Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 02 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இன்று மெதுமெதுவாக இராணுவ ரீதியிலான ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸை ஒழித்தல் என்ற போர்வையும் ‘ஒழுக்கமான சமூகமொன்றை உருவாக்குதல்’ என்ற கருத்துருவாக்கம் நிலைபெற்ற நிலைமையும் சிங்கள, பௌத்த பெருந்தேசிய அகங்காரத்தின் அப்பட்டமான வெளிப்பாடும் அதைச் சாத்தியமாக்கியுள்ளன. இதில், இலங்கையர்கள் கவனிக்க வேண்டிய விடயமொன்று உண்டு. இது இருபுறமும் கூரான கத்தி போன்றது. இன்று இந்த அடக்குமுறையை நோக்கிய நகர்வுக்கு, தேசியவாதத்தின் பேரால் ஆதரவளிக்கும் பலர், இந்த ஆபத்தை உணரவில்லை.
அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்ற போது, இன்னாரைத் தண்டிக்கவும் இன்னென்ன வகையான குற்றங்களைத் தடுக்கவும் என்றுதான் சொல்லப்படுகிறது. இதனால் அது, தங்களைப் பாதிக்காது என்று பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். ஆனால், ஓர் அடக்குமுறைச் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்பு, அது யார் மீது பிரயோகிக்கப்படலாம் என்பதற்கு ஒரு வரையறை இல்லை. சில சமயங்களில், அது யாரைக் காப்பாற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்டது என்று சொல்லப்பட்டதோ, அவர்களுக்கு எதிராகவும் பயன்படலாம்; பயன்படுத்தப்பட்டும் இருக்கிறது.
பொலிஸ் என்பது சட்டவிரோதச் செயல்களையும் சமூக விரோதச் செயல்களையும் கட்டுப்படுத்துவதற்கான ஓர் கட்டமைப்பு என்று தான் நம்பப்பட்டு வந்துள்ளது. ஆனால், சமூக அநீதிகளைத் தட்டிக்கேட்க, மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து, அது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அச்சமூட்டும் என்றால், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, பொலிஸ் தாக்குதல் தொடுக்கும்.
பொதுவாகவே, பொலிஸ் வன்முறையை நியாயப்படுத்துகின்ற விதமாகவே, அரசாங்கமும் ஊடகங்களும் நடந்து கொள்வதை நாம் அறிவோம். அதை அண்மையில் கண்டோம்.
பொலிஸ் படையின் அத்துமீறல்கள் பற்றி, பொதுமக்களிடையே கொதிப்பு அதிகமாயிருந்தால், ஒரு சில தனிப்பட்ட அதிகாரிகளின் தவறு என்று கூறப்பட்டு, அவர்களை இடம்மாற்றி அல்லது, ஆக மிஞ்சினால் சிலகாலம் இடைநிறுத்தி அல்லது, ஓய்வில் அனுப்பி பொலிஸ் படையின் நற்பெயரைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவை, எல்லா நாடுகளிலும் காணக் கூடியவைதான்.
இராணுவம் என்பது, முதன்மையாக நாட்டின் மீதான வெளித்தாக்குதல்களில் இருந்தும் உள்நாட்டுப் போரின் போதும் நாட்டைப் பாதுகாப்பதற்கான ஓர் ஆயுதப்படை என்று சொல்லப்படுகிறது. எனினும், இன்று நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத போதும், ஆர்ப்பாட்டங்களைக் கலைக்கவும் வேலை நிறுத்தங்களை முறியடிக்கவும் இராணுவம் பயன்படுவதைக் காணுகிறோம். கொரோனா வைரஸ் பேரிடர், அவர்களுக்கான புதிய வழிகளைத் திறந்துள்ளது.
ஒரு ஜனநாயக நாட்டின் அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள பொலிஸ், இராணுவ அதிகாரங்களை விடவும் அதிகமான அதிகாரங்களை வழங்குவதற்காகப் பலவாறான சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. வரையறுக்கப்பட்ட காலத்துக்கு உரியனவாய், குறிப்பிட்ட தேவைகளுக்காக உருவாக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவற்றுக்கான தேவை இல்லாமற்போகிறது. எனினும், வெகு அரிதாகவே, அவ்வாறான சட்டங்கள் செல்லாமல் ஆக்கப்படுகின்றன.
மக்கள் ஒன்று திரண்டு போராடாத போது, நீண்ட வரலாற்றுக் காலத்தில் போராடி, வென்றெடுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் மெல்ல மெல்லப் பறிக்கப்படுகின்றன. எந்த அரசாங்கமும் தோற்றப்பாடான ஜனநாயகத்துக்கு மேலாக, எந்தச் ஜனநாயக உரிமையையும் பேண விரும்புவதில்லை.
எனவேதான், வாய்ப்புக் கிடைக்கின்ற போது, பிரிவினைவாதத் தடைச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பன போன்று பல வேறு அடக்குமுறைச் சட்டங்களையும் அவற்றையொட்டிய அரச அதிகாரங்களையும் அது உருவாக்குகிறது. எந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு அடக்கு முறைச் சட்டம் உருவாக்கப்பட்டாலும் எந்தக் காரணத்தைக் காட்டி, பொலிஸ் படையும் இராணுவமும் வலுப்படுத்தப்பட்டாலும் அந்தச் சட்டமும் அரசாங்கத்தின் ஆயுத வலிமையும் அவற்றுக்கான குறிப்பிட்ட தேவையுடன் தம்மை மட்டுப்படுத்திக் கொள்வதில்லை.
இச்சட்டம், நமக்கெதிரானதில்லை என்று கூறி, மௌனமாக இருப்பவர்களே வெகுவிரைவில் அச்சட்டத்தால் பாதிக்கப்பட்டதை, 1988-1989இல் பயங்கரவாதத் தடைச் சட்டமும் வலுப்படுத்தப்பட்ட ஆயுதப் படையினரும் சிங்கள மக்களுக்கு எதிராகப் பயன்பட்ட போது கண்டோம்.
பின்னர், விடுதலைப் புலிகளுக்கு எதிரானவை என்று சொல்லி, கட்டியெழுப்பப்பட்ட ஆயுத வலிமையும் அரச அதிகாரங்களும் அரசாங்கத்தின் அனைத்து எதிரிகளுக்கும் எதிராக மட்டுமன்றி, நியாயத்துக்காகப் போராடுகிற தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராகப் பயன்பட்டன; இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன.
அண்மைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைச் சட்டம், ஒழுங்கு நடவடிக்கையாகச் சிலாகிப்போர், இலங்கையின் அடக்குமுறைச் சட்டங்களையும் அரசாங்கங்களின் நடத்தைகளையும் கொஞ்சம் யோசிப்பது நலம்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago