S.Renuka / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த புதன்கிழமை (08) நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது, அலைகடலெனத் திரண்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு நெகிழ்ச்சியடைந்தார்.
பிரசாரத்தின் போது கூடியிருந்தவர்கள் வெறும் ஒரு நடிகரைப் பார்க்க வந்த கூட்டமாக அன்றி, தங்கள் வீட்டுப் பிள்ளையைப் பார்க்க வந்த உறவினர்களைப் போலவே காட்சியளித்தனர்.
ஒரு தாய் வீட்டில் சமைத்த உணவை வழங்க, விவசாயி ஒருவர் நெற்கதிர் கட்டை வழங்க, சிறுமி ஒருவர் தனது பொம்மையைப் பரிசளிக்க என அந்த இடமே உணர்ச்சிப் போராட்டமாகக் காணப்பட்டது.
கிட்டார் உள்ளிட்ட பல பரிசுகளை மக்கள் அவருக்கு வழங்கினர். இந்த அன்பால் நெகிழ்ந்துபோன விஜய், மக்களுடன் மிகுந்த நெருக்கத்துடன் பழகினார்.
திமுக ஆட்சியில் இருந்தபோது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டதாகவும், தற்போது தேர்தல் காலத்தில் ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில், விஜய் எவ்விதத் தடையுமின்றி மக்களைச் சந்தித்து வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசியல் வரலாற்றில் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆருக்குப் பின்னர், ஒரு தலைவருக்காகத் தாமாக முன்வந்து மக்கள் திரள்வது இதுவே முதல் முறை என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
எம்.ஜி.ஆர் காலத்துத் தொண்டர் ஒருவர் இது குறித்துக் கூறுகையில், “எம்.ஜி.ஆர் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன், ஆனால் விஜய்க்கு மக்கள் காட்டும் இந்த அன்பு முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக உள்ளது” என விவரித்தார். பிரசாரத்தின் போது தன்னைப்பார்க்கத் துடித்த சிறுவன் ஒருவனைத் தனது தோளில் ஏற்றி விஜய் கொண்டாடியது மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
விஜய் மேற்கொள்ளும் ‘ரோட் ஷோ’ (Road Show) மற்றும் பொதுக்கூட்டங்கள் அவரது ‘சர்கார்’ திரைப்படக் காட்சிகளைப் போலவே நிஜத்தில் அரங்கேறி வருகின்றன. தவெக-வின் ‘விசில்’ சின்னம் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்று வருகிறது. இக்கூட்டம் வாக்குகளாக மாறுமா எனச் சந்தேகிப்பவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் இந்தத் தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் எனத் தெரிகிறது.
கருத்துக்கணிப்புகள் கூறும் 23 சதவீதத்தையும் தாண்டி, விஜய்க்கு 33 முதல் 37 சதவீத வாக்குகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தவெக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. எவராலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், விஜய்யின் ஆதரவு பெற்ற கட்சியே ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகலாம்; அல்லது விஜயே முதல்வராகும் வாய்ப்பும் உள்ளது. மே 19ஆம் தேதி (வாக்கு எண்ணிக்கை நாள்) வெளியாகவுள்ள முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
40 minute ago