2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

‘வரலாறு முக்கியம் அமைச்சரே!’

என்.கே. அஷோக்பரன்   / 2020 ஜூலை 14 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வரலாறு என்பது இறந்தவர்கள் மீது ஆடப்படும் பொய்” என்பார் ஃப்ரெஞ்ச் அறிஞர் வோல்டேயர்.

வரலாறு என்பது எப்போதும் சிக்கலானதொன்றாகவே இருந்துகொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்தவை எல்லாம் வரலாறுதான். ஆனால், கடந்த காலத்தில் என்னதான் நடந்தது என்பதை, இப்போது நாம் எப்படி அறிந்துகொள்வது? அந்த வகையில் பார்த்தால், வரலாறு என்பது வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, இன்று எமக்கு கிடைக்கக்கூடிய வகையில் இருக்கும் பதிவுகளின் தொகுப்பு மட்டும்தான் அல்லது அந்தப் பதிவுகளுக்கு நாம் வழங்கும் பொருள்கோடல்களும் வியாக்கியானங்களும்தான். அந்தப் பதிவுகளினூடாகவும் அவற்றுக்கு வழங்கும் பொருள்கோடல், வியாக்கியானங்களூடாக கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் வரலாறு எனலாம்.

வரலாற்றின் பயன்பாடு இந்தளவில் மட்டுப்பட்டிருந்தால், அதற்கு நாம் அதிகம் முக்கியத்துவம் தரவேண்டிய தேவையில்லை. ஆனால், வரலாறு இதைத்தாண்டிய முக்கியத்துவத்தை மனிதவாழ்வில் பெற்றுவிட்டது. “நாம் யார் தெரியுமா?”, “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த குடிகள்” என்ற பகட்டாரவாரம், ஒரு மக்கள் கூட்டத்தின் அடையாளத்தினதும், பெருமையினதும் அடிப்படையாகப் பார்க்கப்படும் நிலையில், நிச்சயமாக வரலாறு முக்கியமாகிவிடுகிறது.

இந்த அடிப்படையில்தான், மல்கம் எக்ஸ் “ஓர் இனக்கூட்டமானது, ஒரு தனி மனிதனைப் போன்றது; அது தனது சொந்தத் திறமையைப் பயன்படுத்தும் வரை, அதன் சொந்த வரலாற்றில் பெருமை கொள்ளும், அதன் சொந்த கலாசாரத்தை வெளிப்படுத்தும் வரை, தனது தனித்தன்மையை உறுதிப்படுத்தும் வரை, அது ஒருபோதும் தன்னை முழுமைப்படுத்தாது” என்கிறார்.

ஓர் இனத்தினது மட்டுமல்ல, ஒரு தேசத்தினது அடையாளத்துக்கும் நிறுவலுக்கும், கட்டியெழுப்பலுக்கும், நீட்சிக்கும் கூட வரலாறு என்பது முக்கியத்துவமிக்கதொன்றாகவே பார்க்கப்படுகிறது.

“தேசம்” என்பதை புறக்காரணிகள் மூலம் வரையறுக்கும் கொம்யுனிச சர்வாதிகாரி ஜோசஃப் ஸ்டாலின், “வரலாற்று ரீதியாக கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அடிப்படைகளைக் கொண்டமைந்த, நிலையான மக்கள் சமூகமொன்று, ஒரு தேசமாகும்” என்கிறார்.

“தேசம்” என்பதை அகக்காரணிகள் மூலம் வரையறுக்கும் ஏனஸ்ட் றெனன், “ஒரு தேசம் என்பது, ஒருவர் செய்த தியாகம், ஒருவர் மீண்டும் செய்வதற்குத் தயாராக இருக்கும் தியாகம் என்ற உணர்வின் பாலாக, கட்டமைந்த மாபெரும் ஒற்றுமையாகும். அது கடந்த காலத்தை எண்ணத்தில் கொள்கிறது; அது நிகழ்காலத்தில் தொடர்ந்து, பொது வாழ்க்கையைக் கொண்டமைவதற்கான தௌிவான வகையில் வௌிப்படுத்தப்படும் அங்கிகாரம், விருப்பு ஆகிய உறுதியான செயற்பாடுகளினூடாகத் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. ஒரு தேசத்தின் இருப்பு என்பது, நித்திய பொது வாக்கெடுப்பாகும்” என்கிறார். ஆகவே, ஒரு தேசக் கட்டமைப்பில், வரலாற்றினதும், கடந்த காலத்தினதும் பங்கு, தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.   

ஆகவே, தம்மை ஒரு மக்கள் கூட்டமாக, இனமாக, தேசமாக நிறுவிக்கொள்ள விளையும் அனைத்து மக்கள் கூட்டங்களும் ஏதோவொரு வகையில் வரலாற்றின் துணையை அதற்காகத் தேடிக்கொள்கின்றன. அந்த வ​கையில் தமக்கு வசதியானதொரு, தம்முடைய கதைக்குப் பெருமைசேர்க்கும் வரலாற்றைக் கட்டமைக்க முயன்றுகொண்டேயிருக்கின்றன. இதை தமக்கான “பயன் தரு கடந்தகாலத்தின்” தேடல் எனலாம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இலங்கையின் வரலாறாக “மஹாவம்சம்” உருவெடுத்ததுகூட “பயன் தரு கடந்த காலத்துக்கான” தேடலின் விளைவு எனலாம். “மஹாவம்சம்” என்பது அது எழுதப்பட்ட காலத்துக்கு ஏறத்தாழ 1,000 ஆண்டுகள் முன்பு நடந்த விடயம் பற்றிச் சொல்லும் ஒரு காவியம். மஹாவம்சத்தை, அது எழுதப்பட்ட காலத்தின் அரசியல், சமய, சமூக, இலக்கிய சிந்தனையின் பிரதிபலிப்பான புராண இலக்கியமாகப் பார்த்தல் ஏற்புடையது. ஆனால், அந்தப் புராண இலக்கியமானது, ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்துக்கு அவர்கள் தேடும் “பயன் தரு கடந்தகாலத்தை” வழங்குவதாக அமைந்த​ைமயால், அது வரலாறாகவே சுவீகரிக்கப்பட்டது. அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தேடப்பட்டன. அந்தப் புராண இலக்கியம் மீள மீள அம்மக்கள்  கூட்டத்துக்குள் வரலாறாகப் போதிக்கப்பட்டது. அது வரலாறாக ஆக்கப்பட்டது. இது உண்மையான வரலாற்றறிஞர்கள் கூறும் வரலாற்றுக்கும் குறித்த மக்கள் கூட்டம் நம்பும் வரலாற்றுக்கும் இடையில் பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தி விடுகிறது.

விஜயனின் வருகையோடு உருவான சிங்கள இனம், அதன்பின் சில நூற்றாண்டுகள் கழித்து, தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்த பௌத்தம், இலங்கையில் இருந்த தமிழர்களும் தமிழ் பௌத்தமும், காலத்தால் மிகப் பின்னர் உருவான சிங்கள மொழி என்ற வரலாற்றின் படிகளில், சிங்கள-பௌத்தம் என்ற அடையாளம், எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு வரலாற்றறிஞ்ஞரான பேராசிரியர் லெஸ்லி குணவர்த்தன, மொழி, இனம், மதம் என்பவை கலந்த சிங்கள-பௌத்த அடையாளம், ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது என்கிறார்.  

சமகால “சிங்கள-பௌத்த” அடையாளத்தின் தோற்றமும் எழுச்சியும் பிரித்தானியக் கொலனித்துவ காலத்துக்குப் பின்னானது என்பது, கணநாத் ஒபேசேகர, றிச்சட் கொம்ப்றிச், லெஸ்லி குணவர்த்தன, எச்.எல்.செனவிரத்ன, ஸ்ரான்லி ஜே தம்பையா உள்ளிட்ட பல வரலாற்று,  மானுடவியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

அவ்வாறு உருவான ஒரு மக்கள் கூட்டம் தனக்கென தேடிக்கொண்ட “பயன் தரு கடந்த காலம்தான்” இன்று இலங்கையின் வரலாறாக நம்பப்படும் வரலாறு காணப்படுகிறது. இதனால்தான், அந்த வரலாறு, பல தர்க்கச்சிக்கல்களில் சிக்குண்டு நிற்கிறது. “மஹாவம்சத்தை” வரலாறாக சுவீகரித்துக்கொண்டது, தமிழர்களை “விரும்பத்தகாத அந்நியர்களாக” சித்திரிக்கும் பெரும்பான்மை இனத்-தேசிய பெருந்திரள்வாதத்துக்கு ஏற்புடையதாக அமைந்தாலும் தம்மை அதிகாரம்மிகு பெரும்பான்மை இனத்-தேசியமாக உருவாக்கிக்கொண்டதன் பின்னர், “மஹாவம்சம்” காலத்தின் அடிப்படையில் ஏற்படுத்தியிருக்கும் மட்டுப்பாடு பெருங்குறையாக உணரப்படத் தொடங்குவதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

“மஹாவம்சத்தை” இலங்கையின் வரலாறாகக் கருதினால், அது “சிங்கள இனத்தின்” வரலாற்றை, விஜயனின் வருகையோடு ஆரம்பிக்கிறது. ஆனால், விஜயன் இங்கு வரும்போது இங்கு மக்கள் இருந்திருக்கிறார்கள். ஆகவே, சிங்களவர்களுக்கு முந்தைய மக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்றாகிறது. அம்மக்களைப் பற்றிய வரலாற்றாய்வு பெருமளவுக்கு முன்னெடுக்கப்படவில்லை, அது பற்றி அரசாங்கமும் அக்கறை கொள்ளவில்லை. ஏனெனில் அது பெரும்பான்மை மக்கள் சுவீகரித்துக்கொண்டுள்ள வரலாற்றுக்கு சாதகமானதாக அமையாது.

மறுபுறத்தில், விஜயனின் வருகையிலும் சில நூற்றாண்டுகள் கழித்துதான் பௌத்தம் இலங்கைக்கு வருகிறது. அப்படியானால், பௌத்தத்துக்கு முன்பு இங்குள்ள மக்கள் வேறு நம்பிக்கைகளைக் கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆகவே, இந்த மட்டுப்பாடுகளைக் களைய, “சிங்கள” அடையாளத்துக்கான இன்னொரு “பயன் தரு கடந்தகாலத்தை” தேடும் முயற்சி சமகாலத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

அதன் ஒரு அங்கம்தான் “இராவணனை” சிங்களவனாக சித்திரிக்கும் முயற்சி. மஹாவம்சத்திலும் பழைய புராண இதிகாசமாக இராமாயணம் இருக்கிறது. இராமாயணம் பாரதக் கண்டத்தில் மட்டுமல்லாது, தென்கிழக்காசியாவின் பல நாடுகளிலும்கூட பிரபல்யமான ஒரு புராண இதிகாசமாக இருக்கிறது.

இலங்கை பற்றிய மிகத்தொன்மையான பதிவுகளுள் ஒன்றாக இராமாணயத்தை பலரும் கருதுகிறார்கள். அன்று இலங்கையை ஆண்டவன் இராவணன். இலங்கையை சிங்களவர்களே ஆண்டார்கள் என்ற நம்பிக்கையை பலப்படுத்த வேண்டுமானால், இராவணனை சிங்களவனாக்க வேண்டிய தேவையும் அதனோடு இணைந்து ஏற்படுகிறது. இலங்கை மன்னர்களில் “எல்லாளன்” என்ற “தோற்கடிக்கப்பட்ட அந்நிய ஆக்கிரமிப்பு எதிரியைத்” தவிர மற்ற அனைவரும் சிங்களவர்களே என்றதொரு “கடந்த காலத்தை” கட்டியெழுப்பும் கைங்கரியத்தையே இன்று “சிங்கள-பௌத்த” பேரினவாத சக்திகள் முன்னெடுக்க விளைகின்றன.  

இந்த வரலாறு எழுதும் போட்டியில் தமிழர்களின் நிலை என்ன என்பது பல தமிழர்களிடையேயும் இருக்கும் முக்கிய கேள்வி. தமிழர்கள் வரலாறு பற்றியதும் “பயன்தரு கடந்த காலத்தை” கட்டியெழுப்புவதுமான போட்டியில் பங்கேற்கத்தேவையில்லை என்பது சில தமிழ்த்தேசியவாதிகளின் கருத்தாகும். நாம் எப்போது இங்கு வந்தோம் என்பது எம்முடைய இன்றைய தேச அடையாளத்தையும், இருப்பையும் பாதிக்காது, பாதிக்கக்கூடாது என்பது அவர்களது கருத்தாகும்.

மறுபுறத்தில், “தமிழ்க்கடவுள்” முருகன் “கத்தரகம தெவியா” ஆனதும், இன்று திருகோணமலை “கோகண்ண” ஆகிக்கொண்டிருப்பதுமெல்லாம் தமிழர்களின் அடையாளச் சிதைப்புகள் என்று பல தமிழர்கள் கோபம் கொள்கிறார்கள். சிவபக்தனான இராவணன் தமிழனே, அவன் எப்படி சிங்களவனாக முடியும் என்பது அவர்களது கேள்வியாக இருக்கிறது. ஆகவே, தமிழர்கள் தமது வரலாற்றை மீட்க வேண்டும் என்பது அவர்களது சூளுரையாக இருக்கிறது.  

வரலாறு பற்றி நாம் சிந்திக்கும் போது, இங்கு ‘புலிகேசிகள்’ தம்முடைய வரலாறு நூறு வருடங்களின் பின்னர் வரப்போகிறவர்களுக்குத் தெரியவா போகிறது என, தாமே மிகைப்படுத்தி எழுதுவதாக நாம் நினைப்பது தவறானதாகும். உண்மையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் புலிகேசியின் தேவை ஒரு மக்கள் கூட்டத்துக்கு ஏற்படும் போது, அவர்களே புலிகேசி பற்றிய வரலாற்றை தமக்குத் தேவையான விதத்தில் தேடிக்கட்டமைத்துக்கொள்வார்கள். புலிகேசி எப்படி இருந்தான் என்பதை விட, புலிகேசி எப்படி இருந்தான் என்று இருப்பது அவர்களுக்குப் பயனுள்ளதோ, அந்த வகையில் புலிகேசி கட்டியமைக்கப்படுவான். புலிகேசி அவர்களுக்கு பயனுள்ள கடந்த காலத்தை தராத பட்சத்தில், அவன் எத்தகையவனாக இருந்தாலும், அவன் வரலாற்றில் இடம்பெறமாட்டான். இதுதான் வரலாற்றின் யதார்த்தம்.

அதனால்தானோ என்னவோ “வரலாறு என்பது இறந்தவர்கள் மீது ஆடப்படும் பொய்” என்கிறார் வோல்டேயர். ஆனால் இதனால் மட்டும் வரலாற்றிற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று அதனை நிராகரித்துவிடவும் முடியாது. ஒரு மக்கட் கூட்டத்தின் அடையாளத்தின் ஊற்று அதனுடைய வரலாறாகவே கருதப்படுகிறது. அதனால்தான் மனிதக்கூட்டங்கள் வரலாறு பற்றி பெருங்கரிசனை கொண்டிருக்கின்றன. அதனால்தான் வரலாற்றைப் புனைவதில் அவை சிரத்தை கொள்கின்றன. ஆனால் இந்த வரலாற்றுப் புனைவுச் சண்டைகளுக்குள் வரலாறு சிலவேளைகளில் தொலைந்துதான் போய்விடுகிறது.   

நிகழ்கால வாழ்வுக்கு வரலாற்றின் பங்களிப்பு என்பது குறைவானதே, ஆயினும் இன்றைய மனிதக் கூட்டங்களுக்கு அது இன்றியமையாததொன்றாக இருக்கிறது. மனித வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கம் அது. நாமாக உருவாக்கிக்கொண்டாலும், அதுவே உண்மையாக இருந்தாலும், “வரலாறு முக்கியம் அமைச்சரே!”.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X