2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெறுப்பு பிரசாரங்களின் மறைமுக நோக்கம் என்ன?

Johnsan Bastiampillai   / 2023 மே 24 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

இலங்கையில் நடக்கின்ற பெரும்பாலான நிகழ்வுகளை, ‘வாதங்கள்’தான் பின்னாலிருந்து வழிநடத்தி வந்து கொண்டிருக்கின்றன. இனவாதம், மதவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம், தேசியவாதம், பிராந்திய வாதம், அடிப்படைவாதம் என்று இந்தப் பட்டியல் நீட்சி கொள்கின்றது. 

ஆனால், குறிப்பாக இனவாதத்தையும் மதவாதத்தையும் கட்டுப்படுத்துவதற்கு ஆட்சியாளர்களும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காமல், அதனை வைத்து தமக்கு தேவையான காரியங்களைச் சாதிக்க முற்பட்டதால், புதுப்புது இனவாதிகளும் மதவாதிகளும் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். 

இந்தப் பின்னணியிலேயே இப்போது பாதிரியார் என தன்னை அடையாளப்படுத்தும் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட பௌத்த மதத்துக்கு எதிரான கருத்துகள், இலங்கை அரசியல் மற்றும் சமூகப் பரப்புகளில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. 

ஜேரோம், இதற்கு முன்னர் இஸ்லாமிய மதம் பற்றிய விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இந்து மதத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் கருத்துகளையும் கூறி வந்ததாக அறிய முடிகின்றது. 

ஆனால், அப்போதெல்லாம் கண்டுகொள்ளப்படாத இவரது மதவெறுப்பு பிரசாரங்கள் இப்போது, பௌத்த மதத்துக்கு எதிரான கருத்துகளை முன்வைத்த போது, கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. இலங்கையில் இதற்கு முன்னர் இன-மத வெறுப்பு பிரசாரங்கள் அல்லது செயற்பாடுகளுக்கு வெளிக்காட்டப்படாத எதிர்ப்பை இப்போது காண முடிகின்றது. 

இப்படியான ஒரு சூழலில் நல்லிணக்கத்தை  ஏற்படுத்துவதற்காகவும் சமூகங்களுக்குள் ஒற்றுமையை உருவாக்குவதற்காகவும் நாட்டு மக்கள் முன்னிற்கின்ற ஒரு காலப் பகுதியில், அதற்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய கருத்தை ஒரு கிறிஸ்தவ மதகுரு கூறினாலும், பௌத்த துறவி சொன்னாலும், இந்து மதகுரு கூறினாலும், இஸ்லாமிய மத போதகர் கூறினாலும் அதனை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.  

அந்தவகையில், ஜெரோம் பெர்னாண்டோ வெறுமனே மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. அவரால் ஏற்பட்ட சமூக விளைவுக்கு பரிகாரம் தேடப்படுவதுடன் அவருக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் இரு நிலைப்பாடுகள் இல்லை. 

ஆனால், இலங்கையில் இன, மத வெறுப்பு பிரசாரங்கள் அல்லது நடவடிக்கைகள் இதுவே முதன் முறையானதா என்பதையும், இதற்கு முன்னர் இனவெறுப்பை கக்கியவர்கள் மீது அரச இயந்திரமோ பெருந்தேசியமோ என்ன நடவடிக்கை எடுத்தது என்பதையும் இவ்விடத்தில் அலச வேண்டியிருக்கின்றது. 

இலங்கையில் எல்லாக் காலத்திலும் இனவாதமும் மதவாதமும் இருந்து வந்திருக்கின்றது. ஆனால், அவற்றைக் கட்டுப்படுத்த, அந்தப் பேய்களை ஒரு ‘கீசா’வில் போட்டு அடைக்க, ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காமல், அதிலிருந்து அரசியல் இலாபம் தேட முற்பட்டதால், புதுப்புது இன - மத வெறுப்பாளர்களுக்கு சாதகமான களம் உருவாகியுள்ளது. 

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் இனவாதத்தை பேசியவர்கள், சிங்கள ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப்படவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராகவும் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் விதத்திலும் பிரசாரங்களை மேற்கொண்ட  ஞானசார தேரர் உள்ளிட்ட பௌத்த துறவிகள், அமைப்புகள், சிங்கள கடும்போக்காளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சில ஊடகங்களுக்கு எதிராக சட்டம் சரிவர நிலைநாட்டப்படவில்லை. 

இவ்வாறு, ஏற்கெனவே இனவாதம் பேசியவர்களுக்கு எதிராக, சிங்கள பெருந்தேசியம் இதே விதமான அக்கறையை வெளிக்காட்டி, அவர்களை தண்டித்திருந்தால் இன்று ஜெரோம் பெர்னாண்டோவுக்கு, பௌத்த மதத்துக்கு எதிராகப் பேசும் தைரியம் வந்திருக்காது. 

இலங்கையில் கருத்தியல் ரீதியான இனவாதத்தை தோற்றுவித்த அநகாரிக தர்மபால முதற்கொண்டு சம்பிக்க ரணவக்க வரையான நபர்களை கட்டுப்படுத்தி இருந்தால், இனவாதத்தை கொட்டிய அரசியல்வாதிகள், பௌத்த துறவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தால், இஸ்லாமிய அடையாளத்தை தவறாக பயன்படுத்தி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான திட்ட வகுப்பாளர்களை மக்களுக்கு வெளிப்படுத்தி இருந்தால், புதியவர்களுக்கு ஒரு பயம் வந்திருக்கும். 

பொதுவெளியில் மட்டுமன்றி, நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் கூட சரத் வீரசேகர உள்ளிட்ட பல சிங்கள அரசியல்வாதிகள், ஏனைய சிறுபான்மை இனங்களை எச்சரிக்கும் வகையில் இப்போதும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இப்படித்தான் முஸ்லிம்களுக்கு எதிராக, பல அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் பிரசாரங்களைச் செய்தார்கள். 

மறுபுறத்தில், சிறுபான்மை அரசியல்வாதிகளும் அவ்வப்போது தமது இனத்துக்காகப் பேசுகின்றோம் என்ற நினைப்பில், இனவாதத்தை உமிழ்கின்றார்கள். இவர்களை எல்லாம் முறையாகக் கட்டுப்படுத்தி இருந்தால் புது இனவாதிகளை, மதவாதிகளை கட்டுப்படுத்துவது இலகுவாக இருந்திருக்கும். 

இவ்வாறு பௌத்த மதவாதத்தை மட்டுமன்றி, இந்துத்துவ கொள்கைகளை முன்னிறுத்தி இனவாதம் செய்ய முற்படுகின்ற குழுக்களையும், எதோ ஒரு பின்னணியுடன் இஸ்லாமிய மதத்தின் பெயரால் குரோதங்களை வளர்க்க முற்படும் கும்பல்கள் மற்றும் மத நல்லிணக்கத்துக்கு எதிரான பிரசாரகர்கள் என ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள தரப்பினர் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தால், புதிய ‘ஜெரோம்’களுக்கு ஒரு பயம் வந்திருக்கும். 

இதற்கு மேலதிகமாக, வடக்கு, கிழக்கில் இன்னும் இனவாத அடிப்படையிலான நகர்வுகளும் மதத்தை கருவியாகப் பயன்படுத்தும் நில ஆக்கிரமிப்புகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பௌத்த துறவிகளும், சிங்கள அரசியல்வாதிகளும் இனவாதத்தையும் மதவாதத்தையும் கூர்தீட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். 

ஆனால், பெருந்தேசிய அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் இவ்வளவு காலமும் இனவாதத்தை ஒரு மறைமுக ஆயுதமாக உபயோகித்து விட்டு, இப்போது சிங்கள மக்களுக்கு என்று வரும்போது மட்டும், அதற்காக குரல்கொடுக்க முற்படுவது, ‘நீங்கள் எல்லா மதங்களையும் இனங்களையும் சமமாக மதிக்கவில்லை’ என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. 

உண்மையில், ஜெரோம் பெர்னாண்டோ மட்டுமன்றி,  மத வெறுப்பு கருத்துகளை விதைப்போருக்கும், வாய்க்கும் மூளைக்கும் தொடர்பில்லாமல் இனவாதம் பேசுவோருக்கும் எதிராக, கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், இலங்கையில் இதுவரை அது நடக்கவில்லை என்பதுதான் கவலையாகும். இங்கு இன்னுமொரு முக்கிய விடயத்தை கவனிக்க வேண்டியுள்ளது. 

அதாவது, நாட்டில் நடக்கின்ற இனவாத மற்றும் மதவாத செயற்பாடுகள் உள்ளடங்கலாக, பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற பாரதூரமான நிகழ்வுகளுக்குப் பின்னால் கூட, ஏதோ ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலும் மறைகரங்களும் இருக்கின்றன என்பதே பட்டறிவாகும். 

யுத்தம் அல்லது பயங்கரவாதமும் அதற்கெதிரான அரச நடவடிக்கையும் கிட்டத்தட்ட 30 வருட அரசியலைச் செய்வதற்கான களநிலையை சிங்கள ஆட்சியாளர்களுக்கு மட்டுமன்றி, தமிழ் அரசியல்வாதிகளுக்கும் வழங்கியது. 

அதற்குப் பிறகு 2010ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இனவாதமும் மதவாதமும் பல மறைமுகத் திட்டங்களுடன் அரசியல் இலாபம் பெறும் சூட்சுமத்துடன் நகர்த்தப்பட்டு இருக்கின்றது. ஒரு மதத்தை பயன்படுத்தியாவது பயங்கரவாத தாக்குதலை நடத்தியேனும், அரசியல் செய்ய துணிகின்ற அரசியல் தரப்பும் வெளிநாட்டுச் சக்திகளும் உள்ளன என்பது இரகசியமல்ல! 

இந்த இடத்தில் திரும்பி பார்த்தால், 2021 ‘அரகலய’ மக்கள் எழுச்சியானது மூவின மக்களையும் ஒற்றுமைப்படுத்தியது. அரசாங்கத்தை கேள்வி கேட்கும் தைரியத்தை மக்களுக்கு வழங்கியது. ஆட்சியாளர்களின் சட்டையைப் பிடித்து உலுக்கியது; துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடவிட்டது. இதற்கெல்லாம் காரணம் இனம், மதம் கடந்த ஒற்றுமையாகும். 

இதனை இப்போதைய ஆட்சியாளர்கள் மட்டுமன்றி, எதிர்காலத்தில் அதிகாரத்துக்கு வர நினைக்கின்ற எந்தப் பெருந்தேசிய கட்சியும் விரும்பாது என்பதே யதார்த்தமாகும். இந்த ஒற்றுமையை உடைத்து ஒரு பிரித்தாளும் அரசியலைச் செய்ய வேண்டிய தேவை, அரசியல் தரப்புகளுக்கு ஏற்பட்டு வருவதாக தெரிகின்றது. எனவே, இப்போது அடுத்த கட்ட அரசியலைச் செய்வதற்காக, மதவாதம், மதவெறுப்பு, இனவாதம் என்ற ஏதாவது ஒரு கருவியை, யாரோ பயன்படுத்த முற்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது. 

ஜேரோம் பெர்னாண்டோவுக்கு அரசியல் பின்னணி இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவருக்கு எதிரான எதிர்வினையில் ஓர் அரசியல் செய்ய முடியும். அதுபோல நாளையும் ஏனைய மதங்களை மையப்படுத்திய பிரசாரங்களும், இனங்களை பாதுகாத்தல் என்ற தோரணையில் இனவெறுப்பு பேச்சுகளும் முன்வைக்கப்படக் கூடிய ஆபத்து இருக்கின்றது. 

சஹ்ரானுக்குப் பின்னால், ஞானசாரவுக்குப் பின்னால் இனவாத அரசியல்வாதிகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்று தேடிப் பார்ப்பது போல, இவருக்குப் பின்னால் யாரும் இருக்கின்றனரா எனவும், இன்று இனவாதம் பேசுகின்ற அரசியல்வாதிகளின் நோக்கம் என்ன என்பதையும் ஆராய வேண்டும். 

யார் என்ன கூத்து ஆடினாலும், சதித் திட்டங்களை நகர்த்தினாலும், மத போதகர்கள் வேடதாரிகளும் அரசியல்வாதிகளும் என்னதான் கூறினாலும், இலங்கையில் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்காது, புத்திக்கூர்மையுடன் செயற்பட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு சாதாரண பொதுமகனுக்கும் உள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .