2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வரவைக்கூடப் பதிவுசெய்யாத முஸ்லிம் கட்சிகள்

Editorial   / 2020 மே 08 , மு.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான இரு முஸ்லிம் கட்சிகளும் ஆளும் தரப்புடன் பகைமை பாராட்டி வருகின்றன. 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை ராஜபக்‌ஷ அரசாங்கம் ஆட்சி புரிந்த காலப் பகுதியிலும் இப்படித்தான் ஐ.தே.கவுடன் பகைமை பாராட்டும் அணுகுமுறையையே மூன்று முஸ்லிம் கட்சிகளும் கடைப்பிடித்தன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், கொரோனா வைரஸ் தொடர்பான நடப்பு விவகாரங்களைக் கலந்துரையாடுவதற்காகப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்திருந்தார். இது கொரோனா வைரஸ் பற்றிய கலந்துரையாடல் என்றாலும், அரசியல் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காகவே இந்தக் கூட்டம் கூட்டப்படுகின்றது என்று கருதப்பட்ட நிலையில், எடுகோளின் அடிப்படையில், ஐக்கிய தேசிய கட்சியும் சஜித் அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அத்தோடு மக்கள் விடுதலை முன்னணியும் இச்சந்திப்பைப் புறக்கணித்தது.

இதேவேளை, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும், இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. 2015ஆம் ஆண்டு வரை, நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாத்திரமே, கலந்து கொண்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

இவ்விடயம், சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விட்டது தவறு என்ற தோரணையில் கருத்துகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, போனால் மட்டும் என்ன நடந்திருக்கும் என்ற பாணியிலான பதில் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

முஸ்லிம் சமூகத்துக்குள் விவாதத்துக்கு ஒன்றும் குறைச்சலில்லைத் தானே!

ஜனாதிபதித் தேர்தலில், பெரும்பாலான முஸ்லிம்கள் மொட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கவில்லை. எனவே, முஸ்லிம்களைக் காட்டியே, கடந்த தேர்தலில் தீவிர பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆளும் தரப்பின் சில நடவடிக்கைகளைப் பார்த்தால், நடைபெறவுள்ள தேர்தலிலும் 'இவர்களின் ஆதரவு தேவையில்லை' என்ற கோதாவில் செயற்படுவது போலிருக்கின்றது.

கொவிட்-19 விடயத்தில், அரசாங்கம் பொறுப்புடன் நடந்து கொண்டது; இனப்பாகுபாடு காட்டவில்லை; எனச் சில இனவாத ஊடகங்களும் செயற்பாட்டாளர்களும், முஸ்லிம்களை நோக்கி விரல்நீட்ட முற்பட்ட போதும், பின்பு ஏற்பட்ட நிலைமைகளால் அது எடுபடவில்லை.

இருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் விடயத்தில் அரசாங்கம் நடந்து கொண்ட விதத்தை, முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. உலக சுகாதார ஸ்தாபனமே, 'புதைக்கலாம்' எனக் கூறியுள்ள போது, அரசாங்கம் சொன்ன காரணங்களும் அது சொல்லப்பட்ட விதமும் ஆளும் தரப்பில் உள்ள, எதிர்த்தரப்பில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது.

பிரதமரின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விட்டதற்கு இதுவும், சஜித் அணி எடுத்த தீர்மானமும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. 'போயிருந்தால் மட்டும் எதைச் சாதித்திருக்க முடியும்' என்ற வினாக்களும் தொடுக்கப்படுகின்றன.

எதுவும் நடந்திருக்காதுதான்!

ஆனால், அப்படியென்றால் ராஜபக்‌ஷவை எப்போதும் விமர்சிக்கின்ற, ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிக நெருக்கமான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஏன் கலந்து கொண்டது? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இது, இரண்டு கட்சிகள் பற்றிய விடயமோ சில எம்.பிக்களுடன் சம்பந்தப்பட்டதோ அல்ல. இது, இலங்கையின் முஸ்லிம் சமூகம் பற்றியது. இந்தச் சமூகத்தின் பிரதிநிதிகளாக, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும்; அதுதான் அரசியல் சாணக்கியம் என்பது.

ஆயிரம் கோபங்களும் வருத்தங்களும் இருந்தாலும், அச்சந்திப்பில் கலந்து கொண்டு, கொரோனா வைரஸ் தொடர்பில், முஸ்லிம்களின் மனக் கவலைகள், கருத்துகள், அரசியல் நிலைப்பாடுகளை முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் கூறியிருக்கலாம். அரசாங்கத்தை விமர்சித்திருக்கலாம். அல்லது, குறைந்த பட்சம் “நீங்கள் செய்த காரியத்தாலேயே, நாங்கள் பகிஷ்கரிக்கின்றோம்” என்று அறிவித்திருக்க வேண்டும்.

ஆனால், எதைச் சாதிக்க முடியும் என்றெல்லாம் சிந்திக்காமல், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குறைந்த பட்சம் அக்கூட்டத்தில் தமது வரவைப் பதிவு செய்து, மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளது. பிரதான முஸ்லிம் கட்சிகள், அதைச் செய்யத் தவறிவிட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .