2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘ஆவா’ குழு விவகாரம்: துரோகமிழைக்கவில்லை என்கிறார் மஹிந்த

Gavitha   / 2016 நவம்பர் 07 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வடக்கில் தோன்றியுள்ள ‘ஆவா’ குழுவை, எமது அரசாங்கத்தின் போது, கோட்டாபய ராஜபக்‌ஷவே உருவாக்கினார் என்று, சிலர் கூறுகின்றனர். இவ்வாறான விடயங்களைச் செய்து, இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நாம் ​துரோகமிழைக்க மாட்டோம்.

அவ்வாறு துரோகமிழைக்கவும் இல்லை” என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.   “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொண்ட அமைச்சர்கள், மிகவும் வருத்தத்துடனேயே இருக்கின்றனர். அவர்கள், மீண்டும் எம்முடன் இணைந்துகொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்” என்றும் தெரிவித்த அவர், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடிக்கு, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ​ஒட்டுமொத்த அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும், குறிப்பிட்டார்.  

உடுகம்பொல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, முன்னாள் ஜனாதிபதி, மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “வெளிநாட்டுச் சக்திகள் ஒன்றிணைந்தே, என்னுடைய அரசாங்கத்துக்கு எதிராக சதித்திட்டம் தீட்டின. இது தொடர்பில், பொதுமக்கள் தற்போது அறியத்தொடங்கிவிட்டனர். தமிழ், முஸ்லிம் மக்கள், எம்முடன் தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

“மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி, ஆசியாவில் இடம்பெற்ற பாரிய மோசடியாகும். இந்த மோசடியால், அரசாங்கத்தின் நண்பர்கள், பல பில்லியன் ‌‌‌ரூபாய்களை இலாபமாக ஈட்டியுள்ளனர்.

“இக்குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளவர்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், இந்த அரசாங்கத்துக்கு எதிராக, சீ.ஐ.டீ அல்லது எப்.சி.ஐ.டீ-இனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதுமில்லை.  

இந்த அரசாங்கத்துடன் இணைந்துள்ள பலர், நல்ல அபிப்பிராயத்தில் இல்லை. எம்முடன் இணைந்துகொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் அவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கூட, எம்முடன் இணைந்துகொள்ள தயாராகவே அவர்கள் இருக்கின்றார்கள்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .