்ணுக்கு, அமெரிக்காவில் காணப்படும் ஆண்களின் எண்ணிக்கை, 0.97 ஆகும். இதன்படி, ஆண்களை விடப் பெண்களே அதிகமாகக் காணப்படுகின்றனர். இருந்த போதிலும், ஒஸ்கார் வாக்களிப்பு அங்கத்தவர்களில், 76 சதவீதமானோர், ஆண்களே எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களின் திறமைகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கும், இந்தத் தரவு பதிலாக அமைகிறது.
பிரச்சினையொன்று இங்கு காணப்படுவது உறுதியாக, அதற்கான தீர்வு என்னவென்பது கேள்வியாகிறது.
ஒரு பிரிவில் தெரிவுசெய்யப்படும் 5 பேரில் ஒருவர், நிச்சயமாக வெள்ளையினத்தவர் அல்லாதவராக இருக்க வேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட முடியுமா? இது, சிறிது சிக்கலான விடயம். ஏனைய இடங்களில் காணப்படும் இட ஒதுக்கீடுகளுக்கான காரணங்களை விட, இங்குள்ள காரணங்கள் சிறிது சிக்கலானவை. பொலிவூட்டில், வெள்ளையினத்தவர்களின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்படுகிறது என்பது உண்மை, கறுப்பினத்தவர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டுமென்பதும் உண்மையானது. ஆனால், கறுப்பினத்தவர்களின் பங்களிப்பென்பது, இல்லையென்று கூறிவிட முடியாது. குறிப்பிடத்தக்களவு பங்களிப்புக் காணப்படுகின்ற போதிலும், அவை அங்கிகரிக்கப்படுவதில்லை என்பதே, முக்கியமான பிரச்சினையாகும்.
ஆகவே, வாக்களிக்கும் அங்கத்தவர்களின் பல்வகைமையை அதிகரிப்பதென்பது, பொருத்தமான தீர்வாக அமையும். அதற்கான நடவடிக்கைகளை, இதற்கு முன்னரும் ஒஸ்காரை வழங்கும் நிறுவனம் எடுத்த போதிலும், அந்நிலைமை இன்னமும் முன்னேறியிருக்கவில்லை. இம்முறை ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, பல்வகைமையை இன்னமும் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இது, இலக்குகள், ஒதுக்கீடுகள் எவையுமற்ற, பல்வகைமை அதிகரிப்பாகும். மறுபுறத்தில், குறிப்பிட்டளவு சதவீதத்தினர், வெள்ளையர்களல்லாதோராக இருக்க வேண்டுமென்ற பல்வகைமையையும் ஏற்படுத்த முடியும். முதலாவதை விட, இரண்டாவதன் பல்வகைமையென்பது, ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டதாக அமையும்.
தலித்களின் ஒதுக்கீட்டுப் பிரச்சினையை நோக்கினால், பொலிவூட்டை விடச் சிக்கலான, ஆழ்ந்த வேர்களைக் கொண்ட பிரச்சினையாக அது காணப்படுகிறது.
காலங்காலமாக, சாதியின் அடிப்படையில் ஒதுக்கப்படும் குழுமமாக, தலித்கள் காணப்படுகின்றனர். தொழில் வாய்ப்புகள், ஏனைய வாய்ப்புகள் போன்றவற்றில் ஒதுக்கப்படும் அவர்கள், வறுமையானவர்களாகக் காணப்பட, அவர்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய கல்வியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பிலும், கடுமையான பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். எனவே, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, கல்விக்கான வாய்ப்புகளில் ஒதுக்கீடொன்று வழங்கப்பட வேண்டிய தேவை காணப்படுகிறது. அந்த இட ஒதுக்கீடு, இந்தியாவில் காணப்படுகிறது. ஆகவே, தலித்களாக இருப்பதன் காரணமாக பிரதிகூலமான கல்வி கற்கும் சூழலைப் பெற்றுக் கொண்டவர்கள், சலுகையின் அடிப்படையில், ஒப்பீட்டளவில் குறைந்த புள்ளிகளோடு, அடுத்த கட்டக் கல்விக்கு முன்னேறக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. இது, சிறந்த முறையென்று தோன்றுகின்ற போதிலும், அது தொடர்பான விமர்சனங்களும் இல்லாமலில்லை.
இந்த ஒதுக்கீடு, 'ஒரு பிரிவினருக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், அனைவரும் சமம் என்ற விதியை மீறுகின்றார்கள்', 'போதிய அறிவற்றவர்கள், தலித்களாக இருப்பதால் மாத்திரம், அடுத்த கட்டத்துக்குச் செல்கிறார்கள்' என, இம்முறையின் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அனைவரும் சமமாக இருக்கிறார்கள், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளென்பது, உண்மையிலேயே சிறந்த நிலை தான். ஆனால், நிலைமை அவ்வாறு இருக்கிறதா?
கற்பனையான இந்தச் சூழ்நிலையை எடுத்துக் கொள்வோம். 400 மீற்றர் ஓட்டப் போட்டியொன்று இடம்பெறுகிறது. அனைத்துக் குழந்தைகளும், ஒரே இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள். ஆனால், 50 மீற்றரைத் தாண்டிய பின், அதில் பங்குபற்றிய 10 குழந்தைகளில் 2 குழந்தைகள், வேறு ஏதோ காரணத்துக்காக, சிலரால் தாக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி அவர்கள் ஓட, போட்டி ஏற்பாட்டாளர்களும், அக்குழந்தைகள் தோற்பதை உறுதிசெய்ய, சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இருந்த போதிலும், கெந்திக் கெந்தி, அவர்கள் ஓடுகிறார்கள். அந்தப் போட்டியில், தாக்கப்படாத 8 குழந்தைகளில் ஒருவர், நிச்சயமாக வெற்றிபெறுவார். ஆனால், உண்மையில் அவர் தான் வெற்றியாளரா? உண்மையில் அவர் தான், அதீத திறமை கொண்டவரா? உண்மையில் அவர் தான், வெற்றிக்குப் பொருத்தமானவரா?
நிச்சயமாக இல்லை. இப்போது, 400 மீற்றர் ஓட்டத்தை வாழ்க்கை எனவும், அடி வாங்கிய 2 குழந்தைகளை தலித்கள் எனவும் பிரதியீடு செய்தால், இப்பிரச்சினையின் தீவிரம் புரியும்.
இட ஒதுக்கீட்டால், தலித்களுக்கு முழுவதுமாக நன்மை தான் கிடைக்கிறதா என்றால், இல்லை. இட ஒதுக்கீட்டின் காரணமாக, திறமையான தலித்கள் தெரிவானாலும் கூட, வெறுமனே இட ஒதுக்கீட்டினால் தான் அவர்கள் தெரிவானார்கள் என்ற ஏளனப் பார்வை பார்க்கப்படுகின்றமை மறுப்பதற்கில்லை. ஆனால், சமமான வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர்களாலும் பிரகாசிக்க முடியுமென்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
இந்த இட ஒதுக்கீட்டில் இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை, அத்திட்டத்தில் இல்லை. மாறாக, அதன் அமுல்படுத்தலிலேயே உள்ளது. தலித்களின் பிரச்சினையென்பது, ஒதுக்கீடோடு முடிவில்லை. மாறாக, ஒதுக்கீடென்பது குறுகிய காலத் திட்டமாக நோக்கப்பட்டு, நீண்டகால நோக்கில், அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் சமூகத்தில் அவர்களது நிலையையும் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறான செயற்பாடுகள், அரிதாகவே முன்னெடுக்கப்படும் நிலையில், தலித்கள் என்றால் இட ஒதுக்கீட்டால் அதிக வாய்ப்பைப் பெறும் சமூகம் என்ற கருத்தே, உருவாகும்.
இந்த இரண்டு சமூகங்களும், கட்டமைப்புரீதியாக ஒதுக்கப்பட்டஃஒடுக்கப்பட்ட சமூகங்கள். இரண்டுமே, அவற்றிலிருந்தே வெளியேறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஆனால், அவர்களைச் சூழவுள்ள சூழல், அவர்களைத் தடுத்து வருகின்றது. இதனால் தா ன், அவர்களின் முன்னேற்றமென்பது, ஏதோ ஒரு வகையிலான இட ஒதுக்கீட்டை நம்பியிருக்கிறது. அவை நடைமுறைப்படுத்தப்படுவது மாத்திரமன்றி, அடுத்த கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென்பது தான், நியாயமான எதிர்பார்ப்பாகும்.
38 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
2 hours ago