Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 செப்டெம்பர் 10 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ்
முன்னாள் ராஜதந்திரி
அப்போது எனக்கு சுமார் பதினாறு வயது இருக்கும். பாடசாலை மாணவனாக இருந்த காலகட்டத்தில் எனது பாடசாலை ஆசிரியராக, வழிகாட்டியாக, குடும்ப நண்பராக இருந்தவர் அமரர் முத்துவேல் சிவராம்.
அவரின் வழிகாட்டலின் பேரில், மொக்காத் தோட்டத்தில் அக்காலத்தில் வாழ்ந்த முதியோர்களுக்கான ( சுமார் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் ) எழுத்தறிவினை உயர்த்துவதற்காக மாலை நேர வகுப்புகளை இலவசமாக நடத்தியமை இன்றும் எனது ஞாபகத்துக்கு வருகின்றது.
பஸ் போக்குவரத்து இல்லாத அக்காலத்தில், இரண்டு தோட்டங்களுக்கூடாக, கொட்டும் மழையில் ஒரு பழைய குடையைப் பிடித்துக் கொண்டு , மொக்காத் தோட்டத்திற்கு நடந்து சென்று கற்பித்த நினைவுகள் என்றும் பசுமையானவை.
எனக்கு தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கிய திரு. துரைராஜா என்பவரையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கின்றேன்.
துரைராஜா அவர்கள் பின்னாளில் தமிழகத்துக்கு குடி பெயர்ந்தாரென நினைக்கின்றேன். எழுத்தறிவிற்கு இன, வயது, பால் என வேறுபாடு கிடையாது.
எந்த வயதிலும் கற்க முடியும். சர்வதேச எழுத்தறிவு தினமாகும் (செப்டெம்பர் 08).
உலகில் பிறந்த ஒவ்வொரு பிரஜையும் ஏதாவது ஒரு மொழியில் , எழுதவோ வாசிக்கவோ , செவிமடுக்கவோ தெரிந்திருத்தல் அவசியம். ஒரு சராசரி மனிதனது வாழ்க்கையில் எழுத்தறிவின் பங்களிப்பு இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.
எழுத்தறிவின் பெருமையை உணர்ந்த அவ்வையார் "எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்’, என்றார்.
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு", இது திருவள்ளுவர் தந்த விளக்கம்
சங்க காலம் தொட்டு இன்று வரை எழுத்தறிவின் முக்கியத்துவத்தினை பல்வேறுபட்ட நபர்களும், நிறுவனங்களும் வலியுறுத்தி வந்துள்ளதனை எம்மால் அவதானிக்க முடியும்.
எழுத்தறிவின்மை தொடர்பான ஒரு விழிப்புணர்வு தினமாக , உலகம் முழுவதும் இந்த தினம் இன்றைய நாளில் கொண்டாடப்படுகின்றது.
கல்வி , சுகாதாரம் மற்றும் இன்னோரன்ன அம்சங்களில் எழுத்தறிவு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது என்பதனை தெளிவுபடுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் இந்த தினத்தை ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி கொண்டாடி வருகின்றது.
1965 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி ஈரான் நாட்டின் தலைநகரான தெஹரான் நகரில் சர்வதேச கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.
இந்த மகாநாட்டில் எழுத்தறிவற்றவர்கள் இல்லாத உலகை ஏற்படுத்தவும், எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 8 ஆம் நாள் சர்வதேச உலக எழுத்தறிவு தினமாக யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
"பன்மொழிக் கல்வியை ஊக்குவித்தல்: பரஸ்பர புரிதல் மற்றும் அமைதிக்கான எழுத்தறிவு", என்பதுவே இந்த வருடத்திற்கான இத்தினத்தின் கருப்பொருளாகும்.
பரஸ்பர புரிதல், சமூக ரீதியிலான ஒற்றுமை மற்றும் அமைதியை வளர்ப்பதற்கு பன்மொழிக் கல்வி முக்கியத்துவமானது என்பதனை வலியுறுத்துவதாக இது அமைகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) மற்றும் அதன் 2030 ஆம் ஆண்டின் நிலையான வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலின் முக்கிய அங்கமாக எழுத்தறிவு சார்ந்த அம்சங்கள் காணப்படுகின்றது.
உலகத் தலைவர்களால் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட SDGகள், அதன் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, தரமான கல்விக்கான உலகளாவிய அணுகல் மற்றும் மக்களின் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிக்கின்றது.
யுனெஸ்கோ நிறுவனத்தின் படி, உலகில் ஆகக் குறைந்த அடிப்படை எழுத்தறிவுத் திறமை அற்றவர்களாக சுமார் 763 மில்லியன் மக்கள் காணப்படுகின்றனர் .
யுனெஸ்கோ அறிக்கையின் படி , 2022 ஆம் ஆண்டில் , ஏழு பேரில் ஒருவர் கல்வி அறிவற்றவராகவும், சுமார் 250 மில்லியன் சிறார்கள் பாடசாலைக்கு செல்லாதவர்களாகவும் உள்ளனரெனக் குறிப்பிடுகின்றது.
சுமார் 75 மில்லியன் சிறுவர்கள் பாடசாலை இடை விலகலாகவோ அல்லது தொடர்ச்சியாக பாடசாலைகளுக்கு வருபவர்களாகவோ காணப்படுவதில்லை எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சமத்துவமான பொருளாதார வாய்ப்புகள் இல்லாமை மற்றும் வறுமை, மனித உரிமைகள் நசுக்கப்படல் , அரசாங்கங்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் அனைத்து சமூகங்களும் உள்வாங்கப்படாமைப் போன்ற பல காரணிகளும் , கல்வி அறிவின்மைக்கு வழி வகுக்கின்றன.
இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து மீண்டு வருவது முக்கியமானதாகும் .
எழுத்தும், வாசிப்பும் ஒரு மனிதனின் இரு கண்கள்.
எழுத்தறிவினை அதிகரித்துக் கொள்வதற்கு வாசிப்பு மிகவும் இன்றியமையாதது.
வாசிப்பின் மூலமாகத் தான் பல்வேறு விடயங்களை எம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.
அதுவே ஒரு மனிதனை பூரணப்படுத்தும் என்றும் கூறுவர்.
இலங்கையில் அக்டோபர் மாதம் வாசிப்பு மாதமாகக் கருதப்படுகின்றது.
எழுத்தும் , வாசிப்பும் ஒரு சமுதாயத்தில் காணப்படுகின்ற பட்சத்தில் அந்த சமுதாயத்தில் நிலவுகின்ற அறியாமையை களைந்தெறிய முடியும்.
அதுபோல குழந்தைகளின் மரண வீதத்தை குறைப்பதற்கும், அதிகரித்து வரும் ஜனத்தொகையை கட்டுப்படுத்துவதற்கும், ஆண் , பெண் பாலினத்தில் சமத்துவ தன்மையை ஏற்படுத்தவும், பல்வேறுபட்ட தொற்று நோய்களை தவிர்க்கவும் , வாழ்க்கை நீடித்த கல்வியை மேம்படுத்தவும், நாட்டின், தனிமனிதனின் பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்யவும் , ஜனநாயகம், சமாதானத்தை நிலை நிறுத்தவும் , வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவும் , சுய நம்பிக்கையை, சுய கெளரவத்தை அதிகரிக்கவும் எழுத்தறிவு அவசியம்.
வாசிப்பு , எழுத்தறிவின் மூலமாக மனிதன் தன்னை உணர்ந்து, தன் நிலையை உணர்ந்து, அதற்கேற்ப தன் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முடியும்.
சமூக ,பொருளாதார, பண்பாட்டு அம்சங்களை தனி மனிதனுக்கு இடையிலும், சமூகங்களுக்கிடையிலும் உயர்வடையச் செய்ய எழுத்தறிவு அவசியமாகும்.
கற்றவர்களின் எண்ணிக்கையும் உலகில் காணப்படுவதனால் இந்த தினத்தை கொண்டாடப்பட வேண்டிய அவசியமும், அதே வேளை சமூகத்தின் மத்தியில் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடும் காணப்படுகின்றது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று உலகம் முழுவதும் தொலைக்கல்வி முறைமை, இணைய வழி மூலமான கல்வி, மெய் நிகர் கற்றல் முறைமை போன்றவைகளும் கொவிட் 19 க்குப் பிறகு ஏற்பட்ட முன்னேற்றகரமான செயற்பாடுகளாகும்.
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பிலுள்ள (சார்க்) நாடுகளில் மாலைத்தீவின் எழுத்தறிவு வீதம் 99% மாகவும், ஸ்ரீலங்காவின் எழுத்தறிவு வீதம் 92% மாகவும் காணப்படுகின்றது.
இன்றைய நூற்றாண்டில் எழுத்தறிவை மேம்படுத்த பல்வேறுபட்ட வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இவற்றை பயன்படுத்த சகலரும் முன் வருவதோடு, கல்வி கற்றவர்கள் , எழுத்தறிவற்றவர்களுக்கு இது சம்பந்தமான ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் போது அது சமூக ரீதியாக ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் நலன் விரும்பிகளும் , ஆர்வாளர்களும் மாணவர்களது எழுத்தறிவினை அதிகரிக்க கூடிய சகல விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இவற்றின் முக்கியத்துவத்தை இளம் சந்ததியினருக்கு எடுத்துக் கூறுவது அவசியம்.
"அறிவே சக்தி. தகவல் விடுதலை அளிக்கிறது. ஒவ்வொரு சமூகத்திலும், ஒவ்வொரு குடும்பத்திலும் முன்னேற்றத்தின் முன்னோடியாக கல்வி இருக்கிறது.” என
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளரான கோபி அன்னான் கூறிய கருத்து முக்கியமானதாகும்.
கவிஞர் கண்ணதாசன் கூறுவது போல,
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்"
இந்த நிலைமை கல்வியிலும் ஏற்படும் பட்சத்தில் , சகலரும் அதன் பலனை அனுபவிக்க முடியும்.
அடிப்படை கல்வியறிவுடன் எண்ணியல் கல்வியறிவு, டிஜிட்டல், நிதி மற்றும் சட்ட கல்வியறிவு ஆகியவற்றுடன் அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களை உள்ளடக்கிய முறைமையே முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
09.09.2024
13 minute ago
21 minute ago
37 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
37 minute ago
43 minute ago