2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘வறுமையின் நச்சு வட்டம்’

Editorial   / 2023 நவம்பர் 21 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா       

மற்றுமொரு வரவு -செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் வரவுகளை விட செலவுகள் பன்மடங்காக அதிகரித்து, குடும்பங்களின் துண்டுவிழும் தொகைக்கு கடைசி வரையும் ‘பாலம் போடுவதற்கு’ முடியாமல் போயுள்ள ஓர் இக்கட்டான காலப்பகுதியில் இந்த பட்ஜெட் முன்மொழியப்பட்டுள்ளது. 

பேரின மற்றும் சிற்றினப் பொருளாதார நிதிக் கருவிகளில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வரவு- செலவுத் திட்டத்தை தயாரிக்கின்றது என்று எடுத்துக் கொண்டாலும், வரவு -செலவுத் திட்டம் என்பது தமது வீடுகளில் உள்ள ஒவ்வொரு பொருளாதாரப் பிரச்சினையையும் தீர்த்து வைக்க வேண்டும் என்றே நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  
‘பட்ஜெட் தமது கவலைகளுக்கு ஏதாவது தீர்வுகளைக் கொண்டு வரும்’ என்று மக்கள் நப்பாசை கொள்வதும், அது சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஏமாற்றங்களே மிஞ்சுவதும் இலங்கை மக்களுக்கு ஒன்றும் புதிய அனுபவமல்ல.

2024ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டம் குறித்த அதீத எதிர்பார்ப்புக்கள் மக்களுக்கு இருந்தன. அந்த அனைத்து எதிர்பார்ப்புக்களையும் இது திருப்திப்படுத்தியதாகக் கருதுவதற்கு இடமில்லை. வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக மட்டும் எல்லா மக்களையும் சந்தோஷப்படுத்துவதும், பிரச்சினைகளைத் தீர்ப்பதும் நடைமுறைச் சாத்திமற்றதும் ஆகும்.

2019ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இலங்கைக்குக் கஷ்டகாலம் பிடித்தது. 30 வருட யுத்த காலத்தில் கூட இல்லாத அளவுக்குத் தேசத்தின் பொருளாதாரமும் குடும்பங்களின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. கோவிட் - 19 வைரஸின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதில் இருந்து இந்த வீழ்ச்சியும் ஆரம்பித்தது.
கொரோனா வைரஸை காரணமாகக் கொண்டு கிட்டத்தட்ட உலகின் எல்லா நாடுகளிலும் ஒருவித பொருளாதார வீழ்ச்சியும் தேக்கநிலையும் ஏற்பட்டதை நாமறிவோம். ஆனால், அவர்கள் மிக விரைவாக மீண்டெழுந்து கொண்டார்கள்.

ஏனெனில், அவர்களது அரசியல், பொருளாதார கட்டமைப்புகள் மற்றும் இதர விடயங்கள் அனைத்தும் சரியாக முறைமைப்படுத்தப்பட்டிருந்தன. நாட்டைக் கொள்ளையடித்த ஆட்சியாளர்கள் இருக்கவில்லை, அரச பணத்தை ஏப்பமிட்ட அரசியல்வாதிகள், ஊழலுக்குத் துணைநின்ற அதிகாரிகள் என்று யாரும் அந்த நாடுகளில் இருக்கவில்லை.
குடும்ப அரசியலுக்காகக் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக எதை வேண்டுமென்றாலும் செய்யத் துணிகின்ற ஒரு இழிவான கலாசாரம் அங்கு இருக்கவில்லை. இன பாகுபாடோ, 
மத வேற்றுமையோ இருக்கவில்லை. 

அதனால் மக்களின் கூட்டு ஒத்துழைப்புடன் அந்த நாடுகள் ஓரளவுக்கு மீண்டெழுந்து விட்டதாக சொல்லலாம். 
ஆனால், இலங்கையில் இவையெல்லாம் தலைகீழாக இருந்தன. இன்னும் இருக்கின்றன. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு கோவிட்-19 வைரஸே காரணம் எனப் பொதுவெளியில் கூறப்பட்டாலும், உண்மை அதுவல்ல என்பது சிறுபிள்ளைகளுக்கும் தெரியும்.

இலங்கைப் பொருளாதாரத்தை ஏற்கெனவே ஆண்டாண்டு காலமாகப் பல ‘கறையான்கள்’ அரித்திருந்தன. மத்திய வங்கி பிணைமுறி வரை கள்வர்களின் கைகள் நீண்டிருந்தன. ராஜபக்‌ஷக்கள் ஏப்பமிட்டது ஒருபுறமிருக்க, அவர்களது பெயர்களைச் சொல்லி அதிகாரிகளும், இணைப்பதிகாரிகளும் வேறுபலரும் ஊழல் செய்தனர்.

ஆகவே, கோவிட் வைரஸை விட மோசமானதும் கண்ணுக்குப் புலப்படக் கூடியதுமான ‘வைரஸ்கள்’ நீண்டகாலமாக அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைப்புகளுக்குள் ஆழஊடுருவி அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்கனவே அழித்து வைத்திருந்தன. இந்த நிலையில்தான், காகம் நிற்க பனம்பழம் விழுந்த கதையாகவே இலங்கைப் பொருளாதாரம் விழுந்ததே தவிர, கொரோனாவால் மட்டும் இது நிகழவில்லை.

அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தொடர்பில் மக்கள் என்றுமில்லாத ஒரு எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கள் குறிப்பிட்டளவவே நிவர்த்திக்கப்பட்டுள்ளதாகக் கூறலாம். ஏனெனில், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வந்தார் என்பதற்காக, அவரால் மட்டுமே எல்லாவற்றையும் சரிப்படுத்தவும் முடியாது.
அரசியல் அணிகள் குழப்பங்களை விளைவித்துக் கொண்டும், ஒத்துழையாமலும் இருக்கின்ற ஒரு சூழலில் கூட ஜனாதிபதி தனது அரசியலையும் கவனித்துக் கொண்டு தன்னாலான முயற்சிகளைச் செய்து, நாட்டை மேலும் சரிந்து விழாமல் தூக்கிப் பிடிக்க முயன்றிருக்கின்றார் என்று சொல்லலாம்.

எது எவ்வாறிருப்பினும் சாதாரண மக்களின் வாழ்வு இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. பொருளியலில் குறிப்பிடப்படும் ‘வறுமையின் நச்சு வட்டம்’  ஏற்படுத்தும் தாக்கம் போல, வருமான இழப்பு, பொருளாதார நெருக்கடிகள் சுழற்சிமுறையில் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதித்துக் கொண்டே இருக்கின்றன.
எரிபொருளுக்கும் ஏனைய பல அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரிசையில் நின்ற யுகம் முடிவுக்கு வந்திருக்கின்றது. பொருட்கள் ஓரளவுக்குச் சந்தையில் கிடைக்கின்றன. பொருளாதார நெருக்கடி குறைந்திருப்பதான ஒரு தற்காலிக தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது.

அது உண்மைதான். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தைப் போலவே குடும்பப் பொருளாதாரத்தின் அடித்தளங்களும் ஸ்திரமாக, உறுதியாக இல்லை என்பதே நிதர்சனமாகும். இவற்றுக்கெல்லாம், கடந்த இரண்டு வருடங்களில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டங்கள் தீர்வைக் கொண்டு வரும் என்று மக்கள் நம்பி, ஏமாறினார்கள்.
2024 பட்ஜெட் தொடர்பிலும் மக்களிடையே ஒன்றுதிரண்ட ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ‘இந்த முறையாவது ஏதாவது நல்லது நடந்து விட மாட்டாதா?’ என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.

நாடும், அரசாங்கமும், நமது நாட்டு அரசியல்வாதிகளும் இருக்கின்ற நிலையையும் நடைமுறை யதார்த்தங்களையும் மக்கள் அறிவார்கள். சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவற்றிடம் உதவி கேட்டு நிற்கின்ற ஒரு தேசத்தினால் அனைத்து பொருளாதார குறி காட்டிகளிலும் குறுகிய காலப் பகுதிக்குள் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்பதை அவர்கள் புரிவார்கள்.
ஆனால், இன்னும் நாட்டில் ஊழல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அரசியல்வாதிகள் மட்டுமன்றி அதிகாரிகளும் இதனைச் செய்கின்றார்கள். மறுபுறத்தில், வாழ்க்கைச் செலவுச் சுமை ஒவ்வொரு குடும்பத்தையும் எழுந்து நிற்க முடியாமல் அழுத்துகின்றது. இந்தப் பின்னணியிலேயே நாட்டில் இருந்து வெளியேறுவோரின் தொகை அதிகரித்து வருகின்றது.
வெளிநாடுகளில் தஞ்சம் கோருவோர், உள்நாட்டில் உள்ள அரசியல், பாதுகாப்பு நிலைமைகளை தமது ஆவணங்களில் முன்வைத்தாலும் கூட, உண்மையாகவே அண்மைக்காலத்தில் பலரும் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றமைக்கு பிரதான காரணம், பொருளாதாரச் சுமை என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். 

இதற்கெல்லாம் ஒரு முடிவும், விடிவும் காண வேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதால், மக்களைக் குளிர்விப்பதற்காக அரசாங்கம் சில நல்ல முன்மொழிவுகளை முன்வைத்துள்ளதாகக் கூறலாம். ஆனால், மக்களை இது முழுமையாகத் திருப்திப்படுத்தவும் இல்லை. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகவும் மாட்டாது.

நாட்டின், மக்களின் பொருளாதார பிரச்சினைகளையோ அதனூடாக ஏற்படுகின்ற வாழ்வியல் நெருக்கடிகளையோ ஒரு வரவு - செலவுத் திட்டத்தினாலோ அரச கொள்கை தீர்மானத்தினாலோ மாத்திரம் தீர்த்து வைக்க முடியாது என்பதை இங்குக் கூர்ந்து கவனிக்க வேண்டும். 

வரவு - செலவுத் திட்டத்தில் அரசாங்கம் எல்லா அடுக்குகளில் உள்ள மக்களுக்கும் சலுகைகளை வழங்குவதில்லை. அது சரியாக மக்களைச் சென்றடைவதில்லை. அதேபோல், பட்ஜெட்டில் குறைக்கப்பட்ட பொருட்களின் விலைகள் அடுத்த மாதமே அதைவிட அதிகமாக அதிகரிக்கப்படுவதும் நடந்தேறுகின்றது.

மிக முக்கியமாக மக்களின் தனி மனித வருமானத்தை அதிகரிக்க முடியாவிட்டால் செலவைக் குறைத்து அவர்களின் கொள்வனவு சக்தியை உயர்த்த வேண்டும். அந்த வகையில் அரிசி, சீனி, பருப்பு, பால்மா, எரிவாயு என வெகுசில பொருட்களில் மட்டுமே நாம் கவனம் செலுத்துகின்றோம்.

ஆனால், எப்.எம்.சி.ஜி. என்ற வகைக்குள் அடங்குகின்ற அடிக்கடி கொள்வனவு செய்யப்படும் எல்லாப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பற்பசை, சவர்க்காரம், தேயிலைத்தூள், பிஸ்கெட் என ஆயிரம் பொருட்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

நாம் பால்மா பற்றியும், எரிவாயு பற்றியும் விவாதித்துக் கொண்டிருக்கின்ற வேளையில், சப்தமில்லாமல் பல நூற்றுக்கணக்கான பொருட்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்தமையும் மக்களின் நெருக்கடிக்குக் காரணமாகும். ஆனால், அரசாங்கம் இந்த பலதேசிய கம்பனிகளின் தான்தோன்றித்தனத்தைக் கண்டுகொள்வதே இல்லை.

எனவே, பொருளாதார குறி காட்டிகள் மட்டும் பிரதான பொருட்களில் மட்டுமன்றி, சந்தையில் விற்கப்படுகின்ற ஒவ்வொரு பொருட்களின் விலை மட்டத்தையும் அரசாங்கம் கண்காணிக்க வேண்டும். அரச இயந்திரத்தின் செயற்பாடு வினைத்திறனாக்கப்பட வேண்டும். போக்குவரத்து பொலிஸார் தொடக்கம்,  உயர் அதிகாரிகள் வரை இலஞ்ச விரும்பிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

மிக முக்கியமாக, இவர்களை எல்லாம் குற்றம் பிடிக்க முடியாதளவுக்கு அழுக்குப் படிந்த கைகளுடன் கேள்வி கேட்க அருகதையற்ற நிலையிலுள்ள அரசியல்வாதிகள் திருத்தப்பட வேண்டும். அன்றேல் முற்றாக மாற்றப்பட வேண்டும்.

இவ்வாறான விடயப் பரப்புக்களில் மாற்றங்களைக் கொண்டு வராமல், ஒரு வரவு - செலவுத் திட்டத்தினால் மட்டும் மக்களின் எதிர்பார்ப்புக்களை எக்காலத்திலும் திருப்திப்படுத்துவது சாத்தியப்படாது.

2023.11.14


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .