2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘ஹிசாலினி’களுக்கு வழி சொல்லவும் வேண்டும்

Johnsan Bastiampillai   / 2021 ஜூலை 28 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

கடந்த சில மாதங்களாக, “பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று ஒலித்து வந்த குரல்கள், அவரது வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்ததை அடுத்து, சிறுமிக்கு நீதி கோரும் போராட்டங்களாகத் திசை திரும்பி இருக்கின்றன.  

ஹிசாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அழுத்தங்கள், வேறு ஒரு விசாரணைக்காக தடுப்புக்காவலில் உள்ள ரிஷாட் பதியுதீனுக்கு, மேலும் சிக்கல் நிலையை தோற்றுவிக்கும். இது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் அவர் மீதான அனுதாபமும் அபிமானமும் இப்போது வேறொரு பரிமாணத்தை எடுத்திருப்பதாகத் தெரிகின்றது. 

ரிஷாட், ஹிசாலினி ஆகிய இருவருக்கும் இருவேறு விவகாரங்களில் நீதி கோரப்படுகிறது. அந்தவகையில், இவ்விரு விடயம் வெவ்வேறாக நோக்கப்பட வேண்டும். 

மலையகத்தைச் சேர்ந்த ஹிசாலினிக்கு, நீதி கிடைக்க வேண்டும் என்பது, இனம், மதம் தாண்டிய பொதுவான நிலைப்பாடாகும். ரிஷாட்டின் வீட்டில், ஹிசாலினிக்கு களங்கம் இழைக்கப்பட்டிருந்தால், அதற்குக் காரணமானவர்கள் யார் என்றாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதுபோல, ரிஷாட்டின் வீட்டுக்கு வருவதற்கு முன்னர், அவர் சிறுமியாக இருந்த காலத்தில், அவருக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் பற்றியும் விசாரித்து தண்டனை வழங்கப்பட வேண்டும். 

இதில் மாற்றுக் கருத்துகள் யாருக்கும் இருக்க முடியாது. ஆனால், ஹிசாலினிக்கு நீதி கிடைத்தால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லாப் பெண்களுக்கும், நீதி கிடைத்து விடுமா? எல்லா ‘ஹிசாலினி’களுக்கும் வாழ வழி பிறந்து விடுமா என்று, சிந்திக்க வேண்டியுள்ளது. 

அத்துடன், இந்த வழக்கில் குற்றவாளி தண்டிக்கப்பட்டால் மாத்திரம், சிறுமிகள் வேலைக்குச் செல்வதும், அந்த இடங்களில் தகாத முறையில் கன்னிகழிவதும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும் முடிவுக்கு வந்து விடுமா? இதுபோன்ற தற்கொலைகளை நிறுத்தி விடலாமா, என்ற கேள்விகளுக்கும் விடை தேட வேண்டியிருக்கின்றது. 

இலங்கையில் மிக அதிகமாக வஞ்சிக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகம் இருக்கின்றது என்றால் அது மலையக சமூகம்தான். இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். இந்த மக்களை வைத்து அரசியல் செய்கின்ற அரசியல்வாதிகள், இன்று போராட்டம் நடத்துகின்ற தரப்பினர், இந்த மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திருப்பார்களாக இருந்தால், இந்நிலைமை ஏற்பட்டிருக்காது. 

யார் என்ன சொன்னாலும், மலையகத்தில் சிறுமிகளும் இளவயது பெண்களும் வேலைக்குச் செல்வதும் தலைநகர் போன்ற இடங்களில் பணிப்பெண்களாகத் தொழில்புரிவதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள வறிய பெண் பிள்ளைகளும் இவ்விதம் வேறு இடங்களுக்குச் சென்று தொழில் செய்கின்றனர். 

இவ்வாறான தருணங்களில், கணிசமான பணியிடங்களில் பாலியல் வன்புணர்வு, பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. அநேகர் இதை விருப்பமில்லாமல் சகித்துக் கொள்கின்றனர்.  

வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணிபுரிகின்ற வீடுகளில் மட்டுமல்ல, பெரிய நிறுவனங்கள், பல்தேசியக் கம்பனிகள் போன்றவற்றிலும் ஏதோ ஒரு வகையில் பாலியல் சுரண்டல் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. தொழில் போய்விடும் என்பதற்காக, அவர்கள் அதைப் பொறுத்துக் கொண்டுதான் காலத்தைக் கடத்துகின்றார்கள். இவர்களை வஞ்சிக்கும் ‘கோட்-சூட்’ போட்ட காமுகர்கள், சட்டத்தின் பிடிக்குள் அகப்படுவதே இல்லை.  

ஏன், ஆயுதம் தரித்தோரால் வல்லுறவு புரியப்பட்ட பிள்ளைபற்றி, தனது சொந்தப் பிள்ளையையே கர்ப்பிணியாக்கிய காமுக தந்தை பற்றி நாம் கேள்விப்படவில்லையா? பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயன்ற ஆசிரியர் பற்றியும்  மதகுரு பற்றியும் கேள்விப்பட்டதே இல்லையா? 

ஆகவே, ஹிசாலினிக்கு முன்னரும் இது போன்ற சம்பவங்கள் நடந்தன. அவரது மரணத்துக்குப் பின்னரும், கடந்த வாரத்தில் மட்டும் பல சம்பங்கள் பதிவாகியுள்ளன. 

எனவே, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதும் அது விடயத்தில் நீதி நிலைநாட்டாமல் விடப்படுவதும் பிறர் வீடுகளில், தொழிலிடங்களில் மட்டுமல்ல சொந்தக்கார வீடுகளில் கூட நடக்கின்றது. அதேபோல், றிசானா நபீக் போன்று வெளிநாடுகளில் நீதி மறுக்கப்பட்ட பெண்களின் கதைகளும் ஏராளம் உள்ளன. 

ஆனால், இன்று பழிசொல்கின்ற ஊரும் உலகமும், அந்தப் பெண்களுக்கும் குடும்பத்தினருக்கும் வழிசொல்ல என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? 
சிறுமிகள் வேலைக்குச் செல்லாமல் தடுக்கும் விதத்தில், பொருளாதாரத் திட்டங்களை வகுக்க அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? காமுகன்களுக்கு பாடம்புகட்ட ஒரு சமூகமாக நாம் என்ன செய்திருக்கின்றோம்? சொல்லப் போனால் எதுவுமே செய்யவில்லை. 

அப்படியென்றால்,  ‘றிஸானா’க்கள், ‘ஹிசாலினி’களுக்கு ஏற்பட்ட நிலைமைகளுக்கு நாமும் ஏதோ ஒருவகையில் குற்றவாளிகள்; காரணகர்த்தாக்கள் என்றுதான் கருத வேண்டியிருக்கின்றது. 

டயகமவைச் சேர்ந்த ஹிசாலினி என்பவர், சிறுமியாக இருக்கும்போது ரிஷாட் பதியுதீன் எம்.பியின் வீட்டில் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர் அவர், 16 வயதை அடைந்த பின்னரே, குறித்த இடத்துக்கு வேலைக்கு வந்திருப்பதாக வீட்டுரிமையாளர்கள் சாட்சியம் கூறியுள்ளனர்.  இவ்வாறிருக்க, அவர் கடுமையான தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஹிசாலினி தீயில் அலறுவதைப் பார்த்து, கால்துடைப்பானால்  தீயை கட்டுப்படுத்தி, நீர்த்தொட்டியில் அமிழ்த்தியதாக ரிஷாட் குடும்பத்தினர் கூறியுள்ளனர். 

மரணத் தறுவாயில் இருந்த ஹிசாலினி, தனக்குத்தானே தீயிட்டுக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும் ஆயினும் அதற்கான காரணத்தை கூறவில்லை என்றும் கூறப்படுகின்றது. அத்துடன், ரிஷாட் எம்.பியின் வீட்டுக்கு வருவதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே, அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. 

எனவே, இந்தத் தகவல்கள் எல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், ரிஷாட் பதியுதீன் குடும்பத்தினர் மீது சுட்டுவிரல் நீட்டுவதற்கான வாய்ப்புகள் ஆரம்பத்தில் குறைவாக இருந்தன. ஆயினும், ஹிசாலினியை தும்புத்தடியால் தாக்கிய விடயம், அதுபற்றி வீட்டுத் தலைவியிடம் அவரது தாய் உரையாடிய விடயம், அத்துடன் எம்.பியின் மைத்துனர் வேறு ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டு என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது, குறிப்பிட்ட வீட்டில் இந்த மரணத்துக்கு உடனடிக் காரணம் ஏதோ இருக்கலாம் என்பதான சந்தேகம் ஏற்பட்டது. 

இந்த வேளையில், அரசியல்வாதிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் ஹிசாலினிக்கு நீதி வேண்டி போராட்டம் நடத்தின. இதையடுத்து ரிஷாட் குடும்பத்தினர் மூவர் உள்ளடங்கலாகப் பலர் கைது செய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொள்கின்றன; பல சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளப் போவதாக அரசாங்கம் கூறி வருகின்றது.  

இதுபோல பல சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. நீதிக்கான கோசங்களும் ஒலிக்கின்றன. இப்போது, ஓர் அரசியல்வாதியின் வீட்டில், ஹிசாலினி தீயில் எரிந்து இறந்தமையால் இந்த விவகாரம் இந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகின்றது.

எது எவ்வாறாயினும், இந்த யுவதிக்கு நீதி கிடைக்க வேண்டும். ரிஷாட் பதியுதீன் வீட்டில், ஹிசாலினிக்கு அக்கிரமம் நடந்திருந்தாலும் அதற்கு முன்னர் அவரது பெண்மை சிதைக்கப்பட்டிருந்தாலும் எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டும். இது விடயத்தில், சித்த சுவாதீனமுள்ள யாரும் வேறு ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது. 

ஆனால், வேறு சில விடயங்களையும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, ரிஷாட் பதியுதீன் தடுப்புக்காவலில் இருக்கின்றார். அவர் தனக்கான நீதியையே பெற்றுக் கொள்ளப்படாதபாடுபடுகின்றார். இந்நிலையில், ரிஷாட்டை இறுக்குவதற்கு அரசாங்கம் முனைகின்ற சூழலில், ஹிசாலினி வழக்கில் ரிஷாட் குடும்பத்துக்கு சார்பாக விசாரணைகள் செல்வதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை.

அதேவேளை, ரிஷாட்டுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடிய தமிழ் அரசியல்வாதிகள், ஹிசாலினிக்காகக் குரல்கொடுப்பது எந்த விதத்திலும் தவறில்லை. அதனை முஸ்லிம்கள் வேறு கண்ணோட்டத்தில் நோக்கினாலும், தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தமட்டில் அதற்குள் ஒரு சமூகப் பொறுப்பும் அரசியலும் இருக்கின்றது. 

 அத்துடன், வஞ்சிக்கப்படுவோருக்காக குரல்கொடுப்பதற்கான அவசியம் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் சமூக இயக்கங்களுக்கும் இருக்கின்றது. நீதிக்கு மதமும் இனமும் ஒரு தடையில்லை. 

ஆனால், ஹிசாலினிக்கு நீதிகோரும் போராட்டங்கள், ரிஷாட்டையும் தமிழ் தலைவர்களையும் தூரப்படுத்தவும் முஸ்லிம்களையும் மலையக தமிழர்களையும் துருவப்படுத்துவதற்கான எத்தனங்களாக அமைந்து விடக் கூடாது. 

மாறாக, எல்லா ‘ஹிசாலினி’களுக்குமான பரந்த முன்னெடுப்பாக அமைய வேண்டும். டயகம ஹிசாலினிக்கு மட்டுமன்றி, இதுபோல வீடுகளில், நிறுவனங்களில், குடும்பத்தில் வேலை செய்யும் பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண் பிள்ளைகளுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். 

நீதி நிலைநாட்டுவதோடும், ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷம் எழுப்புவதோடும் இவ்விடயத்தை மறந்து விடாது. இவ்வாறு சிறுவர்கள், இளவயது பெண் பிள்ளைகள் வாழ்வதற்கும் வழிகாட்ட வேண்டும். இல்லாவிட்டால் இது தொடர்கதையாகவே இருக்கும். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .