2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெடித்துச் சிதறிய BIO- BUBBLE

R.Maheshwary   / 2021 ஜூலை 04 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

mayurisaai@gmail.com

தற்போதெல்லாம் சமூகத்தில் கீழ் மட்டத்திலாக இருக்கட்டும் அல்லது உயர்மட்டத்திலாக இருக்கட்டும் ஏதாவது ஒரு சம்பவம் நிகழுமாயின், அது உடனடியாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகின்றது. இது தொழின்முறைசார் ஊடகங்களை விட, இலகுவாக அனைத்து தரப்பினரையும் எவ்வித மட்டுபாடுகளும், கட்டுப்பாடுகளும் இன்றி சென்றடைவதால் தான், அனைவரும் சமூகவலைத்தளங்களை நாடுகின்றனர். சமூக வலைத்தளங்களின் சக்தியை அல்லது பலத்தை அறிந்தமையால் தான்  இன்று சமூக வலைத்தளங்களையும் கட்டுப்படுத்தும் ஒரு ஏற்பாடை எமது அரசாங்கம் முன்னெடுக்க முயற்சித்து வருகின்றது.

 இதற்கமைய, கடந்த வாரம் இலங்கையில் மட்டுமல்ல உலகலவில் பெரிதும் பேசும் பொருளாக காணப்பட்ட இரண்டு விடயங்களுள்  முதலாவது நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய உரை இரண்டாவது இங்கிலாந்துக்குச் சென்றுள்ள இலங்கை அணி வீரர்களின் ஒழுக்க மீறல் செயற்பாடுகள். இவை இரண்டுமே சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பேசப்பட்டன. விசேடமாக மீம்ஸ்கள்  எனப்படும் தற்போதைய கதை கூறல் முறை ஊடாக  அநேகர் தமது பரபரப்பு , ஆதங்கம், கோபம், விரக்தியை  மேற்குறிப்பிட்ட இந்த 2 சம்பவங்களுக்கு  எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கொட்டித் தீர்த்திருந்தனர்.

இந்த நிலையில் தான்., ஜூன் மாதம் 23ஆம் திகதி  இங்கிலாந்தில் ஆரம்பமான 3 இருபதுக்கு இருபது போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகளுக்காக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி  பயணப்பாதுகாப்பு வளையமுறை(BIO- BUBBLE) முறை மூலம்  6.9 மில்லியன் ரூபாய் செலவில் மிகவும் பாதுகாப்பு மத்தியில்  எமது நாட்டு கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும் கடந்த சில வருடங்களாக எந்தவொரு போட்டியிலும் சோபிக்காத  எமது அணி வீரர்கள் 3 இருபதுக்கு இருபது போட்டியிலும் படும் தோல்வியடைந்து ,அத் தோல்வியை சிறிதும் பொருட்படுத்தாமல், அணியின் 3 சிரேஸ்ட வீரர்களான உப தலைவர் குசல் மென்டிஸ், விக்கட் காப்பாளர் நிரோசன் திக்வெல்ல, ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஸ்க குணதிலக ஆகியோர் முகக் கவசம் அணியாமல் கையில் சிகரெட்டுடன், பயணப்பாதுகாப்பு வளையமுறையை தகர்த்தெறிந்து, இங்கிலாந்தின் டராம் நகர வீதிகளில் சுற்றிய காணொளி சமூக வலைத்தளங்களில் உலாவந்தமையானது, இலங்கை அணியின் மீது  என்றுமில்லாத வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த வீரர்களின் இந்த ஒழுக்க மீறல்கள் செயற்பாடு, வீடியோவாக, அருகிலிருக்கும் காரொன்றிலிருந்து பதிவு செய்யப்படுவதைக் கூட இவர்கள் அறியாமல் தமது செயலில் தீவிரமாக இருந்த நிலையில், “ அருகிலிருந்து வீடியோ எடுப்பதே தெரியாமல் இருக்கும் இந்த வீரர்கள், 100 கிலோமீற்றர் வேகத்தில் வீசப்படும் பந்தையா அவதானிக்கப் போகிறார்கள் என்றும் சிலரது பதிவுகள் நகைச்சுவையாக இருந்தாலும் அதிலும் உண்மை இருப்பதை மறுக்க முடியாது.

ஒரு காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி என்றாலே ஏனைய நாட்டு அணிகளை கலக்கம் அடையச் செய்யும். எமது அணியின் முன்னாள் சிரேஸ்ட வீர ர்கள் ஒவ்வொருவரும் களத்தடுப்பு, துடுப்பாட்டம், பந்துவீச்சு, விக்கட் காப்பாளர் என ஒவ்வொருவரும் முத்திரைப் பதித்தவர்கள். இவ்வாறு பல முத்திரைப் பதித்த,சாதனை  வீரர்கள் கட்டி காத்த இலங்கை அணியின் மானம் விளையாட்டில் மட்டுமல்ல ஒழுக்கத்திலும் கப்பல் ஏறிக்கொண்டிருப்பதை யாரும் மறுதலிக்கமாட்டார்கள்.

கிரிக்கெட்டாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த விளையாட்டகக் கூட இருக்கலாம். ஒரு தேசிய விளையாட்டு அணியில் இடம்பிடிப்பதானது குதிரைக்கொம்புக்கு ஒப்பானது என, மிகவும் கஸ்டப்பட்டு, பலரின் கை கால்களில் விழுந்து தமக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்களுக்கே தெரியும். இன்று தேசிய அணிகளில் இடம்பிடிக்க பின்தங்கிய கிராம மட்டங்களில் அதி திறமை மிக்க வீரர்கள் இருந்தும் அவர்களுக்கான வாய்ப்பு பணம், அந்தஸ்து, பரிந்துரை போன்ற காரணங்களால் கைக்கூடாத நிலையில், எவ்வித கஸ்டமும் இல்லாமல் இலகுவாக வாய்ப்பைப் பெற்றுக்கொண்ட இப்போதைய வீரர்களுக்கு குறிப்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிலருக்கு இவ்விளையாட்டின் மீதும் நாட்டின் மீதும்  உணர்வற்று போய்விட்டது என்றே கூறவேண்டும்.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சிரேஷ்ட வீரர்களுள் ஒருவரான குமார் சங்கக்கார “திறமையான கிரிக்கெட் வீரர்களாக மாத்திரம் இல்லாமல் ஆடுகளத்துக்கு வெளியே ஒரு சிறந்த மனிதராகவும் வாழ்க்கையை நேர் மறையாக வாழ்வதற்கான திறமையும்  வேண்டும்“ என பதிவிட்டுள்ளார்.

அதேப்போல் முன்னாள் வீரர்களுள் ஒருவரான திசர பெரேரா“ தான் அணியில் இருந்த போது பாரிய எதிர்பார்ப்புடன் இருந்த விடயம் தான் ஒழுக்கம். அதனை செயற்படுத்த பாரிய முயற்சிகளை முன்னெடுத்தேன். எனினும் அந்த ஒழுக்கத்தை செயற்படுத்த போய் இறுதியில் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானேன்“. என தனது மன ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் வைத்திய குழுவின் பிரதானியான பேராசிரியர் அர்ஜுன டீ சில்வா,“ இந்த ஒழுக்க மீறல் செயற்பாடுகளால் தான் மிகுந்த கவலையும் கோபமும் அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

போட்டிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு, இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் கலந்துரையாடி தான் இந்த பயணப்பாதுகாப்பு வளையமுறை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முறையில் செல்பவர்கள் அதிலிருந்து வெளியே வரமுடியாது. அவ்வாறு வெளியேறினாலும் மீண்டும் அதனுடன் இணைய முடியாது. இந்த பயணப்பாதுகாப்பு வளையமுறையின் பாதுகாப்புக்காக இராணுவத்தினரே ஈடுபட்டுள்ள  நிலையில், இந்த பயணப்பாதுகாப்பு வளையமுறையிலிருந்து யாராவது வெளியேற நினைத்தால் துப்பாக்கியை காட்டியாவது அவர்களை தடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

ஆனால் இங்கிலாந்து சென்ற எமது வீரர்களுக்கு சில தளர்வுகள் வழங்கப்பட்டது. அதாவது தேவையாயின் தமது குடும்பஉறுப்பினர்களையும் அழைத்துச் செல்லும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. அதேப்போல் மட்டுப்பாடுகளுக்குள் அவர்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதைவிட சிறப்பம்சம் யாதெனில்  இந்திய வீரர்களுக்கு அவர்களது நாட்டில் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கு முன்னரே எமது வீரர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அந்தளவுக்கு கொரோனா தொற்றிருந்து எம் நாட்டு வீரர்களைப் பாதுகாக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது என்றார்.

ஆனால் இவர்கள் மூவரும் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்ததால், இவர்களிடம் எவ்வித தவறும் இல்லையென்றும் முகக் கவசம் அணியாமல் வீதியில் பயணித்தமையே இவர்கள் செய்த தவறென, இவர்களுக்குடைய தவறை இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் தொலைக்காட்சி ஒன்றின் செவ்வியில் நியாயப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னரும் போட்டி நடைபெற்ற பின்னர், குறித்த வீரர்கள் வெளியில் சென்றதாகவும்  முகாமையாளர் நியாயப்படுத்தியுள்ள நிலையில் தான், இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்து பயிற்சிவிப்பாளர் அனுஷ சமரநாக்க, “கிரிக்கெட் சுற்றுப் பயணம் செல்வதாயின் அனுபவமிக்கவர்கள் முகாமையாளராக இருக்க வேண்டும்.  புகைப்பிட்டிப்பது என்பது கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு எவ்வளவு தடையை ஏற்படுத்தம் என்பதை நாம் அறிவோம்“ என தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கை அணியின் மற்றுமொரு முன்னாள் பிரபலமான சனத் ஜயசூரிய “தான் பல இன்னல்களைக் கடந்தே இலங்கை அணியில் இடம்பிடித்தேன். சனத் ஜயசூரிய நடந்துச் சென்றார் என்பதற்காக, தற்போதைய வீரர்களையும் நடந்துச் செல்ல சொல்வது நல்லதல்ல. அப்படி கூறுவது அசாதாரணமானது. ஆனால் கஸ்டப்பட வேண்டும். அர்ப்பணிப்பு செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் பார்க்க ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்மடும். அதேப்போல் இவர்களை சரியாக வழிநடத்த முகாமையாளர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்“ என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

இதற்கமைய சம்பவம் நடந்த மறுநாளே  29ஆம் திகதி பிற்பகல் 1.15 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொநதமான விமானத்தில் 3 வீரர்களும் நாட்டை வந்தடைந்தனர். வழமைப்போல் அல்லாமல் சாதாரண பயணிகளின் ஆசனத்திலேயே வருகைத் தந்ததுடன், மிகவும் குறைந்த விலையை செலுத்தக்கூடிய  நீர்கொழும்பு பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் வெளியான வீடியோவின் தன்மையை சரிபார்க்க முகாமையாளிடம் இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கை கோரியுள்ளதுடன், இவர்கள் தொடர்பில் நடைபெறும் விசாரணைகள் நிறைவடையும் வரை இவர்கள் மூவரும் அனைத்து போட்டிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டனர்.

இத்துறையின் அனுபவமிக்க பலரது கருத்துகளின் படி, இந்த வீரர்களுக்கு குறைந்தது 5 வருட போட்டித் தடையாவது விதிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில், குறித்த மூவருக்கும் வழங்கப்படும் தண்டனை இனி வரும் இளைய வீர்ரகளுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

எனவே “ ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப்படும்“என்ற வள்ளுவரின் கூற்று எக்காலத்துக்கும் சாலப் பொருந்தும் என்பதை நினைவுக் கூறுவோமாக

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .